வெள்ளி, ஜூன் 15, 2007

பசியும் மருந்தும்

சும்மா சாப்பிட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டு வாழ யாரும் விரும்புவதில்லை. உருப்படியான வேலைகளைச் செய்து தமது முத்திரையை விட்டுச் செல்ல வேண்டும் என்பது மனிதனின் தேவையாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மனநிறைவுகள் தேவையாக இருக்கின்றன. மன நிறைவுகள் எங்கிருந்தெல்லாம் கிடைக்கும்:
  1. நல்ல சுவையான சாப்பாட்டைச் சாப்பிட்டால் மனம் நிறைந்து விடலாம்.
  2. மூன்று மணி நேரம் திரைப்படம் ஒன்றைப் பார்ப்பது மனத்துக்கு நிறைவு அளிக்கலாம்.
  3. கிரிக்கெட் போட்டிகள் பற்றிய கட்டுரை ஒன்றைப் படிப்பது நிறைவு அளிக்கலாம்.
  4. சிறுகதை ஒன்றை எழுதி முடித்தால், அல்லது பதிவு ஒன்றை போட்டு விட்டால் திருப்தி ஏற்படும்.
  5. பதிவுகளுக்குப் பின்னூட்டமோ, அல்லது வேறு நண்பர்களிடமிருந்து மின்னஞ்சலோ வந்திருந்தால் ஒரு இனம் புரியாத நிறைவு தெரிகிறது.
  6. புத்திசாலித்தனமாக அலசி ஒரு பிரச்சனைக்கு மென்பொருள் நிரலில் தீர்வு எழுதினால் வருவதும் மனநிறைவு.
  7. ஏழைச் சிறுவன் ஒருவனுக்கு சாப்பாடு போட்டால் வருகிறது மன நிறைவு.
இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஒரு நாளைக்குப் போதுமான அளவு மனம் நிறையவில்லை என்றால் சோர்வு வந்து விடும். இது எல்லா மனிதருக்கும் பொருந்தும்.

தியாகராய நகருக்குப் போய் சரவணா ஸ்டோர்சில் புடவை வாங்கி விட்டு, முருகன் இட்லிக் கடையில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவது ஒரு குடும்பத்தலைவிக்கு அந்த நாளுக்கான மன நிறைவைத் தந்து விடலாம்.

அல்லது

தனது மகனின் பள்ளிக்குப் போய் ஆசிரியையைச் சந்தித்து எப்படி குழந்தை படிக்கிறான் என்று பேசி விட்டு வாரா வாரம் ஒரு மணி நேரம் வந்து வேறு ஒரு வகுப்பில் தனக்குப் பழக்கமான இணைய உலகம் பற்றிச் சொல்லிக் கொடுக்க முன்வருவதாக பள்ளித் தலைமையாசியையிடம் ஏற்பாடு செய்து கொண்டு விடுவது நிறைவைத் தரலாம்.

இந்த இரண்டில் எது சிறந்தது?

நேற்று இரவு இரண்டு மணி வரை பார்த்த பங்களாதேசம் - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் பந்தயம் குறித்து நண்பர்களுடன் இன்று காலை விலாவாரியாக விவாதிக்க முடிந்தது ஒரு மாணவனுக்கு மன நிறைவு தந்து விடலாம்.

அல்லது,

இயற்பியல் பாடத்தில் படித்த மாதிரி ஒன்றை அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தி உருவாக்க இரவு பன்னிரண்டு மணி வரை பிடித்தது. இன்றைக்கு கூடப் படிக்கும் மாணவ மாணவியரை அழைத்துக் காட்டி மகிழ்வது மன நிறைவைக் கொடுக்கலாம்.

எது சிறந்தது?

வார இறுதியைக் கொண்டாட நண்பர்களுடன் கிளப்பில் சீட்டாடி விட்டு சின்னதாக மது அருந்தி விட்டு காலையில் பத்து மணி வரை தூங்கி விட்டு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமை காலை நிகழ்ச்சிகளில் மூழ்கி யிருப்பது ஒருவருக்கு நிறைவைத் தரலாம்.

அல்லது

அவரே அதிகாலையில் எழுந்து தனது அனுபவங்களை எழுதி முடித்து பத்து மணிக்கு அருகிலிருக்கும் இளைஞர் மன்றத்தில் போய் இளைஞர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் நிறைவைக் காணலாம்.

எது சிறந்தது?

எதில் நாம் இன்பம், நிறைவு காண்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். சின்னச் சின்ன அற்ப விஷயங்களில் மகிழ்ச்சி அடைந்து விட்டால் நிலவை அடைய ஆசை வராது.

சின்னச் சின்ன நிறைவுகளில் தமது மனதை செலுத்திக் கொள்கிறார்கள். நல்ல ஒரு சமையல் செய்து குழந்தைகள், கணவன் அதை பாராட்டி விடுவது, புதிதாக வாங்கிய சேலையை தோழி பார்த்து பாராட்டியது என்று மனத்தை நிறைத்துக் கொண்டால் பசி எங்கே இருக்கும்?

சாப்பிடப் போகும் நேரத்தில் கண்டதை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளாதே என்பார்கள் வீட்டில். 'சாப்பாட்டில் சரியான விகிதத்தில் ஊட்டச் சத்துக்கள் இருக்கும், நீ சாப்பிடப் போகும் நொறுக்குத் தீனி அந்தச் சாப்பாட்டுக்கு இடம் இல்லாமல் செய்து விடும், ஆனால் அதற்கு ஈடான சத்து கிடைக்காது. அதனால் வயிற்றை நிரப்பச் சரியான, தரமான உயர்வான உணவை நாடு' என்பது அதன் பொருள்.

அதே போலத்தான் மனதை நிரப்ப முயலும் மேல் சொன்ன பழக்கங்கள். நொறுக்குத் தீனிகளால் மனதை நிரப்பிக் கொண்டு விட்டால், சாப்பாட்டுக்கு இடம் இருக்காது, சாப்பாட்டுக்கு இடம் இல்லாமல், சரியாகச் சாப்பிடாமல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்காது.

6 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் மா.சி!

ஒரு ஆசிரியர் மாணவர்கள் முன் ஒரு கண்ணாடி ஜாடி ஒன்றையும் , பெரிய கற்கள், சிறுகற்கள், மணல், தண்ணீர் எல்லாம் வைத்து இந்த ஜாடியில் சிறிதும் இடம் இல்லாமல் இங்கு உள்ள எந்த பொருளையாவது கொண்டு நிரப்ப வேண்டும் என்றார்.

ஒவ்வொருவரும் மணல் ,சிறிய கற்கள் ,என பல விதங்களில் முயன்றனர் , , முழுதாக நிரம்பவில்லை என்றே சொன்னார் ஆசிரியர், கடைசியில் அவரே நிரப்ப ஆரம்ப்பித்தார்,

முதலில் பெரிய கற்களை ஜாடி நிறைய போட்டார்... நிரம்பி விட்டதா கேட்டார், நிரம்பிவிட்டது என்றார்கள், பின்னர் சிறிய கற்களைப் போட்டு சிம்ரன் இடுப்பை குலுக்குவது போல் ஜாடியை குலுக்கியதும் அவையும் உள்ளே சென்றது ..

நிரம்பிவிட்டதா?.... நிரம்பிவிட்டது என்றார்கள்.

மீண்டும் மணலை அள்ளி உள்ளேப்போட்டு ஒரு குலுக்கு குலுக்கினார் அவையும் உள்ளே சென்றது ,

நிரம்பி விட்டதா கேட்டார்?...நிரம்பி விட்டது என்றார்கள்.

பின்னர் ஜாடியில் தண்ணீர் ஊற்றினார் அதுவும் உள்ளே இடம் பிடித்தது.

இப்பொழுது சொல்லுங்கள் நிரம்பி விட்டதா? மாணவர்கள் சொன்னார்கல் கண்டிப்பாக நிரம்பி விட்டது என்று.இப்போது தான் ஆம் என்றார் ஆசிரியர்.

கதை சொல்லும் கருத்து:-

முதலில் பெரிய விஷயங்களை உள்ளேப் போடுங்கள் , சிறிய விஷயங்கள் மனதை அடைத்துக்கொள்ள இடம் தறாதீர்கள்.
(எப்பொழுதோ எங்கேயோ படித்தது)



இது என்ன கொடுமை வவ்வால் ? என்று கேட்காதீர்கள் இதான் பின்னூட்டம், உங்கள் பதிவின் எதிரொலியாக என் மனதில் தோன்றியது.

சீனு சொன்னது…

arumaiyeana pathivu...nalla karuthu...nandri

பெயரில்லா சொன்னது…

டாடாவில் ஆறு ஆண்டுகள் தொடரை முடித்துவிட்டீர்களா? நேற்றிரவு அதிகாலை இரண்டு மணியளவில் தேடிக்கொண்டிருந்தேன் கிடைக்கவில்லை (தூக்க கலக்கத்தால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று நினைக்கி
றேன்).

Could you provide me the links for all chapters of Six years in Tata?

I appreciate your writings and opinions. I encourage you to write more and more.

Thanks.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க வவ்வால்,

//முதலில் பெரிய விஷயங்களை உள்ளேப் போடுங்கள் , சிறிய விஷயங்கள் மனதை அடைத்துக்கொள்ள இடம் தறாதீர்கள்.//

நல்ல கருத்து!

இடுகையில் சொன்ன கருத்துக்குப் பொருத்தமாகத்தானே இருக்கிறது!

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சீனு,

வெள்ளத்தனையது மலர் நீட்டம் என்ற குறளும் நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//டாடாவில் ஆறு ஆண்டுகள் தொடரை முடித்துவிட்டீர்களா?//

இல்லை, அப்படியே விட்டு விட்டேன் :-(.
நீங்கள் கேட்பதால் திரும்ப தொடரும் எண்ணம் வருகிறது!

//Could you provide me the links for all chapters of Six years in Tata?//

இப்போதைக்கு இங்கு இருக்கும் மூன்று பகுதிகள்தான். விரைவில் தொடர்கிறேன்.

//I appreciate your writings and opinions. I encourage you to write more and more.//

நன்றி. ஜான் ஓ ஹாரா என்ற அமெரிக்க எழுத்தாளர் சொன்னது போல எழுதுவது கடமை போல ஆகி விட்டது எனக்கும் :-). இது போன்ற ஊக்குவிப்புகள் மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்