திங்கள், ஆகஸ்ட் 06, 2007

பட்டறை - நிறைவுற்றது

உணவு இடைவேளைக்குப் பிறகு வலைப்பதிவுகள் மூலம் சம்பாதிப்பது குறித்து கிருபா சங்கர் பேசினார். ஆங்கிலத்தின் பிரபலமான பதிவர் என்று அவரை அறிமுகப்படித்த அது இவர் இல்லையாம். கூகுள் விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவது அதிக நேரத்தைப் பிடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்த செய்து தொழிலுக்குத் தேவையான தொடர்புகள், வெளிச்சத்துக்காக பதிவுகளைப் பயன்படுவது குறித்தும் சிறிது பேசிக் கொண்டோம்.

ரஜினி ராம்கி சமூக அக்கறை குறித்துப் பேசினார். சுனாமி நிவாரணத்துக்காக அவர் ஒருங்கிணைத்து வலைப்பதிவு நடவடிக்கைகளை விளக்கினார். இந்த அமர்வுக்கிடையே வலை நண்பர்களுக்காக படம் பிடித்த நண்பருக்காக பட்டறையின் போக்கைக் குறித்துப் பேசிக் கொண்டேன். இப்படி ஒரு பட்டறை பற்றி கனவு கண்டு அதை இடை விடாது சொல்லிச் சொல்லி ஆட்களை ஒன்று சேர்த்து சாதித்த பாலபாரதியின் பணியிலிருந்து பங்கேற்ற பலரின் விபரங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

ரஜினி ராம்கியைத் தொடர்ந்து அடுத்த இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு அருள் செல்வன் இணையத்தின் இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும் என்பது குறித்துப் பேசினார். கடைசியாக வலைப்பதிவுகளில் மாறுபட்ட முயற்சிகள் குறித்து பொன்ஸ் தொகுத்தளிக்க அதில் ஈடுபடும் நண்பர்கள் தத்தமது முயற்சிகள் குறித்துப் பேசினார்கள்.

அதியன் எழுத்துரு மாற்றி குறித்து கோபியின் விளக்க அமர்வு கூட்டத்தைக் கட்டிப் போட்டது. விக்கிபீடியா குறித்து ஆமாச்சு, தேடு வேலை குறித்து செந்தழல் ரவி, விக்கி பசங்க குறித்து பினாத்தல் சுரேஷ், உபுண்டு குறித்து மீண்டும் ஆமாச்சு, மொபைல் புத்தகங்கள் குறித்து ஒரு நண்பர் பேசினார்கள். இவை தவிர மாற்று, சற்றுமுன், வலைப்பதிவர் உதவிக் குழு, பூங்கா, மகளிர் சக்தி, லிவிங் ஸ்மைல் வித்யா, எயிட்ஸ் விழிப்புணர்வு முயற்சிகள் என்று பொன்ஸ் சுருக்கமாக விளக்கினார்.

உச்சகட்டமாக ஓசை செல்லா ஒலி ஒளிப் பதிவுகள் குறித்து விளக்கி, அதன் மாதிரிகளையும் காட்டினார். அதற்குள் ஐந்தரை நெருங்கியிருந்தது். முடித்து வைக்கும் உரையை ஆரம்பித்து வாழ்த்துக் கவிதை படிக்க ஒருவரை அழைக்க, ஆதரவாளர்களுக்கு விக்கி நன்றி சொல்ல, பாலபாரதி தன்னார்வலர்களில் சிலருக்கு வெளிச்சம் போடும் விதமாக ஒவ்வொருவராக முன்னுக்கு அழைத்து கூட்டாக நிற்க பட்டறை முடிவடைந்தது.

8 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் மா.சி,

பதிவர் பட்டறைக்கு வர இயலாதவர்களுக்கும் பங்கேற்ற உணர்வை தரும் வகையில் அற்புதமாக தொகுத்துவிட்டீர்கள். படங்களுக்கு ஓசை செல்லா கைக்கொடுத்தார், இரண்டுப்பதிவும் படிததால் நேரடி ஒளிப்பதிவு பார்த்த நிறைவு.

லாப நோக்கற்ற பதிவர் பட்டறை தன்னார்வளர்களின் உழைப்பும் , முயற்சியும் எத்தனை பாராட்டினாலும் தகும்.இத்துடன் நின்று விடாமல், இதனை அடுத்த கட்டங்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் ஏனைய தமிழக மாநகரங்கள், பின்னர், மாவட்ட நகரங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும், குறிப்பாக கல்லூரி வளாகங்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும்.அது தங்களைபோன்றோருக்கு சாத்தியமே!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என செயல் திறம் காட்டிய அனைத்து தமிழ் பதிவர் பட்டறை உழைப்பாளர்களுக்கும் எனது 100 சத மனம் ஒப்பிய நன்றி மற்றும் சிறம் தாழ்த்திய தமிழ் வணக்கம்!

