இந்த பணியின் பலன் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது சிவப்பு உடையோ, கதர் உடையோ, காவி உடையோ, அணிந்த ஒரு கூட்டத்தினரின் உரிமையாக இல்லாமல், அவரவர் தமது உழைப்பின் பலனை தன்னைச் சுற்றி இருப்பவரில் அதிகத் தேவை இருப்பவருக்குப் பயன்படும்படி செலவழிக்கும் உரிமை இருக்க வேண்டும். யாருக்கு அதிகத் தேவை, அதை எப்படி அவருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை தனிமனிதருக்கு இருக்க வேண்டும்.
அந்த நோக்கம் எப்படி எல்லோருக்கும் தோன்றும்?
அத்தகைய நோக்கம் இல்லா விட்டால் என்னதான் புரட்சி செய்தாலும் உள்ளே இருந்து கொண்டே குழி பறித்துக் கொண்டே இருப்பார்கள் அவர்கள். பொதுவுடமை, சமூக நலன் அடிப்படையாக இயங்குபவர்கள் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பிலும், பேராசையும் சுயநலமும் தவிர்த்து தமது திறமையையும் வருமானத்தையும் பொறுப்புடன் பயன்படுத்துவார்கள். அந்த அடிப்படை மனதில் விதைக்கப்படாதவர்கள், இரும்புத் திரை அல்லது மூங்கில் திரைக்குள்ளும் எப்படி தனது பேராசைக்குத் தீனி போடுவது என்று வழி தேடிக் கொண்டிருப்பார்கள்.
அடிப்படையில் மனிதர்கள் மனம் மாறா விட்டால் சமூகம் மாற முடியாது.
காந்தி போராடித்தான் சுதந்திரம் வந்ததா?
தார்மீக உரிமை மாற்றுவதுதான் மாற்றத்தின் முதல்படி. 'ஜாலியன் வாலாபாக்கில் படுகொலைகள் செய்துதான் பிரித்தானிய பேரரசு இந்தியாவில் நீடிக்க முடியும்' என்று ஆன நாளில் பலர் மனதில் காலனி அரசு தனது அரசாளும் உரிமையை இழந்து விட்டது.
இன்றைக்கு இந்திய அரசமைப்பை சாடும் குழுவினரும் அதைத்தான் நாடுகிறார்கள். பெருவாரியான நடுநிலை மக்களின் மனதில் அமைப்பைக் குறித்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டால் மாற்றம் தொடங்கி விடும். மாற்றம் என்பது மானிட தத்துவம். ஒன்று போய் மற்றது வருவது தவிர்க்க முடியாத நிகழ்வு. அந்த மாற்றங்களுக்கான தளம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு அமைப்பின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஒரு அமைப்பை மாற்றி அதன் இடத்தைப் பிடிக்க பல கொள்கைகள் போட்டி போடும். அதில் எது வெற்றி பெறும், அடுத்தக் கால கட்டத்தில் எத்தகைய அமைப்பு நிலை பெறும் என்று சொல்ல முடியாது. கடை விரிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதிகம் பேர் கொள்ள வந்தால், வணிகம் தளைக்கும், இல்லை என்றால் கோணியைச் சுற்றிக் கொண்டு போக வேண்டியதுதான்.
இது இயல்பாக மனித சமூகத்தில் நடக்கக் கூடியது கார்ல் மார்க்ஸ் முன்கூறும் முதலாளித்துவத்தின் முதிர்ச்சியும் கம்யூனிசத்தின் மலர்ச்சியும் இந்த வழியில் வரக் கூடியவை. ஏதாவது ஒரு பிரிவினரின் சர்வாதிகார அமைப்பு அரசு அமைக்கும் போது மேலே சொன்ன மாற்றங்களுக்கான விதைகளை முயற்சிகளையே வேர் பிடிக்க விடாமல் செய்வது அரசாங்கத்தின் முக்கிய பணியாக ஆகி விடுகிறது.
யாரும் அமைப்பைக் குறை சொல்லிக் கருத்து தெரிவிக்கக் கூடாது. போராட்டங்கள் நடத்தக் கூடாது. அமைப்பில் தலைவர் அல்லது தலைமைக் குழு சொல்வதுதான் இறுதி முடிவு. அதற்கு மேல் மாற்றுக் கருத்து இல்லை என்று இருக்கும் அமைப்புகள் எல்லாம் வளர்ச்சி நின்று போன மரம் போல உளுத்து போய் உதிர்ந்து போகும்.
அப்படி உளுத்து உதிர்ந்த கோட்பாடுகளின் கொடி பிடித்து 'அந்தக் கோட்பாடுகளின் படி, அந்த வழிமுறைகளின் படி நடந்து கொண்டிருந்த போது சீனாவிலும் சோவியத் ரஷ்யாவில் பாலாறும் தேனாறும் ஓடியது. அந்த இன்பத்தைத் தாங்க முடியாத மக்கள் சதி செய்து ஏகாதிபத்திய வழிமுறைகளுக்கு வழி விட்டார்கள். நாமும் அதே வழியில் போவதுதான் தேவையான மாற்றம்' என்று செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் புரட்சிகர இயக்கங்களின் வழி.
அது அவர்களின் உரிமை. பல விதமான கருத்துக்களும், கட்சிகளும், பத்திரிகைகளும், செயல்படலாம் என்பதுதான் இந்தியா போன்ற அரசமைப்புகளின் சிறப்பு.
உலகம் இது வரை கண்ட சமூக அமைப்புகளில் இப்போது செயல்படும் மக்களாட்சி முறையான
- பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமியற்ற,
- படித்து பட்டம் பெற்ற அதிகாரிகள் பிரதிநிதிகளின் தலைமையின் கீழ் நிர்வாகம் நடத்த,
- இரண்டையும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறார்களா என்று நீதி மன்றங்கள் சோதித்துப் பார்க்க,
- இதில் எல்லாம் என்ன ஓட்டைகள் இருக்கின்றன என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களும் சேர்ந்து
இதில் இருக்கும் குறைகள் பல தெரிகின்றன. இது மாறி இதை விடச் சிறந்த முறை மலர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இதற்கு மாற்று இதை விட மோசமான, மனிதர்களை இயந்திரங்களாக நடத்திய முறைதான் என்று சொல்வது எப்படி சரியாகும்?
சோஷலிசம்தான் தீர்வா? (அசுரன்)