வெள்ளி, செப்டம்பர் 18, 2009

சிப்பிக்குள் முத்து - 4

இது ஒரு தொடர், ஆனால் கதை அல்ல

'ஏண்டி, எவ்வளவு திமிரு இருந்தா ஒரு ஆம்பிளைய வீட்டை விட்டுத் துரத்தி விட்டு நீ தனியா வீட்டை எடுத்துக்க பார்ப்பே! இது என்ன உங்க அப்பன் கொடுத்த சொத்தா! அவரு சம்பாதிச்சு கட்டின வீடு. இந்த நிமிஷமே பெட்டியை எடுத்துக்கிட்டு வெளியில் போய் விடு'

அந்த அபாண்டத்தில் உறைந்து போனாள். கனவில் கூட நினைத்திராத ஒன்றை செய்ததாகக் குற்றச்சாட்டு. அவர் முகத்தைப் பார்க்க முயன்றாள். ஏதாவது குற்றவுணர்ச்சியின் குறுகுறுப்பு தெரிகிறதா! முகத்தின் இறுக்கம் போய் விட்டிருந்தது. உள்ளிருக்கும் உணர்வுகள் இவளுக்குப் புரிந்தன.

சே என்று ஆகி விட்டது. உலகமே தனக்கு எதிராக ஆனது போல உணர்ந்தாள். எல்லாம் போனாலும் தன்மானத்தோடு இருந்தோம் என்ற கழிவிரக்கம் பொங்கியது. கூலிக்கு வந்தவர்களுக்கு படியளப்பவரை திருப்திப் படுத்த வேண்டும். வீட்டிலிருந்து இவளது பொருட்கள் வெளியில் எடுத்துக் குவிக்க ஆரம்பித்தார்கள். குன்றிப் போனாள். 'இது என்ன வக்கிரம் இந்த மனிதர்களுக்கு. நான் எங்கு போவேன். இந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பேன்.'

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். 'நான் வேணும்னா போய் பேசட்டுமா'. 'இல்லைங்க வேணாம். உங்க வீட்டில இருந்து கொள்ள மட்டும் இடம் கொடுங்க. கொஞ்ச நாள்ல வேறு இடம் பார்த்துக்கிட்டு போகிறேன்'. மாலதியம்மா தான் தங்கியிருந்த இடத்திற்கு இரண்டு பேரையும் அழைத்துப் போனார்.

இந்தக் கெட்ட கனவிலிருந்து வெளியில் வர எத்தனை யுகங்கள் பிடிக்குமோ கடவுளே! குழந்தை மலங்க மலங்க விழித்தாள். தனியாக எப்படி இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கப் போகிறேனோ! இது வரை தனியாகத்தான் வளர்த்தது வசதியாக மறந்து போயிருந்தது.

வாழ்க்கை அது போக்கில் ஓடத்தானே செய்கிறது. அடுத்த நாளும் விடிந்தது. குழந்தை பள்ளிக்குப் போக வேண்டும். அவளது வாழ்க்கையில் ஒரு சுயம் ஆரம்பித்திருந்தது. மிகச் சிறிய அளவில் தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் அற்புதத்தை அவதானித்துக் கொண்டிருந்தாள்.

தான், தன் கருத்துக்கள், தனது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு இப்போது உதவிக் கரங்கள் நீண்டன. கல்லூரியில் கூடப் படித்த நெருங்கிய தோழி நடந்ததை அறிந்து ஓடோடி வந்தாள். 'என்னடீ இது, நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். இப்படி இன்னொருத்தங்க வீட்டில் இருப்பதுதான் உனக்கு தெரிஞ்சுதா! (நல்ல வேளை மாலதி அதைக் கேட்டிருக்கவில்லை). குழந்தை எப்படி நார்மலா வளரும். நாங்க வாங்கிப் போட்ட பிளாட் நுங்கம்பாக்கத்தில் சும்மாத்தான் கிடக்குது. நீ அதை எடுத்துக்கோ! வாடகை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்"

நன்றி சொல்லக் கூடத் தெரியாமல் அதை ஏற்றுக் கொண்டாள். குழந்தைக்கு அவளுக்கே அவளுக்கு என்று ஒரு அறை கிடைத்து விட்டது. கீழே இறங்கிப் போனால் மாலையில் விளையாட ஒரு பெரிய குழந்தைகள் கூட்டம். திரும்ப மேலே கொண்டு வருவது பெரும் பாடாக இருக்கும். சிரிப்பும், கலகலப்பும், சிணுங்கல்களும், கண்ணீரும், பேச்சு அருவியும் என்று குழந்தை வாழ்க்கை பொலிந்து கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல தனது தொழில் முறை தொடர்புகளை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டாள். குடியிருப்போர் நலச் சங்கத்தில் பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். இந்தக் குடியிருப்பு மேம்பட்டால், எனக்கும், என் குழந்தைக்கும் (பிற்காலத்தில் இங்கு வந்து விடப் போகும் என் கணவருக்கும் என்று ரகசியமாகச் சேர்த்துக் கொண்டாள்) நல்லதுதானே என்று ஏதோ பிடித்து ஆட்டுவதைப் போல உழைத்துக் கொண்டிருந்தாள்.

நிறுவனம் ஒன்றுக்குப் போய் வேலை செய்யவில்லையே தவிர நாளைக்கு 24 மணி நேரத்துக்கும் திட்டமிட்டு ஒழுங்கு அமைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்தாள்.
'இவ்வளவு புத்திசாலித்தனமான குழந்தையை மட்டும் கான்வென்டு பள்ளிக்கு அனுப்பி இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைச்ச எவ்வளவு நல்லா இருக்கும். குழந்தைக்கு சுய இரக்கம் வந்து விடும். நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறே!' இந்தக் கேள்வி மட்டும் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்கும். பலருக்கு அதை நம்பவே முடியாமல் இருந்தது.

'ஏம்மா, நான் இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சா இன்னும் நல்லா இருக்குமோ!' என்று குழந்தையே கேட்கும் நேரங்கள் மட்டும் வயிற்றில் கத்தியைச் சொருகும் உணர்வைக் கொடுக்கும். ஒருவேளை நாம் செய்வது தவறோ! மனதைத் திடப்படுத்திக் கொண்டு நூறாவது முறையாக தனது நம்பிக்கையை விளக்குவாள்.

ஏழாவது மாடியில் வசிக்கும் அம்மா ஒரு பெரிய நூல் தொகுப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு நூலகம் போல இருக்கும். யாழினியை புத்தகங்களுக்கு அறிமுகப்படுத்துவதை தனது கடமையாக எடுத்துக் கொண்டார். அவளுடன் சேர்ந்து அம்மாவும் நிறைய படிக்கலானாள்.

தன் மீதும் தனது வாழ்க்கை மீதும் ஓரளவு தன்னம்பிக்கை வந்த பிறகு தனது பழைய கல்லூரித் தோழர்களை தொடர்பு கொள்வதில் இருந்த தயக்கத்தை விட்டொழித்து அவர்களை வீட்டுக்கு வரவேற்க ஆரம்பித்தாள். அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் யாழினியோடு போய் வந்தாள். நெருக்கமான நட்பு என்று சொல்லிக் கொள்ளும் வட்டம் வளர்ந்து கொண்டே போனது.

'பெரியவங்க எல்லோரிடமும் மதிப்பு காட்டணும். அவங்க சொல்லுவதை கவனமா கேட்டு நம்மை நாமே வளர்த்துக்கொள்ளப் பார்க்கணும்'

இதற்கிடையில் மாலதியம்மாவுக்கு பணியிட மாற்றம் கிடைத்து அவர் தன் ஊருக்குத் திரும்பிப் போய் விட்டார். 'மறக்காம வாரா வாரம் தொலைபேசணும், விடாம தொடர்ந்து கடிதம் போடணும்' என்று பல உறுதி மொழிகள் வாங்கிக் கொண்டு புறப்பட்டு போனார்.

கருத்துகள் இல்லை: