உபுண்டு குழுவினர் ஆமாச்சு ஒருங்கிணைப்பில் ஒரு மேசை போட்டு லினக்ஸ் பற்றிய விபரங்களை வழங்க ஆரம்பித்தனர். லினஸ் அகாடமியிலிருந்து இன்னொரு பக்கம் திறவூற்று மென்பொருள் பயிற்சிகள் குறித்த விபரங்களை வழங்கிக் கொண்டிருந்தனர். தேன்கூடு நிறுவனத்தின் சார்பில் வந்திருந்த டி சட்டைகளை மாணவர்களுக்கு வினியோகித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள்.
CNN IBN தொலைக்காட்சியினர் பயிற்சி வகுப்புகளில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா பத்திரிகைகளுக்கும், தொலைக் காட்சி நிறுவனங்களுக்கும் முந்தைய வாரமே தகவல் சேர்த்து நிகழ்வன்றும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த உண்மைத் தமிழன் அந்தத் துறையின் தனது நண்பர்கள் மூலம் பட்டறைக்கு ஆகக் கூடுதல் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
நூறு கைகள் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருக்க பட்டறை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.
இடைவேளைக்குப் பிறகு முகுந்த், பேச்சை உரையாக மாற்றும் நுட்பம், உரையைப் படித்துக் காட்டும் வசதிகள், எழுத்துப் பிழை திருத்தும் செயலிகள் என்று தமிழில் வர வேண்டிய நுட்பங்களைப் பட்டியலிட்டார். காசி தமிழ் வலைப்பதிவுகள் ஒரு அறிமுகம் என்று வலைப்பதிவுகளை கவனத்துக்குக் கொண்டு வந்தார். அதில் நடக்கும் அரசியல்கள் கூட வெளிச்சத்துக்கு வந்தன.
அதைத் தொடர்ந்த மாலன் இணைய நன்னடத்தை என்று தனது அமர்வை ஆரம்பித்தார். இந்த அமர்வில் தான் வாயே திறக்கப் போவதில்லை என்று பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்து ஓசை செல்லாவையும் விவாதத்தில் இறங்க வைத்து சுறுசுறுப்பாகப் போனது.
'தனியாக வீட்டில் இருக்கும் போது நிர்வாணமாக இருக்கும் சுதந்திரம் இன்னொருவர் சேரும்போது மட்டுப்படுகிறது. தெருவில் இறங்கும் போது இன்னும் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைப் போன்ற பட்டறைக்கு வந்தால் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.'
'ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வாழும் போது, செயல் போடும் போது கட்டற்ற தன்னிச்சை என்பது சாத்தியமில்லை. உரிமைகள் அதிகமாக இருப்பவர்களுக்கு பொறுப்பும் அதிகம். இணையத்திலும் அத்தகைய நடத்தை ஒழுங்குகள் யாரும் புகுத்தாமலேயே தானாகவே உருவாகிக் கொள்கின்றன' என்று கட்டம் போட்டுக் காட்டினார் மாலன்.
'திரைப்படங்களுக்கு தணிக்கை தேவையா? இணையத்தைத் தணிக்கை செய்ய முடியுமா' என்று செல்லா எடுத்துக் கொடுக்க முடிவே இல்லாத இந்த விவாதத்தை அத்துடன் நிறுத்தி விட்டு, வலையில் பாதுகாப்பு குறித்து லக்கிலுக் பேச ஆரம்பித்தார்
மொக்கை பதிவு என்றால் என்ன, கும்மி பதிவர் என்றால் யார் என்று வரையறைகளோடு ஆரம்பித்த அவரது அமர்வின் இடையில் வெளியே போய் ஆனந்த விகடன் குழுவினர் பிடித்து மணலில் உட்கார வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். விக்கி, லக்கிலுக், பொன்ஸ் என்று குழுப் படம்
நாகூரிலிருந்து வந்திருந்த இஸ்மாயில் பாதுகாப்பு அமர்வில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க கூடுதல் நுட்பமான கேள்விகளை தனி மடலில் விவாதித்துக் கொள்ளலாம் என்று முடித்தோம். அதற்குள் தாமதமாக மதிய உணவு வந்து சேர்ந்து விட ஒன்றே முக்காலுக்கு உணவு இடைவேளை. நல்ல பசி வந்து விட்டதால் அமிர்தமாக ருசித்ததாம் உணவு.
ஜெயா தொலைக்காட்சியினர் காலியாக இருந்த பயிற்சி அறையில் நான்கு பேரை உட்கார வைத்து படம் எடுக்க உதவுமாறு கேட்க, காலையில் அவ்வளவு சுறுசுறுப்பாக நடந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இப்போது செயற்கையாக எடுக்காதீர்கள், இன்னும் ஒரு மணி நேரம் காத்திருந்து மதிய அமர்வுகளைப் படம் பிடியுங்கள் என்று கேட்டால் அடுத்த பணிக்குப் போகும் அவசரம்.
கடைசியில் கருத்து அரங்கில் பட்டறை பெயர் பின்னணியில் இருக்கப் பேசச் சொன்னார்கள். மூச்சு விடாமல் போட்ட போட்டில் படம் பிடிக்க வந்திருந்த இளைஞர் கடைசியில் தமிழில் தட்டச்ச வலைப்பதிய விபரங்கள் கேட்டு விட்டுத்தான் கிளம்பினார். 'அந்தத் தொலைக்காட்சி மூலம் ஆயிரக்கணக்கானோருக்குத் தமிழ்க் கணிமை விபரங்கள் போய்ச் சேர வேண்டும், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும், இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டேன்.
10 கருத்துகள்:
//'திரைப்படங்களுக்கு தணிக்கை தேவையா? இணையத்தைத் தணிக்கை செய்ய முடியுமா' என்று செல்லா எடுத்துக் கொடுக்க முடிவே இல்லாத இந்த விவாதத்தை அத்துடன் நிறுத்தி விட்டு, வலையில் பாதுகாப்பு குறித்து லக்கிலுக் பேச ஆரம்பித்தார்
//
சரியா சென்ஸார் பண்ணியிருக்கீங்க நீங்க ;-)
பட்டறையை திறம்பட நடத்திய வலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பட்டறையின் முழுமையான கூட்ட அறிக்கையினை தொகுத்திருப்பின் யாராவது பதிவு செய்யலாமே!
மோகன் தாஸ்,
என் 'தணிக்கை' சில சமயங்களில் கையிலிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கும் அளவுக்குப் போனது :-). 'நீங்க என் கையில் மைக்கே தர மாட்டீங்க' என்று செல்லா அலுத்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பேத்தியிருக்கேன்.
நன்றி வாசகன்,
நம்ம பாலா எல்லா பதிவு இடுகைகளையும் தொகுத்திருக்கார் பாருங்க.
here
அன்புடன்,
மா சிவகுமார்
//என் 'தணிக்கை' சில சமயங்களில் கையிலிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கும் அளவுக்குப் போனது :-).//
இதிலும் ஒரு விஷய்ம் உண்டு யார் யாரிடம் இருந்து மைக்கை பிடிங்கினீர்கள் என்பது; என்னிடம் இருந்தோ செல்லாவிடம் இருந்தோ நீங்கள் மைக்கை உருவியது பெரிய பிரச்சனை கிடையாது. நீங்கள் பர்ஸை உருவியிருந்தால் கூட கவலைப் பட்டிருக்க மாட்டேன் நான் ;)
ஆனால் இது எல்லோருக்குமாய் நீண்டதா என்பது என் கேள்வி.
//சரியா சென்ஸார் பண்ணியிருக்கீங்க நீங்க ;-)//
//என் 'தணிக்கை' சில சமயங்களில் கையிலிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கும் அளவுக்குப் போனது :-). 'நீங்க என் கையில் மைக்கே தர மாட்டீங்க' என்று செல்லா அலுத்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பேத்தியிருக்கேன்.//
நான் மேலே சொன்ன சென்ஸார் வேற; சில விஷயங்களைச் சென்ஸார் செய்து எழுதியிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியதால் தான் அந்தக் குறிப்பிட்ட இடத்தை எடுத்துப் போட்டு சரியா சென்ஸார் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னேன். ;-)
நீங்க சொன்ன பதிலால் தோன்றிய இன்னொரு கேள்வியைத்தான் முன்னாடி பின்னூட்டத்தில் வைத்திருந்தேன்.
வணக்கம் மா.சி,
பட்டறைக்குறித்தான உங்கள் அனைத்து பதிவையும் படித்தேன் அருமையாக உள்ளது. எல்லாவற்றுக்கும் பின்னூட்டம் போட வேண்டுமா என எனது உள்மன சோம்பேறி சாத்தான் கேட்டது, உங்களைப்போன்றவர்களின் உழைப்பை காண்கையில் பின்னூட்டம் கூட போட தயங்குவதா என வந்து விட்டேன்! :-))
மிக அருமையாக நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளீர்கள். சில விஷயங்கள் வெளியில் இருந்து பார்த்தால் சப்பை மேட்டர் ஆக தெரிவதுண்டு , ஆனால் அதனை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிவதில்லை பலரும் , எனவே குறை சொல்வார்கள் சிலர் அதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் , அடுத்த கட்ட செயல் திட்டம் பற்றி யோசியுங்கள்!
பட்டறை குறித்து படிப்பதே பரவசம் ஊட்டும் ஒன்றாக உள்ளது, அப்படி இருக்கையில் பட்டறையும் பரவசம் ஊட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
//நூறு கைகள் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருக்க பட்டறை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.//
ஊர் கூடித் தேர் இழுத்ததை நினைச்சாப் பெருமையாவும், இதுலே கலந்துக்க முடியலையேன்னு வருத்தமாவும் இருக்கு.
//நீங்கள் பர்ஸை உருவியிருந்தால் கூட கவலைப் பட்டிருக்க மாட்டேன் நான் ;)//
முதலிலேயே சொல்லவில்லையே நீங்க இதை, தூரத்தில் பெங்களூரு போன பிறகு சொல்லி என்ன பலன் :-)
//ஆனால் இது எல்லோருக்குமாய் நீண்டதா என்பது என் கேள்வி.//
முடிந்தவரை நீண்டது என்று என் நினைப்பு.
//சில விஷயங்களைச் சென்ஸார் செய்து எழுதியிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியதால் தான் அந்தக் குறிப்பிட்ட இடத்தை எடுத்துப் போட்டு சரியா சென்ஸார் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னேன்.//
முனைந்து எதையும் விட்டு விடவில்லை. நினைவில் நின்றவற்றை, பலனளிக்கும் என்று தோன்றியவற்றை குறிப்பிட்டேன்.
உங்கள் பின்னூட்டத்தைப் படித்த பிறகு நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று ஊகிக்க முடிகிறது. அத்தகைய விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து.
//பட்டறை குறித்து படிப்பதே பரவசம் ஊட்டும் ஒன்றாக உள்ளது, அப்படி இருக்கையில் பட்டறையும் பரவசம் ஊட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!//
ஆமாம் வவ்வால் அருமையான அனுபவம். நீங்கள் சொல்வது போல நமக்குச் சரி என்று படுவதைத் தொடர்ந்து செய்வோம்.
வாங்க துளசி அக்கா,
உங்க பின்னூட்டம் பார்த்த பிறகுதான் இந்த பட்டறை அனுபவமே நிறைவடைந்தது :-)
அன்புடன்,
மா சிவகுமார்
your moderation, especially when the discussions were going out of hand was commendable. even while snatching the mike:-) you did it with a smile and without hurting others. thanks.
yes, as you mentioned in this /other post, discussions on this unconference should not base on individual issues.. discussions shall concentrate on blogging -- tamil blogging.
a very nice experience to participate.
vellore, is not improving:) no kalappai here:(
வாங்க சுரேஷ்,
//vellore, is not improving:) no kalappai here:(//
அடுத்த தடவை நீங்க வரும் போது சரியாகி விடும் என்று பணி செய்வோம் :-)
//discussions on this unconference should not base on individual issues.. discussions shall concentrate on blogging -- tamil blogging.//
உங்கள் தொழில் நுட்ப வகுப்புதான் பட்டையைக் கிளப்பியது என்ற பேச்சு. தொடர்ந்து செய்யுங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக