சனி, டிசம்பர் 16, 2006

படிச்சவன் பாட்டைக் கெடுக்கிறான்

இன்றைய கல்வி முறையின் அழுத்தங்கள் பல இடங்களை உடைத்து வருகின்றன.
  • தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்
  • பள்ளியில் கண்மூடித்தனமான போட்டி,
  • மாணவர்களுக்கு ஓய்வே இல்லாத தயாரிப்புகள்,
  • குறுக்கு வழியில் மதிப்பெண்கள்,
  • கல்லூரி இடம் பிடிப்பு,
  • வியாபாரமாகி விட்ட கல்விக் கூடங்கள்
    என்று மேற்கத்திய சமூகங்களுக்கு சேவை செய்யும் இளைஞர்களைத்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
மதிப்பீட்டு முறை
பன்னிரண்டு ஆண்டு பள்ளிப்படிப்பை
  • ஒரு ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் உச்சகட்டமாக ஆக்கி,
  • மூன்று மணி நேரத் தேர்வுகளாக ஆறேழு தாள்களில் எழுதி
  • ஒவ்வொரு தாளையும் இருபது நிமிடத்தில் சுண்டிப் பார்க்கும்
வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மதிப்பீட்டைப் புறக்கணித்து மாணவன் முகத்தையே பார்த்திராத ஒருவர் மாணவனின் தேர்வுத்தாளை மதிப்பிட்டு கல்வித் தரத்தை தீர்மானிப்பது முட்டாள்தனமானது.

கல்வி ஊடுமொழி
குழந்தைகள் அன்னிய மொழியில் படிப்பதுதான் இயற்கை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சிறிய கிராமங்களில் கூட கூரை போட்டு மெட்ரிகுலேஷன் பள்ளி என்று ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய அனுபவத்தில் தாய்மொழியில் கல்வி பெறாதவர்கள் உலக வாழ்க்கையில் எவ்வளவு திறமையாக நடந்து கொண்டாலும், அவர்களுடைய சிந்தனை ஆழம் குறைவாக இருக்கிறது. எல்லா பொதுவான கருத்துக்களைப் போல இதற்கும் எதிர்மறையாக பல தனி உதாரணங்களைக் காட்டலாம் என்றாலும், பொதுவாக ஆங்கில வழிக் கல்வி சிந்தனைத் திறனை முடக்கி விடுகிறது என்றே சொல்வேன்.

கணினி பற்றிக் கற்கும் போது RAM என்பதை ரேம் என்று தமிழில் எழுதிக் கற்றுக் கொள்ளலாம். அல்லது நினைவகம் என்று தமிழ்ப் படுத்திக் கற்கலாம். ரேம் என்று படித்தால் வெளி உலகுடன் உறவாடும் போது திணறல் குறைவாக உடனேயே சமாளித்துக் கொண்டு விடலாம். ஆனால் புரிதல் முழுமையடையாது.

நினைவகம் என்று கற்றுக் கொண்டால் ஆங்கிலத்தில் உரையாடும் போது, எழுதும் போது அதற்கான ஆங்கிலச் சொல்லை நினைவுபடுத்த வேண்டியிருக்கும். இந்தத் தொல்லையை மட்டும் சமாளித்துக் கொண்டால் கிடைக்கும் பலன் அளவிட முடியாதது.

கல்வி என்பது விபரங்களை மனதில் திணித்துக் கொண்டு, பின்னர் வாந்தி எடுப்பது இல்லை. உணவை சாப்பிட்டு செரித்து, ஆற்றலாக வெளிப்படுவதுதான் கல்வி. அப்படி செரிக்க உதவுவது நினைவகம் என்ற சொல். நினைவகம் என்று படித்ததும், பல நிலையிலான புரிதல்கள் கிடைக்கின்றன.

அந்தப் புரிதல்களின் விளைவாக சிந்தனை கிளரப்பட்டு, பல திசைகளில் எண்ணங்கள் ஓட முடியும். பல்வேறு துறைகளில் கற்றுக் கொண்டவற்றை இந்த புரிதலுடன் இணைத்து புதிய கருத்துக்கள், கண்டு பிடிப்புகள் உருவாகலாம்.

நம்முடைய கல்வி இந்தத் திசையில் திரும்பினால்தான் நம் சமூகம் தன்னுடைய முழுமையான பங்களிப்பை மனித குலத்துக்கு வழங்க முடியும். மூன்றாயிரம் ஆண்டு வழி வந்த பண்பாடு வெளியிலிருந்து கிடைத்த அறிவுச் செல்வங்களை இணைத்து உலகுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியவை ஏராளம். நமக்குப் பொருந்தாததை நம் உடல் செரிக்க முடியாததை உள்ளே தள்ளி வந்தால் வயிற்று வலியும் வாந்தியும்தான் மிஞ்சும்.
  • பள்ளிக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். பத்து ஆண்டு பள்ளிப் படிப்புக்குப் பிறகு மாணவர்கள் தமது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

  • ஆசிரியர் மீது நம்பிக்கை வைக்கும் கல்வி முறை இருக்க வேண்டும்.உயர் கல்விக் கூடங்களில் இருப்பது போல் நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள், தொடர்ச்சியான மதிப்பீடு மூலம் வழங்கப்பட வேண்டும்.

  • எழுத்துத் தேர்வை மட்டும் சார்ந்திராமல், பேச்சுத் திறன், கை வேலை, எழுதுதல், நுண்கலைகள் போன்றவற்றையும், மற்றவர்களுடன் பழகும் திறன், ஆசிரியரின் சொந்த மதிப்பீடு இவற்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்த உள்ளுறை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

  • ஆண்டு இறுதியில் பொதுத் தேர்விலும் எழுத்துத் தேர்வு, பேச்சு, ஆசிரியர்/பெற்றோர் கூட்டத்தில் செய்து காட்டுதல், புதிய படைப்புகள் என்று வெளிப்படையாக நடத்தி மதிப்பிட வேண்டும்.

22 கருத்துகள்:

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

நல்ல சிந்தனை!

நாமக்கல் சிபி சொன்னது…

நல்ல கருத்துக்கள்!

BadNewsIndia சொன்னது…

நல்ல பதிவு சிவகுமார்.

precipitation என்ற சின்ன விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்ததால், மக் அடித்த காலம் நினைவுக்கு வந்தது.

வாத்திகளைப் பொறுத்து. ஆங்கிலத்திலும் கூட நல்லா சொல்லிக் கொடுத்த வாத்திகளும் இருந்தார்கள்.
RAM நினைவகம் என்று படித்தால் புரிதால் ஜாஸ்தி ஆகுமா தெரியவில்லை? ஆராய்ந்து தான் பாக்கணும்.

ஆங்கிலக் கல்வி கற்றதால் வெளி நாடுகளில் இன்று $ ஈட்டும் வாய்ப்பு பலருக்கு கிடைத்திருக்கிறது. சில துறைகளில், தமிழில் மட்டுமே கற்றவர்கள், (relatively) கஷ்டப்பட்டு தான் முன்னேற வேண்டியிருக்கு.

-BNI

மா சிவகுமார் சொன்னது…

வாங்க பேட் நியூஸ் இந்தியா,

இதற்குத் தொடர்பான இந்தப் பதிவையும் படித்துப் பாருங்கள்.

இன்றைய நடைமுறையில் நாம் நம்முடைய வளங்களைத் தொலைத்து விட்டு அன்னிய வாய்ப்புகளுக்கு கையேந்தி நிற்பதால்தான் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாகத் தெரிகின்றன். நம்முடையா சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் போது, பிற நாட்டினர் நமக்காக BPO வேலை பார்க்கும் காலமும் வரும்.


அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிவஞானம்ஜி ஐயா, நாமக்கல் சிபி

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

படிச்சவன் பாட்டைக் கெடுக்கிறான்!

எழுதியவர் இங்கு ஏட்டைக் கெடுக்கிறார்.

:-)

நாமக்கல் சிபி சொன்னது…

RAM - என்பதற்கு Random Access Memory என்பது பொருள்.

இதனை தமிழில் வெறுமனே நினைவகம் என்று மொழி பெயர்ப்பது எவ்விதத்தில் சரி?

நாமக்கல் சிபி சொன்னது…

நினைவகங்களில் இரு வகை உண்டு!

Sequential Access Memory
Random Access Memory

Sequential Access Memory என்பது
தட்டுக்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருப்பதைப் போல தகவல்களைச் சேமிக்கும் முறை!

இதில் நமக்கு ஒரு தகவல் தேவை எனில் அதற்கு மேலே உள்ள தகவல்களைக் கடந்துதான் செல்லவேண்டும்.

உதாரணம் : டேப் ரெக்கார்டரில் பயன்படுத்தும் ஒலிப் நாடாக்கள்.
ஒரு குறிப்பிட்ட பாடல் வேண்டுமெனில் அந்தப் பாடல் வரும் வரை ஃபாஸ்ட்
ஃபார்வார்ட் செய்துதான் ஆக வேண்டும்.

