சனி, மே 16, 2009

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம்

'சின்னச் சின்னக் கட்சிகள் ஆட்சி அமைத்தால் ஊழல் அதிகமாகும். பெரிய கட்சிகள்தான் நிலையான நல்ல ஆட்சி கொடுக்க முடியும். காங்கிரசும், பிஜேபியும் தலா 150 தொகுதிகளுக்கு அருகிலும், அவர்கள் கூட்டணிகள் 200 தொகுதிகளுக்கு அருகிலும் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்புகள். மூன்றாவது அணிக் கட்சிகள் 100 தொகுதிகளுக்கு அருகில்தான் வாய்ப்பு பெறும்.'

'ராஜீவ் காந்தி கட்சித் தாவல் தடை சட்டத்தைக் கொண்டு வந்தது ஒரு பெரிய பிற்போக்கு நடவடிக்கைழ காங்கிரசு என்பது பல்வேறு மாநிலங்களின், பல்வேறு சமூகப் பிரிவினர்களின் கூட்டணியாக இருந்து வந்தது. பிடிக்காதவர்கள் கட்சியை உடைத்துக் கொண்டு போகலாம், வேறு கட்சிக்குத் தாவலாம் அல்லது தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம்.

1984 தேர்தலுக்குப் பிறகு கிடைத்த பெரும்பான்மையை இழந்து விடக்கூடாது என்ற ஆர்வத்தில் கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். எந்த சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் அவரது பதவி பறிக்கப்பட்டு விடும். அவரது தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும்.

அதனால் பெரிய மாறுதல்கள் நடந்து விடவில்லை. ஒற்றை ஒற்றையாக கட்சித் தாவுவது குறைந்து போய் கட்சியில் மூன்றில் ஒரு பகுதியினர் தனியாக உடைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். அடுத்த 20 ஆண்டுகளில் அதுதான் கணக்காக இருந்தது. ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும் போது எதிர்ப்பு அணிக்கு மூன்றில் ஒரு பங்காவது ஆதரவு இருக்கிறதா என்றுதான் முயற்சிகள் நடந்தன.

2003ல் சட்டத்தைத் திருத்தி மூன்றில் ஒரு பங்கு கட்சியை மீறினாலும் பதவி பறிக்கப்படும் என்று ஆக்கி விட்டார்கள். இப்போது கட்சி மாற்ற வேண்டிய உறுப்பினர்களை தமது பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டு வெளியில் வரச் சொல்கிறார்கள்.

ஆகக் கட்சித் தாவல் முழுமையாக நின்று விடப்போவதில்லை. வெளியில் போக வழியில்லாததால் உள்ளே வருவது குறைந்து போனது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா உறுப்பினர்களும் கட்சித் தலைமை சொல்வதைத்தான் கேட்டு நடக்க வேண்டும் என்பது கருத்துச் சுதந்திரத்தை பெரிதாக முடக்கிப் போடுவது. அதனால்தான் பெரிய தேசிய கட்சிகள் வலுவிழந்து, மாநிலக் கட்சிகள், சின்னச் சின்னக் குழுக்களை சார்ந்த கட்சிகள் வளர ஆரம்பித்தன.

குறைந்த பட்ச சுயமதிப்பு இருக்கும் தலைவர் தனியாகக் கட்சி ஆரம்பித்து விடுகிறார். வெற்றி பெற்றால் மற்றக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உறுப்பினர் பதவிக்கு ஆபத்து இல்லாமல் வெளியில் வந்து கொள்ளலாம்.

கட்சித் தாவல் சட்டம்தான் இந்திய அரசியலில் பல கட்சிகள் வருவதற்கான முக்கிய காரணம். மாற்றி வாக்களிக்கும் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தடுக்கத்தான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால் அரசியலில் ஊழலும் பணபலமும் குறைந்து விட்டதா என்ன? இன்னும் பல மடங்கு அதிகமாகத்தான் செய்திருக்கிறது. கருத்துரிமையை, மாறுபடும் உரிமையைப் பறித்ததுதான் பலனாக இருக்கிறது. அதற்கான நிவாரணத்தையும் நமது மக்களாட்சி முறை உருவாக்கிக் கொண்டு விட்டது.'

கருத்துகள் இல்லை: