திங்கள், ஆகஸ்ட் 06, 2007

பட்டறைக்கு முதல் நாளில்.....

சனிக் கிழமை காலையில் அலுவலக வேலைகளை முடித்து விட்டு 11.30க்கு வினையூக்கியை கூட்டிக் கொண்டு பன்னிரண்டு மணி வாக்கில் அரங்கத்துக்குப் போகலாம் என்று திட்டம். வேலைகள் முடிந்து கிளம்பும் போதே தாமதமாகி விட்டது. வினையூக்கி வீட்டுக்குப் போய் அவரையும் ஏற்றிக் கொண்டு வித்லோகா புத்தகக் கடைக்குப் போனோம். நந்தா அங்கே காத்திருப்பதாக பாலா தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

வெள்ளி மாலையே சிபி நிறுவனத்தார் இணைய இணைப்பு நிறுவி விட்டதாகத் தகவல் வந்திருந்தது. சனிக்கிழமை மதியம் வாடகைக்கு ஏற்பாடு செய்திருந்த கணினிகள் வந்து சேரும். அவற்றை வாங்கி வைப்பதிலிருந்து அரங்கத்தில் ஏற்பாடுகள் ஆரம்பிக்க வேண்டும்.

வித்லோகாவில் கணிச்சுவடி புத்தகத்தையும் குறுந்தகட்டின் இறுதி வடிவத்தையும் பார்த்து விட்டு அரங்கிற்கு கிளம்பி விட முடிவு செய்தோம். சனி அன்றும் வேறு ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க நாங்கள் போய்ச் சேர்ந்த நேரம் மதிய உணவு வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மேலே வகுப்பறைகளில் வரிசை வரிசையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலியாக இருந்த கடைசி அறையில் முகாமைப் போட்டு விட்டுக் காத்திருத்தலை ஆரம்பித்தோம்.

மூன்று பேருமாக அமர்ந்து நிகழ்வன்று மூன்று பகுதிகளிலும் எப்படி ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தோம். பயிற்சி அறைக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாக வினையூக்கி ஒத்துக் கொண்டார். ஏழெட்டு கணினிகளை அமைத்து புதிதாக வருபவர்களுக்கு தனித்தனியாக தன்னார்வலர்கள் கற்றுக் கொடுக்கும் அறை அந்த பயிற்சி அறை. இந்த அறையும் தொழில் நுட்ப வகுப்புகள் நடக்கும் அறையும் முதல் மாடியில் இரண்டு வகுப்பறைகளில் ஏற்பாடு.

தொழில் நுட்ப வகுப்புகளில் 12-13 கணினிகள் அமைத்து பல்வேறு பொருட்களில் தொழில் நுட்ப நுணுக்கங்கள் 20-30 பேருக்கு ஒரே நேரத்தில் விளக்குவதாக அமையும். இந்த இரண்டு அறைகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக பொன்ஸ் இருப்பார் என்று ஏற்கனவே பேசியிருந்தோம்.

தரைத் தளத்தில் கருத்து அரங்கு. 150 இருக்கைகளுடன், குளிர் சாதன வசதியுடனான அரங்கம். பொதுவான விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் இங்கு நடக்கும். இதன் அமர்வுகளை விக்கியும் நானும் ஒருங்கிணைப்பதாக ஏற்பாடு.

சிபியிலிருந்து ஒரு பொறியாளர் வந்து வேலையைத் தொடர ஆரம்பித்தார். கணினி நிறுவனத்திலிருந்து கிளம்பும் போது தகவல் சொல்லி விடுவதாகத் தொலைபேசி. சுந்தர், அதைத் தொடர்ந்து ஜெயா வளாகத்துக்கு வர வழி கேட்டு தொலைபேசினார்கள். வளாகம் எங்கு இருக்கிறது என்பதில் பலருக்குக் குழப்பம் ஏற்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம் என்றால் சேப்பாக்கம் வளாகத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டுத் தொலைபேசியவர்களை அதிகம்.

அடுத்ததாக யோசிப்பவர் மகேசன் வந்து சேர்ந்தார். தமிழ்த் துறையினரைத் தொடர்பு கொண்டு புரொஜக்டர், ஒலி அமைப்புகளை சரி பார்க்க ஜெயாவும் யோசிப்பவரும் போய் விட்டார்கள். ஜே கே என்ற ஜெயகுமார் அடுத்து வந்தார்.

இருபது கணினிகள் எல்சிடி திரைகளுடம் வந்து இறங்கி விட இடம் களை கட்ட ஆரம்பித்தது. வினையூக்கியின் திட்டப்படி வகுப்பறைகளில் இருக்கைகளை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அரங்கத்தில் பொருட்களைக் கொண்டு வைக்க ஆரம்பித்தோம்.

லக்கிலுக்கும் லெனின் என்ற அவர் நண்பரும் வினைலில் அச்சடித்த பேனர்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். காலையிலேயே கோவையிலிருந்து வந்திருந்த செல்லா ஓய்வெடுத்துக் கொண்டு கிளம்பும் முன். 'மேக்அப் எல்லாம் போட்டுக் கொண்டு தயாராக இருங்கள், ஒளிபரப்பு ஆரம்பமாகப் போகிறது' என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வந்தார். அவர் சனிக்கிழமையும், நிகழ்வன்றும் நிகழ்த்திய தொடர் புகைப்படப் பதிவுகள் பட்டறையின் போக்கை அழகாகப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தன. உடனுக்குடன் இணையத்துக்குத் புகைப்படங்கள் போய்ச் சேர்ந்தன.

விக்கி, ஜெயாவுடன் ஒருங்கிணைப்புகளைப் பற்றிப் பேசும் போது, வரவேற்பு, பதிவு செய்யும் மேசை, தகவல் உதவி, உணவு/தேநீர் வழங்குதல், என்று மேலாண்மை பணிகளுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக ஜெயா முன்வந்தார். அதற்கான குறிப்புகளையும் ஏற்பாடுகளையும் சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டார். நுழைவாயிலில் கட்டுவதற்கான பேனரைத் தனக்குத் தெரிந்த அச்சிடுபவரைப் பிடித்து தொலைபேசியிலேயே விபரங்கள் சொல்லி இரவு ஒன்பது மணிக்கு முன்பு தயாராகும் படி ஏற்பாடு செய்து விட்டார்.

அருள்குமார் அலுவலகத்திலிருந்து காபி இயந்திரம் வந்து சேர்ந்தது. மாணவர்கள் தம் பிடித்து முதல் மாடியில் ஏற்றி வைத்து விட்டார்கள். அருள், ஜெய் சங்கர், உண்மைத்தமிழன் என்று மாலையிலும் நிகழ்வன்றும் தூண்களாகச் செயல்பட்ட தன்னார்வலர்கள் எல்லோரும் கூடி விட்டோம். வினியோகிக்க வேண்டிய பொருட்களை பைகளில் போட்டு வைத்து விடலாம் என்று ஆரம்பித்தோம். குறுந்தகடும், கருத்து கேட்கும் படிவமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. கணிச்சுவடி பொட்டலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

பாலபாரதி பார்த்து பார்த்து அட்டகாசமாக செய்திருந்த காகிதப் பைகளினுள், அருள் குமார் ஏற்பாடு செய்திருந்த குறிப்பேடு, பேனா, ஹலோ பண்பலையினர் கொடுத்திருந்த சாவி வளையம், பட்டறை தொடர்பாக வினியோகிக்க அடித்திருந்த அறிவிப்பு ஒன்று போட ஆரம்பித்தோம். வட்டமாக உட்கார்ந்து கொண்டு கோல் தொடரில் பேசப்பட்ட வேலை முடங்கும் புள்ளிகளைப் பற்றிய சிரிப்புகளோடு 250 பைகளையும் நிரப்பிக் கொண்டிருந்தோம்.

பொன்ஸ், கருத்து திரட்டும் படிவங்களை அச்சடித்துக் கொண்டு வந்தார். பாலபாரதி குறுந்தகடுகளைக் கொண்டு சேர்த்தார். செந்தழல் ரவி தனது அனானி நண்பருடன் கிழக்கு ஆசியா பார்த்த பொலிவுடன் வந்தார். அவரது அனானி நண்பரையும் பை நிரப்பும் வட்டத்தில் சேர்த்துக் கொண்டோம். கடைசி வரை என்ன பெயரில் எழுதுகிறேன் என்பதே வெளிப்படுத்தவே இல்லை அந்த அனானி நண்பர்.

கண்ணில் படும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டுக் கிளம்பினால்தான் காலையில் வரும் போது பரபரப்பில்லாமல் நிகழ்வை ஆரம்பிக்கலாம் என்று பேசிக் கொண்டாம். மேலறைகளில் கணினி அமைப்புகளை ஐசிஎம் நிறுவனத்தார் செய்து முடித்தார்கள். அதற்குத் தேவையான மின்னிணைப்பு பெட்டிகளை சைதாப்பேட்டை வரை போய் எடுத்து வந்து விட்டார் நந்தா.

விக்கி ஒரு வெள்ளப் பலகையில் நிகழ்ச்சி நிரலை எழுதிக் கொண்டிருக்கும் போது, மேலறைகளில் ஜெயகுமார் கணினிகளின் மும்முரமாக இருக்கும் போது இரண்டு பேரிடமும் கதவுகளைப் பூட்டி விட்டுக் கிளம்பும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு மற்றவர்கள் புறப்பட்டோம். காலையில் தன்னார்வலர்கள் 7 மணிக்கு வர வேண்டும் என்று சொன்ன விக்கியிடம் வாயை விட்டு காலையில் கதவைத் திறக்க வேண்டிய பொறுப்பை வாங்கிக் கொண்டேன்.

9 கருத்துகள்:

இம்சை சொன்னது…

Congrats and looking for more sessions like this.
Missed this one but could feel the grand success of the session from the updates posted by the bloggers.

aynthinai சொன்னது…

Delphine Madem,
he is a managing a company , this is a small for his caliber, once visit his Ullath(thai)i solgiren Blogg you know what he is, he plannes any thing and every thing in his daily activities.
hat's off to him once agin.
Vivek.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வெற்றியின் ரகசியம் பற்றி மேலும் படிக்க ஆர்வமாக இருக்கிறோம்..
நடத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மணியன் சொன்னது…

தமிழ் பதிவுலகில் இந்த பதிவர் பட்டறை ஒரு பயனுள்ள பயிலகமாக விளங்கும்படி ஒருங்கிணைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் !

இந்த நிகழ்விற்கு தயாரித்த குறுந்தட்டு மற்ற வெளியூர் பதிவர்களுக்கும் பயனாகும் என்றால் அதனை விற்பனைக்காவது பெறமுடியுமா ?

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

மணியன்.. இறுவட்டில் கொடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் விளக்கப்படங்களை முன்னமே பட்டறைக்காக தயாரிக்கப்பட்ட தளத்தில் போட்டு இருக்கிறேம்.

:)

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

hats off to your team, sivakumar

Subramanian சொன்னது…

செங்கிஸ்கானின் படைகள் ஆயிரம் மைல் பரப்பில் பல இடங்களில் நிலைகொண்டிருக்குமாம்.போருக்குச் சில நாட்களுக்கு முன் புறப்பட்டுப் பயணித்து அனைத்துப் படைகளும் ஓரிடத்தில் ஒரே நேரத்தில் வந்து சந்திக்குமாம்.திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கு இதை உதாரணமாக அந்தக் காலத்தில் சொல்லிக் கொள்வோம்.அத்தகைய செயலாக்கத்தின் வெற்றியைப் பட்டறை அரங்கில் கண்டேன்.
பாயாசத்தின் ஒவ்வொரு துளியிலும் இனிப்பு மறைந்துள்ளது போல் குழுவிலுள்ள ஒவ்வொருவரின் உழைப்பும் பட்டறை அரங்கில் தெரிந்தது.அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

மா சிவகுமார் சொன்னது…

டெல்பின் மேடம்.

நன்றி. நிகழ்வுகளைத் திட்டமிட்டதிலும் பங்கு இருந்ததால் இயல்பாக செயல் பட முடிந்தது. கூடவே பேசப்பட்ட பொருட்கள் உணர்வு பூர்வமாகப் பிடித்தவை. அதனால் பேசவும் தயக்கம் இல்லை :-)

நான் தோல் துறைக்கு நி.வ.தி. மென் பொருட்கள் தயாரித்து வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன் (http://www.leatherlink.net).

எனக்கும் துல்லியமாக இயங்கும் அமைப்புகளைப் பார்க்கும போது அந்த பின்னணியைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இப்போதெல்லாம். Hot Chips போனால் அங்கு வேலை பார்ப்பவர்களை செலுத்துவது எது என்று எண்ணம் ஓடுகிறது :-).

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க இம்சை,

இன்னும் இதே போல நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

ஐந்திணை,

நன்றி. பாராட்டுக்களை கொஞ்சம் அதிகமாகவே அள்ளி வீசி விட்டீர்கள். !!

முத்துலெட்சுமி,

வாங்க! அடுத்த முறை நீங்கள் எல்லோரும் வந்து கலந்து கொள்ளும் படி நடக்க வேண்டும்!

மணியன்,

பாலா சொன்னது போல தளத்திலிருந்து தகவிறக்கிக் கொள்ளலாம்.

முடியாதவர்களுக்கு குறுந்தகடு பயன்படுதலைப் பொறுத்து வினியோகிப்பதைப் பற்றித் திட்டமிடலாம். இன்னும் ஓரிரு வாரங்கள் போகட்டுமே.

சிவஞானம்ஜி ஐயா,

பல்கலைக் கழகத்திற்கு நீங்கள் போய் அரங்கம் ஏற்பாடு செய்ய உதவியதுடன், காலையிலேயே வந்திருந்து வழி நடத்தி பட்டறை சிறப்பிக்க பங்களித்ததற்கு நன்றி.

திண்டுக்கல் சர்தார்,

என்ன ஒரு உவமானம்!! நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்