வெள்ளி, நவம்பர் 17, 2006

வலை மகுடம் - 1

தமிழ் வலைப்பதிவுகளின் வெற்றியைப் பற்றி எழுதும் போது, வெளிப்படையான உடற்பொருட்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
  • பிளாக்கர் சேவையை இலவசமாக வழங்கும் நிறுவனம்.
  • தமிழில் ஒருங்குறி எழுத்துப் பலகைகள், எழுத்துருக்கள் உருவாக்கி தமிழில் எழுத வழி செய்த தன்னார்வலர்கள்,
  • வலைப்பதிவுகளைத் திரட்டி பரவலாக்க உதவிய திரட்டி சேவைகள்

இவற்றின் பங்களிப்பு பலமுறை சுட்டிக் காட்டப்பட்டு விட்டன.

எல்லாம் இருந்தாலும் யாராவது எழுதினால்தானே படிப்பவர்கள் வருவார்கள். படிப்பவர்கள் பின்னூட்டம் இட்டால்தானே எழுதுபவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும்.

இந்த இரண்டிலும் ஓசையில்லாமல் பெரும்பங்கு ஆற்றி வருபவர் எல்லோருக்கும் அறிமுகமான, இரண்டு ஆண்டுகளாக ஒளி வீசி வரும், இந்த வாரம் கூடுதலாக வெளிச்சம் போடப்பட்டுள்ள துளசிகோபால் அவர்கள். தமிழ் வலைப்பூவுலகின் உயிர்ப் பொருளான பதிவுகள், பின்னூட்டங்கள் உருவாக்கத்தில் முழுமையாக பணியாற்றி வருகிறார் அவர்.

வலைப்பதிவு என்பது தன்னுடைய வீடு போல என்பது அவர் கருத்து என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

  1. வீட்டை அழகுபடுத்தி தேவையில்லாதவற்றை நீக்கி வைத்திருப்பது
  2. வீட்டுக்கு வந்து நம்மிடம் பேசுபவர்களுக்கு (பின்னூட்டம் இடுபவர்கள்) மதிப்பளிக்கும் விதமாக அதற்கு உடனேயே பதிலளிப்பது.
  3. நம் வீட்டுக்கு வந்து போனவர்களின் வீட்டுக்குப் போய் அவர்கள் பதிவைப் பற்றிக் கருத்தைப் பின்னூட்டமாக கொடுப்பது.

இந்த மூன்றையும் தவறாமல் கடைப்பிடிக்கும் ஒருவர் துளசி கோபால். இந்த உறவுப் பின்னலுக்கு அடிப்படைகளை எல்லோருமே பின்பற்ற ஆரம்பித்து விட்டால், ஓரிரு மாதங்களில் ஒரு நெருக்கமான சமூகம் உருவாகி விடும்.

இதையெல்லாம் தாண்டி, புதிதாக வந்த யாராவது உருப்படியாக எழுத ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதம் படித்து பின்னூட்டம் இடுவது, இந்த உறவுச் சங்கிலிக்குப் புதிய கண்ணிகளைச் சேர்க்கிறது. இதிலும் இந்த வார நட்சத்திரத்துக்கு நிகர் அவரேதான்.

எவ்ரிடே மனிதர்கள் என்று அவர் எழுதும் பதிவுகள் மூலம் அவரது மனித நேயத்தையும் சக மனிதர்கள் மீதான பரிவையும் தெரிந்து கொள்கிறோம். இதுவரை நானூறுக்கும் அதிகமான பதிவுகள் எழுதி (இந்த வாரம் ஐநூறைத் தொட்டு விடுகிறாரோ?) மூத்த, சுறுசுறுப்பான பதிவராக செயல்படுகிறார்.

எங்கெல்லாம் ஆக்கபூர்வமான பதிவுகள் வெளியாகின்றனவோ, அங்கெல்லாம் அவருடைய பின்னூட்டங்களைப் பார்க்கலாம். அதில் என்னுடைய பதிவும் ஒன்று என்பதால் நானும் நல்லபடியாக எழுதுகிறேன் என்று பெருமைப் பட்டுக் கொள்வேன்.

தான் பின்பற்றும் வழிமுறைகளை, அடிப்படை தத்துவங்களை புதியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக அவர் எழுத ஆரம்பிக்கலாம். தமிழ் வலைப்பதிவை வளமூட்டும் அவரது பணிக்கு நன்றி தெரிவித்து அவருக்கு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இது போன்ற செயற்கரிய செயல்படும் பதிவர்களின் சிறு பட்டியலை நிரந்தரமாக முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்யலாம். அதை ஆரம்பித்து வைக்க துளசிதளம் முதல் பதிவாக இடம் பெற கேட்டுக் கொள்கிறேன்.

19 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒவ்வொரு வலைபதிவும் ஒவ்வொரு வீடு அன்பதும், அதன் விளக்கங்களும் பிரமாதம். ரொம்ப நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்.

துளசி கோபால் சொன்னது…

என்னங்க சிவா,

இப்படி ஒரு (இன்ப) அதிர்ச்சியைக் கொடுத்துட்டீங்க?

ஒரு அபிமானத்துலே 'அளவில்லாம' புகழ்ந்துட்டீங்களோ?

ஆனாலும் புடிச்சிருக்கு. மகிழ்ச்சி கலந்த நன்றி சிவா.

மணியன் சொன்னது…

நீங்கள் கூறுவது ஒவ்வொன்றும் உண்மையான வார்த்தைகள். தமிழ் வலையுலகிற்கு துளசி ஆற்றியிருக்கும் பங்கு ஒப்பற்றது. வாழ்க அவர்தம் பணி !!

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

அவர் ஆற்றும் பணிகள் அதிகம்;
ஆற்றவிருப்பவையும் அதிகம்....
வளர்க அவர் தொண்டு!

வடுவூர் குமார் சொன்னது…

துளசி தளம் சரியான தேர்வு தான்.
இரண்டாவதாக,நான் உங்கள் பதிவை முன்மொழிகிறேன்.அந்த தகுதி உங்கள் படைப்புகளில் பார்க்கிறேன்.
தொடருங்கள்..

பெயரில்லா சொன்னது…

நண்ப சிவகுமாரனுக்கு,
உங்கள் இந்த இடுகை மூலம்
வலைப் பதிவு உலகத்திற்கான பங்களிப்பாளர்களில் ஒருவரான துளசி கோபால் அவர்களைப் பற்றி அறிந்துக் கொண்டேன். நன்றிகள்!!!

வலைப் பதிவுக்கு புதியவன்.
சமீப காலமாக வலைப் பதிவு
உலகத்தைப் பற்றி என் அக்கறை அதிகத்த நிலையில் சில பங்களிப்புக்கள்
செய்து இருக்கிறேன். அவை பற்றி உங்கள் கருத்துக்கள் அறியும் ஆவலில் நான்.
கீழே என் வலைப் பதிவுகளின் விலாசங்கள்.
தொடர்வோம் கருத்து பரிமாறலை!!!

http://oruleep.blogspot.com/
http://memonkavi.blogspot.com/
http://babujibhai.blogspot.com/
http://mallikaimallikai.blogspot.com/
http://eeview.blogspot.com/

Boston Bala சொன்னது…

சிவகுமார்,
சில சந்தேகங்கள்:

---(பின்னூட்டம் இடுபவர்கள்) மதிப்பளிக்கும் விதமாக அதற்கு உடனேயே பதிலளிப்பது.---

நான் இதை செய்வதில்லை. உங்களாலும் பல சமயம் இது முடிவதில்லை. என்னைப் போன்று 'மட்டுறுத்தலை' உபயோகிப்பவர்கள், அதை அப்ரூவ் செய்வதன் மூலமே, தங்கள் 'ஊம்' கொட்டலை நடத்துகிறார்கள்.

அதற்கு மேலும் 'நன்றி', 'அருமையான பதிவு' போன்ற 'உள்ளேன் அய்யா' மறுமொழிகளுக்கு, மேற்கொண்டு பதில் நவில்தல் அவசியமா?

ஒவ்வொருவரின் கருத்தையும், மறுமொழியையும் நான் பெரிதும் மதிக்கிறேன் & வரவேற்கிறேன். அதை வெளிப்படையாக ஒவ்வொரு முறையும் உறுதி செய்தலின் தேவை என்ன?

நீங்கள் தமிழ்மண 'அண்மையில் பின்னூட்டமிட்ட பதிவுகளிலும்' வருவதில்லை என்பதால், உங்களிடம் இந்தக் கேள்வியை இயல்பாக கேட்க முடிகிறது :-)


---வந்து போனவர்களின் வீட்டுக்குப் போய் அவர்கள் பதிவை---

இந்த மாதிரி 'எதிர் மரியாதை'க்கும் என்ன தேவை?

எங்க வீட்டில் மொய் எழுதும்போது, 'அவங்க வீட்டில் என்ன செஞ்சாங்க' என்று கணக்கு பார்க்கும்போது எரிச்சலாக வரும்! மற்றவர்கள் என்ன கொடுத்தார்கள் என்பதை பொருட்படுத்தாமல், தங்களுக்கு உகந்ததை/முடிந்ததை கொடுப்பதுதானே சாலச் சிறந்தது.

நான் இந்த பதிலை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன் (அல்லது) நான் உங்களின் பதிவை என்னுடைய வலைப்பதிவில் சுட்டியிருக்கிறேன் என்பதற்காக நீங்களும் பதில் மரியாதை செய்வதை எவரும் (நிச்சயமாக நான்) விரும்ப மாட்டார்களே!?

தங்களின் ஊக்குவித்தல் தொடரை பெரிதும் விரும்புகிறேன். ஆனால், துளசி என்பதால் உரிமையோடு (அதாவது தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்னும் உரிமை கலந்த நம்பிக்கையோடு) என் ஐயங்களை எழுப்பியுள்ளேன்.

தங்களின் நேரத்திற்கும், பொறுமையாக படிப்பதற்கும், இந்த வலைத்தொடருக்கும் நன்றியும் வணக்கங்களும் பாராட்டுகளும்.

தொடர்க.
அன்புடன்,
-பாலாஜி

மா சிவகுமார் சொன்னது…

my friend,

நன்றி.

இதற்கு வித்திட்டது துளசி சொன்னதாக அருள் சொன்னது. அதிலிருந்து அப்படியே இழுத்துக் கொண்டு விட்டேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//ஒரு அபிமானத்துலே 'அளவில்லாம' புகழ்ந்துட்டீங்களோ? //

கண்டிப்பாக இல்லை துளசி அக்கா. உள்ளதை மட்டும்தான் சொன்னேன். இவற்றில் இருக்கும் உண்மைகள் எல்லோருக்குமே தெரியும் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிவஞானம்ஜி ஐயா. ஒருவரையொருவர் குறைகளைச் சுட்டிக் காட்டுவதில் இருக்கும் ஊக்கத்தை நல்லவற்றைப் போற்றுவதிலும் காட்டும் போக்கு வலைப்பதிவுகளில் வந்தால் நன்றாக இருக்கும்.


அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி மணியன்,

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//தொடருங்கள்..//

நன்றி குமார். இது போல பேர் பெற்ற பதிவுகள் என்று ஒரு தளம் துவங்கி வைத்துக் கொள்ளலாம். பூங்கா வார இதழ் வருவது ஒரு நல்ல முயற்சி. வாரா வாரம் பதிவுகளை உரசிப்பார்த்து தேர்ந்தெடுக்கும் வழக்கம் பல ஒழுக்கங்களை வளர்க்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

உங்கள் வருகைக்கு நன்றி மேமன்கவி. ஆரம்பமே அமர்க்களமாக பல தளங்களில் துவங்கியிருக்கிறீர்கள். இனி வரும் நாட்களில் உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஊர் கூடி வடம் பிடித்தால் தேர் கம்பீரமாக வலம் வர ஆரம்பித்து விடும். அதற்கு உறவு வளர்த்தல் தொடர்பான உங்கள் முயற்சிகள் பெரிதும் உதவி செய்யும்.

உங்கள் படைப்புகளைக் குறித்து வைத்துக் கொண்டு ஓய்வாகப் படித்துக் கருத்து தெரிவிக்க முயல்கிறேன். வேலைப்பளு காரணமாக இப்போதெல்லாம் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. கொஞ்சம் தாமதம் ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் பல தளங்களில் நாம் சந்திக்கத்தானே போகிறோம் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//நான் இதை செய்வதில்லை. உங்களாலும் பல சமயம் இது முடிவதில்லை.//
//அதை வெளிப்படையாக ஒவ்வொரு முறையும் உறுதி செய்தலின் தேவை என்ன?//

தாமதம் ஏற்பட்டாலும் பின்னூட்டங்களுக்கு பதில் கொடுத்து விடுவது என்று உறுதி பூண்டுள்ளேன் பாலா. ஒன்று, பின்னூட்டம் இட்டவர்களுக்கு ஒரு நிறைவு கிடைக்கிறது. இரண்டாவதாக, அவர்கள் தெரிவித்த கருத்தை ஒட்டி நம்முடைய பதிவை நீட்டித்து தொடர்புள்ள கருத்துக்களைச் சேர்க்க முயற்சி செய்யலாம். அது பதிவுக்கு கூடுதல் வளம் சேர்க்கும் அல்லவா?

நானும் ஆரம்பத்தில் ஓரிரு பதிவுகளுக்கு பின்னூட்டங்களை அப்படியே விட்டு விட முயன்றேன். ஆனால், இது போல 'வந்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பது மதிப்புக் குறைவாகப் படுகிறது' என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது :-)

நாம் பொதுவாக வரும் பின்னூட்டம் அனைத்தையும் மதிக்கிறோம் என்றாலும் நம்முடைய பதிவை படித்து அதற்கு வெளியிடப்பட்ட கருத்தை நாம் படித்து பொருத்தமான மறுகருத்து கொடுப்பது சரிதானே!

//எங்க வீட்டில் மொய் எழுதும்போது, 'அவங்க வீட்டில் என்ன செஞ்சாங்க' என்று கணக்கு பார்க்கும்போது எரிச்சலாக வரும்!//

நானும் இதே வகைதான் பாலா. ஒரு காலத்தில் நண்பர்களை/உறவினர்களை வழியனுப்ப கூட போக மாட்டேன். 'ஏதாவது ஒரு கட்டத்தில் விடை கொடுக்கத்தானே போகிறோம். வீட்டிலேயெ அதைச் செய்து விடுவோம்' என்று ஒரு தத்துவம்.

பின்னூட்டம் இட்டவரின் பதிவைப் படித்து நம்முடைய கருத்துக்களை தெரிவிப்பது என்று வைத்துக் கொண்டால் நம்முடைய வட்டத்தை (அறிவு சார்ந்தும், உறவு சார்ந்தும்) பெரிது படுத்துவது நடக்கிறதுதானே!

மற்றபடி, நம் இருவருக்கும் ஒரே மாதிரியான புரிதல்கள் என்று எனது அனுமானம் :-).

ஒரு குட்டி ரகசியம், வலைமகுடத்தின் இரண்டாவது பதிவராக உங்களைப் பற்றி இன்று காலையில்தான் எழுத ஆரம்பித்துள்ளேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மலைநாடான் சொன்னது…

சிவகுமார்!

உங்கள் கருத்துக்கள் அத்தனையும் மெய்யானவை. துளசிம்மாவிற்குப் பொருத்தமான மகுடமே.

மெளலி (மதுரையம்பதி) சொன்னது…

துளசிதளம் சரியான தேர்வு.....நன்றி சிவா.....சரியானதை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டியுள்ளிர்கள்....

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள சிவா,

துளசி அக்கா அவர்களைப் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையான வார்த்தைகள். ஒரே நாளில் என்னை ஒரு தமிழ் ப்ளாக்கராக மாற்றிய ஒரு தாயுள்ளம் கொண்ட மனுஷி அவர். அவர் கடைசியாக போட்ட பதிவில் என்னைப் பற்றி எழுதியதை ஒரு பெரிய அங்கீகாரமாகவே எண்ணுகிறேன்.

//தமிழ் மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இது போன்ற செயற்கரிய செயல்படும் பதிவர்களின் சிறு பட்டியலை நிரந்தரமாக முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்யலாம். அதை ஆரம்பித்து வைக்க துளசிதளம் முதல் பதிவாக இடம் பெற கேட்டுக் கொள்கிறேன்.//

உங்களுடைய இந்த தன்னலமற்ற கருத்தை நான் வழி மொழிகிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி மலைநாடன், மௌல்ஸ்.

அன்புடன்,


மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அகத்தீ,

இப்படி பலருக்கு ஓசையில்லாமல் ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் துளசி அக்காவுக்கு மீண்டும் நன்றிகள்.

அன்புடன்,


மா சிவகுமார்