வியாழன், ஏப்ரல் 22, 2010

லீனா மணிமேகலையின் கவிதைகள்

பொதுவாக கவிதைகள் என்றால் தேடிப் போய்ப் படிப்பதில்லை. வைரமுத்துவின் கவிதைத் தொகுப்புகள் சில (இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்), மு மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் என்ற கவிதைத் தொகுப்பு, ஆனந்த விகடனில் வரும் கவிதைகள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படிப்பதுதான்.

படிக்கும் போது புரியாது அல்லது பிடிக்காது என்று இல்லை. கவிதை ஒன்றை படித்து அதன் பொருளையும் அதன் பின்னால் ஒலிக்கும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு கவிதை உண்டு.

லீனா மணிமேகலையின் கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட இரண்டு கவிதைகளில் ஆரம்பித்தது.
  1. முதல் கவிதை, போர் நடக்கும் இடங்களில் போர்களை ஆரம்பித்து வைக்காத அதில் ஈடுபடாத பெண்கள் ஒரு தாக்குதல் பொருளாக கருதப்பட்டு பாலியல் துன்புறுத்தப்படுவதை சொல்லும் கவிதை. சொற்சிக்கனத்துடன், சில வரிகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பெண்கள் அனுபவிக்கும் துன்பத்தை அழகாக சொல்லியிருக்கிறார்.

  2. இரண்டாவது கவிதைதான் கம்யூனிச இயக்கத் தோழர்கள் சிலரின் கோபத்தைத் தூண்டியிருக்கிறது. மார்க்சிசம், கம்யூனிசம் பேசும் ஒருவர் தன்னோடு உடலுறவு கொண்டதை விவரிக்கும் பெண்ணின் மனநிலை. பெரிய பெரிய தத்துவங்களை அவர் பேசுவதற்கு ஊடே உடலுறவின் நிகழ்வுகளை கலந்து அந்தத் தத்துவங்களை இழித்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
கவிதையின் பொருள், ஆண்கள் ஏதேதோ தத்துவங்கள் சொன்னாலும், தன்னைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு சக உயிர்தான் என்று ஒரு பெண் சொல்வதாக வைத்துக் கொள்ளலாம்.
  • யோனி, முலை, மயிர் என்று சொற்களை பயன்படுத்தியதால் அது ஆபாசக் கவிதை என்று சொல்வது ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.
  • கவிஞரின் முக ஒப்பனையைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியது
  • அவர் தனிப்பட்ட முறையில் இத்தகைய அனுபவங்களை சந்தித்தாரா
    என்று விளக்கம் கேட்டது
போன்றவை கீழ்த்தரமான தாக்குதல்கள். என்னதான் புரட்சி பேசினாலும், சராசரி தமிழ்நாட்டு ஆண்களின் மனநிலையை தாண்டி விடவில்லை என்றுதான் காட்டியிருக்கிறது.

"லீனா மணிமேகலையின் கவிதைகளைப் படிக்கும் போது என் உடலின் மீது இருந்த அசூயை நீங்கியது" என்று ஒரு பெண் சொன்னதாக படித்தேன்.
  • ஒப்பீட்டளவில் பெண்ணின் உறுப்புகளை தாழ்ந்ததாக,
  • அவற்றைக் குறிப்பிடுவதே ஆபாசம் என்பதாக,
  • ஆண் ஆதிக்கம் செலுத்தும் இயல்பினன், பெண் அடங்கிப் போகும் இயல்பினள் என்பது உடலளவிலேயே வரையறுக்கப்பட்டு விட்டதாக
இருக்கும் பொதுப்புத்தி ஒரு பெண்ணின் சுயமரியாதையை பாதிக்கிறது.

லீனா மணிமேகலையின் கவிதைகள் இந்தக் கட்டமைப்புகளை உடைக்கிறது. 'ஏதோ கிழித்து விடுவதாக நீங்கள் எழுதிப் படித்துக் கொள்ளும் தத்துவங்களுக்கு உள்ளேயும் அடிப்படை உந்துதல்கள்தான் இருக்கின்றன'.

'உடலளவில் ஆதிக்கம் செலுத்துவதாக ஏற்படுத்திக் கொண்டு எங்களை தாழ்த்தி வைப்பதை அனுமதிக்க மாட்டோம்'
என்று ஒரு பெண் உடலுறவில் தனது மனம் செயல்படுவதை வெளிப்படுத்தும் உணர்வுகள்தான் இந்தக் கவிதை.

எப்படியானாலும் லீனா மணிமேகலை என்ற ஒரு கவிஞருக்குப் பரவலாக வெளிச்சம் கிடைத்து அவர் சொல்லும் கருத்துக்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்த களேபரங்களின் ஒரு நன்மை என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

பின்குறிப்பு:
பல தளங்களில் இதைப் பற்றி நீண்ட விவாதங்கள் நடந்து விட்டன. இவ்வளவு நடக்கும் போது நாம் ஒதுங்கி வேடிக்கை பார்க்காமல் மனதில் பட்டதை பதிய வேண்டும் என்றுதான் இந்த இடுகை.

இதைப் பற்றி இதற்கு மேல் புதிதாக விவாதிக்க எதுவும் இல்லை என்று தோன்றுவதால் பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: