புதன், செப்டம்பர் 16, 2009

10 ஆண்டுகளுக்குப் பிறகு - சில குறிப்புகள்

முந்தைய நாள் நன்கு வெயிலடித்திருந்ததால் சுடுதண்ணீர் நிறைய நிரம்பியிருந்தது. இன்றைக்கு சூரிய சக்திக் கலனின் சூட்டை இழக்காமல் தடுக்கும் பூச்சை மேம்படுத்துவதற்கு தொலைபேச வேண்டும். சுடுதண்ணீரை ஒரு பீங்கான் கோப்பையில் பிடித்து, அரைத்து வைத்திருந்த துளசி, சுக்குப் பொடியையும் சிறிதளவு தேனையும் சேர்த்து சூடாகக் குடித்து விட்டு அடுத்த வேலை.

மின்சார அளவு நாள் முழுமைக்கும் போதுமானதாகத்தான் தெரிகிறது. எல்லா வேலைகளையும் முடித்துக் குளித்து தியானமும் செய்த பிறகுதான் வெளியுலகச் செய்திகளை உள்ளே விட வேண்டும். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இயக்கியைப் பயன்படுத்தி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்து விட்ட நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டும் குறையவேவில்லைதான்.

படிக்கும் அறைக்குள் வந்து செய்தித் தளங்களை இயக்கினேன். இதைப் படித்து விட்டு நியூ கினியா நாட்டைப்பற்றிய விபரங்களைப் பார்க்க வேண்டும். தமிழ்ஈழத்தில் நடக்கப் போகும் உலகத் தமிழ் மாநாடு குறித்த செய்திகளை மேய்ந்து விட்டு வலைத்தளத்தில் எழுதியவற்றை பதிந்து விட்டேன்.

உலகத் தமிழ் மாநாட்டை தொலைதொடர்பாக நடத்தாமல் பங்கேற்பவர்கள் எல்லோரும் நேரில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்கிறார்கள். அத்தனை ஆண்டுகள் போரில் அவதிப் பட்ட மக்கள் உருவாக்கிய சாதனைகளை உலக தமிழ் சமூகம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். அதே மாநாட்டின் parallel அமர்வுகளாக சிங்கள மொழி வளர்ப்பு மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

28ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை மூன்று நாட்கள். போக வேண்டும் என்றுதான் ஆசை. மூன்று நாட்கள் விடுமுறை ஆகி விடும்.

ஒன்பதரை மணிக்கு தொழில் நுட்ப ஆய்வுக் கூட்டம். அது சீக்கிரமாக முடிந்து விட்டால் கருத்தரங்கையும் பார்த்துக் கொள்ளலாம். கருத்தரங்கை ஒரு திரையில் ஓட விட்டுக் கொண்டேன். அமைப்பாளர்கள் அரங்கில் நாற்காலிகளை அமைத்திருந்தார்கள். இது போல நேரடி விவாதங்களுக்கு செய்ய வேண்டிய பணிகளின் சிக்கல் மட்டும் குறைந்தபாடில்லை. ஒன்பதரைக்குள் ஒவ்வொருவராக ஆய்வுக்கூட்டத்துக்கு வந்து விட்டார்கள்.

அரை மணி நேரத்தில் கூட்டம் முடிந்து விட கருத்தரங்கு ஒலியை உயர்த்தினேன். கூட்டத் திரை நகர்ந்து பொதுப்படையாக வைத்திருந்த கணினித் திரைகள் ஓட ஆரம்பித்தன. கருத்தரங்கில் அறிமுக உரைகள் மூன்று முடிந்து முதல் உரையாளர் பேச ஆரம்பித்திருந்தார். வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று அடிக்குறிப்பு. இன்றைக்கு மொழி மாற்றத்தின் தரம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக வங்காள மொழியிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் போது பலருக்கு சறுக்கி விடுகிறது. புதிய மொழிமாற்றி இன்றுதான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ் ஒலிபரப்பை மாற்றி வங்காள மொழியில் அவர் பேசுவதை ஒலிக்க விட்டேன். காதில் தேமதுரம் பாய்வது போன்ற உணர்வைத் தரும் மொழி. அவரது குரல் தமிழிலும் நன்கு ஒலிக்கிறது. உரையை மொழி மாற்றம் செய்து, பேசுபவரின் குரலிலேயே விரும்பிய மொழியில் கேட்டுக் கொள்ளும் வசதி பெரிய வரப்பிரசாதம்தான்.

அடுத்த பேச்சாளர் இந்தியில் ஆரம்பித்தார். இந்தியில் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் மாணவி. இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் இயக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதி வெளியிட்டது. அவரது குரல் மட்டுமில்லாமல் மனமும் ஒலிப்பதாகத் தோன்றுவதற்கு இன்னும் ஒரு காரணமாகப் போய் விட்டது.

கருத்துச் சிதறல்கள் அறையை நிறைக்க ஆரம்பித்தன. நேற்று இரவில் எனக்குப் படிக்க அனுப்பியிருந்த பதிப்பிலிருந்து மேலும் பல மாறுதல்கள் செய்து இன்னும் செதுக்கி விட்டிருந்தார். 10 நிமிடங்களுக்கான உரை. ஆரம்பிக்கும் போது நேரடியாகக் கலந்து கொண்டிருந்த 15 பேரைத் தவிர வெளியிலிருந்து 20 பேர் இணைந்திருந்தார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான இணைப்புகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்று முனையம் காட்டியது.

இந்த நேரத்தில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு நல்ல வரவேற்பும் விளம்பரமும் கிடைக்கின்றன. அமெரிக்காவில் பின்மாலை, ஜப்பானில் பிற்பகல், சீனாவில் வேலை நேரம், மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை ஆரம்பிக்கும் பொழுது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான் அதிகாலையாக இருக்கும். நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துக்கள் சூடுபிடிக்க பல இணைப்புகள் சரசரவென்று உள்ளே நுழைந்தன.

சரியாக 10 நிமிடங்களில் உரை முடித்து விட்டது. அதற்குள் 3368 கருத்துரைகளும் 216 விளக்கத் தேவைகளும் வந்து விட்டிருந்தன. விளக்கத் தேவைகளில் பார்ப்பவர்களின் தெரிவில் முதல் 5 இடங்களைப் பிடித்த கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்று அறிவிப்பு வந்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் போது அங்கு பூமியில் இருப்பது போன்றே பல மொழிகள், பல கலாச்சாரங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளது கருத்துரையின் அடிப்படை. அது தொடர்பாக இருந்த ஐயங்களும், பதற்றங்களும் கேள்விகளில் நன்றாகவே தெரிந்தன. அப்படித் திட்டமிடுவதால் குடியேற்றத்துக்கான செலவுகள் 3% மட்டுமே அதிகமாகும் என்ற கணக்கீடுகள். இந்த ஆராய்ச்சியுரையின் முடிவால் குடியிருப்பில் கலந்து கொள்ள முன்வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கப் போகிறது.

அது ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்க நிறுவனத் திரையிலும் உரையாடல் வேண்டுகோள்கள் நிறைந்து விட்டிருந்தன. அடுத்த சனிக்கிழமை ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள முடியுமா? நேரடி விழாக்களில் கலந்து கொள்வதை முடிந்த வரை தவிர்ப்பது என்று முடிவு செய்திருந்தாலும் இது போன்ற வேண்டுகோள்கள் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நேரடியாகக் கலந்து கொள்ள முடியா விட்டாலும், அவர்கள் விழாவுக்கு எனது கருத்துரையை அனுப்புகிறேன் என்று பதில்.

வெளியில் வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. அறையில் வெப்பநிலையை பராமரிக்கும் கருவியின் ஹம் ஓசை இன்னும் ஒரு ஜதி உயர்ந்தது.

முன்பெல்லாம் flexi-timings என்று நிறுவனங்களில் ஒரு முறையை செயல்படுத்துவதைப் பற்றி பெரிதாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்தே வேலைகளைப் பார்த்துக் கொள்வது, தேவைப்படும் போது மட்டும், முக்கியமாக குழு சந்திப்புகள், விவாதங்களுக்கு மட்டும் அலுவலகத்துக்கு வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் வருவது என்று நடைமுறை பேசப்பட்டு வந்தது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் போது என்னென்ன சிக்கல்கள் வரும் அவற்றை எப்படிக் கையாளுவது என்பது ஒரு பெரிய தடையாக இருந்தது.

ஒரு பொத்தானைத் தட்டினால் 'நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அடுத்தவர்கள் நம்மை அணுகலாமா' என்று வெளிப்படுத்திக் கொள்ளலாம். நமது வேலை திரையை, நமது உருவத்தை மற்றவர்கள் பார்க்கலாமா என்று அமைத்துக் கொள்ளலாம். அதைப் போல யார் யார் எங்கெங்கு என்னென்ன வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று மூன்றாவது திரையின் வலது ஓரத்தில் பார்த்துக் கொள்ளலாம். சுஜாதா இணையத்தை அறிமுகம் செய்து எழுதிய புத்தகத்தின் தலைப்பைப் போல உலகம் உண்மையிலேயே வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறது.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டும் போதாது, அந்த எட்டு மணி நேரத்தில் குறைந்தது 6 மணி நேரம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு அவர்கள் அணுகும் நிலையில் இருக்க வேண்டும் என்று நெறி வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. சிலர் சரியாக 6 மணி நேரத்துக்கு மேல் ஒரு நிமிடம் கூட பொது இணையத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. 'என் வாழ்க்கையை எனது சுயத்தை வைத்துக் கொள்வது எனது உரிமை' என்று வாதம்.

இப்படி எழுதும் போது கணினித் திரை மற்றவர்களுக்குக் காட்டுவதில்லை. தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தகவலையும் போட்டு விட்டால், புருவங்கள் முடிச்சிட நான் உட்கார்ந்திருப்பதை, நிறுவன சகாக்களும், உறவினர்களும், நண்பர்களும் - இணைப்பில் உள்ள, அணுகல் கொடுத்துள்ளவர்கள் - பார்த்துக் கொள்ளலாம்.

உரையை விண்வெளி கழகத்தின் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் சுட்டி கொடுத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் 300 மில்லியன்களுக்கும் அதிகமான பேர் படித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற மக்களவையில் நடக்கும் விவாதத்தையும் வாக்கெடுப்பையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சீனாவில் நடக்கும் உள்நாட்டு போராட்டத்தைக் குறித்த விவாதம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா என்ன முடிவெடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கும் அமர்வு. யார் யார் எப்படி வாக்களிப்போகிறார்கள் என்று முடிவு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு தரப்பிலிருந்தும் இரண்டிரண்டு பேர் பேசினார்கள்.

அமெரிக்காவைச் சார்ந்த தாய்வானிலிருந்து செயல்பட்டு வந்த தேசியக் கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு, பெய்ஜிங்கிலிருந்து நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டு வரும் கம்யூனிஸ்டு கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பு, தேசிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பு சட்டம் வகுத்து அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று மூன்றாவது தரப்பு. அரை மணி நேரத்தில் விவாதங்கள் முடிந்தன. முதலில் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு. ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் தனது தேர்வை குறிப்பிட்டதும், அவர்களது தொகுதி, தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இவர் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை என்று பட்டியல் வளர்ந்து கொண்டே போனது.

அடுத்த 1 மணி நேரத்தில் பொது வாக்கெடுப்பு நடக்கும். தமது தொகுதி உறுப்பினர் அளித்த வாக்கை ஏற்றுக் கொள்ளாதவர்கள், தமது வாக்கை மாற்றி அளிக்கலாம். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலிருந்து மாற்று வாக்குகளைக் கழித்து விட்டு உறுப்பினரின் வாக்கின் மதிப்பை எடுத்துக் கொள்வார்கள்.

தினசரி நடக்கும் வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ள யாருக்கும் நேரமும் விருப்பமும் இருப்பதில்லை. உறுப்பினரின் முடிவில் ஒரு சில வாக்குகள் மட்டுமே மாற்றாக பதிவாகும். இது போன்று முக்கியமான நேரங்களில், பங்கெடுப்பு பல ஆயிரங்களாக, சில நேரங்களில் பாதிக்கும் அதிகமாகக் கூடப் போக நேரிடும்.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

//செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் போது அங்கு பூமியில் இருப்பது போன்றே பல மொழிகள், பல கலாச்சாரங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளது கருத்துரையின் அடிப்படை.//

அங்கேயுமா? விடிஞ்சது போங்க(-:

துபாய் ராஜா சொன்னது…

காணும் கனவுகள் நிச்சயம் பலித்திடும்.

அரவிந்தன் சொன்னது…

அன்பின் மா.சி,

ஈழத்தில் நடக்க்விருக்கும் உலகத் தமிழ் மாநாடு பற்றி குறித்து மேலதிக தகவல் உண்டா..சுட்டி தர முடியுமா?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

மா சிவகுமார் சொன்னது…

துளசி அக்கா,
//அங்கேயுமா? விடிஞ்சது போங்க(-://
அப்படி என்ன சலிச்சுக்கிறீங்க! பலவிதமா மக்கள் இருந்தாத்தானே நல்லா இருக்கும்.

நன்றி துபாய் ராஜா,

அரவிந்தன்,
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் ஒன்று. சுட்டி என்று எதுவும் இப்போதைக்கு இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்