இன்னொன்றுதான் இந்த
Random Access Memory
இதில் நமக்குத் தேவையான தகவல்களை நேரிடையாக அணுகிப் பெற முடியும். புத்தக அலமாரியில் எப்படி புத்தகங்களை பக்கவாட்டில் ஒவ்வொன்றாக வரிசையாக வைத்திருக்கிறோமோ அப்படி! நமக்கு வேண்டிய புத்தகங்களை நேரடியாக எடுக்க முடியும். ஒவ்வொரு புத்தகமாக தாண்டிச் செல்லத் தேவையில்லை. புத்தகத்தின் தலைப்பு நமக்குத் தெரியும்போது.

அது போல்தான் இதில் தகவல்களும் அதற்குறிய நினைவக முகவரியுடன் சேமிக்கப் பட்டிருக்கும்.

மா சிவகுமார் சொன்னது…

நாமக்கல் சிபி,

பொருள் உணராமல் சொல்லைப் பயன்படுத்தினால் பலன் குறையும் என்பதுதான் நான் சொல்ல வந்தது. நினைவகம் என்பதுதான் சரியான சொல் என்று கிடையாது, இன்னும் சிறப்பான சொல்லில் நம் மொழியில் படித்தால் கிடைக்கும் பலன் அந்நிய மொழிவழிக் கல்வியில் கிடைக்காது என்பது என்னுடைய புரிதல்.

அத்தகைய சிறப்பான சொற்களை உங்களைப் போன்ற தொழில் நுட்பம் புரிந்தவர்கள் தமிழில் உருவாக்கினால், கலைச்செல்வம் எல்லாம் நம் மொழியில் சேர்ந்து எதிர் காலத்திலாவது நமது குழந்தைகள் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

'பேருந்து என்று சொன்னால் என்ன தமிழ் வளர்ந்து விடும், பஸ் என்றாலே எல்லோருக்கும் புரிகிறதே, எதுக்கு செயற்கையாக பேச வேண்டும்'

'பஸ் என்ற சொல்லில் நமக்குப் புரிவது ஏறிப் போகக் கூடிய ஒரு பொருள். அதற்கு மேல் எதுவும் கிடைத்து விடாது. பேருந்து என்று சொல்லும் போது, ஒவ்வொரு முறை வெவ்வேறு வாக்கியங்களில் பயன்படுத்தும் போது, பெரிய, உந்துதல் என்ற இரண்டு சொற்களும் நமக்குப் பழக்கமான, நம்முள் ஊறிய சொற்களுடன் உறவாடும். அப்படி ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்தும் போது ஒரு மாணவனுக்கோ, ஓட்டுனருக்கோ, பொறியாளருக்கோ, தமது அறிவுடனான சொல்லுடன் இந்த பெரிய உந்துதல் இணைந்து புதிய அறிவு பிறக்கும். பஸ் என்பது மலட்டு விதை போல ஒரு முறை மட்டும் விளையும். பேருந்து என்பது பல்கிப் பெருகும்.'

பள்ளியில் படிக்கும் போது தமிழ்வழிக் கல்வியில் சவ்வூடு பரவல் என்று படிப்போம். நூற்றுக் கணக்கான முறை வகுப்பறையில் ஆசிரியர் அதைச் சொல்லும் போது, வரையறைகளைப் படிக்கும் போது, செய்முறைகளைத் தெரிந்து கொள்ளும் போது ஒரு சவ்வு, அதன் ஊடே பரவுதல் மாணவனின் மனத் திரையில் ஓட வாய்ப்புகள் உண்டு. நூறு மாணவர்கள் படித்தால் எண்பது பேருக்கு அந்தப் புரிதல் கிடைத்து விடும்.

ஆஸ்மாஸில் என்று ஆங்கிலத்தில் படித்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள சவ்வையும், ஊடே பரவுதலையும் உணர்ந்து கொள்ள நீளமான வாக்கியங்களைப் படிக்க வேண்டும். நூற்றுக்குப் பத்து பேர் அதைப் புரிந்து கொண்டால் பெரிது.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//எழுதியவர் இங்கு ஏட்டைக் கெடுக்கிறார்.//

:-)

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

கோபித்துக் கொள்ளாமல் நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொண்டமைக்கு நன்றி!

சாத்வீகன் சொன்னது…

நல்ல சிந்தனை.
வாழ்த்துக்கள்.

precipitation = வீழ்படிவு

Sequential Access Memory =
வரிசைக்கிரம அணுகுதல் நினைவகம்

Random Access Memory =
தன்னிகழ்வு அணுகுதல் நினைவகம்

நன்றிகளுடன்
சாத்வீகன்

BadNewsIndia சொன்னது…

// நம்முடையா சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் போது, பிற நாட்டினர் நமக்காக BPO வேலை பார்க்கும் காலமும் வரும். //

உண்மைதான். ஆனால் அது நம் வாழ்நாளில் நடக்குமானு தெரியல.
எல்லாரும் சேர்ந்து முயற்சி பண்ணினா நடக்கலாம்.
முயல்வோம்.

