செவ்வாய், பிப்ரவரி 06, 2007

வழி சொல்லுங்கள்

Bad News India இந்தப் பதிவைக் குறிப்பிட்டு எழுத பல அன்பர்கள் தமது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

ஒதுக்கித் தள்ளி விடுவதுதான் தீர்வு என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அனானி ஒருவர் சொல்வது போல இத்தகைய தாக்குதல்களைக் கண்டு வலைப்பூவிலகிலிருந்தே விலகி விடுபவர்களும் இருக்கிறார்கள். அதற்காகவாவது இதை நிறுத்த வேண்டும்.

இவை வலைப்பதிவுலகில் மட்டுமில்லாமல், சென்னை நகரப் பேருந்துகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் பெண்கள் தினமும் சந்திக்கும் வலிகள். அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் பொறுப்புடையவர்களாகிறோம். இத்தகையவர்களை அடையாளம் கண்டு கொண்டு, இத்தகையவர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு, விளங்க வைப்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

இதை எழுதுபவர்கள் மீது விரலைச் சுட்டும் அதே நேரம் நம்மைச் சுட்டும் மூன்று விரல்களையும் கவனிப்போம். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? நம் சமூகத்திலிருந்துதானே! இவர்களைப் பெற்ற தாய் தந்தையருக்கு இவர்களின் மன விகாரம் தெரியுமா? அவர்களுக்கு பொறுப்பு உண்டா? தமிழ் சமூகத்துக்கு பொறுப்பு உண்டா?

அடாவடிச் செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும் வீட்டில் பிற உறவுகளும் இந்தப் பையனா இப்படிச் செய்தான் என்று மாய்ந்து போவதைப் பல முறை செய்திகளில் படித்திருக்கிறோம். ஒரேயடியாக வில்லன்கள் என்று ஒதுக்கி நமது மனதை சமாதானப்படுத்திக் கொள்ளாமல் முன் முயற்சிகள் எடுத்து இந்த ஆரோக்கியமற்ற போக்கைக் குணப்படுத்த வேண்டும்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வழி தெரிந்தால் சொல்லுங்கள்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அன்பு சிவ குமார்,
இது மன வக்கிரங்களின் உச்சம்.நமது பஸ்களில் மாணவர்களின் அடாவடிகளை பார்த்திருப்பீர்கள்.அதே மாணவன் தனியாக வந்தால் இப்படி நடப்பானா?ஆகவே அது அவனுக்கு அந்த கும்பல் தரும் பாதுகாப்பு.அதேபோல் வலையிலும்,முகம் தெரியாது,ஊர் தெரியாது,பெயர் வேண்டாம்-இவை பாதுகாப்பு.இந்தப் பாதுகப்பின் விளைவுதான் நாம் பார்க்கும் வக்கிரங்கள்.நல்ல பெண் வலையாளர்கள் பலர் இந்த வக்கிர கும்பல்களினால் விலகி விட்டதை அறிவீர்கள்.இன்று நல்ல டாபிக்களுக்கு என்ன வரவேற்பு?கெட்ட வார்த்தை,சாதிப் பாட்டு, மற்றும் தனி மனித வசை பாடல்களுக்கு உள்ள வரவேற்பையும் அறிவீர்கள்.யார் காரணம்?நீங்கள் கூறியது போல் நாம்தானே!திருடனாக பார்த்து திருந்த வேண்டும்.படித்த நல்ல வேலையில் உள்ளவர்களிடம் இது போல் வக்கிர குணங்களை காணும் போது நம் சமுதாய அமைப்பின் மீதான நம்பிக்கை தளர்கிரது.
அன்புடன்
பசும்பொன் பாண்டியன்
தாராவி
மும்பாய்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் பாண்டியன்,

சமூகத்தின் உறுப்பினர்கள்தானே சமூகத்தை உருவாக்குகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நம் எண்ணங்களை மறுபார்வை பார்த்துக் கொண்டால் மாற்றங்கள் வரும். இது போன்ற ஆபாச மடல் எழுதுபவர்கள் ஏதோ இருண்ட அறைக்குள் உட்கார்ந்து கொண்டு எழுதவில்லையே! அவர்களும் வெள்ளை சட்டை போட்ட மனிதர்கள்தான். மனதில் என்ன தவறாக உள்ளது என்று புரிந்து கொள்ள முயல வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்

BadNewsIndia சொன்னது…

இன்று தான் இந்த பதிவைப் பார்த்தேன்.

வக்கிர மனம் எல்லோருக்குள்ளும் உண்டு. அதை வெளிக் கொணர்ந்து மற்றவருக்கு துன்பம் கொடுக்காமல் இருப்பதுதான் நமக்குள் இருக்கும் நாகரீகத்தின் வெளிப்பாடு.

திருடனும், கொலைகாரனும் கூட நம் சமூகத்திலிருந்து தான் வெளிப்படுகிறான். அதற்க்காக அவனை தண்டிக்காமல், வெளியிலே சுற்ற விடமுடியாது.
நமக்குள்ள பொறுப்பு, அவனை தண்டித்த பின்னர், அவனுக்கு புத்திமதிகள் சொல்லி, திருந்த வைப்பது.

அறியாமல், குருட்டு தைரியத்தில் தவறுகள் செய்து, ஜெயிலுக்கு செல்லும் பலர், வெளியில் வரும்போது திருந்தியவர்களாகத் தான் வருகிறார்கள்.

அடியாள்கள் போல், தவறு செய்வதே வேலையாக வைத்திருப்பவர்கள், திருந்தப் போவதில்லை.

இந்த வக்கிர மடல்கள் அனுப்பும் பேர்வழி, தானாய் திருந்த மாட்டான். தவறு செய்வதே தொழிலாக கொண்ட அடியாள் போலவன்.
அவன் அனுப்பும் மடல்களில் உள்ள வார்த்தையை வைத்து இதைச் சொல்கிறேன்.
மனவிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அவன், பிடிபட்டால் தான் திருந்துவான்.

இரண்டு வாரத்துக்கு முன்னால், 'போலி' டோண்டு என்று அனைவராலும், தூற்றப்படும் ஒரு பதிவரிடமிருந்து, வந்த மடலில் அத்தனை அருவருப்பு இருந்தது.

அவனைப் பற்றி தவல் அறிந்தவர்கள் எனக்குத் தெரியப் படுத்துங்கள்.
என்னிடம் உள்ள சில விவரங்கள் சட்ட ரீதியாக நடவடிக்க்கை எடுக்க கொடுக்க வேண்டியவருக்கு கொடுத்துள்ளேன்.
மேலும் விவரங்கள் கொடுத்தால், கூடிய விரைவில், ஒரு நச்சு நம் சமூகத்திலிருந்து குறையும் வாய்ப்புண்டு.

இதில், என்னை வருத்தும் ஒரே விஷயம், அந்த வக்கிர மனம் கொண்ட பதிவருக்கு, அன்பான குடும்பம் இருக்கும், பாசமான நண்பர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு இவரது உண்மை முகம் தெரியும் போது, மிகவும் வேதனைப் படுவார்கள்.

இவர்களை, இப்படியெல்லாம் எழுத தூண்டுவது எது? மனவியாதியா இது?
இல்லை, சும்மா, இது ஒரு விளையாட்டு என்று நினைத்து ஒரு அறியாமையில் செய்கிறார்களா?

இணைய பதிவுலகம், பல நண்மைகளை விளைவிக்கக் கூடிய சக்தியுடையது. அதை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

இந்த ஊடகத்தின் மூலம், ஒரு மனிதன் திருந்தினாலோ, ஒரு ஏழைக்கு கல்வி கிட்ட வழி பிறந்தாலோ, ஒரு கயவன் பிடிபட்டாலோ, ஒரு குடும்பத்துக்கு வழி பிறந்தாலோ, ஒரு மரம் வளர்க்கப்பட்டாலோ, ஒரு தீமை ஒழிந்தாலோ, ஒரு உண்மையான வீரன் வாழ்த்தப்பட்டாலோ நாமும் சாதனையாளர்களாகிவிட்டோம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம்.

விவாதங்கள் கண்டிப்பாய் தேவை. அதன் மூலம் புரிதல்களும் தேவை. எனக்கு சில விவாதங்கள் மூலம், புதிய விஷயங்கள் தெரிய வந்துள்ளன.
புதிய நட்பும் கிடைத்துள்ளது.
இதையெல்லாம் வீணாக்கும் செயல்பாடுகளை, அனைவரும் சேர்ந்து தகர்க்க வேண்டும்.

மா சிவகுமார் சொன்னது…

Bad News India,

உங்கள் கருத்தைப் பின்னூட்டியதற்கு நன்றி. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நண்பர்களோடு தொடர்பு கொள்ள உதவும் இந்த ஊடகத்தைக் குலைத்துப் போடச் செய்யும் முயற்சிகளை தகர்க்க வேண்டும் என்ற உங்கள் உறுதியைப் போற்றுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்