செவ்வாய், ஏப்ரல் 20, 2010

நாட்டுக்குத் தலைவனுக்கு குடும்பப் பாசம் கண்ணை மறைத்தால் என்ன நடக்கும்?

திருதராஷ்டிரன் என்ற கிழட்டு மனிதன் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். உடலளவில் அவனுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தாலும், அதை விட மனதையும், அறிவையும் தடுமாற்றும் அளவுக்கு பிள்ளை பாசம் அவன் கண்களை மறைத்திருந்தது.

நாட்டுக்கு அரசன், குடும்பத்துக்குத் தலைவன் என்ற நெறிகளை எல்லாம் மறந்து, தனது புதல்வர்கள் ஆடும் ஆட்டத்துக்கு எல்லாம் துணை போய்க் கொண்டிருந்தான்.
  • தனது தம்பியின் மகன்களை, தகப்பனாக பாலித்து பாதுகாக்க வேண்டிய கடமையை மறந்து அவர்களை அரக்கு மாளிகையில் எரித்துக் கொன்று விடவும்,
  • அவர்களுக்குச் சேர வேண்டிய நாட்டை கொடுக்காமல் தவிர்க்கவும்,
  • சான்றோர்கள் அறிவுரையால் அப்படி நாடு கொடுத்த பிறகு அதை சூதினால் கவர்ந்து விடவும்,
  • பாஞ்சாலியை அரச சபையில் அவமானப்படுத்தவும்,
  • தம்பி மக்கள் காட்டுக்கு அனுப்பப்படவும்,
  • திரும்பி வந்த பிறகும் பெரும்போருக்கும் வழி வகுக்கவும்
தனது புதல்வர்களின் அடாவடிகளை அனுமதித்து, தனது அரச கடமைகளை புறக்கணித்து, நியாயத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டான்.

அவனுக்குக் கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?

பீமசேனன் என்ற முரடன், தம்பி மகன்களில் இரண்டாமவன், திருதராஷ்டினனின் புதல்வர்கள் நூறு பேரையும் போரில் அடித்தே கொன்றான்.

ஒவ்வொரு நாள் போரின் விவரிப்பிலும், பீமனால் கொல்லப்பட்ட கௌரவர்களின் விபரங்கள் திருதராஷ்டிரனின் காதில் விழுந்து, மனம் நொந்து, புலம்பி, துடித்தான். குருஷேத்திர போரின் முடிவில் நூறு புதல்வர்களும் இறந்து போய், தள்ளாத வயதில் பாண்டவர்களை சார்ந்து அவர்களின் ஆட்சியில் வாழ நேர்ந்த சோகம்தான் திருதராஷ்டிரனுக்குக் கிடைத்த தண்டனை.

அரசியல் பிழைத்தவனுக்கு தண்டனை கிடைக்காமல் போகாது.

6 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

ஒப்பீடு நன்றாக இருக்கிறது.

மா சிவகுமார் சொன்னது…

பெரிய பதவிகளில் இருப்பவர்கள், அதை ஒரு பொறுப்பாக கடமையாக எடுத்துக் கொள்ளாமல், வேறு தனிப்பட்ட ஆசாபாசங்களால் செலுத்தப்படும் போது எவ்வளவு துயரங்கள், அழிவுகள்.

அப்படி ஒரு சூழலில் வாழ்கிறோம் நாம்.

துளசி கோபால் சொன்னது…

திருதராஷ்ட்டிரனின் மகள் துஸ்ஸலாவுக்கு என்ன ஆச்சு?

உண்மைத்தமிழன் சொன்னது…

20-ம் நூற்றாண்டின் நவீன திருதராஷ்டிரன் நம்ம தாத்தாதான்..! வருங்காலத்தில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்..!

மா.சி.அண்ணே அடிச்சு ஆடுறீங்க.. நன்றி..!

துளசி கோபால் சொன்னது…

//வருங்காலத்தில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்//

ஆமாம். கல்வெட்டுகளில்:-))))))

மா சிவகுமார் சொன்னது…

//திருதராஷ்ட்டிரனின் மகள் துஸ்ஸலாவுக்கு என்ன ஆச்சு?//

ஆமா என்ன ஆச்சு?

துஸ்ஸலாவுக்கும் இந்த கால மகளைப் போல ஏதாவது நடந்ததா என்ன?

உண்மைத் தமிழன்,

இதை எழுதியது போன ஏப்ரலில். இப்போது அது நடக்க ஆரம்பித்திருக்கிறது. (அப்பவே சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம் :-)