பெயரில்லா சொன்னது…

தங்களின் தமிழும், எளிமையான விளக்கங்களும் அருமை.

நன்றி மா.சி.

வினையூக்கி சொன்னது…

சார், மொத்தமாக கடைசி இரண்டு நாட்கள் டைம் மெஷினில் திரும்ப போய் வந்தது போல ஒரு உணர்வு.
உங்கள் பதிவை படித்த பின்னர்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க வவ்வால்,

செல்லாவின் நேரடி ஒளிபரப்ப பலரையும் வாயைப் பிளக்க வைத்தது. நான் வழக்கம் போல எழுதுவதை கொஞ்ச அதிக நேரம் உட்கார்ந்து எழுதிப் பிரித்துப் போட்டு விட்டேன். இன்னும் சிலவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாளை!

தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும், சிறு நகருக்கும் நுட்பங்கள் போய்ச் சேர வேண்டும். அதற்கு உங்கள் வாழ்த்துக்கள் வழி வகுக்கும்.

நன்றி வெயிலான்.

நீங்க வந்திருந்தீங்க என்று வினையூக்கி சொன்னார். நாம் சந்தித்தோமா?

வினையூக்கி,

உங்களுடன் பழக முடிந்த மணித்துளிகள் மிக இனிமையாகக் கழிந்தன. நல்ல ஒரு நட்பின் ஆரம்பம்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

// நீங்க வந்திருந்தீங்க என்று வினையூக்கி சொன்னார். நாம் சந்தித்தோமா? //

நிகழ்வு் மேடை ஒழுங்கமைப்பில் நீங்கள் இருந்ததால், தனியாக சந்திக்க முடியவில்லை.

MSATHIA சொன்னது…

மிகச்சிறந்த பணி சிவா.

இன்னும் பெருமளவில் மாற்றத்துக்கான விதை இது என்பது நினைத்து இந்த குழு பெருமிதம் கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்.
சத்தியா

பெயரில்லா சொன்னது…

>>ஆங்கிலத்தின் பிரபலமான பதிவர் என்று அவரை அறிமுகப்படித்த அது இவர் இல்லையாம்.

அழைப்பு வந்தவுடன் எனக்கும் கொஞ்ச நேரம் ஐயமாகவே இருந்தது. சரி, இது நமக்கு மாறித்தான் வந்துவிட்டது என்று அந்த கிருபாவுக்கு மடலை forwardஉம் பண்ணி விட்டேன், பொன்ஸுக்கு ஒரு ccயுடன். பிறகு பொன்ஸ் இது நிச்சயமாக எனக்கேதான் அனுப்ப நினைத்ததாக உறுதிப்படுத்தியதும், சரி, எல்லோரும் பற்பல பணிகளுக்கிடையில் மிகவும் பிஸியாக இருப்பதால் என்னிடம் இதைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன். பிறகு பொன்ஸ் கேட்ட மாதிரி, சில points எழுதி வைத்துக்கொண்டு ஒரு சிறிய உரை போல உருவாக்கினேன்.

அதற்கு மேல் ஒன்றும் தெரியாது. :-(( :-(( :-((

பேசும்பொழுது ஊக்கப்படுத்திய உங்களுக்கும், செல்லாவுக்கும் மிக்க நன்றி. :-)

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சத்தியா,

//இன்னும் பெருமளவில் மாற்றத்துக்கான விதை இது//

சரியாகச் சொன்னீர்கள். இது ஒரு சின்ன விதைதான், இது முளைத்து, செடியைப் பேணி வளர்த்து நமது சமூகம் பழம் பறிக்க பலர் பல முனைகளில் உழைக்க வேண்டியிருக்கும்.

பட்டறையின் நோக்கங்கள் எல்லோருக்கும் குறையில்லாமல் புரிந்ததும் மகிழ்ச்சியான ஒன்று. உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.

கிருபா,

//அதற்கு மேல் ஒன்றும் தெரியாது. :-(( :-(( :-((//

மன்னியுங்கள். உங்கள் தயாரிப்பும் உரையும் உண்மையிலேயே நன்றாகவே இருந்தன. கூகிள் அட்சென்சைத் தவிர் பிற நடவடிக்கைகளைக் குறித்து இன்னும் பேசியிருக்கலாம்.

அதைத் தவிர, ஆங்கிலத்தில் பிரபலமானவரும் நீங்களும் ஒன்றுதான் என்று விசாரிக்காமல் நினைத்துக் கொண்ட என் தவறுக்கு மன்னிக்கவும். உங்கள் தமிழ்ப் பதிவு மிகத் திறமையான, உயர் நுட்பங்களைப் பேசுவதாக இருப்பதால் நான் அப்படி நினைத்துக் கொண்டேன்.

அன்புடன்,

மா சிவகுமார்