வெள்ளி, அக்டோபர் 12, 2007

காலம் கருதுதல்

திட்டமிடலுக்கு எளிதான வேலைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றும் முடிய முடிய டிக் அடித்துக் கொண்டே போவதிலிருந்து ஆரம்பித்து பல கருவிகள் இருக்கின்றன.

கூகிள் காலண்டர் பயன்படுத்தலாம், அல்லது மேசைத் தளக் கருவிகளாக வரும் கோண்டாக்ட் என்ற கேடிஈ கருவி அல்லது எவலுயூஷன் என்ற ஜினோம் கருவியைப் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் கிடைக்காததால் கூகிள் காலண்டர் ஒத்து வராது. கணினி சார்ந்த முறைகளை நம்பித்தான் ஆக வேண்டும்.

திட்டமிடுதல் ஒரு புறம், அந்தத் திட்டத்தைப் பார்த்து அதன்படி வேலைகள் போகிறதா என்று கண்காணிப்பது இன்னோரு புறம், ஒவ்வொரு பணி முடிந்த விபரத்தைக் குறித்துக் கொண்டு மாலையில் அல்லது அடுத்த நாள் காலையில் திட்டத்துக்கு நடைமுறைக்கும் என்று வேறுபாடுகள் என்று அலசுவதும் மிகத் தேவையானது.

மே மாத முதல் வாரத்திலிருந்து ஒரு விரிதாள் சார்ந்த வடிவை ஏற்படுத்திக் கொண்டு பயன்படுத்தி வந்தேன். அதன் அடிப்படை மாறாமல் இருந்தாலும் இந்த ஆறு மாதங்களில் அதன் அமைப்பில் பல மேம்பாடுகள்.

வாரத்துக்கு ஒரு கோப்பு, அதன் பெயர் week18.ods என்று வாரா வாரம் எண் கூடிக் கொண்டே போகும். ஒவ்வொரு தாளிலும் எட்டு விரிதாள்கள். வாரத்தின் ஏழு நாட்களுக்கு ஏழு தாள்கள். ஒரு தாளில் வாரம் முழுவதுக்குமான தகவல்கள். இப்போது யோசிக்கும் போது தேதியைப் தாள்களின் பெயராகக் குறிப்பிடாமல் கிழமையைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இனிமேல் மாற்றி விட வேண்டியதுதான்.

பழைய முறையில் ஒவ்வொரு வார இறுதியிலும், முந்தைய வாரக் கோப்பின் நகலை அடுத்த வாரக் கோப்புக்காக week19.ods என்று பெயர் சூட்டிச் சேமித்துக் கொண்டு தாள்களின் பெயர்களை மாற்றுவேன். கிழமைகளைக் குறிப்பிட ஆரம்பித்தால் அந்த வேலை மிச்சம். வாரத் திட்டமிடலும் இன்னும் வசதியாக இருக்கும்.

முழு வாரத்துக்கான தாளில் ஏழு நாட்களுக்கான குறுக்கு வரிசைகள், அவற்றுக்கு எதிரில் நெடுக்காக மூன்று பிரிவுகள், காலை, மதியம், மாலை என்று. இப்போது ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். தமிழில் பெயர் கொடுத்துக் கொள்ளலாம்.

திங்கள் என்று பார்த்தால் அதன் எதிரில் காலையில் என்ன வேலை, மதியம் என்ன வேலை, மாலையில் என்ன வேலை என்று பொதுவாகக் குறித்து வைத்துக் கொள்வது. திங்கள் காலை அல்லது ஞாயிறு மாலை அன்றே அந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் எங்கு இருப்போம், போன்ற விபரங்கள் திட்டமிட்டு விடலாம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளுக்கான திட்டமிடல். நாளுக்கான தாளில் குறுக்காக ஏழு பெரும் பிரிவுகள்.
  • காலை 6 முதல் 9 வரை தனி வேலைகள், ஒரே பிரிவாக.
  • 9 முதல் 11 வரை மாதாந்திர இலக்குகளுக்கான பணிகள் - ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிறு பிரிவாக இரண்டு பிரிவுகள்.
  • அதே போல 11 முதல் 1 மணி வரை இரண்டு சிறு பிரிவுகள் வாராந்திரம் முடிக்க வேண்டிய பணிகளுக்கான கட்டங்களுடன்.
  • 1 மணி முதல் 2 மணி வரை மீண்டும் தனி வேலைகளுக்கு.
  • 2 முதல் 4 வரை ஆண்டு இலக்குகள், தேவைகள் சார்ந்த பணிகள். (இரு சிறு பிரிவுகளாக)
  • 4 முதல் 6 வரை நீண்ட கால நோக்கிலான பணிகள், இதுவும் 4-5, 5-6 என்று இரண்டு உள் பிரிவாக
  • மாலை 6 முதல் 9 வரை தனி வேலைகள் ஒரே உள்பிரிவாக.
இப்படி ஏழு பெரும் பிரிவுகளும் அவற்றினுள் 11 சிறு பிரிவுகளுமாக குறுக்குக் கட்டங்கள். ஒவ்வொரு குறுக்குக் கட்டத்துக்கும் எதிரில் நான்கு நெடுக்குக் கட்டங்கள். முதலாம் கால், இரண்டாம் கால், மூன்றாம் கால், நான்காம் கால் என்று கட்டம் உருவாகி விடும்.

மதியம் 12 முதல் 1 மணி வரை வாராந்திர பணிகளை முடிக்க வேண்டும் என்று குறுக்குக் கட்டம் இருந்தாலும் அந்த ஒரு மணி நேரத்தை 4 கால்பகுதிகளாகப் பிரிக்க நெடுக்குப் பிரிவுகள் இரண்டின் சேர்க்கையில் நான்கு கட்டங்கள் கிடைக்கும். அதே போல காலை 6-9ம் நான்கு கட்டங்களாக கிடைக்கும்.

ஒரு பணியை முடித்ததும் அந்த கட்டத்துக்குள், பணி விபரத்தின் இறுதியில் done என்று குறித்துக் கொள்கிறேன். இதைக் கூட மாற்றி கட்டத்தின் பின்னணி நிறம் அல்லது எழுத்துருவை மாற்றி விடுவதாகச் செய்யலாம்.

இப்போது செய்ய வேண்டிய மாற்றங்கள்:
  1. தேதிகளுக்குப் பதிலாக வார நாட்களை பெயராகச் கொடுத்தல்
  2. பெயர்களையும் விபரங்களையும் தமிழில் எழுதுதல். தாள்களின் பெயர்கள், உட்பிரிவுகள், நேரங்கள், கால்பகுதிகள் என்று எழுதிக் கொள்ளலாம்.
  3. பணி முடிந்ததைக் குறிக்க பின்னணி நிறம் மாற்றிக் கொள்ளுதல்
  4. அதிகாலை எழுந்ததும் முதல் வேலையாக நாளுக்கான திட்டமிடல்.
  5. ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறரை முதல் ஏழரை வரை வாராந்திரத் திட்டமிடலுக்கு ஒதுக்கிக் கொள்ளுதல்
  6. காலையில் திட்டமிடும் போது முந்தைய நாளின் பணிகள் எப்படி முடிந்தன என்று அலசி விட்டுப் போனவற்றை அந்த நாளுக்குக் கொண்டு வருதல். திட்டமிடலையும் சேர்த்து அரை மணி நேரம் வரை ஆகலாம்.
  7. வாராந்திரத் திட்டமிடலின் போதும் முந்தைய வாரத் திட்டமிடல் எப்படி போனது என்று அலச வேண்டும். திட்டமிடலையும் சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.

7 கருத்துகள்:

முரளிகண்ணன் சொன்னது…

எனக்கு திட்ட்மிடுதல் கைவரப்படாத ஒன்று. இந்த முறை முயற்சி செய்கிறென். பகிர்தலுக்கு நன்றி

மா சிவகுமார் சொன்னது…

வாங்க முரளி கண்ணன். நான் பயன்படுத்தும் மாதிரிக் கோப்பு இங்கே.

அன்புடன்,
மா சிவகுமார்

தென்றல் சொன்னது…

பகிர்ந்தமைக்கும், கோப்புக்கும் நன்றி, மா.சி!

நானும் பலமுறை முயன்று (Yahoo/Google Calendar, PDA...) தோற்றுப்போன விசயம். ஆனால் இன்னும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்... ஒரு நாள் வசப்படும் என்ற நம்பிக்கையில்... பார்க்கலாம்!!

பெயரில்லா சொன்னது…

திட்டமிடலும், அதற்கு சரியான கருவி
யும் மிக முக்கியம். இணையம் இல்லாமல் தனித்து இயங்கும்(Desktop/ Standalone Version) கோப்புகளுக்கு சரியான சுட்டி தருவீர்களா?
நான் பரிசோதித்த சிலவற்றிற்கான சுட்டியையும் தேடி தருகிறேன்.
நன்றி மா.சி.
-விபின்

MSATHIA சொன்னது…

ஒரு பென்சிலும், கையடக்கமான ஒரு நோட்டுப்புத்தகமுமே அங்கிங்கெனாதபடி எங்கும் தேடி கடைசியில் ஒத்து வருவது. அதுவே எனக்கு சாலச்சிறந்ததாய் இருக்கிறது. உங்களைப்போல அதிக அளவு கட்டங்கள் தேவைப்படாத்தால் சுலபமான இந்த முறை இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறேன். நான் பார்த்து அவரவர்கு ஒவ்வொரு வழிமுறை ஒத்து வருகிறது. அதை கண்டறிய வேண்டியது முக்கியம். வழமை போல நல்ல பதிவு

தென்றல் சொன்னது…

//ஒரு பென்சிலும், கையடக்கமான ஒரு நோட்டுப்புத்தகமுமே அங்கிங்கெனாதபடி எங்கும் தேடி கடைசியில் ஒத்து வருவது. அதுவே எனக்கு சாலச்சிறந்ததாய் இருக்கிறது.//

உண்மைதான், சத்யா!

மா சிவகுமார் சொன்னது…

தென்றல்,

சத்தியா சொல்வது போல ஒவ்வொருவரும் நமக்குப் பொருத்தமான வழியைக் கருவியைத் தேட வேண்டியிருக்கும். காலமும் பொறுப்புகளும் மாறும் போது வழிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

விபின்,

நான் அப்படிப்பட்ட கருவி எதையும் முயன்றதில்லை. விண்டோசில் அவுட்லுக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். லினக்சில் எவலுயூஷன், கோன்டாக்ட் கிடைக்கின்றன.

நீங்கள் சுட்டிகளுடன் எப்படிப் பயன்படுகிறது என்று உங்கள் அனுபவத்தையும் எழுதுங்களேன்.

அன்புடன்,
மா சிவகுமார்