அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான நிலமும் கட்டிடமும் ஏப்பம் விடப்பட்டுள்ளன.
தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனமும் நியூ எரா டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து எல்நெட் (ELNET) டெக்னாலஜிஸ் லிமிடெட் என்று நிறுவனத்தை உருவாக்கின. எல்காட் 26% பங்குகளும், நியூ எரா 24% பங்குகளும் வைத்திருந்தன, மீதி 50% பங்குகள் பொது மக்களுக்கு விற்கப்பட்டன.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் நோக்கத்துடன் மேலே சொன்ன எல்நெட், ஈடிஎல் (ETL Infrastructure) என்ற நிறுவனத்தை தொடங்கியது. எல்நெட் நிறுவனத்தை அடகு வைத்து வாங்கிய 81 கோடி ரூபாய் கடன் ஈடிஎல்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்து கொடுக்கப்பட்ட 26 ஏக்கர் நிலம் ஈடிஎல்லிடம் இருக்கிறது. 18 லட்சம் சதுர அடி தகவல் தொழில் நுட்ப கட்டிடம் ஒன்றை இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஈடிஎல் கட்டி வருகிறது.
இந்த நிறுவனம் திடீரென்று மர்மமான முறையில் எல்நெட் (அதன் மூலம் எல்காட்) கட்டுப்பாட்டிலிருந்து மறைந்து போனது.
இது எப்படி நடந்தது என்று கண்டு பிடிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், எல்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை பதவி நீக்கம் செய்ய ஒரு சிறப்பு தீர்மானம் எல்காட் நிர்வாக இயக்குனரால் முன்மொழியப் பட்டது.
நிறுவனத்தின் ஆண்டு பங்குதாரர் கூட்டம் ஜூலை 30, 2008ல் நடைபெற இருந்தது. இந்த சூழலில், 2008ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவி மாற்றம் செய்யப்பட்டார்.
அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலமும் கட்டிடமும் யாருக்கு போய்ச் சேர்ந்தன? அரசு நிறுவனம் ஏற்பாடு செய்த கடன் என்ன ஆனது?
==========================
சமீபத்தில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசால் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், ஊழல்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக