திங்கள், ஜூலை 26, 2010

நியாயமான விலை

வீட்டில் சமையல் வாயு தீர்ந்து விட்டது.

தொலைபேசி சொன்னால் மாலையில் ஆறு மணிக்கு மேல் ஒரு இளைஞர் இரு சக்கர வண்டியில் கொண்டு வந்து சேர்த்தார். 800 ரூபாயைக் கொடுத்தால்

"ஒரு அஞ்சு ரூபாய் இருந்தா கொடுங்க சார்!'

"அஞ்சு ரூபாய் எதுக்கு....."

"மொத்தம் 755 ரூபாய், 50 ரூபாய் திருப்பித் தருகிறேன்"

"ஏம்பா, 725 ரூபாய் விலை, 25 ரூபாய் சேர்த்து, 750 என்று எடுத்துக்க வேண்டியதுதானே!"*

"இல்ல சார், என்னோட சேவைக் கட்டணம், 30 ரூபாய், 755 ஆகுது"

நியாயம்தானே, அவரது கட்டணத்தை எப்படிக் குறைத்துக் கொள்ள முடியும்.

"சார் அடுப்புக்கு வாயு போகும் குழாய் பழசாகி வெடித்துப் போயிருக்கு, மாத்திடுங்க, 200 ரூபாய்க்கு புதுசு வருகிறது"

"சரிப்பா, நாளைக்கு இந்த பக்கம் வந்தா ஒண்ணு கொண்டு வந்து மாட்டி விடு"

"நீங்க இருக்கீங்களான்னு ஃபோன் பண்ணிட்டு வரேன்."

அடுத்த நாள் தொலைபேசி விட்டு வந்து புது குழாயைப் பொருத்தி விட்டார். 200 ரூபாய் கொடுத்தால்,

"இன்னும் 15 ரூபாய் கொடுங்க சார், என்னோட கட்டணம்"

கணக்கு கறாராக இருக்கிறது.

வெளியில் போகும் போது,
"உங்க கிட்ட ஏதாவது பழைய நோக்கியா சார்ஜர் இருக்குமா சார், தேவைப்படுகிறது"

இரண்டு நாட்கள் முன்புதான் கெட்டுப் போன தொலைபேசிக்கு மாற்றாக புதிது வாங்கியிருக்க பழசின் மின்னேற்றி இருந்தது. சரியாக எப்படி தெரிந்தது?

"அதுக்கு என்ன விலை தருவே? கடையில் என்ன விலைக்கு விற்கிறதோ அதில் பாதி கொடுத்து விடு"

ஒரு நிமிடம் திகைப்பு.
"சரிதானே சார், நான் என் கட்டணத்தைக் கறாராக வாங்குவது போல பொருளையும் விலை கொடுத்துதானே வாங்கணும். டூப்ளிகேட் சார்ஜர் 60 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 25 ரூபாய் தருகிறேன்"

25 ரூபாய் வாங்கிக் கொண்டு கொடுத்து விட்டேன்.

*caltex என்ற பெயரில் கிடைக்கும் தனியார் சேவையைத்தான் பயன்படுத்துகிறேன். 12 கிலோ வாயு உருளையின் விலை ரூபாய் 725/-
குறைந்த வருமானத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்காக அரசு கொடுக்கும் சலுகை விலை சமையல் வாயு சேவையை பயன்படுத்துவதில்லை - அங்கு 14 கிலோ உருளையின் விலை ரூபாய் 355/-

7 கருத்துகள்:

ஆமாச்சு சொன்னது…

ஞாயிற்றுக் கிழமை வீட்டில் அரசாங்கம் மானியத்தோடு சிலிண்டர் தருகிறது. நான் மொத்த தொகையையும் கொடுத்து பெற்றுக் கொள்கிறேன் என்று கேட்டால் கொடுக்க வசதியுண்டா என்று பேசிக்கொண்டிருந்தேன். அதிசயமாக நீங்களும் பதிவிட்டிருக்கீங்க... ஆனா எங்க வீட்டில் இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஆமாச்சு,

இதைச் செய்வது மிகவும் சிரமம்தான். பெரும்பாலானோர் புரிந்து கொள்ளவே முடியாமல் இருப்பார்கள், சம்மதிக்க வைப்பது எளிதல்ல.

1. 'விவசாயிகள் (உரம், இலவச மின்சாரம்), ஏழைகள் (அரிசி, மண்ணெண்ணெய்) போன்ற பிரிவினருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளினால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது' என்று அலுத்துக் கொண்டால்

and

2. மாதத்துக்கு ஒரு முறை வெளியில் போய் (சாப்பிட, திரைப்படம் பார்க்க, மகிழ்வுச் செலவாக) 500 ரூபாய் செலவழிக்கும் பழக்கம் இருந்தால்,

இந்த சமையல் வாயு மானியத்தை மறுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

ஆமாச்சு சொன்னது…

//1. 'விவசாயிகள் (உரம், இலவச மின்சாரம்), ஏழைகள் (அரிசி, மண்ணெண்ணெய்) போன்ற பிரிவினருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளினால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது' என்று அலுத்துக் கொண்டால்
2. மாதத்துக்கு ஒரு முறை வெளியில் போய் (சாப்பிட, திரைப்படம் பார்க்க, மகிழ்வுச் செலவாக) 500 ரூபாய் செலவழிக்கும் பழக்கம் இருந்தால் //

எவ்வளவு தூரம் அரசாங்கத்தை சாராது இருப்போமோ அவ்வளவு நல்லது என்று கருத்து மேலோங்கியதால் எனக்கு தோன்றியது. எல்லாம் இலவசம் படுத்தும் பாடு.

