வியாழன், மே 21, 2009

வாய்ச் சொல் வீரர்கள்

இத்தனை ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கு நாமெல்லாருமே ஒரு வகையில் காரணம்தான்.

ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்?

கொடுங்கோலை எதிர்த்துப் போராடும் மக்களை பாதுகாப்பான தொலைவில் சுகமாக இருந்து கொண்டு 'இன்னும் பலமாக அடி, பக்கத்தில் கிடக்கும் கல்லைத் தூக்கி எறி, நாங்க எல்லாம் இருக்கிறோம்' என்று வாய் வார்த்தைகளை மட்டும் கொட்டி விட்டு ஒவ்வொரு மரணத்துக்கும் பிறகு இரங்கல் செய்தியும், துக்கமும் வெளிப்படுத்துவதோடு நின்று விடுகிறோம்.

அடையாள வேலை நிறுத்தம் என்று வந்தால் கூட நமது பணிக்கு பாதிப்பில்லாத நாளில் வருகிறதா என்று பார்த்து அன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். வேறு முக்கியமான நாளில் வந்திருந்தால் வழக்கமான வேலைகளைப் பார்க்கப் போயிருப்போம்.

இந்திய கிரிக்கெட் 'வீரர்கள்' அப்படி படுகொலை நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் விளையாடப் போகும் போது, கோபப்பட்ட நாம் அதற்குத் துணை போகும் இந்திய அரசாங்கத்தின் குடையின் கீழ்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'அரசுக்கு வரி செலுத்தப் போவதில்லை, அரசுடன் ஒத்துழைக்கப் போவதில்லை' என்று ஏதாவது நடவடிக்கை எடுக்க முடிந்ததா?

வெறும் வார்த்தை ஜாலங்களையும், தந்தி அனுப்புவதையும் காட்டி மக்களின் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று கருணாநிதியைச் சாடிய அதே நேரத்தில் நாம் என்ன அதிகமாகச் செய்து விட்டோம்? அதே வார்த்தை ஜாலங்கள்தான், வலைப்பதிவில் ஒரு இடுகைதான்.

'நம் எல்லோரின் கைகளிலும் இரத்தம்' என்று ரீடிஃப் டாட் காமில் பத்ரகுமார் என்பவர் எழுதியிருந்தார். 1980களில் இலங்கையில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவராம். 'விடுதலைப் புலிகளை வசதிப் படும் போது வளர்த்து விட்டு, இந்திய நோக்கம் மாறும் போது அவர்களை ஆட்டுவிக்க முயற்சித்து தோற்றவுடன் பொறுமையாக கெட்டிக்காரத்தனமாக அவ்வளவு பேரையும் அழிக்கத் துணை போனோம். இந்த கொலைப்பழி பரம்பரை பரம்பரையாகத் தொடரும்' என்று எழுதியிருந்தார்.

நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. பத்து வார்த்தைகள் பேசினால், நூறு வார்த்தைகள் எழுதினால், குறைந்தது அந்த வழியில் வாரத்துக்கு ஒரு நாளாவது செயலில் காட்ட முடிய வேண்டும். அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்.

கருணாநிதிக்கு மத்திய அமைச்சரவை பதவிகளுக்காக டில்லி போகத் தெரிகிறது, ஈழத் தமிழரின் இன்னல்களைக் குறித்து தந்தி அனுப்ப மட்டும்தான் முடிகிறது என்று சொல்வதற்கு தகுதி கிடையாது. நம்முடைய வேலை என்றால் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம். ஈழத்துயரங்களுக்கு பதிவதோடு நின்று விடுகிறோம். அவ்வளவு அக்கறை என்றால் படகேறி வட இலங்கையில் இறங்கப் போக வேண்டும். அதனால் என்ன துன்பம் வருகிறதோ அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அதைச் செய்ய முடியாதவர்கள் வெற்றாக கதைத்துக் கொண்டிருப்பதில் பலனுமில்லை, நியாயமுமில்லை.

