செவ்வாய், டிசம்பர் 19, 2006

ஈழத்து மனிதர்களுக்காக ஒரு கூட்டம்

'ஈழத்தமிழரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திரு, பெல்ஜியத்திலிருந்த வந்திருப்பதை முன்னிட்டு சென்னை வலைப்பதிவர்கள் சந்திக்கலாம்' என்று லக்கிலுக் அடக்கமாக எழுதியிருந்தார். ஞாயிறு அன்று மதியம், சிவஞானம்ஜி ஐயா தொலைபேசி 'நியூசியிலிருந்து துளசி அம்மா வந்திருக்காங்க, மாலையில் பதிவர் கூட்டத்தில் சந்திக்கலாம்' என்று சொல்லியிருந்தார்.

சளியும் காய்ச்சலும் நிழலடிப்பது போலப்பட்டாலும் விடாப்பிடியாக நான்கு நாள் தாடியோடுக் கிளம்பி பனகல் பூங்கா அருகில் வண்டி நிறுத்த இடம் தேடி, நிறுத்தக் கூடாத இடம் என்று பிறகு புரிந்த இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே போக வரும் போது எதிரில் அருள் குமாரும், வீரமணியும் சந்திப்பு இடம் மாறிவிட்டதாக திரும்பிக் கொண்டிருந்தார்கள். நடேசன் பூங்கா என்பது கேபிஎன் அலுவலகம் இருக்கும் சாலையில் என்று மங்கலாக நினைவு இருந்தாலும், உறுதி செய்து கொள்வதற்காக ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கேட்க அவர், ஜிஎன் சாலையில் போய் வலது புறம் சந்தில் திரும்பச் சொன்னார்.

அப்படியே தேடித் திரும்பிப் போகும் போது வண்டி மேலே போக மறுத்து நின்று விட்டது. தள்ளிக் கொண்டே போய் கண்ணதாசன் பதிப்பகத்துக்கு அருகிலிருக்கும் வாசல் வழியாக பூங்காவுக்குள் போனேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே, என்னைப் போன்ற கிட்டப்பார்வையினருக்கும் தெளிவாகத் தெரியும் வண்ணம் வட்டம் அமைத்து அமர்ந்திருந்தார்கள் பதிவர்கள். பாசக்காரத் தலைவர் பாலபாரதி தனக்கு அருகிலேயே இடம் போட்டு என்னை அமர்த்திக் கொண்டார்.

கூட்டங்களின் உயிர்ச் சக்தி போன்ற பாலா அவ்வப்போது தம்மடிக்க தேநீர் குடிக்க போய் விட்ட நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் உரையாடல் முன்திட்டமிடப்படாமல் இருந்தாலும் சுறுசுறுப்பாகவே போனது.

எல்லோராலும் சங்கம் வைத்துக் கலாய்க்கப்பட்டாலும், தானும் அதை சுணங்காமல் ஏற்றுக் கொண்டாலும், பாலபாரதியின் எண்ணத் தெளிவு பலமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது. லக்கிலுக்கிலிருந்து அறிமுகத்தை ஆரம்பித்து வைக்கும்படி பாலபாரதி கேட்டுக் கொண்ட பொழுது புரியாவிட்டாலும் அவருக்கு இடது புறம் அமர்ந்திருந்த திரு எனப்படும் திருவள்ளுவர் கடைசியாக எல்லோருக்கும் பிறகு பேசினால் முத்தாய்ப்பாக இருக்கும் என்று யோசித்து அதைச் சொல்லியிருப்பார் என்று படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துயரமுறும் மக்களைப் பற்றி திரு பேசியதிலிருந்து திரும்பி, தமிழகத்தில் அகதிகளாக வந்திருக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி பேச்சு மாறி விட்டதை சுட்டிக் காட்டி இதைப் போலத்தான் வலைப்பதிவுகளிலும் பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்புவது பலமுறை நடந்து விடுகிறது என்று பாலா உணர்த்தினார்.

முதல் முறை இதே நடேசன் பூங்காவில் சந்தித்து மாமல்லபுரம் போய் விட்டு வந்த பதிவுகளின் விளைவாகத் தொடங்கியது சென்னப்பட்டிணம் கூட்டுப் பதிவு. சென்ற மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பின் விளைவாகத் தொடங்கியது வலைப்பதிவர் உதவிக் குழு என்ற கூட்டுப் பதிவு. 'ஏதாவது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவில்லையென்றால் அதன் தலையில் கல்லைப் போடு அல்லது ஒரு கமிஷனைப் போடு' என்று அரசியல்வாதிகளைப் போல நாமும் பேசி விட்டுக் கலைந்து போக மனமில்லாமல் ஒரு கூட்டுப் பதிவு அல்லது குழு உருவாக்குவதோடு நின்று விடுகிறோமோ என்று தோன்றியது.

இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தீவிரவாதம், தமிழ்நாட்டு மக்களை நம்பி அகதிகளாக வரும் மக்களுக்கு கிடைக்காத உரிமைகள் என்று பேசி விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலேயே கலைந்து விட்டோம்.
  • தெருக்களில் இறங்கி, அல்லது தத்தமது வட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்துவது
  • உண்மை அறியும் குழு ஒன்றை உருவாக்கி அகதி முகாம்களுக்குப் போய்ப் பார்ப்பது
  • ஊடகங்களில் பரவலாக எழுதி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவது
என்று உருப்படியான சில கருத்துக்கள் வெளி வந்தன. எதுவுமே கடைசி உருவம் பெறாமலேயே இருந்து விட்டன. கையெழுத்து இயக்கம் நடத்துவதன் மூலம் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். தமிழ் வலைப்பதிவர்களில் சிலர் ஆளுக்கு நூறு கையெழுத்து வாங்குவது என்று முடிவு செய்தாலும் சில ஆயிரம் கையெழுத்துக்களைத் திரட்டி விடலாம்.

திரு அவர்களின் கையெழுத்து இயக்கத்துக்கான அறிக்கையை ஒட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடித்து தன்னார்வலர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அறிக்கையில், தமது நண்பர்கள், உறவினர்களிடம் மட்டுமாவது கையெழுத்து வாங்கிக் கொடுக்கலாம். இதற்கு முன்வருபவர்கள் பின்னூட்த்திலோ, தனிமடலிலோ தமது ஆர்வத்தைத் தெரிவிக்கவும்.

8 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

அதே நடேச முதலியார் பூங்காவில் அமர்ந்துதான் எழுத்தாளர் அசோக மித்திரன் தனது படைப்புகள் பல உருவாக்கியுள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

Typical Dondu comment.
இப்படிப் பின்னூட்டம் போட உக்காந்து யோசிப்பாங்களா?
;-(

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

நான் தயார்,என்னால் முடிந்த உதவிகள் செய்திட!

பெயரில்லா சொன்னது…

அன்பு அன்பு சிவகுமார்,

ஈழத் தமிழருக்கு உதவுவது மனிதாபிமானமானதுதான்.அதற்கு முன் சொந்த நாட்டிலேயே கதியின்றி அகதிகளாய் வாழும் பலகோடி தமிழருக்கு எங்கனம் உதவலாம் என்று யோசிக்கக் கூடாதா.ஆசியாவின் மிகப் பெரிய சேரி எங்க மும்பாயில்தான் உள்ளது,தாராவி!வாழும் ஜனத்தொகை 90 விழுக்காடுக்கு மேல் நம்மவர்தாம்.அவர்களின் பொருளாதாரம்?எங்கே இருக்கிறது அது.பாவப்பட்ட ஜன்மங்களை ஒரு சேர பார்க்க வேண்டுமானால் எங்க தாராவிக்கு வாங்க.தாராவி எப்படி உருவானது?எவ்வாறு தமிழர்,அதுவும் முக்கியமாக திருநெல்வேலி தமிழர் குடி புகர்ந்தனர்?அவர்கள் புனரமைப்பு..?இதை பற்றி ஒரு பேச்சு,ஒரு வரி இது வரை தமிழ் அறிவு ஜீவிகள் பேசி எழுதியதுண்டா?நாங்களும் புலம் பெயர் தமிழர்தாம்.காசுக்காக,வதிக்காக வரவில்லை,ரெண்டு வேளை சொத்துக்காக வந்தோம் அய்யா,அது நாங்க பிறந்த ஊரில் கிட்டாததால்.ஒவ்வொருவர் கதையும் கண்ணீரில்தான். வித்தியாசம்,எங்களிடம் டாலர் கிடையாது.பிரச்சார பலம் கிடையாது.சொந்த நாட்டிலேயே சோத்துக்காக புலம் பெயர்ந்த அகதிகள் நாங்கள்.பா.பாரதி போன்று தாராவியில் எங்கள் அவலங்களை பற்றி நன்கு அறிந்தவர்கள்
தங்களுக்கு எங்கள் உணர்வுகளை,அவலங்களைச் சொல்லக் கூடும்!
ஈழத்தவருக்கு உதவாதே என்று சொல்லவில்லை.சித்தி மகனுக்கு உதவ யோசிக்கும் இவ்வேளையில்,சொந்த சகோதருக்கும் கொஞ்சம் போல உதவலாமே..??

அன்புடன்
பாண்டியன்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிவஞானம்ஜி ஐயா,

இன்றோ நாளையோ திருவின் அறிக்கையின் தமிழாக்கத்தையும் மூலத்தையும் pdf கோப்பாக உருவாக்கிக் கொடுக்கிறேன். விருப்பமும் நேரமும் இருப்பவர்கள் அச்செடுத்து கையெழுத்துக்களைச் சேகரித்து தொகுத்து திருவுக்கே அனுப்ப ஏற்பாடு செய்வோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

டோண்டு சார்,

தகவலுக்கு நன்றி,

சென்னையில் படைப்பாளிகளுக்கு களத்துக்குக் குறைவே இல்லை போலிருக்கிறது. PB ஸ்ரீனிவாஸ் டிரைவ் இன் உட்லாண்ட்சில் உட்கார்ந்திருப்பதைப் பற்றி பொன்ஸ் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

உட்கார்ந்து யோசிக்க வேண்டாங்க. படிக்கும் போது மனதில் தோன்றுவதை, ஒரு உரையாடல் போல இடுவது தவறில்லைதானே! பதிவின் நோக்கத்துக்குப் பொருந்தா விட்டாலும், எழுதப் பட்ட பொருளோடு ஒட்டிய கருத்து / தகவல் இடம் பெறுவது பலன் தருவதுதான் என்பது என் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பாண்டியன்,

தாராவி பற்றிய உங்கள் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி. நான் உங்களைக் கேட்டுக் கொள்வது, அங்கு தமிழருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை, இருக்கும் அவலங்களை வெளிச்சப்படுத்தும் விதமாக உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு வலைப்பூவிலாவது எழுத ஆரம்பியுங்கள்.

ஈழத் தமிழர் இத்தனை தடைக்கற்களையும், எதிர்ப்பையும் தாண்டி போராட முடிவதின் ஒரு அடிப்படை, தமது நிலையை வாய் மூடி ஏற்றுக் கொள்ளாமல் தமது உரிமைகளுக்காக அவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதுதான். அந்தக் குரலைக் கேட்டு உதவிக் கரங்கள் நீள்வது போதவில்லை என்று இன்னும் பலர் புது முயற்சிகளை எடுக்கிறார்கள்.

நீங்களும், இங்கு பின்னூட்டம் இட்டது போல், இணையத் தளங்கள், தமிழ ஊடகங்கள் மூலம் உங்கள் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள். உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளும் தவறாமல் கிட்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்