திங்கள், மே 21, 2007

கோவை சந்திப்பு

கோவை பதிவர் பட்டறைக்கான நாள். தங்கியிருந்த படுக்கை வசதி விடுதியில் கழிவறை, குளியலறை வசதிகள் நேர்த்தியாக தூய்மையாக வைத்திருந்தார்கள். காலை எழுத உட்கார்ந்தேன். முகுந்தராஜ் தொலைபேசியில் 'காந்திபுரத்தில் இறங்கி இடம் தேடுவதாக' கேட்டார்.

பெட்ரோல் நிலையத்தை அடுத்த சந்தில் பெயர்ப்பலகை வைத்திருப்பதை அடையாளம் சொன்னேன். சொல்லி விட்டு 'வெளியில் வந்து பார்ப்போம்' என்று ஒரு டி சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தால் வரவேற்பு மேசையருகில் ஒருவர் பார்த்துப் புன்னகைத்தார்.

முகுந்த் இப்படி இருக்க மாட்டாரே என்று தடுமாறிப் பார்த்தால் அவரே கையை நீட்டி, 'உண்மைத் தமிழன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த நேரம் முகுந்தும் வந்து சேர்ந்தார். என்னைப் போலவே உடலில் சதை கிதை பூசி விடாமல் அப்படியே இருந்தார் முகுந்த்.

மாடியில் இருக்கும் ஒரு அறைக்கு அனுப்பி விட்டார்கள். குளித்து, உடை மாற்றித் தயாராகி கீழே வந்தோம்.

கீழே என்னை விடவும் ஒல்லியாக ஒருவர் இருக்க முடியும் என்று காண்பிக்க சென்ஷி நின்றிருந்தார். அவர் ஏற்கனவே குளித்து சாப்பிட்டு முடித்திருந்தார். தில்லியிலிருந்து 2 நாட்கள் பயணித்து வந்திருக்கிறார். ஏதோ மதிய வேளையில் பொழுது போகலாம் என்று பதிவர் சந்திப்புக்குப் போவதில் ஆரம்பித்து இப்படி நாட்கள் பல செலவழித்து எல்லோரும் வருவது வியப்பாக இருந்தது.

'சும்மா ஒரு நேரம் போக்கு சார், இதால எதுவும் பெருசா சாதிச்சிட முடியாது' என்றுதான் எல்லோரும் உள்ளே நுழைகிறோம். அவர்களுக்குள் ஒரு சிலராவது தீவிரமாகி விடுகிறார்கள்.

பேருந்து நிலையத்தின் எதிரிலேயே இருந்து அன்னபூர்ணா கௌரிசங்கர் விடுதியில் சாப்பிடப் போனோம். முகுந்துக்கு பெங்களூரில் நல்ல பொங்கல் கிடைப்பதில்லையாம். இரண்டு பொங்கல், காபி சாப்பிட்டார். நான் இட்லி, எலுமிச்சை சேவை, தோசை என்று நாலு நாள் சாப்பிடாதது போல வெளுத்து வாங்கினேன். தோசைதான் கொஞ்சம் தாமதமாக வந்தது. உண்மைத் தமிழனும் இட்லி, தோசை, காபி.

வெளியே வந்து நான்கு பேராகப் போக ஆட்டோ கேட்டால் 50 ரூபாய் என்று சொன்னார்கள். சென்ஷி கோவைக்குப் பழக்கமானவராம். அவரது வழிகாட்டலில் பேருந்தைப் பிடிக்கப் போனோம். சாலையைக் கடந்து எதிர்த்திசையில் பேருந்து நிறுத்தத்தில் 7ம் தடப் பேருந்தில் உட்கார இருக்கையோடு ஏறிக் கொண்டோம்.

சரியாக அடையாளங்கள் சொல்லி தபால் நிலையம் அருகில் இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் கேட்டிருந்தோம். கடைசி நிமிடத்தில் அவர் கூடுதல் உதவி செய்ய விரும்பி, கட்டிடத்தின் பெயரைக் கேட்டார். அதற்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று சொல்லி இறக்கி விட்டார்.

நடந்து தபால் நிலையம் அருகில் வந்து கேட்டுக் கேட்டு கௌதம் ஆர்கேட் வந்து சேர்ந்தோம். இரண்டாவது மாடிக்கு மூன்று சுற்றுகள் படி ஏறி தாட் இக்னைட் அமைப்பின் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம். மின்தடையாம். குளிரூட்டும் கருவி, மின்விசிறி, விளக்குகள் எல்லாம் அணைந்து பாலபாரதியும், வினையூக்கியும் அறையையும் கருவிகளையும் ஒழுங்கு படுத்தும் நண்பர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆறு பேர் ஆகி விட்டோம். சிறப்பு விருந்தினர் வர வேண்டும் என்று 'கோவை வந்தாலும் இந்த புழுங்கும் சூழலைக் கூட்டிக் கொண்டா வர வேண்டும்' என்று உட்கார்ந்திருந்தோம். இடையில், வந்த ஓரிருவர் சொல்லாமல் கிளம்பக் கூடச் செய்து விட்டார்கள்.

பாமரன், ஆறுமுகம் ஐயா வந்து சேர்ந்தார்கள். எல்லோரது சுய அறிமுகத்தைத் தொடர்ந்து பத்தரை மணிக்கு ஆறுமுகம் ஐயா தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். சூடான வெளிச்சமான படப்பிடிப்பு விளக்கு, சின்ன அறையில் பத்துப் பதினைந்து பேர் இருந்தது மின்னிணைப்பு கிடைத்து குளிரூட்டி ஓட ஆரம்பித்தும் புழுக்கம் குறையவில்லை.

அடுத்த அமர்வில் பின்நவீனத்துவம் குறித்து கட்டுரை வாசிக்க பேராசிரியர் ரமணி.

ஆறுமுகம் ஐயா, இளையராஜாவை முறையாக இசை பயிலாத இரண்டாம் தரக் கலைஞர் என்று கருத்து சொல்ல செந்தழல் ரவியிடமிருந்து ஒரு உறுமல் கேட்டது. அதன் பெருக்கமாக அறையெங்கும் ஒவ்வொருவர் பேச ஆரம்பித்து கட்டுடைக் கோட்பாடுகளை வெளுத்து வாங்கினார்கள்.

அந்த இழையிலிருந்து பிடித்து தனது பின் நவீனத்துவக் கட்டுரை வாசிப்பை ஆரம்பித்தார் பேராசிரியர் ரமணி. தொழிற்புரட்சி, 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவி வந்து நவீனத்துவ சிந்தனைகளான ஒழுக்கம், மையம், சமூக நெறிகள் என்று பலவற்றை உடைத்து தனி மனித கலைகள், மையங்கள் உடையும் அரசியல், பரவலாக்கப்படும் அறிவு என்று பின்நவீனத்துவம் பற்றி நீளமாகப் பேசினார். இடையிடையே வாக்குவாதமும் வெடித்தது.

சுகுணாதிவகர், ராஜானஜ் கூட்டணி அமைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். 'ரிலையன்ஸ் பிரஷ், கோக் போன்ற நிறுவனங்கள் நமது தேர்வுகளையே அழித்து விடுகின்றன. அவர்களையே சார்ந்து வாழும் நிலையை ஏற்படுத்தி விடுகின்றன, என்ன செய்வது' என்று மையங்கள் அழிகின்றன என்பதற்கு மாற்றுக் கருத்து சொன்னார்கள்.

பேராசிரியர் ரமணி பொறுமையாக விவாதத்தில் தான் ஈடுபடாமல் மற்றவர்கள் அடித்துக் கொள்வதை அவதானித்துக் கொண்டார். தனது கட்டுரை சிந்தனைகளைத் தூண்டி விடுவதுதான் நோக்கம் என்று சொன்னார்.

இந்தியன் எக்ஸ்பிரசின் நிருபர் விபரங்களை வாங்கிக் கொண்டார்.

இந்துவிலிருந்து வந்திருந்த நிருபர், எல்லோரிடமும் கலந்துரையாட வேண்டும் என்று கூட்டினார். வலைப்பதிவுகளைக் குறித்துக் கேள்விகள் கேட்டார். பாலபாரதி எப்படி தருமி, என்ற கல்லூரிப் பேராசிரியரிடம் தான் ஆரம்பித்த விவாதத்தில் பெங்களூரிலிருந்து மோகன்தாஸ் கலந்து கொண்டார் என்று ஆரம்பிக்க அப்படியே தமிழ்மணம், எழுதும் கருவிகள், இலவசமாகக் கிடைக்கும் எழுத்துருக்கள் என்று நீண்டது. முகுந்து இகலப்பை குறித்து தவறாக கட்டுரை ஒரு முறை வெளி வந்ததைக் குறிப்பிட்டார்.

லிவிங்ஸ்மைல் வித்யா வலைப்பதிவுகளில் தனக்குக் கிடைத்த கருத்துத் தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அரவாணிகளைக் குறித்த பார்வை மாற்றம் உருவாக அவரது பதிவு எப்படி ஒரு தூண்டுதலாக இருந்தது என்று சொன்னார்.

உணவு இடைவேளை முடிந்து அடுத்த அமர்வில் முகுந்த் eகலப்பை, தமிழ் விசை என்ற பயர்பாக்சு நீட்சி, அதியன் என்ற எழுத்துரு மாற்றி, வலைப்பதிவுகளின் புதிய இடுகைகளை எப்படி உடனுக்குடன் தெரிந்து கொள்வது என்ற முறைகள் விளக்கினார். தமிழ்பதிவுகள் என்று தான் உருவாக்கிய திரட்டி பற்றியும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கமாகக் குறிப்பிட்டார். எங்கிருந்து தகவிறக்குவது, எப்படி நிறுவுவது, எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கினார்.

பயர்பாக்சு இருந்தால் மட்டுமே தமிழ்விசை, அதியன் வேலைக்கு ஆகும். இன்டர்நெட் எக்சுபுளோரர் பாவிப்பவர்கள் மனம் திரும்பி மேம்பட்ட பயர்பாக்சுக்கு மாறும்படிக் கேட்டுக் கொண்டார். யாகூ மெசஞ்சரில் எகலப்பையை பாவிக்க முடியாத நிலைக்கு மாற்றாக மீபோ என்ற வலை உலாவி சார்ந்த பயன்பாட்டை செயல்விளக்கம் காண்பித்தார்.

பலரும் தமது கேள்விகளை ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள உதவியாக இருந்தது.

அடுத்ததாக நான் ஜோயல் ஆன் சாஃப்டுவேர் என்று ஆங்கில வலைப்பதிவைச் சுட்டி அதை எழுதும் ஜோயல் ஸ்பால்ஸ்கி எப்படி எழுதுவதன் மூலம் தனது தொழிலையும் வருமானத்தையும் பெருக்கிக் கொள்ள முடிந்தது என்று விளக்கினேன். ஜிமெயிலில் புதிய லேபல்கள உருவாக்கி உள்ளே வரும் அஞ்சல்களை எப்படி குறிப்பிட்ட லேபல் பொருந்தும்படி செய்யலாம் என்றும் காட்டினேன்.

உண்மைத்தமிழனின் 22 பக்கங்களுக்குக் குறையாத இடுகைகள் பயர்பாக்சில் வட்ட வட்டமாகத் தெரிவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, அவர் பதிவிடும் போது ஜஸ்டிஃபை என்ற தேர்வை கிளிக்காமல் இருந்தால் போதும் என்று தெரிந்தது.

போலி உண்மைத் தமிழனைப் போற்றி எல்லோரும் சொன்னார்கள். போலிகளிலேயே நகைச்சுவை உணர்வோடு, ரசிகர் மன்றம் அமைத்து கலாய்க்கும் அந்தப் போலியைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கலாம் என்று தைரியம் சொன்னோம். எண்ணைப் பெயரோடு இணைப்பது, எலிக்குட்டி சோதனை, புகைப்படம் இணைத்தல் என்று தனது அடையாளங்களைத் திட்டம் செய்து கொண்டாலும் அதே முறைகளில் போலியும் இணைத்து விடுவது சிரமமாக இருக்கிறது அவருக்கு.

மணிமொழியான் பெண் கவிஞர்களில் தாமரையைப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். வேட்டையாடு விளையாடு படத்தின் பாடல்கள், வசீகரா பாடல் என்று விளக்கினார் சென்ஷி. பெண்கள் உறவுகளைப் பார்ப்பது உடல் தோற்றத்தை மட்டும் அடிப்படையைக் கொள்ளாமல் உள்ள உணர்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்கிறார்கள் என்று மணிமொழியான் சொன்னார்.

ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல, கடலில் கலக்காமல் பல கிளைகளாகப் பிரிந்து ஓய்ந்து விடும் ஆறு போலக் கூட்டம் வடிந்து முடிந்தது. கூட்டம் முடிந்தது குறித்த ஒரு இடுகையோடு பாலபாரதி கணினியையும் மூடி வைத்தார். மூன்று நாட்களாக கூட்டத்திற்கான ஏற்பாடுகளுக்கு உழைத்துக் களைத்திருந்த பாலபாரதிக்கு சரிவர நன்றி கூட சொல்ல முடியாமல் கிளம்பினோம்.

சென்னை திரும்ப முன்பதிவு எதுவும் இல்லாமலிருக்க உண்மைத் தமிழன் உங்களை பேருந்து ஏற்றி விட்டுத்தான் போவேன் என்று சொல்ல இரண்டு பேரும் காந்திபுரம் திரும்பி வந்தோம். ஏழரை மணி இணைய உரையாடலுக்கு இணைய மையம் தேடி அலைந்தோம். பத்து பதினைந்து நிமிடங்களுக்குப்ப பிறகு பூச்சி மொய்க்கும் கணினியுடனான மையத்தில் உட்கார்ந்தோம். ஒன்பது மணிக்கருகில் அது முடிந்து கீழே கேபிஎன்னில் கேட்டால் கடைசி வரிசையில் ஒரே ஒரு இருக்கை 29ம் எண் இருக்கிறத என்று கொடுத்தார்கள்.

சேலம் போய், இடம் பிடித்து சென்னை போய்ச் சேருவதற்குள் தாவு கழன்று விடும், இதுதான் உத்தமம் என்று நன்றியோடு சீட்டை பதிவு செய்து விட்டு சாப்பிட இடம் தேடினோம். எல்லா விடுதிகளிலும் கூட்டம், காத்திருப்போர் வரிசை நீளங்கள். கோயம்புத்தூரில் ஞாயிறு மாலைகளில் வீட்டுச் சமையலை நிறுத்தியே விட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு விடுதிகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

உண்மைத்தமிழன் பசியில் அசந்து போயிருந்தார்.. கடைசியில் ஒரு வழியாக ஆரியாஸ் என்று விடுதியில் இடம் பிடித்துக் கொண்டோம். ஒன்பதரை மணிக்கு கேபிஎன் அலுவலகத்துக்குத் திரும்பி வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

30 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன்...

இங்கன இங்கன அமுக்கவும்

நான் விட்டுவிட்டவை என்று என் மனதில் நினைத்தவைகளை கூட்டிச்சேர்த்து மீண்டும் நினைவுபடுத்துவதாக இருந்தது இந்த பதிவு...!!!

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

நன்றி சிவகுமார்

thiagu1973 சொன்னது…

நீங்க ஜோயல் பற்றி பேசுறப்பதான் நானும் வந்தேன் .

எப்படி விசயங்களை ஞாபகம் வைத்து கோர்வையாக எழுதுரீங்களோ தல :)

வாழ்த்துக்கள்

Boston Bala சொன்னது…

நன்றி :)

வினையூக்கி சொன்னது…

:) :)
சார் நானும் பட்டறையைப் பற்றி பதிவு போட்டிருக்கின்றேன்.

உங்கள் பதிவை படித்த பிறகு ஜோயல் ஆன் சாஃப்ட்வேர் நினைவு வந்து மீண்டும் அதைப்பற்றி என்னுடையப் பதிவில் இணைத்துள்ளேன்.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

தல காலையிலேயே எழுந்து (அதுவும் சனிக்கிழமை) பல் ட்ஹுவக்காமலேயே உங்களோடு பேசினேனே அத மறந்துட்டீங்க போல

:)

வல்லிசிம்ஹன் சொன்னது…

நன்றி,சிவக்குமார். வழக்கம்போல்
நேராக வந்து பார்த்த போல இருந்தது.

Pandian R சொன்னது…

பட்டரைகளுக்கு வரமுடியாத எம்மைப் போன்றவர்களுக்கென, என்ன நடந்தது என்பதனை நேர்த்தியாக பதிந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Kasi Arumugam சொன்னது…

சிவா,

உங்களையெல்லாம் நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தும் என்னால் வரமுடியவில்லை. எங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பை (விளம்ம்பரம் :-) பார்க்க: http://www.youtube.com/watch?v=0I2MW0lOFwE) முதன்முதலாக பொதுவில் அறிமுகப்படுத்த கோவையில் கொடீசியா அரங்கில் நடந்த ஷாப்பார்ஸ் காலரி பொருட்காட்சியில் செய்முறை விளக்கத்துடன் காட்சிக்கு வைத்திருந்தோம். ஞாயிறன்று சரியான கூட்டம்! பிதுங்க முடியவில்லை. எனவே வரமுடியவில்லை. உங்கள் பதிவு மூலம் மற்ற நண்பர்களிடமும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறப்பாக நடத்திய பாலபாரதிக்கும், பின்னிருந்து இயக்கிய செல்லாவுக்கும், சிரமம் பாராமல் வெளியே இருந்து பயணம் செய்து பங்கேற்ற நண்பர்களுக்கும் பாராட்டும் வாழ்த்தும்.

அன்புடன்,
-காசி

TBR. JOSPEH சொன்னது…

வழக்கம் போலவே ஒன்றையும் விடாமல் கோர்வையாக நேர்முக வர்ணனை போல... நன்றாக இருந்தது...

பெயரில்லா சொன்னது…

வணக்கம் சிவா,
ஆரம்பத்திலிருந்து முடிவு வரை திரைக்கதை போல் கோர்வையாக விவரித்துவிட்டீர். நன்றிகள்.

நானும் வலைப்பதிவர் சந்திப்பு பற்றி என்னுடைய கருத்தை இங்கு http://mugunth.tamilblogs.com/?itemid=62 பதிந்துள்ளேன்.

உண்மைத்தமிழன் சொன்னது…

ம்.. சந்தோஷம்..

பெயரில்லா சொன்னது…

வரவர சந்திப்புகளும் சந்திப்பு குறித்த பதிவுகளும் சரியான கேலிக்கூத்தாகிவிட்டன. பொங்கல் சாப்பிட்டோம், பகோடா சாப்பிட்டோம். ஒம்பது மணிக்கு ஒண்ணுக்கிருந்தோம், பத்து மணிக்கு பாயில் படுத்தோம் என்று எழுதி புளகாங்கிதம் அடைகிறார்கள்.

நான் உங்களை சொல்லவில்லை.

பேசின விவரங்களும், அதன்கருத்து சாதக பாதங்களும், வழங்கப்பட்ட கட்டுரைகளும் வருவதில்லை. விவாதங்களில் ஒரு முடிவோ இல்லை எல்லா நிலைப்பாடுகளின் இருப்போ விளக்கப்படுவதில்லை. இம்மாதிரி பொருட்களில் கலந்துகொள்ளும் யாருக்கும் ஒரு ஈர்ப்பும் இருப்பதில்லை.

மொட்டையை பற்றியும், ஓரத்தில் பார்த்த குட்டியை பற்றியும் மும்முரமாக எழுதுகிறார்கள்.

கடைசியில் ரொம்ப சாதித்தது போல அல்லக்கைகள் அளந்து விடுகிறார்கள்.

சரியான கூத்து. நடக்கட்டும்.


இதற்காக மாய்ந்து மாய்ந்து ஒரு மாதமாக ஏகப்பட்ட பில்டப் வேற.

நந்தா சொன்னது…

பட்டறைக்கு வர முடிய வில்லையே என்று ரொம்ப வருத்தப் பட வைத்து விட்டீர்கள்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ரவி,

//நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன்...//

நீங்க இன்னும் விவரமா எழுதியிருக்கீங்க :-)

வணக்கம் சிவஞானம்ஜி ஐயா,

//நன்றி சிவகுமார்//
உங்களை சந்தித்தும் நாளாகி விட்டது.

வாங்க தியாகு,

//ஞாபகம் வைத்து கோர்வையாக எழுதுரீங்களோ தல :)//

நினைவு இழப்பைக் குறித்து அடுத்த பதிவும் ரெடி :-)

நன்றி பாலா.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//அதைப்பற்றி என்னுடையப் பதிவில் இணைத்துள்ளேன்.//

நன்றி வினையூக்கி.

சிறில்,

//பல் ட்ஹுவக்காமலேயே உங்களோடு பேசினேனே அத மறந்துட்டீங்க போல//

உண்மைதான். அதற்கு பரிகாரமாக இன்னொரு இடுகை. பல் தேய்க்காமல் கலந்து கொண்டாலும் சிக்கல்களைத் தோற்றுவிக்காத தொலைதூரத் தொடர்பு நுட்பம் வாழ்க ! :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க வல்லி அம்மா, பாரதி

இப்படி சாப்பிட்டதையும் பேருந்தில் போனதையும் எழுதினால்தான் ஒரு முழுமை வருகிறது இல்லை, கீழே பின்னூட்டமிட்ட அனானிக்குத் தனியாகச் சொல்லி விடுகிறேன். :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் காசி,

//மற்ற நண்பர்களிடமும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.//

நீங்களும் வருவீர்கள் என்பது அவ்வளவு தூரம் பயணித்ததற்கு ஒரு முக்கிய தூண்டுகோல்.

வராமல் ஏமாற்றியதற்கு... உங்கள் புதிய கண்டுபிடிப்பு படம் ஈடு செய்து விட்டது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ஜோசப் சார்,

இதைப் போல பெரிய அளவில் சென்னையில் ஒரு முழு நாள் பட்டறை நடத்த நண்பர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

முகுந்த்,

நீண்ட காலத்துக்குப் பிறகு உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//வரவர சந்திப்புகளும் சந்திப்பு குறித்த பதிவுகளும் சரியான கேலிக்கூத்தாகிவிட்டன. பொங்கல் சாப்பிட்டோம், பகோடா சாப்பிட்டோம். ஒம்பது மணிக்கு ஒண்ணுக்கிருந்தோம், பத்து மணிக்கு பாயில் படுத்தோம் என்று எழுதி புளகாங்கிதம் அடைகிறார்கள்.//

அதில் உங்களுக்கு என்ன வருத்தம் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

//நான் உங்களை சொல்லவில்லை.//

என்னையும் சொல்லலாம், தப்பேயில்லை.

//பேசின விவரங்களும், அதன்கருத்து சாதக பாதங்களும், வழங்கப்பட்ட கட்டுரைகளும் வருவதில்லை. விவாதங்களில் ஒரு முடிவோ இல்லை எல்லா நிலைப்பாடுகளின் இருப்போ விளக்கப்படுவதில்லை. இம்மாதிரி பொருட்களில் கலந்துகொள்ளும் யாருக்கும் ஒரு ஈர்ப்பும் இருப்பதில்லை.//

ஈர்ப்பு இருப்பதாகத்தான் படுகிறது. உங்களுக்கு கருத்து தொடர்பான விபரங்கள் வேண்டுமானால் நீங்களும் நேரில் கலந்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.

//மொட்டையை பற்றியும், ஓரத்தில் பார்த்த குட்டியை பற்றியும் மும்முரமாக எழுதுகிறார்கள்.//

அதுவும் வேண்டியதுதானே, அதில் உங்களுக்கு என்ன சிரமம். தாண்டிக் கொண்டு போய் விடுங்கள்.

//கடைசியில் ரொம்ப சாதித்தது போல அல்லக்கைகள் அளந்து விடுகிறார்கள். சரியான கூத்து. நடக்கட்டும்.//

அதை நீங்களோ நானோ சொல்ல முடியாது அல்லவா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. எல்லோரையும் ஒரேயடியாக தூக்கி எறிந்து பேசுவது சரியில்லை.

//இதற்காக மாய்ந்து மாய்ந்து ஒரு மாதமாக ஏகப்பட்ட பில்டப் வேற.//

எல்லோருக்கும் தெரிந்தால்தான் கலந்து கொள்ள முடியும். உண்மையில் இந்தப் பட்டறைக்கு முன் விளம்பரம் குறைவுதான். அடுத்த தடவைகளில் இன்னும் பெரிதாக இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

உண்மைத்தமிழன்,

உங்கள் 22 பக்க இடுகைகளை எதிர்பார்க்கிறேன் :-)

நந்தா.

நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

Jazeela சொன்னது…

உங்க பதிவை படிக்கும் போது பட்டறையில் கலந்துக் கொண்டது போல் ஒரு உணர்வு. நன்றி. ஆண்களாக இருந்தால் எங்கிருந்தாலும் எதிலும் கலந்துக் கொள்ள முடிகிறது. கோயம்புத்தூரிலே இருந்தாலும் கலந்து கொண்டிருக்க முடியுமா என்றாள் பெரியக் கேள்விக்குறிதான். கொடுத்து வைத்த புண்ணியவான்கள்.

சுந்தரவடிவேல் சொன்னது…

வழமை போல நுணுக்கமான விபரங்களுடனான பதிவுக்கு நன்றி. எக்ஸ்பிரஸ், இந்துவில் செய்திகள் வந்தனவா? விபரம் இருந்தால் தரவும். நன்றி.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

மாசி,

பதிலுக்கு நன்றி.


//// அதில் உங்களுக்கு என்ன வருத்தம் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

பதில் சொல்ல முடியாது என்றால் உனக்கென்ன தேவை, சம்பந்தம் என்று கேட்டுவிட வேண்டியது.

பொதுவில் பட்டறை சம்பந்தமான பதிவுகளை வைக்கும்போது அது கலந்துகொண்டவர்களின் நாட்குறிப்பாக மட்டுமே உதவும் என்பது தங்கள் எண்ணமானால் மேலே சொல்வதற்கில்லை - ஆனால், உங்களை நினைத்து பரிதாபமாய் இருக்கிறது. பதிவர் கருத்துக்கள் குறித்த சிறந்த கருத்தாக்கங்களை பிறப்பிக்கும் ஒரு ஊற்றாக இந்த சந்திப்புகள் அமையவில்லையே என்றுகூட உங்களுக்கு தோன்றாமல், உனக்கென்ன நாங்கள் மொட்டை, குட்டி, பொங்கல் என்று எழுதிக்கொள்கிறோம் நீ யார் கேட்க என்று அசட்டுத்தனமாக எழுதுவது கேலிக்கூத்து.

நான் கோவைக்கு வர இயலவில்லை. வருவதாகவும் சொன்னவனில்லை. ஆனால், நடேசன் பார்க்கில் உங்களை சந்தித்தேன். அதற்கு பிறகு பதிவுகளிலேயே இந்த அபத்தக்களஞ்சியங்களை கண்டேன். கொஞ்சம் யோசித்தால் உண்மை நிலை புரியும். ஆனால், யோசிப்பது யார்?

//// ஈர்ப்பு இருப்பதாகத்தான் படுகிறது. உங்களுக்கு கருத்து தொடர்பான விபரங்கள் வேண்டுமானால் நீங்களும் நேரில் கலந்து கொள்வதுதான் சரியாக இருக்கும். ////

அப்புறம், சந்திப்பு பற்றிய பதிவுகளுக்கு வேலேயே இல்லையே? ஒரு இருபது பேரோடு உங்கள் பொங்கலும், பேச்சும் தீர்ந்து விடுமோ?

//மொட்டையை பற்றியும், ஓரத்தில் பார்த்த குட்டியை பற்றியும் மும்முரமாக எழுதுகிறார்கள்.//

அதுவும் வேண்டியதுதானே, அதில் உங்களுக்கு என்ன சிரமம். தாண்டிக் கொண்டு போய் விடுங்கள். ////

அதுவும் என்பது சரிதான். அதுவே என்பதுதானே நடக்கிறது. அதுவே ஒரு 80 விழுக்காடு என்று சொல்லலாமே? மனத்தளவிலேயே உணரமுடியும். மொட்டைக்கு மொட்டையும், குட்டிக்கு குட்டியும் தான் தேவையாக இருக்கிறது இந்த சந்திப்புகளில் என்று நீங்கள் ஒத்துக்கொண்டது நலம்.


//கடைசியில் ரொம்ப சாதித்தது போல அல்லக்கைகள் அளந்து விடுகிறார்கள். சரியான கூத்து. நடக்கட்டும்.//

அதை நீங்களோ நானோ சொல்ல முடியாது அல்லவா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. எல்லோரையும் ஒரேயடியாக தூக்கி எறிந்து பேசுவது சரியில்லை.////

இது என் பார்வை. அதை சொல்ல முடியாது என்று சொல்ல முடியாது. உங்களுக்கு பார்வை இல்லை என்றால் பரவாயில்லை.

//இதற்காக மாய்ந்து மாய்ந்து ஒரு மாதமாக ஏகப்பட்ட பில்டப் வேற.//

எல்லோருக்கும் தெரிந்தால்தான் கலந்து கொள்ள முடியும். உண்மையில் இந்தப் பட்டறைக்கு முன் விளம்பரம் குறைவுதான். அடுத்த தடவைகளில் இன்னும் பெரிதாக இருக்கும்.////

விளம்பரம் வேறு. ஆனால், சந்திப்பின் இலக்கு என்று முன் சொன்னது வேறு. இதில் நாம் சாதிப்பது என்ன என்று தெளிவு பெற்றிருக்கிறோமா? இல்லை ஆயிரக்கணக்கில் செலவழித்து வீண்டிக்கிறோமா? புரிந்துகொள்ளுங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//பதில் சொல்ல முடியாது என்றால் உனக்கென்ன தேவை, சம்பந்தம் என்று கேட்டுவிட வேண்டியது.//
//கொஞ்சம் யோசித்தால் உண்மை நிலை புரியும். ஆனால், யோசிப்பது யார்?//
//அப்புறம், சந்திப்பு பற்றிய பதிவுகளுக்கு வேலேயே இல்லையே? ஒரு இருபது பேரோடு உங்கள் பொங்கலும், பேச்சும் தீர்ந்து விடுமோ?//
//இதில் நாம் சாதிப்பது என்ன என்று தெளிவு பெற்றிருக்கிறோமா? இல்லை ஆயிரக்கணக்கில் செலவழித்து வீண்டிக்கிறோமா? புரிந்துகொள்ளுங்கள்.//

உங்கள் கருத்துக்களையும் கரிசனத்தையும் புரிந்து கொள்கிறேன். உங்கள் ஆதங்கம் நிச்சயம் சரியானதுதான், இனிமேலாவது எல்லோரும் இன்னும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்போம்.

அன்புடன்,

மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

விளக்கமான பதிவுக்கு நன்றி சிவா.

என்னைப்போல வர முடியாதவர்களுக்கு
'எல்லா'விவரமும் தேவையாத்தான் இருக்கு.

Unknown சொன்னது…

சிவகுமார் உங்களை நேரில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

மா சிவகுமார் சொன்னது…

//என்னைப்போல வர முடியாதவர்களுக்கு
'எல்லா'விவரமும் தேவையாத்தான் இருக்கு.//

அது சரி :-)

எல்லாம் தேவைதான். எவ்வளவு விகிதம் என்பதில்தான் அனானிக்கு கோபம்.

// சிவகுமார் உங்களை நேரில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.//

நன்றி தாமோதர் சந்துரு

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ஜெஸிலா,

ஆண்களைப் போல பெண்களும் இயல்பாக இது போன்று புழங்கும் நிலை வரும் என்று முயற்சி செய்வோம்.

சுந்தர வடிவேல்,

கோவை பதிப்புகளில் வரும் என்று நினைக்கிறேன். கோவை நண்பர்கள் யாராவது போடலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்