திங்கள், பிப்ரவரி 18, 2019

21-ம் நூற்றாண்டின் பெரியாரிய பகுத்தறிவு பிரச்சாரம்

சென்னையில் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உயர் ஆற்றல் இயற்பியல் விஞ்ஞானி அதீஷ் தாபோல்கர் "அறிவியலும் மூடநம்பிக்கையும்" என்ற தலைப்பில் அறிவியலுக்கும் (மூட) நம்பிக்கைகளுக்கும் இடையேயான உறவைப் பற்றி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி தரமணியில் உள்ள Institute of Mathematical Sciences-ல் நடைபெற்றது.



அதீஷ் தாபோல்கர் இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தாபோல்கரின் சொந்தக்காரர்தான். நரேந்திர தாபோல்கர் அதீஷ் தாபோல்கரின் அங்கிள்.

“அவர் மிகவும் பாசமான பெரியப்பா. மிகவும் உற்சாகமாக இருப்பார்.” என்றார் அதீஷ். நரேந்திர தாபோல்கர் ஒரு மருத்துவர். ஆனால், மருத்துவப் பணியுடனேயே சமூகத்தை பீடித்த பிற நோய்களையும் எதிர்த்துப் போராடினார். மகாராஷ்டிரா அந்த்ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (அநிச -ANIS) என்ற அமைப்பின் மூலம் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடி வந்தார். அவர் சொல்லிலும் செயலிலும் ஜனநாயகத்தை பின்பற்றுபவர். அவரது பேச்சுக்களில் கூட வன்முறையோ ஆத்திரமோ இருக்காது. ஆனால், பகுத்தறிவை பயன்படுத்தும்படி பிரச்சாரம் செய்த அவரது கருத்துக்களை தாங்கிக் கொள்ள முடியாத வன்முறை கும்பல் அவரை சுட்டு படுகொலை செய்து விட்டது. அந்த வன்முறை கும்பல் இது போன்று நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம் கல்புர்கி, கவுரி லங்கேஷ் என்ற பகுத்தறிவாளர்கள் பலரை கொலை செய்திருப்பது இப்போது தெரியவருகிறது.

நரேந்திர தாபோல்கர்
நரேந்திர தாபோல்கர் இறப்பிற்குப் பிறகு அநிச செயல்பாடுகள் முடங்கி விடும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதற்குப் பிறகு மகாராஷ்டிராவின் 10 கிளைகள், 2000 தன்னார்வலர்களுடன் அநிச எப்போதும் போல தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மராட்டிய பகுத்தறிவாளர் அகர்கர் "எது சரியானதோ அதை பேசுவது, எதை என்னால் முடியுமோ அதை செய்வது" என்ற அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

"ஒரு விஞ்ஞானி என்ற முறையில் நாம் சமூகத்தில் இருந்து விலகி இருக்கிறோம். குறிப்பாக கோட்பாட்டியல் இயற்பியல் விஞ்ஞானிகள் தமது கோபுரங்களில்தான் பெரும்பாலான நேரம் குடியிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் சமூகத்துக்கான நமது கடமையையும் நினைவு கூர்ந்து நிறைவேற்ற வேண்டியிருக்கிறது" என்று கூறும் அதீஷ் தாபோல்கர், 2013 ஆகஸ்ட் 20-ம் தேதி நரேந்திர தாபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தனது விஞ்ஞானி பணியிலிருந்து சில மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அநிச-வின் நீண்ட கால குறிக்கோளான மகாராஷ்டிரா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் (மகாராஷ்டிரா நரபலி மற்றும் பிற மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளையும் கருப்பு மேஜிக்கையும் தடுப்பதற்கும் ஒழித்துக் கட்டுவதற்குமான சட்டம் 2013) நிறைவேற்றப்படுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டார்.

"நம்பிக்கை, மூடநம்பிக்கை போன்றவை பற்றிய இது போன்ற உரைகள் பொதுவாக தத்துவ விசாரணையாக போய் விடும் அபாயம் இருக்கிறது. எனவே, இதை குறிப்பான, பருண்மையான அடிப்படையில் என் உரையை அமைத்துக் கொள்கிறேன். ஒட்டு மொத்த உரையின் அடிப்படை இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

அதீஷ் தாபோல்கர்
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அறிவியல் விசாரணை, பகுத்தறிவு, பெண்களுக்கு மரியாதை ஆகியவற்றை பேணி வளர்ப்பதை தனது வழிகாட்டு நெறிமுறைகளில் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது கருத்துரிமை, தான் நம்பும் வழிபாட்டு முறையை பின்பற்றும் உரிமை, மத உரிமை ஆகியவற்றையும் வழங்குகிறது. மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் இந்த இரண்டு ஒன்றுக்கொன்று முரண்படும் உரிமைகளுக்கு இடையேயான உரையாடல் மூலம் நிறைவேற்றப்பட்டது.

எது மூட நம்பிக்கை என்பதை வரையறுக்க வேண்டியிருக்கிறது? போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை நம்ப வேண்டும் என்பதை சிறிதளவு மாற்றிச் சொன்னால். ஒரு விஷயத்துக்கு எதிராக பெருமளவு ஆதாரங்கள் கிடைத்த பிறகும் கூட அதைத் தொடர்ந்து நம்புவது கூடாது என்று நான் சொல்லுவேன். இரண்டுக்கும் இடையே மிக நுணுக்கமான வேறுபாடு உள்ளது. முதல் கொள்கை எதையும் நம்புவதை நிபந்தனைக்குட்படுத்துகிறது. இரண்டாவது கொள்கை ஒரு விஷயத்தை நம்பாமல் கைவிட வேண்டியதற்கான வரையறையை முன் வைக்கிறது.

மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா பல்வேறு தரப்பினருக்கிடையேயான விவாதங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட மேலவையில் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகிப் போனது. இதில் மிக மூத்த, மரியாதைக்குரிய நீதித்துறை அறிஞர்கள் பங்கேற்றனர். எது மூடநம்பிக்கை என்பதை வரையறுப்பதில் மிக கவனமாக செயல்பட்டனர். இந்த மசோதாவில் ஒரு இடத்தில் கூட கடவுள் என்பது வரவில்லை. 64 செயல்பாடுகளை மூடநம்பிக்கை என்று பட்டியலிட்டு அவை படிப்படியாக குறைக்கப்பட்டு 16 செயல்பாடுகள்தான் இறுதி மசோதாவில் சேர்க்கப்பட்டன.

அப்படி தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் என்னென்ன?

அ. வெறுங்கையால் அறுவை சிகிச்சை செய்வதாக கூறிக் கொள்வது. இப்படி ஒரு சாமியார் நூற்றுக்கணக்கான சிகிச்சைகளை செய்து கொண்டிருந்தார். அவர் கட்டணமாக பணம் வசூலிப்பது இல்லைதான். ஆனால் நன்கொடை பெற்றுக் கொள்வார். அப்படி பல ஆயிரம் ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒரு துணியை உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் போட்டு மூடி, தனது கைகளால் சில அசைவுகளை செய்வார், எந்த விதமான காயமும் ஏற்படாது, ரத்தம் வராது. ஆனால், சிகிச்சை பெறுபவர் தான் குணமடைந்ததாக உணர்ந்து நன்கொடை கொடுத்து விட்டு போய் விடுவார். பின்னர் அவரை அந்த நோய் தாக்கி பாதிக்கப்படுவார். இதை இந்த மசோதா தடை செய்கிறது.

ஆ. ஒரு பெண்ணை சூனியக்காரி என்று பட்டம் சூட்டி கொலை செய்வது, சொத்தை பிடுங்குவது ஆகியவற்றை இந்த சட்டம் தடை செய்கிறது. சூனியக்காரி என்ற பட்டம் சூட்டுவது பெரும்பாலும் நிலவுடைமை தொடர்பான பிரச்சனைகளில் நடக்கிறது. குறிப்பாக தலித் பெண் நிலத்தையோ வேறு உரிமைகளையோ கோரும் போது அவரது எதிர் தரப்பினர் அவருக்கு சூனியக்காரி என்று பட்டம் சூட்டி விட்டால் அவர் சொல்வதை யாரும் கேட்காமல் போய் விடுவார்கள். இதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

இ. தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு அதன் மூலம் பெண்களை பாலியல் ரீதியாக கேடாக பயன்படுத்துவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. ஆசாராம் பாபு விஷயத்தில் அது அப்பட்டமான ரேப். ஆனால் பல சாமியார்களின் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணே சாமியாரை ஆதரிப்பார். சாமியார் கிருஷ்ணனின் அவதாரம் என்று நம்புவார். இந்த நிலையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு போட முடியாது. மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகள் ஒழிப்பு சட்டம் அதற்கு வழி செய்கிறது.

ஈ. பாம்புக்கடிக்கு முறையான சிகிச்சை பெறுவதை தடுத்து மாய தீர்வு சொல்வதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

அகில இந்திய மூடநம்பிக்கை ஒழிப்பு சங்கம்
இது போன்று 14 வகையான மோசடி செயல்பாடுகளை இந்தச் சட்டம் தடை செய்கிறது. ஒருவர் தன்னுடைய வீட்டில் கணபதி ஹோமம் செய்தால் வீடு நன்றாக இருக்கும் என்று கருதினால் அதைப் பற்றி இந்த சட்டம் எதுவும் சொல்லவில்லை. ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது இஞ்சி டீ குடித்தால் சரியாகி விடும் என்று நம்பினால் இந்த சட்டம் அதில் தலையிடாது. குறிப்பாக, தனி மனிதர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள் பிறரை பொருளாயத ரீதியில் கேடாக பயன்படுத்தாத வரையில் அவற்றில் இந்தச் சட்டம் தலையிடப் போவதில்லை.

இப்போது நம்பிக்கை பற்றி பேசலாம்.

ஹிக்ஸ் போஸான் துகளை உருவாக்கும் ஒரு நிகழ்வு பற்றிய சித்திரம்
அறிவியலில் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு அறிவியலும் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. அதற்கு உதாரணமாக ஹிக்ஸ் போஸான் பற்றி சொல்லலாம். ஹிக்ஸ் போஸான் என்ற துகள் இருக்க வேண்டும் என்று கோட்பாட்டு ரீதியாக நிரூபணம் ஆன பிறகும் அதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தொடர்பான செயல்முறை நிரூபணம் கிடைத்த பிறகுதான் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அறிவியல் விதிகள் நிகழ்தகவு அடிப்படையில் செயல்படுகின்றன. ஒரு விதி ஆகப் பெரும்பாலானா நேரங்களில் இப்படி நிகழும் என்றுதான் கணிக்க முடியும். 5-வது மாடியில் இருந்து குதித்தால் உயிருக்கு ஆபத்து என்பது அறிவியல் கோட்பாட்டிலிருந்தும் பெறப்படுகிறது. ஆனால், அது பல நூறு முறை பல நூறு விபத்துகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனாலேயே ஒருவர் அப்படி விழுந்து உயிர் தப்புவதை சாத்தியமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவ்வப்போது செய்தித் தாள்களில் அத்தகைய செய்திகளை படிக்கிறோம்.

அது போல ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலான நம்பிக்கைக்கு மதிப்பு அதிகம். தங்கத்தால் செய்யப்பட்ட குதிரை ஒன்று வானத்தில் பறக்கிறது என்று நீங்கள் நம்பலாம். ஆனால், பரிணாம வளர்ச்சி பற்றி நமக்குத் தெரிந்த வரையில் குதிரைக்கு இறக்கை இருப்பதோ, பறப்பதோ சாத்தியமில்லை என்று நாம் நம்புகிறோம். மேலும், உலோகத்தில் செய்யப்பட்ட குதிரை என்பது சாத்தியமில்லை என்பது உயிரியலில் தெளிவாக தெரிய வருகிறது. எனவே, அது நிகழ்வதற்கு மிக சாத்தியக் குறைவான ஒன்று என்று நிராகரித்து விடலாம். ஆனால், அப்படி ஒரு குதிரை இல்லவே இல்லை என்று சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.

ஆற்றல் மாறா கோட்பாடு என்பது கோடிக்கணக்கான நிகழ்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே, அதை மீறுவது போன்ற ஒரு நிகழ்ச்சியை யாராவது சொன்னால் அதை உடனேயே நிராகரித்து விடலாம். வெறும் கையில் விபூதியை தோற்றுவிப்பேன் என்று யாராவது சொன்னால் அதை போய் ஆய்வு செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அது மோசடி என்று உடனேயே முடிவு செய்து விடலாம்.

காந்தி ராமன் பெயரால் மதக் கலவரத்தை தடுத்து நிறுத்தினார். நவகாளியில் வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தினார். அவரது நம்பிக்கையை நான் ஏன் கேள்வி கேட்க வேண்டும். ஆனால், யோகி ஆதித்யநாத் அதே ராமன் பெயரில் மசூதியை இடிக்கவோ, முஸ்லீம்கள் மீது வன்முறையை தூண்டவோ செய்தால் அதை எதிர்ப்பேன். இதுதான் தனிப்பட்ட நம்பிக்கைக்கும் சமூக ரீதியில் கேடான நம்பிக்கைக்கும் இடையேயான வேறுபாடு.

இந்த மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் என்பது இந்து மதத்துக்கு எதிரானது என்றும், இந்தியாவுக்கு எதிரானது ஐரோப்பிய கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பது என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்தியாவுக்கு ஒரு நீண்ட அறிவியல் பாரம்பரியம் உள்ளது. இந்திய பாரம்பரியத்தில் லோகயதா தத்துவமும், சாருவாகன முறையும் பகுத்தறிவு, அறிவியல் முறையை பின்பற்றியவை.  பாஸ்கராச்சாரியா, ஆர்யபட்டா, மத்வாச்சாரியாவின் படைப்புகளில் நுண்கணிதத்தின் ஆரம்ப கோட்பாடுகள் காணப்படுகின்றன. சி.வி.ராமன், சந்திரசேகர் போன்ற இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை நாம் நிராகரிக்கிறோமா? அறிவியலில் ஐரோப்பிய அறிவியல், இந்திய அறிவியல் என்று ஒன்று இல்லை.

அதே நேரம் மேற்கத்திய விஞ்ஞானிகள் சொல்வது அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்வதில்லை. புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி லினஸ் பாலிங் சளியை சரி செய்ய வைட்டமின் சி உதவும் என்று நம்பினார். அது தொடர்பாக ஒரு புத்தகமும் எழுதினார், அதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் விஞ்ஞானிகள் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவரது தனிப்பட்ட நம்பிக்கையாகவும் பல கோடி பேரின் கருத்தாகவும்தான் தொடர்கிறது. ஒரு உண்மையாக மாறி விடவில்லை.

கடந்த சுமார் 400 ஆண்டுகளில் மனித குலம் சாதித்துள்ள இந்த அறிவியல் பாரம்பரியம் மகத்தான ஒன்று. இது மனிதகுலத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும். இன்றைக்கு உலகைப் பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது முன் எப்போதையும் விட அதிகம். எனவே, பல விஷயங்களில் நாம் அதிக நம்பிக்கை அளவுடன் முன் கணிப்புகளை சொல்ல  முடிகிறது.

கடவுள் என்ற கருதுகோள் மனிதன் விளக்கம் சொல்ல முடியாத விஷயங்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் கடவுள் என்ற கருதுகோள் தேவைப்படும் இடம் சுருங்கிக் கொண்டே போகிறது. கண் என்பது எவ்வளவு சிக்கலான அற்புதமான உறுப்பு, அதை யாராவது புத்திசாலிதானே படைத்திருக்க வேண்டும் என்பது கடவுள் இருப்பதற்கான ஆதாரமாக சொல்லப்படும் ஒரு வாதம். ஆனால், இன்றைக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின்படி கண் எப்படி தோன்றியது என்பதற்கு மிக எளிமையான கண்ணிலிருந்து அதிகரித்துக் கொண்டே போகும் சிக்கலிலான நூற்றுக் கணக்கான கண் வகைகள் உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, கண் என்பது பரிணாம வளர்ச்சிப் போக்கில் இந்த சிக்கலான அமைப்பை பெற்றது என்று முடிவு செய்ய முடிகிறது.

ஒரு காலத்தில் மின்னல் என்பது இந்திரன் வஜ்ராயுதத்தை பாய்ச்சுவதால் ஏற்பட்டது என்றும் மழை என்பது வருணபகவானின் கொடை என்றும் நம்பினார்கள். சூரிய பகவான் என்ற கருதுகோளை வைத்திருந்தார்கள். ஆனால், மனிதனின் அறிவு வளர வளர, இன்றைக்கு மின்னல் எப்படி ஏற்படுகிறது என்பதை துல்லியமாக புரிந்து கொண்டிருக்கிறோம். சூரியன் என்பது என்ன, அதில் எப்படி ஒளியும், வெப்பமும் தோன்றுகிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறோம்.

மேலும், இந்த அண்டத்தில் பல கோடி நட்சத்திரத் திரள்கள் (கேலக்சிகள்) உள்ளன. அவற்றில் ஒரு நட்சத்திரத் திரளின் நடுத்தர அளவிலான ஒரு நட்சத்திரமான சூரியனின் ஒரு சிறிய கோளான பூமியில் வாழும் மனிதர்களின் சிந்தனையில் தோன்றிய கடவுள்தான் இந்த ஒட்டு மொத்த உலகையும் இயக்குகிறார் என்பது கொஞ்சம் அதிகமாக படுகிறது. தனிப்பட்ட முறையில் நான் கடவுள் இருப்பதாக நம்பவில்லை. நீங்கள் கடவுளை நம்பினால் அதில் நான் தலையிடப் போவதில்லை. என்னுடன் வேலை செய்யும் விஞ்ஞானி ஒருவர் சொந்த வாழ்க்கையில் மூட நம்பிக்கைகளை பின்பற்றினால் அதில் நான் தலையிட மாட்டேன். தனிப்பட்ட முறையில் நட்பு ரீதியில், “என்னப்பா இங்கு முன்னேறிய அறிவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி வேலை செய்து விட்டு வெளியில் போய் இதைச் செய்கிறாயா" என்று அவரிடம் அதை விமர்சிக்கலாம். அதற்கு மேல் நான் போக முடியாது.

மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை பொறுத்தவரை அது அந்த மாநிலத்துக்கு மட்டுமானது. இது போன்ற மோசடி பேர்வழிகள் பேசாமல் இடத்தை மாற்றிக் கொள்கிறார்கள். உதராணமாக, அந்த அறுவை சிகிச்சை பேர்வழி (அவர் ஒரு முஸ்லீம்) கர்நாடகாவுக்கு மாறிப் போய் விட்டார். எனவே, இது போன்ற நாடு தழுவிய சட்டம் ஒன்று தேவைப்படுகிறது. இப்போது கர்நாடகாவும் அத்தகைய சட்டத்தை இயற்றி விட்டது.
நாடு தழுவிய சட்டத்தை கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றம், மகாராஷ்டிராவின் அநிச போன்ற தோழமை அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் கேள்வி கேட்கும் உணர்வை பரப்ப வேண்டும். மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அறிவியலில் நமக்குத் தெரியாத, நாம் ஈடுபடாத துறை பற்றி கருத்து சொல்லும் போது ஒரு பணிவு வேண்டும். நான் ஒரு கோட்பாட்டியல் இயற்பியலாளராக இருந்த போதும் இன்னொரு துறை பற்றி கருத்து சொல்லும் போது கவனமாகத்தான் சொல்வேன்."

விஞ்ஞானி ஒருவர் தான் வாழும் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அது போன்று முகம் கொடுக்கப்பட வேண்டிய பிரச்சனையாக அவர் கருதுவது என்ன என்பதையும், அறிவியல் - நம்பிக்கை - மூட நம்பிக்கை இவற்றுக்கிடையேயான உறவு என்ன என்பதையும் புரிந்து கொள்வதற்கு இந்த உரை உதவியாக இருந்தது.

அதீஷ் தாபோல்கர் இத்தாலியின் திரிஸ்தே நகரில் உள்ள அப்துஸ் சலாம் சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையத்தின் "உயர் ஆற்றல் இயற்பியல் மற்றும் அண்டவியல்" துறைத்தலைவராக பணியாற்றும் விஞ்ஞானி.

குவாண்டம் கருந்துளைகள் பற்றியும், ராமானுஜனின் படைப்புகளுடன் அதற்கு இருக்கும் தொடர்பு பற்றியும் ஆய்வு செய்பவர்.

ஐ.ஐ.டி கான்பூர் முதுகலை பட்டம் பெற்று பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஜெஃப் ஹார்வி என்ற பேராசிரியரின் வழிகாட்டலில் பி.எச்.டி பட்டம் பெற்றார். ரட்ஜர்ஸ், ஹார்வர்ட், கால்டெக் போன்ற கல்வி நிறுவனங்களில் ஆய்வாளராக பணியாற்றிய பிறகு 1996-ம் ஆண்டு டாடா அடிப்படை ஆய்வு கழகத்தில் 2010 வரை விஞ்ஞானியாக பணியாற்றினார். இழை (ஸ்டிரிங்) கோட்பாட்டில் மீசீர்மை (super symmetry) தீர்வுகள் தாபோல்கர்-ஹார்வி நிலை என்று அறியப்படுகிறது.

இது தொடர்பான ஒரு செய்தி

Atish Dabholkar calls for law against superstition

கருத்துகள் இல்லை: