நாட்டின் தென்கோடி மாநிலமான குவாங்தோங்கின் சென்சென், சாந்தோ, சூஹாய் பகுதிகளிலும் அருகாமையில் ஷியாமென் என்ற இடத்திலும் எல்லைகளை வரையறுத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார்கள். தொழில் வணிக நடவடிக்கைகளைப் பொறுத்த வரை இந்தப் பகுதிகள் சீனாவின் வெளிநாடாகக் கருதப்பட்டன.
இந்தப் பகுதிகளில், தொழில் நிறுவனங்கள் குறைவான கட்டுப்பாடுகளுடன்
- தமக்குத் தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
- உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.
- உற்பத்தியை உள்நாட்டிலேயே விற்க விரும்பினால் வழக்கமான இறக்குமதி போல சுங்க வரி செலுத்தி விட வேண்டும்.
- தேவைப்படும் போது வேலைக்கு ஆள் எடுத்துக் கொள்ளலாம், தேவை குறைந்து விட்டால் வீட்டுக்கு அனுப்பி விடலாம்.
இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பிறகு சோஷலிச பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப் பட்டாலும் தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாடுகளுக்கிடையே இயங்கியே வந்தன. நிலங்கள் பரம்பரை பரம்பரையாக கைமாற்றப்பட்டு வாங்கவும் விற்கவும் சட்டங்கள் இருக்கின்றன. பல கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஆட்சி அமைக்கும் அரசியலமைப்பும், மக்கள் வாக்களித்து ஆட்சியை மாற்றும் உரிமைகளும் இருக்கின்றன.
1990களின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்கனவே இருந்த தளைகளை விலக்குவதாகவே இருந்ததே தவிர பழைய கொள்கைகளை முற்றிலும் மாற்றுவதாக இருக்கவில்லை. உலகமயமாக்கலும் சீர்திருத்தங்களும் நாடு முழுவதுக்கும் ஒரே நேரத்திலேயே அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்த கொள்கை வகுக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரும் காலம் இது.
2000ம் ஆண்டில் கொள்கை அறிவிக்கப்பட்டது. 2004ல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. மாநில அரசுகள், தாமாகவோ, தனியார் நிறுவனங்களுடன் கூட்டாகவோ, முற்றிலும் தனியார் நிறுவனம் மூலமாகவோ இந்த மண்டலங்களை உருவாக்கி இயக்கிக் கொள்ளலாம் என்று கொள்கை. மாநில அரசுகளின் பரிந்துரையின் படி மத்திய அரசின் ஒற்றைச் சாளர அலுவலகம் ஒன்று மண்டலம் குறித்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்.
மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள், மாநில அரசுகளுக்கு பல அதிகாரங்கள், உள்ளூர் மக்களுக்கு சில உரிமைகள் என்று ஒவ்வொரு தனிமனிதன் வரை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. அந்த அரசமைப்பு சட்டத்தைக் கட்டிக் காக்க நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இருக்கின்றது.
இதனால் புதிய திட்டங்கள் உருவாக்கும் போது தட்டுத் தடுமாறியே சரியான பாதையை அடைய முடிகிறது. முதலில் நல்ல எண்ணமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்கள் அரசு கொள்கையை வகுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து நேர்மையான சற்றே நேர்மை குறைந்த அதிகாரிகள் நடைமுறைத் திட்டம் தீட்டுகிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் போது, பல நிறுவனங்கள் களத்தில் குதிக்கின்றன. தமது நலத்தை வளத்தைக் குறுக்கு வழியில் பெருக்கிக் கொள்ளப் பார்க்கும் தொழில் / வணிக நிறுவனங்கள், இடைத்தரகர்கள், அரசியல்வாதிகள் தமக்கு ஏற்றவாறு திட்டத்தை வளைத்துக் கொள்கிறார்கள்.
3 கருத்துகள்:
அருமையான பதிவு.... மேலும் அதிகமாக எதிர்பார்க்கின்றோம்....,
இரா . செந்தில் நாதன்
கடைசி 2 பத்தி தான் "நச்" என்று இருக்கு.
நன்றி குமார், செந்தில்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக