வெள்ளி, மார்ச் 08, 2019

பெண்கள் மீது வேலைச் சுமையை குறைக்க உறுதி கொள்வதற்கான நாள்

ன்று சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்பது முதல் முதலாக கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட ஆரம்பித்தது. 1917 ரசிய சோசலிச புரட்சிக்குப் பிறகு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி அது கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் பெண்கள் மேலும் மேலும் தொழிலாளர்களாக வருகின்றனர். சாதி, மத கட்டுப்பாடுகளால் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்த பெண்கள் கார்மென்ட் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் வேலை செய்ய போகிறார்கள். ஏன், கட்டிட வேலையிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறது.

இது சமூக வாழ்வில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கிறது.

ஆனால், முதலாளிகள் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வதே குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கலாம் என்பதற்குத்தான். ஆண் தொழிலாளர்களை விட குறைந்த கூலி, வேலை நேரத்தில் இடைவேளை எடுக்காமல் தீவிரமாக உழைக்க வைத்தல், பிரச்சனைகளை எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம் இவற்றை முன் வைத்துதான் முதலாளிகள் பெண் தொழிலாளர்களை வரவேற்கிறார்கள்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் கார்மென்ட் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், கேரளாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் பெண் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடுவதில் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை என்பதைக் காட்டின. ஆண், பெண் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து பெண்களுக்கு கூலி, வேலை நேரம், பதவி உயர்வு, பணி நிலைமைகள் போன்றவற்றில் எந்த பாகுபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சனை வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள். வேலை இடங்கள் பலவற்றில் ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்ற நிலையில் அதில் சேரும் பெண்களை தனிப்பட்ட பாலியல் ரீதியாக பயன்படுத்த நினைக்கும் நபர்கள் உள்ளனர். இவர்களை எதிர்த்து சட்டங்கள், நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தாலும், சக தொழிலாளர்கள், தொழிற்சங்க செயல்பாடுகள்தான் இந்த கொடூரத்தை நமது பணி வாழ்விலிருந்து ஒழித்துக் கட்டும்.

வேலை செய்யும் இடத்தில் 8 மணி நேரம், வேலைக்கு போய் வர ஒரு சில மணி நேரம், அதற்கு பிறகு வீட்டுக்கு வந்து வீட்டு வேலை, சமையல், குழந்தைகளை பராமரிக்கும் வேலை என்று பெண் தொழிலாளர்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்படுகிறது. ஆண் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது இதற்கான ஒரு தீர்வாக உள்ளது. உண்மையில், வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டு வேலைகளை செய்வதற்கு வசதிகளை கேட்க வேண்டும். ஆண்களை விட குறைந்த வேலை நேரம், அல்லது வீட்டு வேலைகளை செய்வதற்கு ஆள் அமர்த்துவதற்கு கூடுதல் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளை வேலை செய்யும் இடத்துக்கு அழைத்து வர வேண்டியிருக்கும் அம்மாக்களுக்கு குழந்தைகளை பராமரித்து கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை வேலை செய்யும் இடத்தில் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

மேலும், மகப்பேறு, மாத விடாய் நாட்கள் போன்றவற்றில் பெண்ணின் உடல் உபாதைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு விடுப்பு, ஓய்வு நேரம், ஓய்வு இடம், சிறப்பு உணவு, சிறப்பு ஊதியம் வழங்குவதை சட்டரீதியாகவும், தொழிலாளர் அமைப்புகள் மூலமும் கொண்டு வர வேண்டும்.

பெண் விஞ்ஞானிகள், பெண் தொழிலாளர்கள், பெண் பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓட்டுனர்கள், விண்வெளி வீரர்கள் என்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சரிநிகர் சமானமாக தமது பங்களிப்பை செய்வதற்கான நிலையை உருவாக்குவது சமூக பொறுப்புள்ள எல்லோரது கடமையாகும்.

கருத்துகள் இல்லை: