வெள்ளி, அக்டோபர் 12, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 4

திட்டம் தரையைத் தொடும் போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் பாதக சாதகங்கள் உறைக்க ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில் நல்லெண்ணம் படைத்த பத்திரிகை விவாதங்களிலோ பொதுநல வாதிகளால் நீதிமன்றங்களிலோ எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டால் திட்டத்தை அலசி ஆராய்தல் ஆரம்பித்து விடலாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக குரல் கொடுக்க தன்னார்வல நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள், போராளிக் குழுக்கள் இறங்கி திட்டத்தை மாற்றியமைக்க முயல்கின்றன. இப்படி அடித்துப் பிடித்து சரியான வழியில் வந்து சேர்கிறோம்.

மாநில அரசுகள், தாமாகவோ, தனியார் நிறுவனங்களுடன் கூட்டாகவோ, முற்றிலும் தனியார் நிறுவனம் மூலமாகவோ இந்த மண்டலங்களை உருவாக்கி இயக்கிக் கொள்ளலாம் என்று கொள்கை. கையில் காசு இல்லாத மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களை வரவேற்க முயற்சிக்கிறார்கள். இருப்பதில் எதைச் செய்தால் தமக்கு ஆதாயம் என்று இயங்கக் கூடிய தனியார் நிறுவனங்களுக்கு அரசே நிலம் கையகப்படுத்திக் கொடுக்க முயல்வதுதான் சிக்கலில் கொண்டு விட்டிருக்கிறது.

ஒரு சாலை போடவோ, அணை கட்டவோ அரசு தனது முன்னுரிமையைப் பயன்படுத்தி தனியார் நிலங்களை கையகப்படுத்தும் போது, கவிஞர் வைரமுத்து தண்ணீர் தேசம் நாவலில் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மூழ்கிய தனது கிராமம் குறித்து எழுதிய மன வேதனையைத் தாண்டி பொது நலனுக்காகத்தானே கொடுக்கிறோம் என்ற ஆறுதலும், அதே காரணத்தால் பிற பகுதி மக்களின் ஆதரவும் இருக்கும்.

'யாரோ லாபம் சம்பாதிக்க ஏன் அரசு முனைய வேண்டும். அதற்கு நாங்கள் ஏன் நிலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்' என்று ஆத்திரம் பொங்குகிறது. 'வணிக முறையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றால் நேரடியாக விவசாயிகளிடம் போய் பேரம் பேசி நிலத்தை வாங்கிக் கொள்ளட்டுமே. அப்படி சிலர் விற்க மறுத்து விட்டால் தொழிற்சாலை வராமல் போய் விடலாம். இதற்கு அரசு என்ன வக்காலத்து!' என்று தோன்றத்தான் செய்யும்.

சீனாவில் இதே மாதிரியான சூழலில் தனியார் நிறுவனம் அரசின் ஆதரவுடன் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டு போயிருந்திருக்கும். பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது போல இதுதான் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு. ஏழை சொல் கூட அம்பலத்தில் ஏற வாய்ப்புகள் இருக்கின்றன. யாரும் யாரையும் மிதித்துப் போட்டு விட்டு தமது நலனைப் பார்த்துக் கொள்ள முடியாது.

துப்பாக்கிச் சூடு நமது அமைப்புகள் சரியாக இயங்காததன் விளைவு. நாடாளுமன்றத்தில் பொருளாதார மண்டலம் குறித்த விவாதத்தின் போது எதிர்கட்சிகள் வேறு ஏதாவது தலைப்புச் செய்தியை உருவாக்கும் கலாட்டாவில் இறங்கி மசோதாவை அலசலின்றி நிறைவேற விட்டிருக்கலாம். பத்திரிகைகள் ஆரம்ப நிலையிலேயே இது குறித்து விவாதங்களை உருவாக்கத் தவறியிருக்கலாம். (முதல் பக்கச் செய்தியாக சட்டமன்றத்தில் மைக்குகள் உடைக்கப்பட்து இருக்கும் போது இதை யார் கண்டு கொள்வார்கள்!)

மாநில அரசுகள் தமக்கு சாதகமான வகையில் சரியாக ஆராயாமல் தனியார் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கலாம். அந்த மாநில எதிர்கட்சிகள் தமது அரசியல் ஆதாயத்துக்காக மோதலைத் தூண்டி விட்டுக் குளிர் காய்ந்து கொண்டிருக்கலாம்.

இதற்கெல்லாம் கொடுத்த விலை ஏழு உயிர்களை இழந்தது. சீனாவில் வெளியில் தெரியாமலேயே பல நூறு உயிர்கள் இத்தகைய திட்டங்களின் பேரில் பலி கொடுக்கப்பட்டு விடும். கேட்க ஆளிருக்காது.

2 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

எந்த ஒரு திட்டமும் நம்நாட்டில் வெளிப்படையாக சொல்லப்படுவது இல்லை என்று தோன்றுகிறது.இது என்னுடைய கணிப்பே, தவறு இருந்தாலும் இருக்கலாம் ஏனென்றால் வருடத்துக்கு 20 நாட்கள் மட்டும் இந்தியாவில் இருக்கும் நான் அதைப்பற்றி ஓரளவு கூட தெரியாமல் விமர்சிப்பது நல்லதல்ல.
இங்கு (சிங்கையில்) ஒரு திட்டம் வருகிறது என்றால் முதலில் வானொலி/தொலைக்காட்சியில் சொல்வார்கள்,பிறகு அடித்தள அமைப்புகள் மூலம் அந்தந்த தொகுதி உறுப்பினர் மூலம் அடித்தட்டு மக்களுக்கும் விபரங்கள் கொடுக்கப்படும்.இவையெல்லாம் தகுந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டு, மக்களின் கருத்துகள்/விமர்சனங்கள் தொகுப்பட்டு மேலும் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்து பிறகு அமல்படுத்துவார்கள்.நிலம் அரசாங்கம் வசம் இருப்பதால் எதெதற்கு எவ்வளவு நிலம் என்பதை அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.நிலம் ஆர்ஜிதம் என்னும் பெரிய பாரத்தை அவர்களே இறக்கிவைத்துவிடுவார்கள்.ஒரு நிறுவனமோ/வெளியார் முதலீடு செய்பவர்கள், நிலம் வாங்குவதிலேயே இவ்வளவு சிக்கல் என்றால்!! சிக்கல் இல்லாத இடத்தில் பணத்தை போட்டு பெருக்கத்தான் பார்ப்பார்கள்.இந்த விதத்தில் இந்தியாவுக்கு இழப்பே.
சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக வேண்டும் என்றால் அரசாங்கம் முழு ஒத்துழைக்க வேண்டும் அதுவும் நில ஆர்ஜிதத்தில்.
நிறுவனத்திடம் போய் நீயே நிலம் இருப்பவரிடம் போய் பேசிக்க என்று சொல்லிவிட்டு பத்து பேரில் இருவர் நான் நிலத்தை கொடுக்கமுடியாது என்று சொல்லி மொத்த பிராஜக்டை யும் கெடுத்தால் யாருக்கு லாபம்?

மா சிவகுமார் சொன்னது…

//எந்த ஒரு திட்டமும் நம்நாட்டில் வெளிப்படையாக சொல்லப்படுவது இல்லை என்று தோன்றுகிறது.//

முற்றிலும் உண்மை. அரசியல் வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பத்திரிகைகளும் தமது கடமையைச் செய்யத் தவறி விடுவதால்தான் இந்த நிலைமை.

//பத்து பேரில் இருவர் நான் நிலத்தை கொடுக்கமுடியாது என்று சொல்லி மொத்த பிராஜக்டை யும் கெடுத்தால் யாருக்கு லாபம்?//

அதுவும் சரிதான். ஆனால், மற்ற பொது திட்டங்களைப் போலில்லாமல் போட்டி விலைக்கே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று விதிக்கலாம் அல்லவா?

அன்புடன்,
மா சிவகுமார்