ஞாயிறு, ஜூன் 17, 2007

கோயில் கொடை

புத்தேரியில் கொடை.

யோகீஸ்வரர் சாமிக்குக் கொடை. யோகீஸ்வரர் என்பது பதினைந்து இருபது அடி உயரத்துக்கு மேல் திறந்த வெளியில் இருக்கும் செங்கலால் எழுப்பப்பட்ட அமைப்பு. மாமா சொன்ன கதைப்படி, முற்காலத்தில் காடாக இருந்த இடத்தில் மேய வந்த மாடு ஒன்று உரச புற்றிலிருந்து ரத்தம் வந்ததாம். சாமியாடி பிரசன்னம் கேட்டதில் அந்த இடத்தில் கோவில் கட்டி வழிபட்டால் ஊர் மேம்படும் என்று சொல்ல, புற்றைச் சுற்றி செங்கல் அடுக்கினார்களாம்.

அடுத்த ஆண்டில் பார்த்தால் இன்னும் ஒரு முழம் வளர்ந்திருந்ததாம். அந்த உயரத்துக்கு செங்கல் அடுக்கியிருக்கிறார்கள். இப்படியே வருடா வருடம் உயர்ந்து கொண்டே போய் இன்றைய உயரத்துக்கு வளர்ந்திருக்கிறதாம். 87 வயதாகும் மாமாவுக்கு நினைவு தெரிவதற்கு முன்பே இருக்கிறதாம். இத்தனை ஆண்டுகளில் ஒரு செங்கல் கூட பெயர்ந்து விழுந்தது கிடையாது என்கிறார்.

கொடைத் திருவிழாவின் போது செங்கல் அமைப்பைச் சுற்றி மண் பூசி, ஏணியில் ஏறி பூசைகள் செய்கிறார்கள். மாலையில் நாங்கள் போனது சாமிக்குக் கண் திறப்பு என்று மண் பூசப்பட்ட உருவத்தில் முகப் பகுதியில் கண்களைப் பொருத்தி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி. காலையில் ஆறரைக்கு வீடு வந்து சேர்ந்து, சாப்பிட்டு விட்டு, காலையில் நகரத்துக்குள் போய் வந்து, மதியச் சாப்பாட்டுக்குப் பின் கண்ணயர்ந்து எழுந்து புத்தேரிக்கு வந்திருந்தோம்.

நாங்கள் வந்து சேரும் போது ஐந்தரை ஆகியிருந்தது. கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குவிந்து கொண்டிருந்தார்கள். அங்கேயே எண்ணெய் சட்டி வைத்து ஜிலேபி சுட்டுக் கொண்டிருந்தார்கள் இரண்டு பேர். விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகளும் முளைத்திருந்தன. ஆயிரக் கணக்கான மக்கள் கூட்டம் அந்த சின்னத் தெருவில் கூடியிருந்தது.

உறவினர் வீடு அதே தெருவின் மறுபக்கத்தில். அங்கு போய் உட்கார்ந்திருந்தோம். அந்த மாமா, அருகிலேயே வீடு இருக்கும் சித்தப்பா, தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த அண்ணன் எல்லோரும் ஏற்கனவே போய் விட்டார்களாம். சுக்கு காப்பி குடித்து விட்டு நாங்களும் கிளம்பினோம். வந்து சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும் என்றும் சொன்னார்கள்.

கூட்டத்துக்குள் புகுந்து வலது புறமாக இருந்து மேடையின் ஏறிக் கொண்டோம். சாமி உயரமானதாக வெளியில் இருந்ததால் எல்லோரும் தடையின்றி பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பேர் ஒன்று கூடி நூறாண்டு கால பழக்கத்தை மதித்து விழா நடத்துவது இன்றைய ஸ்பென்சர்ஸ் பாணி வாழ்க்கை நிலவும் இதே மண்ணில் நடக்கிறதே என்று.

மேலே இருந்தபடி பார்த்தால் கூட்டத்தில் சித்தப்பா முதலியோரையும் பார்த்து விட்டேன். அடுத்த சுற்றில் மாமா பார்த்து கையசைத்தார்கள். நாங்கள் நின்ற இடத்திலிருந்து மரக்கிளைகள் மறைத்ததால் சாமியின் முகம், கண் திறப்பதைப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஜைன முனிவர் தவம் இருந்த இடம் என்று அப்பா சொல்லியிருந்தார்கள். இந்தச் சாமி, நாகர்கோவிலின் நாகராஜா கோவில் இன்னும் சில கோயில்கள் ஜைன வழிபாட்டுத் தலங்களாக இருந்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சரியாக ஆறு மணிக்கெல்லாம் பூசை முடிந்து விட்டது. கூட்டத்துக்குள் நீந்தியபடி ஒருவர் திருநீறு வழங்கியபடியே வந்தார். எல்லோருக்கும் பூசக் கிடைத்து விட்டது. கூட்டம் சிறிது சிறிதாகக் கலைய ஆரம்பிக்க கீழே இறங்கி சித்தப்பாவின் அருகில் வந்தோம். காவடி பார்த்து விட்டு சாமியை சுற்றி விட்டுப் போகலாம் என்று சித்தப்பா சொன்னாலும், மற்றவர்கள் வீடு திரும்ப விரும்ப, திரும்பி விட்டோம்.

கடையிலிருந்து ஜிலேபி வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அப்படியே சித்தப்பா வீட்டுக்கும், மாமா வீட்டுக்கும் போய் விட்டு வருவதாகக் கிளம்பினோம். சாப்பிடத் திரும்பி வந்து விடுவதாகப் பேச்சு.

அந்தத் தெருவில் முனை திரும்பி அடுத்த தெருவிலேயே இருந்தது சித்தப்பாவின் வீடு. வீடு நன்றாக இருந்தது. சித்தப்பா இப்போது தனியாகத்தான் இருக்கிறார்கள். இரண்டு வீடாகக் கட்டியிருக்கிறார்களாம். சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அத்தையும் மைனியும் வந்தார்கள். மைனியுடன் அவள் மகளும். மகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறாளாம்.

அவர்கள் மூவரும் கைநிறைய வாங்கி வந்த பஞ்சாமிர்தத்தில் பங்கு கிடைத்தது. மைனியும் அவள் மகளும் கிளம்பி விட உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பக்கத்தில் குலசாமிக்கு பூசை செய்ய அழைத்தார்கள். ஊரில் இருந்த மூன்று கன்னியரை இங்கு பதிந்திருக்கிறார் சித்தப்பா. அத்தோடு மாமா வீட்டுக்குக் கிளம்பினோம்.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

கோயில் திருவிழாக்கள் எல்லாம் எப்பவும் மனசுக்கு உற்சாகம் தருவதுதான்.
பழைய சொந்தங்களைப் பார்க்க இதுவும் ஒரு வாய்ப்புதானே?
'நம்பிக்கைதான் சாமி'ன்றது எவ்வளொ தெளிவா இருக்கு பாருங்க.

பெயரில்லா சொன்னது…

//இவ்வளவு பேர் ஒன்று கூடி நூறாண்டு கால பழக்கத்தை மதித்து விழா நடத்துவது இன்றைய ஸ்பென்சர்ஸ் பாணி வாழ்க்கை நிலவும் இதே மண்ணில் நடக்கிறதே என்று.//

ஜாதி பேதம்தனைப் போக்கிட
வாதம் செய்யாது வேதம் காட்டிய
வழி இதுவே.

நிறைவு தரும் அமைதியானது
ஆண்டவன் பெயரால்
மட்டுமே அடையக் கூடியது.

இதனை உணர்ந்த ஆன்றோர்கள்
அருளிய அமுத வழி
இது அறிந்தால் லாபம் நமக்கு.

மா சிவகுமார் சொன்னது…

//'நம்பிக்கைதான் சாமி'ன்றது எவ்வளொ தெளிவா இருக்கு பாருங்க.//

ஆமா துளசி அக்கா,

அவ்வளவு பேர் கூடி நம்பிக்கையோடு கும்பிட்டது அருமையான அனுபவம்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இதனை உணர்ந்த ஆன்றோர்கள்
அருளிய அமுத வழி
இது அறிந்தால் லாபம் நமக்கு.//

அனானியாக வந்தாலும் கவிதையில் நன்கு அறிமுகமான அன்பரின் முத்திரை தெரிகிறது ! :-)

அன்புடன்,

மா சிவகுமார்