வெள்ளி, நவம்பர் 24, 2006

வலைப்பூத் திரட்டிகள் : கட்டுரை - 4

வலைத் திரட்டிகளில் அடுத்து என்னென்ன வசதிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று பட்டியலிடாமல், எதைச் சாதிக்க முயல்வோம் என்று சில எண்ணங்களைக் கொடுத்தால் விவாதத்துக்குப் பலனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழர்கள் பன்னாட்டு தேசிய இனங்களில் ஒன்று. இந்தியா, ஈழம், மலேசியா/சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கும் தமிழர்களை இணைத்து, தமிழர்களுக்கென்று பொதுவாக இருக்கும் பழக்கங்கள், பண்புகள், அறிவுகள் மூலம் உலகளாவிய சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

தமிழ் டாட் நெட்டில் தமிழ் மடற்குழு மூலமாக சமூகம் உருவான போது அதன்அடுத்த நிலை என்று எறும்புகள் முயற்சி நடைபெற்றது. மின்னஞ்சலைப் பயன்படுத்தி உருவான மடற்குழுக்கள் அடுத்த நிலையைப் பிடிக்க தவறி விட்டன. மடற்குழுக்கள் மூலமே சாதித்துக் காட்டிய பல மென்பொருள் உருவாக்கத் திட்டங்கள், மதுரைத் திட்டம் போன்று வையவிரிவு வலையின் மீது இயங்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம்.

ஒவ்வொருவரும் உருவாக்கி வைத்திருக்கும் வலைப்பூக்களை தொகுத்து தரும் பணிகளை செய்கின்ற வலைத் திரட்டிகள். அடுத்து என்ன? இலக்கிய வளர்ச்சி, பொருளாதார தொடர்புகள்? அறிவியல் தொழில்நுட்பப் பணிகள்? சமூகச் சங்கங்கள்?

மதுரை வலைப்பதிவாளர் சந்திப்புக்கு அப்புறம் தருமி அவர்கள் வலைப்பூவுலகம் தமிழ்நாட்டுக்காக ஒரு think tank ஆகா பரிணமிக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளியிட்டிருந்தார்.

திராவிடத் தமிழர்கள், சென்னப்பட்டிணம், விக்கி பசங்க என்று குழு சேர்பவர்கள் ஒவ்வொரு திசையில் அடுத்தக் கட்டத்தை அடைய முயற்சி செய்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது. எழுதிப் பதித்து, பின்னூட்டம் இட்டு போவதுடன் கூடுதலாக, கீழ்த்தரமான மொழியில் கீழ்த்தரமான வகையில் பதிவுகள் போடுவதற்கு மாற்றாக இத்தனை ஆயிரம் பதிவர்கள், வாசர்களின் கவனத்தை நேரத்தை எப்படி ஆக்க பூர்வமாகச் செலுத்தலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அத்தகைய சிந்தனைகளின் விளைவாக தேவைகள் வந்தால் தொழில் நுட்ப வளர்ச்சி அவற்றைத் தொடர்ந்து வந்து விடும்.

(தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.)

13 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

சிவா மற்ற கட்டுரைகளையும் வார இறுதியில் படித்துவிட்டு பேசுகிறேன்.... உங்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி

நன்றி

பத்மா அர்விந்த் சொன்னது…

""இத்தனை ஆயிரம் பதிவர்கள், வாசர்களின் கவனத்தை நேரத்தை எப்படி ஆக்க பூர்வமாகச் செலுத்தலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்"". இதுவே என் ஆசையும் கூட.

தருமி சொன்னது…

//""இத்தனை ஆயிரம் பதிவர்கள், வாசர்களின் கவனத்தை நேரத்தை எப்படி ஆக்க பூர்வமாகச் செலுத்தலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்"". இதுவே என் ஆசையும் கூட.//

DITTO

துளசி கோபால் சொன்னது…

//DITTO//

அதே அதே

பெயரில்லா சொன்னது…

நண்ப சிவா அவர்களுக்கு
ஒரு சின்ன யோசனை
சரியா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
அதாவது இதுவரை காலம் தமிழ் மொழியில் பதியபட்ட எல்லா
வலைப் பதிவுகளின் விலாசங்கள்(url)
ஒரு இடத்தில் தொகுக்கப்படவேண்டும்.
தொடுப்புடன்.(with link)

(எல்லா தமிழ் வலைப் பதிவுகளின் url ஆங்கிலத்தில் தானே இருக்கின்றன?)

