புதன், நவம்பர் 22, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 2

வலைப்பதிவு திரட்டிகளின் அடுத்த நிலை என்பதில் இரண்டு பரிமாணங்கள். தொழில் நுட்பம், சமூகம். தொழில் நுட்பத்தில் புதிதாக சாதிக்கும் வல்லமை நம் கையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஆங்கிலத்தில், மேல் நாட்டில் இன்று ஏற்படும் மேம்பாடுகள் நமக்கு நாளை வந்து சேரலாம்.

சமூக நிலையில், வலைப்பதிவுகள் என்பது இது வரை எந்த ஒரு சமூகமும் கண்டிராத புதிய பரிமாணம். அதனால் எதனோடும் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியாது.

இரண்டு மூன்று பழக்கமானவைகளுடன் ஓரளவு ஒப்பிடலாம்.

முதலில் பத்திரிகைகள், படைப்புகள், வாசகர்கள்.

முன்பெல்லாம் எழுத்துத் திறமை பெற்றவர்கள் 'தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதி, திரும்பப் பெற வேண்டும் என்றால் தபால்தலை ஒட்டிய சுயவிலாசம் எழுதிய உறையுடன்' பத்திர்கைகளுக்கு தமது படைப்புகளை அனுப்பிப் பார்க்க வேண்டும். பத்திரிகை ஆசிரியருக்குப் பிடித்திருந்தால் அந்தப் படைப்பு அச்சில் வரும். பத்திரிகை நிறுவனம், தொகுத்து அச்சிட்டு வெளியிட்டு நாடெங்கும் பத்திரிகை கிடக்கச் செய்கிறது. அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க லட்சக்கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான வாசகர்கள். படித்தவர்களில் மிகச் சிலர் தமது கருத்துக்களைக் கடிதமாக எழுதி அனுப்புவார்கள்.

எழுத்தாளர், வாசகர் கடிதம் எழுதுபவர், பத்திரிகை ஆசிரியர் என்று சிறு எண்ணிக்கையானவர்களைத் தவிர்த்து பெருவாரியான மக்கள் ஓசையில்லாமல் படித்து விட்டுப் போய் விடுகிறவர்கள்.

வலைப்பதிவுகள் மூலம் நமக்கு நாமே எழுத்தாளர், பதிப்பாளர். படைப்புகளை, நமக்குப் பிடித்ததை எழுதி விரும்பினால் உடனேயெ வெளியிட்டு விடலாம்.

கணினி நிரல் எழுதத் தெரிந்தால்தான் எதையும் கணினியில் படைக்க முடியும் என்ற தடை நீங்கி, தட்டச்சு செய்து உள்ளிட்டு விட்டால் நமது படைப்பு வெளியாகி விடும். யார் வேண்டுமானாலும் வந்து படித்துக் கொள்ளலாம். "பட்டனை அமுக்கி வெளியிடுங்கள் (push buttom publishing)" என்ற முழக்கத்துடன் இலவசச் சேவைகளை அளிக்கிறார்கள்.

யார் வருவார்கள்? இப்படி ஒருவர் எழுதி வைத்திருக்கிறார் என்று எப்படி மக்களுக்குத் தெரியும்?

நாம் எழுதி வெளியிட்ட விபரங்களைத் திரட்டி தலைப்பையும் முதல் நான்கு வரிகளையும் இன்னொரு தளத்தில் விளம்பரப்படுத்தும் மென்பொருள் சேவைகளும் இலவசமாக இயங்குகின்றன. (தமிழ் மணம், தேன்கூடு, தமிழ்பிளாக்ஸ்). இத்தகைய தளத்தில் நூற்றுக் கணக்கானோர் எழுதியவற்றின் விபரங்கள் காணக் கிடைப்பதால் வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் ஏராளம்.

எழுத முடிந்த யாரும் ஆயிரக்கணக்கான வாசகர்களின் பார்வைக்குத் தமது படைப்பு விவரங்களை அனுப்புவது எளிதாகிப் போய் விட்டதுதான் வலைப்பதிவுகள். மேலே சொன்ன திரட்டிகள் மூலமாகவோ அல்லது நமது முகவரி மூலமாகவோ நாம் எழுதியதைப் படித்து விட்டுக் கருத்து சொல்லவும் எளிதான வசதிகள் வலைப்பதிவு கருவியிலேயே இருக்கிறது. சொல்ல வேண்டியதைத் தட்டச்சு செய்து ஒரு கிளிக்கினால் பின்னூட்டமாக நமது கருத்தை வெளியிட்டு விடலாம். இது வாசகர் கடிதம்.

இத்தோடு பத்திரிகையோடு ஒப்பிடுவது நின்று போகிறது. பத்திரிகையை அச்சிட, வினியோகம் செய்ய செலவு அதிகம். எத்தனை பேர் காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்று கணக்கு கிடைத்து விடும்.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -
நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

1

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

//இத்தோடு பத்திரிகையோடு ஒப்பிடுவது நின்று போகிறது.
பத்திரிகையை அச்சிட, வினியோகம் செய்ய செலவு அதிகம்.
எத்தனை பேர் காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்று கணக்கு
கிடைத்து விடும்.//

இங்கேயும் சில இடங்களில் பதிந்துகொண்டால் தினம் எத்தனை பேர் வந்து போறாங்க,
எந்தெந்த நாடு என்ற விவரம்கூட கிடைக்கிறது. எல்லாம் இலவச சேவைதான்:-)))

ramachandranusha(உஷா) சொன்னது…

சிவா, பாலபாரதி கூட்டத்தைப் பற்றியும் வாசிக்கப் போகிற கட்டுரைகளைப் பற்றியும் அறிவித்தப் பொழுது சந்தோஷமாக இருந்தது. உங்கள் கட்டுரையைப் படிக்கும்பொழுது இத்தகைய முறையாய் நடத்தப்படும் கூட்டங்கள் அவசியமானது என்று
சொல்ல நினைத்தாலும், நேற்றிலிருந்து வரும் பின் விளைவுகள் ஆயாசத்தையே தருகின்றன. இனி வலைப்பதிவர் சந்திப்பு என்றால் கலந்துக் கொள்வேனா என்பது சந்தேகமே :-)

மா சிவகுமார் சொன்னது…

//எல்லாம் இலவச சேவைதான்:-))) //

ஆமா இல்லை :-).

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

உஷா அவர்களே,

ஒரு நல்ல வேலை ஆரம்பித்தால் நாலும் வரத்தான் செய்யும். அதற்காக வேலையையே ஒதுக்கலாமா! அமீரக சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள் (அருகில்தானே?). சென்னை வரும் போதும் ஒரு சந்திப்பில் எல்லோரையும் பார்த்து பேசுங்கள்


அன்புடன்,

மா சிவகுமார்