நல்ல எழுத்துக்கள் உங்களது. சேர் வாரி ஒருவரை ஒருவர் தூற்றும் இடத்திலும் உங்கள மாதிரி ஆட்களின் நல்ல எழுத்துக்கள் தான் நம்பிக்கையை தருகிறது.

மா சிவகுமார் சொன்னது…

பாட்டைக் கெடுத்தவரே,

சிரிக்க மறந்த நாள்தானே வாழ மறந்த நாள் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

சாத்துவீகன்,

ஆங்கிலத்தின் சொற்றொடரை அப்படியே மொழிமாற்ற வேண்டியதில்லை. Random Access Memory என்பதை விட temporary memory என்று பண்பைக் குறிப்பிட்டு நிலையா நினைவகம் என்று ஆளுவதாக தமிழில் கணினி புத்தகங்களை எழுதி வரும் திரு சிவலிங்கம் அவர்கள் குறிப்பிட்டார்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

Bad News India,

கனவு காணுதல், நம்பிக்கை வைத்தல்தான் முதல் படி. இன்று அதை ஆரம்பித்தால் நம் வாழ்நாளிலேயே நாம் பொருள்களையும், சேவைகளையும் நமது தேவைக்கேற்ப இறக்குமதி செய்து கொண்டு நமது அறிவுச் செல்வங்களை மாற்றாக உலகுக்கு வழங்கும் நாளும் வரும்.

அன்புடன்,

மா சிவகுமார்

இராம. வயிரவன் சொன்னது…

// கல்வி என்பது விபரங்களை மனதில் திணித்துக் கொண்டு, பின்னர் வாந்தி எடுப்பது இல்லை. உணவை சாப்பிட்டு செரித்து //

//எழுத்துத் தேர்வை மட்டும் சார்ந்திராமல், பேச்சுத் திறன், கை வேலை, எழுதுதல், நுண்கலைகள் போன்றவற்றையும், மற்றவர்களுடன் பழகும் திறன், ஆசிரியரின் சொந்த மதிப்பீடு இவற்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்த உள்ளுறை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்//

ஒத்துக்கொள்கிறேன்.
நல்ல சிந்தனை, நல்ல விளக்கம். பாராட்டுக்கள் சிவகுமார்.

மா சிவகுமார் சொன்னது…

தள்ளாடி நலிந்து போயிருக்கும் இன்றைய கல்வி முறை எவ்வளவு சீக்கிரம் மாற்றப்படுகிறதோ நமக்கு அவ்வளவு விரைவாக விடிவு கிடைக்கும்.

நன்றி வயிரவன்,

அன்புடன்,

மா சிவகுமார்

வசந்த் சொன்னது…

சிவகுமார்,

நல்ல பதிவு. இது போன்ற சிந்தனைகள் எனக்குள்ளும் ஓடியது உண்டு. ஆனால் வார்த்தைகளில் சொல்ல மிகவும் சிரமபட்டுள்ளேன்.

//
அந்தப் புரிதல்களின் விளைவாக சிந்தனை கிளரப்பட்டு, பல திசைகளில் எண்ணங்கள் ஓட முடியும். பல்வேறு துறைகளில் கற்றுக் கொண்டவற்றை இந்த புரிதலுடன் இணைத்து புதிய கருத்துக்கள், கண்டு பிடிப்புகள் உருவாகலாம்.
//

மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி
வசந்த்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வசந்த்,

எனக்குத் தெரிந்த பிற மொழிகள் - ஆங்கிலம், ஜெர்மன், இந்தி, சீனம், இத்தாலிய மொழி (சிறிதளவு). ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு பெருமை இருக்கிறது. அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அந்த மொழிக்காரர்களின் கடமை. தமிழர்கள்தான் அதில் சுணக்கம் காட்டுகிறோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

செல்வநாயகி சொன்னது…

பூங்காவிலிருந்து வந்தேன். நல்ல பதிவு சிவக்குமார்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி செல்வநாயகி,

விவாதத்தில் மட்டுமே இடம் பெற்று நடைமுறை வாழ்வில் புறக்கணிக்கும் ஒரு பொருளாகப் போய் விட்டது, தமிழ்வழிக்கல்வி. இனி வரும் நாட்களிலாவது நிலைமை மாறும் என்று நம்புவோம்.

அன்புடன்,

மா சிவகுமார்