நம்ம நாலாவது வீட்டில் இருக்கக் கூடியவர் என்ற முகம், தாய், தந்தையர், மனைவி, மக்கள் என்று புகைப்படங்கள். இதைப் போல ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் தம்மைப் பலி கொடுத்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் ஆதரவு என்ற பெயரில் வெற்று ஊக்குவிப்பைக் கொடுப்பதுதான் நம்மால் முடிந்திருக்கிறது. இனிமேல் இது போல வெற்று வாய் வார்த்தைகளைக் கொட்டுவதை நிறுத்தி விட வேண்டும்.

17 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

சிவா,
இப்போதுதான் நீங்கள் உலகத்தை நோக்குகிறீர்கள்.

பிரபா பெரிய தல , எனக்கு அவர்தான் தலை , கீரோ என்று கத்தும் காட்டு மிராண்டிகள், அரசியலில் வீரத்தைக் காட்டும் புண்ணாக்குகள், ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்வது இல்லை.

பலர் தான் படித்தவற்றை வாந்தி எடுத்து தனது மேதாவித்தனத்தைக் காட்ட கட்டுரை எழுதுகிறார்கள். இதில் அரசியல் சார்புகள் வேறு.கேணத்தனமாக இன்னும் தனது அரசியல் தலைமைக்கு சொம்பு தூக்கும் ஜடங்களாகவே உள்ளார்கள்.

ஈழக் கனவை அழித்தவர்களில் முதன்மையானவர்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள். காலம்போன கடைசியில் 2009 ‍ல் நடந்த உலகளாவிய போராடங்கள் ஏன் கடந்த‌ 30 வருடமாக நடக்கவில்லை?

ஏதோ இவர்கள் வீட்டு வேலையாள் போல காசு கொடுத்தால் போதும் எல்லாம் அவர் பாத்துப்பார் என்று ஈழப்போரை புலிகளின் தலையில் மட்டும் கட்டிவிட்டு இவர்கள் உலக இலக்கியம் படிப்பது,படம் பார்ப்பது,விமர்சனம் எழுதுவது என்று இலக்கியச் சொம்ப‌டித்துக் கொண்டு இருந்தார்கள்.

நம்புங்கள்...இந்த மொன்னையிலும் இன்னும் 2009 பெட்னா விழாவுக்கு வாங்க என்று அமெரிக்காவில் சொம்பு தூக்கிக் கொண்டுள்ளார்கள் அமெரிக்கவாழ் தமிழ்ச்சங்கங்கள். ஆட்டம் பாட்டம் சினிமாவில் நடிக்கும் அட்டக்கத்தி வீரன்கள் எல்லாம் வருகிறார்கள். http://www.fetna.org அசிங்கமாக இல்லை?

பிரபாகரன் காட்டில் போர் புரிவது பிளான் A என்று இருந்தால் பிளான் B ஆக உலக அளவில் ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதை பெரும் மக்கள் இயக்கமாக இதுவரை மாற்ற யாரும் முயலவில்லை.

அகதியாக வந்து அந்த நிலையில் இருப்பவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அமெரிக்க மற்றும் கனடா குடியிரிமை வாங்கிய நிம்மதியாக வாழும் மக்கள், ஒரு பெரிய அரசியல் அமைப்பை இலங்கைக்கு வெளியே ஏன் உருவாக்க முயற்சிக்கவில்லை இந்த 30-40 ஆண்டுகளில் ?அப்படியும் அரசியல் களம் கண்டவர்கள் புலியை விமர்சித்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். என்ன கொடுமை?


நெல்லிக்காய் மூட்டைபோல இஸ்லாமியத் தமிழன், மலையகத்தமிழன், யாழ்ப்பாணத்து தமிழன், கொழும்பு வாசி அப்புறம் தமிழகத் தமிழன் என்று பல நிலைகள்.

இதற்கு இடையில் சிக்கிக் கொண்டு இன்னுயிரை அர்ப்பணித்த போராளிகள்தான் பாவம். பலர் செய்ததைப்போல அமெரிக்கா, கனடா, அய்ரோப்பபா என்று வந்து செட்டில் ஆகி இருக்கலாம் அவர்களும்.

அடுத்து தமிழகத் தமிழர்கள். சினிமா, கிரிக்கெட்டைத் தவிர எதற்கும் மசியாதவர்கள். மொழிப்போருக்குப் பிறகு தமிழகத்தில் பெரிய அலை என்று ஏதும் இல்லை. மொழிப்போரில் பங்கெடுத்தவர்கள் இப்போது ஏதும் செய்வது இல்லை. வயது அப்படி. மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று?

பதிவர்கள்...குறைந்த பட்சம் தான் எழுதுவதற்கு உண்மையாய் இருப்பவர்கள் வினவு குழுவினர் மட்டுமே. இவர்களைத் தவிர ரோட்டில் இறங்கிப் போராட அல்லது தான் தாங்கிப்பிடிக்கும் அரசியல் கட்சியை கேள்வி கேட்க துப்பில்லாத ஜென்மங்களே அதிகம்.

பிங்க் ஜட்டி ஏற்படுத்திய ஒரு கலகத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.சினிமா, கதை, பக்தி , விமர்சனம் என்று ஒருவித பிரியாணி கலவையாகவே இருக்க விரும்புகிறார்கள்.சென்னையில் பெண்கள் ஒரு குழுவாக உண்ணாவிரதம் இருந்த போது அதை யாரும் மதிக்கவில்லை. எத்தனைபேர் அவர்களுடன் சேர்ந்து குறைந்த பட்சம் ஆதரவைக் கொடுத்தார்கள்??

ஈழத்தைக் காட்டிக்கொடுத்தவர்களில் நாம் எல்லாரும் அடக்கம் சிவா.

நல்ல நிலையில் இருக்கும் போது ஒன்றும் செய்ய துப்பில்லை. இரங்கலாம்....வருத்தமாம்... தூ. பிரபாகரனின் போர் உத்திகள் மற்றும் அரசியல் சார்ந்த அணுகுமுறைகளில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால், எடுத்துக் கொண்ட கொள்கைக்காக களத்தில் இருந்த அவர்கள், நாம் எல்லாரையும்விட சிறந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

யூதர் கொலை, ஜாலியன் வாலபாக் கொலை என்றெல்லாம் படித்து வருத்தப்பட்ட நாம், கண்முன் நடந்த ஒரு பெரும் மக்கள் கொடுமையை , இனக் கொலையை தட்டிக் கேட்க திராணியில்லாமல் மிடில்கிளாஸ் மாதவன்களாக இருந்து விட்டோம்.

பொத்திக் கொண்டு இருப்பதுதான் நல்லது.துயரில் பங்கு கொள்கிறேன் என்று சொல்லக்கூட அருகதையற்றவர்கள் நாம். ஈழத்தைக் காட்டிக் கொடுத்த கபோதிகளில் நானும் ஒருவன். ஏதும் செய்யாமல் இருப்பதும் குற்றமே ,கோழைத்தனமே.

இரக்கம் துயரம் கீரோ என்று எந்த ஜல்லியும் இல்லாமல் குற்றவுணர்வுடன் மவுனமாக இருக்கவே விரும்புகிறேன்.

கானா பிரபா சொன்னது…

//ஈழக் கனவை அழித்தவர்களில் முதன்மையானவர்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள். காலம்போன கடைசியில் 2009 ‍ல் நடந்த உலகளாவிய போராடங்கள் ஏன் கடந்த‌ 30 வருடமாக நடக்கவில்லை?//

வணக்கம் கல்வெட்டு அவர்களே

இந்தப் போராட்டங்கள் முன்னமே நடக்கவில்லை என்ற குற்றப்பழியை ஏற்கும் அதே வேளை இதையே முழுமையாக எம் தலை மீது கல்லாகப் போட்டுக்கொள்ள இடம் கொடுக்க முடியாது. இதுவரை காலமும் இதற்குப் பின்னாலும் இந்த விடுதலைப் போராட்டத்தின் ஸ்திரமான நிதியாதாரம் எங்கிருந்து வந்தது?

புலம் பெயர் சமூகத்தில் இருந்த ஒரே ஒரு குறை, களத்தில் ஒரு ஆளுமை மிக்க தலைவன் இருந்தது போல வெளியே ராஜதந்திர நகர்வுகளை வெளியுலகிற்கு அவ்வப்போது சொல்லி எம் போராட்டத்தை நகர்த்த உருப்படியான ஆள் இல்லாதது. இன்று வரை எம் சமூகத்தில் ஒரு பல்லின ஊடகம் (ஆங்கிலம், பிரென்ச் உட்பட்ட) செய்தி பரப்ப உண்டா?

வெளிநாட்டு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கொழும்பில் மையம் கொண்டு கொழும்புக் காதுகளாக மாறியது போல, இலங்கையில் நிலை கொண்டிருந்த ராஜதந்திரிகளும் சிங்களவன் போடும் செய்திச் சாப்பாட்டை ஆங்கிலத்தில் சாப்பிட்டு ஜீரணித்து வந்திருக்கின்றான்.

புலம்பெயர்ந்த தமிழன் ஆங்கில இலக்கியத்தை மட்டும் படித்து வாழ்ந்து வந்தான், பணத்தை மட்டும் கொடுத்து அல்ல என்பது எல்லாரும் போட்டுக் கொள்ளும் சட்டை அல்ல.

Venkatesh Kumaravel சொன்னது…

கிட்டத்திட்ட என் நிலைய்ப்பாடும் இதுவே. :| கல்வெட்டின் பின்னுட்டங்களை (பல்வேறு தளங்களில்) ஆதரிக்கிறேன். இரங்கல் கவிதைகள் எழுதும் சோம்பேறிகளையும், இந்த நேரத்திலும் விளம்பரம் தேட முயலும் சிறுமனம் படைத்தவர்களையும் எண்ணி நாணுகிறேன். நல்ல பதிவு.

பெயரில்லா சொன்னது…

//பிரபாகரன் காட்டில் போர் புரிவது பிளான் A என்று இருந்தால் பிளான் B ஆக உலக அளவில் ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதை பெரும் மக்கள் இயக்கமாக இதுவரை மாற்ற யாரும் முயலவில்லை.//

ஆண்டன் பாலசிங்கம் இருந்தார் ஓரளவிற்கு. அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு புலிகளுக்கு.

ஆனால் சர்வதேச நாடுகளிடம் எதைக் கேட்டுப் பெற வேண்டும் என்று நினைக்கிறார் கல்வெட்டு?

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையா? சமஷ்டி முறை அரசியலமைப்பா? அல்லது தனி நாடா?

தனி நாடென்றால் எந்த தேசமும் வெளிப்படையாக ஆதரிக்காது. சமஷ்டி முறை அரசியலமைப்பை புலிகள் ஏற்கமாட்டார்கள். இங்கேதானே பிரச்சினையே.

இலங்கையில் தமிழர்கள் துயரை நிரந்தரமாக துடைக்கும் வாய்ப்பு புலிகள் அமைப்புக்கு சில முறைகள் நிஜமாகவே கிடைத்தது. நார்வே அரசாங்கத்தின் முயற்சி. ரணிலின் முயற்சி போன்றவை சில உதாரணங்கள். ஆனால் நடைபெறவில்லை. இப்பொழுது மீண்டும் முதல் கட்டத்திலிருந்து துவங்கவேண்டும் :((

போரில் மடிந்த தமிழர்களுக்கு வீர வணக்கம்!

Agila சொன்னது…

//பிரபாகரனின் போர் உத்திகள் மற்றும் அரசியல் சார்ந்த அணுகுமுறைகளில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால், எடுத்துக் கொண்ட கொள்கைக்காக களத்தில் இருந்த அவர்கள், நாம் எல்லாரையும்விட சிறந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.//
//பொத்திக் கொண்டு இருப்பதுதான் நல்லது.துயரில் பங்கு கொள்கிறேன் என்று சொல்லக்கூட அருகதையற்றவர்கள் நாம். ஈழத்தைக் காட்டிக் கொடுத்த கபோதிகளில் நானும் ஒருவன். ஏதும் செய்யாமல் இருப்பதும் குற்றமே ,கோழைத்தனமே.

இரக்கம் துயரம் கீரோ என்று எந்த ஜல்லியும் இல்லாமல் குற்றவுணர்வுடன் மவுனமாக இருக்கவே விரும்புகிறேன்.
//

Amen!

.கவி. சொன்னது…

// பத்து வார்த்தைகள் பேசினால், நூறு வார்த்தைகள் எழுதினால், குறைந்தது அந்த வழியில் வாரத்துக்கு ஒரு நாளாவது செயலில் காட்ட முடிய வேண்டும். அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்.//

இந்த இணைய வேசிகளை அடையாளம் காண் இவ்வளவு நாள் ஏன் தோழரே.

இந்த இணைய வேசிகள், தங்கள் ‘சில நிமிட உழைப்பால்’ சீர்திருத்தினோம் என்று கூப்பாடு போட்டு தன்னைக் கூவி விற்பதில் காட்டும் நாட்டும், உணர்வாளர்களைக் கூச வைக்கின்றது.

இந்த வேசிகள் எம் மக்களுக்காக நாம் உருவாக்கிய மலர்ப்படுக்கையை தன் வேசி வியாபாரத்திற்காகப் பயன்படுத்துவமன்றி, மினிக்கிக் கொண்டிருக்கின்றனர், மின்மினியாக. எதிர் வரும் விடியலில் இந்த மின்மினிகள் காணாமல் போக வேண்டும். போகும். இது வரலாறு.

.கவி.

Thekkikattan|தெகா சொன்னது…

சிவா,

:-((((( அத்தனையும் உண்மை,

கல்வெட்டு - //யூதர் கொலை, ஜாலியன் வாலபாக் கொலை என்றெல்லாம் படித்து வருத்தப்பட்ட நாம், கண்முன் நடந்த ஒரு பெரும் மக்கள் கொடுமையை , இனக் கொலையை தட்டிக் கேட்க திராணியில்லாமல் மிடில்கிளாஸ் மாதவன்களாக இருந்து விட்டோம்.//

அதே, அதே ... இந்த வார்த்தைகளை இப்போதுதான் நானும் கட்டுரையாக ஒரு ஆண்டு மலரெக்கென எழுதி பொலம்பி வைத்தேன்.

நம் எல்லோர் கையிலும் இரத்தம் என்ற அடிப்படை குற்றவுணர்வினால் தான் பதிவுகள் எழுதுவது என்றாலே இப்பொழுது "வெக்கித் தலை குனியக் கூடிய" ஒரு சம்பவமாக நினைக்கத் தோண்றுகிறது. அதுதான் உண்மை!

இருந்தாலும் சிவா, உங்களுடையதைப் போன்ற பொதுச் சிந்தனைகளை முன் மொழியும் பொழுது எது போன்ற நிலையில் ஒரு குழுவாக அமர்ந்து வேடிக்கை பார்த்திருக்கிறோம் இந்த படுபாதகச் செயலை என்பதனையும் அறிந்து கொள்வதற்கேனும் இந் நிலையில் பயன் படுகிறதே.

மொத்தத்தில் எனக்குத் தெரிந்தவரையில் இது நாள் வரை ஊடகங்களில் முதலைக் கண்ணீர் வடித்து எழுதியவர்களும், எழுதிக் கொண்டிருப்பவர்களும், எழுதப் போரவர்களும் ஏதோ ஒரு சூழ்நிலையில் சுயநலத்தை பேணி, முதலைக் கண்ணீர் வடித்து அதிலிருந்து தனக்கு இரக்கம், மற்ற உயிர்களின் மீது மரியாதை, கரிசனம் இருப்பதாக வேண்டுமானல் மனசாட்சியை அடமானம் வைத்துக் கொண்டு ஏழுதலாம். குறைந்த பட்சம் உங்களைப் போல முதலில் குற்ற உணர்ச்சியை, வெக்க நிலையை முன் வைக்காமலும் கூட.நானும் ஒரு குற்றவாளி, பல கொலைகளை நடக்க விட்டு கண்ணுற்றவன் :-(.

மா சிவகுமார் சொன்னது…

கல்வெட்டு, கானா பிரபா, வெங்கிராஜா, அகிலா, கவி, தெக்கிட்டான்,

இந்த நிகழ்வுகளில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். இனிமேல் பேசுவதையும், எழுதுவதையும் பல முறை யோசித்துதான் செய்ய முடியும். பொறுப்பில்லாமல் கதைக்கும் அரசியலால் பலர் வாழ்க்கையையே இழக்க நேருகிறது என்ற உண்மை சுடுகிறது.

:-(

கல்வெட்டு சொன்னது…

Anonymous @ Thu May 21, 12:20:00 PM IST

//ஆனால் சர்வதேச நாடுகளிடம் எதைக் கேட்டுப் பெற வேண்டும் என்று நினைக்கிறார் கல்வெட்டு? //

எது தேவையோ அதை. யாருக்கு எது தேவை என்பதை அவர்களே முடிவு செய்யவேண்டும். தமிழ்நாட்டினாக எனக்கு பல கோணங்கள் இருக்கலாம். ஆனால் ஈழத்தவன் என்ன செய்யவேண்டும் என்று அங்கே இரத்தமும் சதையுமாய் இருப்பவனே சொல்லமுடியும்.

நோகாமல் நொங்கு தின்பது போல இணையத்தில் பல அறிவுரைகளை வழங்க முடியும். ஆனால் அவை எல்லாம் ஒரு மண்ணாங்கட்டிக்கும் பயன்படாது.

*******************


கானபிரபா,
"காசு கொடுத்தோம் நாங்கள்" என்று சொல்வது வீட்டைக் காட்கும் கூர்க்காவிற்கு வேண்டுமானல் சரியாக் இருக்காலாம். சுதந்திரப் போராளிகளுக்கு அது மட்டும் பத்தாது.

தனி நபர் துதியும், மாற்று அரசியல் இயக்கங்கள் உலக அளவில் வலுவடையாததும் ஏன் என்று இப்போதாவது ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

30 ஆண்டுகளாக உலக அளவில் புலம் பெயர் ஈழத்தவர்கள் நடத்தியுள்ள அரசியல் மாநாடு,பேரணிகளையும் இந்த 2009 ல் நடத்திய மாநாடு,பேரணிகளையும் கணக்கில் எடுங்கள்.

கோவில் உண்டியலில் காசு போட்டுவிட்டு புண்ணியம் தேடும் பக்தகேடிகளைப்போல, இவர்களும் பிரபாவிற்கு காசு அனுப்பிவிட்டு மானாட மசிராட என்று இலக்கியம்,கலை பெட்னா என்று அனைத்து கூத்திலும் நாட்களை நகர்த்தினார்கள். எல்லாம் முடிந்து புலிகள் நெருக்கப்பட்ட பின்னரே இவர்கள் விழித்தார்கள் 2009ல்.

பிச்சாத்து கிரீன்கார்டுக்காகவும் அதில் வந்த புராசஸ் தடங்கலை சரி செய்யவும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளைச் சென்று பார்த்தவர்களை நான் அறிவேன்.


ஈழத்தில் இருந்து அமெரிக்காவந்து , அமெரிக்காவின் குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் ஆகியும், ஈழப்பிரச்சனைக்காக அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளைச் சென்று பார்த்தவர்களைச் சொல்லுங்கள் நீங்கள் அறிந்திருந்தால். 30 ஆண்டுகளாக ஆட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்.

நான் சொல்வது பெரும்பான்மையான (90%) மக்களின் நிலை.தனது நாடு பற்றி இவர்களுக்கே அக்கறை இல்லை எனும்போது மற்றவர்களைச் சாடி என்ன பயன்?


****

நிஜம் இதுதான்.....

பிரபாகரன் ஆயுதங்களை முற்றிலும் போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தாலும் ஒன்றும் ஏற்பட்டு இருக்காது.

யாசர் அராபத் எவ்வளவோ பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். எல்லா நாட்டு தலைவர்களிடமும் தொடர்பில் இருந்தார். அவர் காலம் உள்ள மட்டும் , ஏன் இன்று வரையும் பாலஸ்தீனம் அதற்கான அங்கீகாரத்தைப் பெறவில்லை.இன்னமும் ஒரு ஆபத்தான் நிலையில்தான் இருக்கிறது.

இஸ்ரேலுக்கு இருக்கும் வலுவான அமெரிக்க அய்ரோப்பிய ஆதரவு அதைக் காக்கிறது.

***

ஒருவேளை இந்தியா வரிந்துகட்டிக்கொண்டு ஈழத்தை ஆதரித்து இருந்தால் மாற்றம் ஏறபட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இந்தியாவில் மனித நோக்குள்ள நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை. ஐ.நாவில் இலங்கையின் தீர்மானத்தை ஆதரித்ததில் இருந்து இந்தியாவின் நிலைமை தெளிவாகிறது.

தமிழக அரசியல்தலைமை சொல்ல வேண்டியதே இல்லை.

****


கியூபா,சைனா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிக்கும்போது அமெரிக்கா இதன் எதிர் அணி என்பதால் அமெரிக்கா நினைத்தால் முடியும். இதிலும் சிக்கல் இருக்கிறது.

அமெரிக்கா ஒரு காலத்தில் பின்லேடனை வளர்த்தது போல அதன் ஈழ உதவிகள் அமையாமல் , இஸ்ரேலைக் காப்பதுபோல ஈழத்திற்கும் உதவினால் நன்று. அதுதவிர வேறு வழிகள் புலப்படவில்லை இப்போதைக்கு. ஆனால் அப்படி நட்க்க ஒரு ஸ்ட்ராங்க் அஜென்டா வேண்டும். யார் உண்டாக்குவது ????

****

டண்டணக்கா சொன்னது…

As we self accuse and silent ourself for our inability/in-activity in the current events, we can't shed out our responsibility to lay a foundation for the steps ahead.

There are organization/groups organized massive demonstrations across London, Toronto, Washington DC, Sydney, Zurich and other European city. These multiple organizations across world cities have to unite now and form a "Worldwide Common Federation" to act as a Window for Elem Tamils.

The world is hearing Sinhalese side of story from Srilankan govt.
The world is hearing Elem Tamils side of story from - whom?.... there should be "Common Federation of Tamil Organization" to tell tamil side of the story.

In coming days more tamils of elem "will be cleanesed" and "remain will be suppressed".

Srilankan Govt will hide (or) deny (or) defend it for Sinhalease side.
Who will tell out the suffering of Elem Tamil side in coming days to rest of the world. Unless it comes from a United Federation, the world press will ignore fully. And without a united voice and demonstrations, SL govt will move on without resistance or without need to answer.

Building up a "Common Federation" of Elem Tamil organizations across Toronto, Sydney, Wasington, Zurich, London and other world Cities is important.

Youths understand the Western Politics and Media than Elders living in the Western world, these Youth should build it a way It works effectively with Western Political and Media circle.

மா சிவகுமார் சொன்னது…

டண்டணக்கா,

//As we self accuse and silent ourself for our inability/in-activity in the current events, we can't shed out our responsibility to lay a foundation for the steps ahead.//

முற்றிலும் உண்மை. செயலற்று இருப்பது இது வரை செய்த தவறுகளுக்கு விடை ஆகாது. மாற்று வழிகளில் தொடர்ந்து செயல்படுவது இன்றைய அவசிய தேவை.

வஜ்ரா சொன்னது…

கல்வெட்டு அவர்கள் சொல்லியது போல் பிளான் B ஏன் நடக்கவில்லை அல்லது வரவில்லை என்பதற்கு ஒருவிதத்தில் இந்த இண்டெலக்சுவல் சுயஇன்பம் கொள்பவர்கள் தான் என்றும் எனக்குப் படுகிறது.

இவர்கள் மற்றவர்களை வளரவிடாமல் தடுத்தனர் இன்றும் தடுக்கிறார்கள். புலிகளை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தினார்கள். அவர்கள் விழுந்ததும் எல்லாம் முடிந்தது என்று தமிழனை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள்.

புலிகள் அமைப்பும் இவர்களையே (இப்படிப்பட்ட ஜால்ராக்களையே) வளர்த்தது. மாற்றுக்கருத்துக்கள், அரசியல் பார்வைகளை அவர்கள் அழித்தார்கள். அப்புறம் எப்படி, அரசியல் செய்ய முடியும் ?

அதன் பலனையே இன்று இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கிறார்கள்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது, சுபாஷ் சந்திரபோஸ் போல் ஆயுதம் ஏந்திப்போரிட்டவர்களுடன், காந்தி/படேல் போல் அமைதியாக அரசியல் ரீதியாகப் போரிட்டவர்களும் இருந்தனர். அப்படி இலங்கைத் தமிழர்களில் யார் உள்ளார்கள் ?

சுபாஷ் சந்திரபோஸ் பிரபாகரன் போல் மாற்றுக்கருத்துக்கொண்டவரான காந்தியை, படேலை சுட்டுத்தள்ளியிருந்தால் ?

அருள் சொன்னது…

எல்லாம் பேசுவோம் ஈழத்தில் எல்லாம் அழிவதற்கு உடந்தையாக இருந்த தமிழின துரோகி நடத்தும் தமிழ் மாநாட்டுக்கு தேவையான உதவி அனைத்தையும் செய்து நாமும் வாய் சொல் வீரர் என மனசுக்குள் சொல்வோம்.

தனி காட்டு ராஜா சொன்னது…

//ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்?//
//அடையாள வேலை நிறுத்தம் என்று வந்தால் கூட நமது பணிக்கு பாதிப்பில்லாத நாளில் வருகிறதா என்று பார்த்து அன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். வேறு முக்கியமான நாளில் வந்திருந்தால் வழக்கமான வேலைகளைப் பார்க்கப் போயிருப்போம்.//
//அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்.//

உண்மை.........

//இரக்கம் துயரம் கீரோ என்று எந்த ஜல்லியும் இல்லாமல் குற்றவுணர்வுடன் மவுனமாக இருக்கவே விரும்புகிறேன்.//

பிழைப்பு வாழ்க்கை வாழும் என் நிலையும் இதுவே ....

ஜோதிஜி சொன்னது…

உங்கள் தளத்தில் மின் அஞ்சல் வழியாக பெறும் வசதியை ஏற்பாடு செய்ய இயலுமா?

மா சிவகுமார் சொன்னது…

ஜோதிஜி,

மின்னஞ்சல் வசதி செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

இதைத்தானே கேட்கிறீர்கள்?
http://www.blogger.com/email-post.g?blogID=3222812&postID=8490414436993783637

அன்புடன், மா சிவகுமார்

ஜோதிஜி சொன்னது…

நன்றி நண்பா.

உங்கள் தளத்தில் மின் அஞ்சல் வசதியை உருவாக்கவும். உங்களின் படைப்புகளை தொடர்ந்து படிக்க ஆசைப்படுகின்றேன்.