ஞாயிறு, ஜூன் 17, 2007

யார் யாரை தாங்குவது!!!

பேருந்தில் ஒரு கண் தெரியாத முதியவர். சின்ன உருவம். நான் உட்கார்ந்த இருக்கையில் ஏற்கனவே இருந்தார்.

முதலில் கண் தெரியாதவர் என்று கவனிக்கவில்லை. உட்கார்ந்த சிறிது நேரத்தில் கையால் என்னைத் தொட முயன்றதைக் கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் பேச்சு கொடுத்தார்.

பேருந்து நிலையத்தில் இறங்கியதும் கையைப் பிடித்து கடுக்கரை போகும் பேருந்து நிற்கும் இடத்துக்கு அருகில், தேநீர்க் கடை அருகில் விட்டு விடச் சொன்னார். அந்தத் தேநீர்க் கடைக்காரர் பேருந்து ஏற்றி விட்டு விடுவாராம்.

'ராணித் தோட்டத்தில் வேலை பார்க்கிறேன். அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகிறேன். டிரைவர் சீட்டுக்கு வயர் பின்னும் வேலை. அது இல்லாத போது போல்ட்டுகளை அடுக்கிக் கொடுக்கும் வேலை. என்னை போல இன்னும் இரண்டு பேர் வேலை பார்க்கிறார்கள். ஒருவர் என்னை விட 4 வயது சின்னவர், இன்னொருவர் சின்ன வயது - இப்பதான் திருமணம் ஆகியிருக்கிறது'

57 வயது மதிக்க முடியாத தோற்றம். கண் தெரியாத வாழ்க்கையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த வேலை செய்து வருகிறாராம்.

'ஓய்வு பெற்ற பிறகு எப்படி நேரம் போகும்' என்று கேட்டேன்.

'வெளியே எங்கேயும் போக முடியாது. வேலைக்குப் போவதைத் தவிர வேறு எங்கும் தனியாக அனுப்ப மாட்டார்கள். குடும்பக் கவலை வேறு அதிகம். மூன்று பெண்களைக் கட்டிக் கொடுத்த கடன்கள் அடைக்க வேண்டும். மாதம் மூவாயிரம் ரூபாய் வட்டிக்கே கொடுக்கிறேன். பையன்களுக்குப் பொறுப்பு இல்லை. மூத்த இரண்டு பேரும் வளர்ந்து கல்யாணம் ஆகி பிள்ளைகளும் உண்டு. இன்னும் என் சம்பாத்தியத்தை நம்பித்தான் இருக்கிறான்கள். சின்னவன் எஞ்சினீயரிங் படிக்கிறான்.'

'எல்லாம் நான் ரிட்டயர் ஆவதை நோக்கிக் காத்திருக்கிறான்கள். எனக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று வரப் போகும் பணத்துக்கு இப்பவே திட்டம் போட்டுக்கிட்டிருக்கான்க. பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளம், பென்ஷன் மூவாயிரம் வரும். கண் தெரியாமல் எவ்வளவுதான் செய்ய முடியும். எல்லாம் என்னை நம்பித்தான் இருக்கிறாங்க. பொண்ணுகளும் அதே கதைதான்'

அதிர்ச்சியாக இருந்தது. 'பசங்களை வளர்த்து விட்டாச்சு. இனிமேல் வீட்டை விட்டு அனுப்பி விடுங்கள். இல்லை என்றால் நீங்களும் வீட்டுக் காரியும் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள். இனிமேல் அவங்க வேலை அவங்க பொறுப்புதான். எவ்வளவு நாள்தான் நீங்க தாங்க முடியும்.' என்று என்னுடைய வேண்டாத அறிவுரை கூறினேன்.

'இப்படித்தான் யாராவது பக்கத்தில் இருப்பவர்களிடம் கையைப் பிடித்து விட்டு விடச் சொல்லுவேன். அந்த டீக்கடைக்காரர் அப்புறம் ஏத்தி விட்டு விடுவார்.' பேருந்து நின்ற பிறகு அவர் பேருந்து ஏற வேண்டிய இடமும் நாங்கள் போகும் இடமும் ஒன்றுதான். கடைக்கருகில் விட்டு விட்டேன்.

2 கருத்துகள்:

Mugundan | முகுந்தன் சொன்னது…

Mikavum kodumaiyaana seithi,sivakumar.

Antha periyavarin pillaikal,
pillaikal alla "PORUKKIKAL''.

Anbudan,
MUGU

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் முகு,

அந்தப் பெரியவரும் அவர் மனைவியும் கண்டிப்பாக இருக்காததும் ஒரு காரணம்தானே!

அன்புடன்,

மா சிவகுமார்