தேன்கூடு,தமிழ் பதிவுகள், தமிழ் மணம், ஆகியவற்றின் சேவை பாராட்டதக்கவைதான்.(அவை காலத்திற்கு காலம் அந்தந்த வலைப் பதிவுகளில் புதிய இடுகைகள் சேர்க்கப்படும் பொழுது அறியத் தருகின்ற வகையில்)ஆனால் நான் சொல்வது தமிழில் பதியப்பட்ட வலைப் பதிவுகளின் Directory.


மதி கந்தசாமி ஒரு வலைப் பதிவாக
இட்டு வைத்திருக்கும் Tamil Bloggers List மாதியான ஒன்று. ஆங்கிலத்தில், முழுமையான ஒன்று.
என் யோசனை சரியா எனத் தெரியவில்லை.

உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அந்த தொகுப்புக்கான ஒரு மாதிரி ஒரு அனுப்பி வைக்கிறேன்.

நன்றிகள்!!!

நேசங்களுடன்
மேமன்கவி

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//தருமி அவர்கள் வலைப்பூவுலகம் தமிழ்நாட்டுக்காக ஒரு think tank ஆகா பரிணமிக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளியிட்டிருந்தார்//

மிகவும் சரி!
அதோடு மட்டும் நின்று விடாது, அரசுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், திட்டங்கள் வகுத்துக் கொடுக்கலாம்! அதற்கு சக தமிழர்களின் ஆதரவு எவ்வளவு உள்ளது என்பதை எடுத்திக்காட்டி, நடைமுறைக்கு வழி வகுக்கலாம்.

அன்றாடப் பணிகளில் மூழ்கிப் போன அரசு மற்றும் இதர நிறுவனங்களுக்கு இது ஒரு புதுக்காற்று போல சென்று அடைய ஏதுவாய் இருக்கும். நாற்பது யோசனைகளில், ஒன்று ஏற்கப்பட்டாலும் நல்லது தானே!

"சிறுதுளி" திட்டங்கள், விகடன் follow-up போல் இதுவும் பயன் உள்ளதாகவே இருக்கும்!

நம் கலாம் அவர்களும் இதையே தான் ஒவ்வொரு துறைக்கும் High Level plan ஆகத் தந்துள்ளார்! அதை கொஞ்சம் low level ஆக்கி, அன்றாடப் பணிகளுக்கு இழுத்து வரவேண்டும்!

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் குழலி,

// மற்ற கட்டுரைகளையும் வார இறுதியில் படித்துவிட்டு பேசுகிறேன்....//

உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி பத்மா அரவிந்த், தருமி ஐயா, துளசி அக்கா,

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

மேமன் கவி,

நீங்கள் சொல்வதைத்தான் பாலபாரதியும் கூட்டத்தில் பேசினார். யார் யார் பதிகிறார்கள் என்பதை ஒரு கையேடாக தொகுப்பது மிகவும் அவசியம்தான். பொருள் வாரியாக, நாடு வாரியாக, அகர வரிசையில் பெயர் வரிசையாக என்று சில வகைப்படுத்தலுடன் இத்தகைய தகவல்தளத்தை உருவாக்கி பராமரிப்பது பலருக்கு பேருதவியாக இருக்கும்.

உங்கள் மாதிரியை அனுப்பி வையுங்கள். விரைவிலேயே அத்தகைய தளத்தைத் தொடங்கி விடலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ரவிசங்கர்,

//கொஞ்சம் low level ஆக்கி, அன்றாடப் பணிகளுக்கு இழுத்து வரவேண்டும்!//

இதை எப்படி மேலே எடுத்துச் செல்லலாம்? வலைப்பதிவு உலகில் வரும் ஆலோசனைகளை எப்படித் தொகுத்து முன் வைக்கலாம்? என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,

மா சிவகுமார்

porukki சொன்னது…

பயனுள்ள கட்டுரை. முடித்துவிடாமல் தொடந்தும் எழுதுங்கள்.

// எழுதிப் பதித்து, பின்னூட்டம் இட்டு போவதுடன் கூடுதலாக, கீழ்த்தரமான மொழியில் கீழ்த்தரமான வகையில் பதிவுகள் போடுவதற்கு மாற்றாக இத்தனை ஆயிரம் பதிவர்கள், வாசர்களின் கவனத்தை நேரத்தை எப்படி ஆக்க பூர்வமாகச் செலுத்தலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.//

"கீழ்த்தரம்" பற்றி சொல்லியுள்ளது சரி. ஆனால் எழுதும், படிக்கும் எல்லாம் ஆக்கபூர்வமாக "மட்டுமே" இருக்க வேண்டுமா? ஏற்கெனவே அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் இயந்திரமாகவே போய்விட்டோம். எல்லாமே "சீரியஸாகி"ப் போனதில் மன உளைச்சல்கள் இன்னும் கூடிக் கொண்டே போகின்றன. மிஸ்ரர் பீன் பார்த்துச் சிரிப்பதும், குழம்பு வைப்பது எப்படி என்று வாசிப்பதும், பாடல்வரிகள் சகிக்க முடியாவிட்டாலும் இசையில் மூழ்கிப் போவதும் தேவை போலவே உணர்கிறேன். சமூகத்திற்கு தேவையானதில் கவனத்தைக் குவிக்கும் அதே நேரம், "றிலாக்ஸ்" ஆன விடயங்களையும், தரம் தாழ்த்திப் பார்க்கவோ, தவிர்க்கவோ தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

//பயனுள்ள கட்டுரை. முடித்துவிடாமல் தொடந்தும் எழுதுங்கள்.//

நன்றி பொறுக்கி.

//ஏற்கெனவே அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் இயந்திரமாகவே போய்விட்டோம். எல்லாமே "சீரியஸாகி"ப் போனதில் மன உளைச்சல்கள் இன்னும் கூடிக் கொண்டே போகின்றன.//

பீத்தோவன் இசையமைக்கும் போது மன உளைச்சல் அதிகமாயிருக்குமா? இளையராஜா புதிய மெட்டுக்களை உருவாக்கிக் களைத்துப் போவாரா என்ன? நம் இயல்புக்குப் புறம்பான வேலைகளை, இயல்புக்கு புறம்பான முறைகளில் செய்வதால்தானே மன உளைச்சல், அதிலிருந்து தப்பிக்கும் தேவைகள். செய்வதையே அனுபவித்துச் செய்யக் கற்றுக் கொண்டால், மாற்று இளைப்பாறலுக்கு தேவை இருக்குமா, சொல்லுங்கள்?

//சமூகத்திற்கு தேவையானதில் கவனத்தைக் குவிக்கும் அதே நேரம், "றிலாக்ஸ்" ஆன விடயங்களையும், தரம் தாழ்த்திப் பார்க்கவோ, தவிர்க்கவோ தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.//

தரம் தாழ்த்திப் பார்க்க விளையவில்லை. "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்று வாரம் முழுவது அலுவலக/கணினி வேலைக்குப் பிறகு அரை மணி நேரம் தோட்ட வேலையில் கிடைக்காத இளைப்பாறுதலா, இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி முன்பு கிடைத்து விடப் போகிறது!

இசையில் மூழ்கிப் போதல் நம் மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. ஆனால், பல "இளைப்பாறல்கள்" மனதைச் சோர்வடைய வைத்து ஆற்றலை உறிந்து விடுகின்றன அல்லவா?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஜோஜோ,

நான் இன்னும் கவனமாக அலசியிருக்க வேண்டும் :-) பயனுள்ள அட்டவணைப்படுத்தல்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்