நீங்க சொல்வது மாதிரி புரிய வைக்கறது கஷ்டம் தான்.

அரசாங்கம் மானியம் கொடுக்கக் கூடிய பொருள்களுக்கு உச்ச விலையையும் சொல்லி குறைஞ்ச விலையையும் சொல்லி, வசதிப்பட்டவங்க குறைஞ்ச விலைக்கு மேல உச்ச விலை வரை விருப்பப்பட்டதை கொடுத்து வாங்க வழி செய்யப்படணும் அவ்வப்போது எங்கையாச்சும் சொல்லிக்கிட்டிருப்பேன்.

எலக்டிரானிக்கா இதை சுலபமா மேனேஜ் செய்யலாம். :-)

--

ஆமாச்சு

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

மா.சி,

//மாதத்துக்கு ஒரு முறை வெளியில் போய் (சாப்பிட, திரைப்படம் பார்க்க, மகிழ்வுச் செலவாக) 500 ரூபாய் செலவழிக்கும் பழக்கம் இருந்தால்,//

நியாயம் தான். நீங்கள் அதிக விலை தனியார் எரிவாயு பயன்படுத்துவதை பாராட்டுகிறேன்.

ஆனால்

//குறைந்த வருமானத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்காக அரசு கொடுக்கும் சலுகை விலை சமையல் வாயு சேவையை பயன்படுத்துவதில்லை //

இதில் மாறுபடுகிறேன். "ஏழை மக்களுக்காக" என்று அரசு எந்த விதியிலும் சொல்லவில்லை. பொது மக்கள் அனைவருக்கும் தான் மாணிய விலை எரிவாயு.

உலக சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் (Retail price of Motor spirit - not Crude Oil) விலை சுமார் ரூ.29. இந்திய சந்தையில் சுமார் ரூ.57

ஒரு மாதத்துக்கு ஒரு சிறு உயர் நடுத்தர குடும்பம் சுமார் 14 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகிறது.

அதாவது, உலக சந்தை விலையை விட இந்திய அரசுக்கு (14x28 =) ரூ.392 இவ்வகையில் ஒவ்வொரு மாதமும் அதிகமாக கிடைக்கிறது.

இன்றைய சிறு குடும்ப அமைப்புகளில் இந்திய அரசு அளிக்கும் மாணிய விலை எரிவாயு ஒரு முறை வாங்கினால் அது செலவாகி முடிய குறைந்த பட்சம் 2 மாதங்கள் (சில சமயம் 3 மாதங்கள் கூட) வரை ஆகிறது.

கூட்டி கழிச்சு பாத்தா இந்திய/ஆந்திர (ஆந்திராவில் எரிவாயுவுக்கு கூடுதலாக ரூ.50 மாணியம் உண்டு) தரும் மாணியத்தை விட அதே பெட்ரோலிய பொருள் வகையிலேயே ஒரு உயர் நடுத்தர குடும்பம் மறைமுக வரியாக திரும்ப அளிப்பது அதிகம்.

எனவே நல்லொழுக்க (ethics) அடிப்படையிலும் அதிக விலை கொடுக்கும் திறமுள்ள உயர் நடுத்தர மக்கள் இந்த மாணியத்தை பயன்படுத்துவதில் தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

தெலுங்கில் சுருக்கமாக சொன்னால், "தானிக்கி தீனிக்கி சரி போயிந்தி"

:-)))

மா சிவகுமார் சொன்னது…

//இதில் மாறுபடுகிறேன். "ஏழை மக்களுக்காக" என்று அரசு எந்த விதியிலும் சொல்லவில்லை. பொது மக்கள் அனைவருக்கும் தான் மாணிய விலை எரிவாயு.//

வணக்கம் கோபி,

நான் சொன்னது மற்றவர்களுக்கு அரசு மான்யங்களை எதிர்த்துக் கொண்டு தனக்கு மட்டும் சலுகைகளை பெற்றுக் கொள்பவர்களைப் பற்றி மட்டும்!

தேவை இல்லாதவர்களுக்கு அரசு மானியங்கள் தரக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனால் முடிந்த இடங்களில் மானியம் பெறுவதை தவிர்க்கிறேன்.

அப்படி நினைக்காவதவர்கள் தாராளமாக அனுபவிக்கலாம் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

//தேவை இல்லாதவர்களுக்கு அரசு மானியங்கள் தரக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.//

அரசு தரக்கூடாது என்பது சரி. ஆனால் அவ்வாறு தரும் போது, சமையல் எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றில் "என்னால் வாங்க இயலும் (I can afford)" என்பதை விட "அதன் விலை சரியா?(Was it worth the money?)" என்பதை பார்க்க வேண்டும் என்கிறேன் நான்.

ஒரே வகை தக்காளி விலை கிலோ ரூ.40 என்று ஒரு காய்கறி சந்தையியிலும் கிலோ ரூ.15 என்று ஒரு உழவர் சந்தையிலும் விற்றால் என்னால் வாங்க முடியும் என்பதால் வர்த்தக சந்தையில் வாங்க மாட்டேன்.

வருமான வரி போன்ற நேரடி வரிகளை விட பெட்ரோல், சேவை வரி, மதிப்பு கூட்டு வரி போன்ற மறைமுக வரிகளால் மக்களுக்கு ஏற்படும் வரிச்சுமை மிக அதிகம். ஆனால் அது குறித்து பெரும்பாலானோர் அறிவதில்லை.

மா சிவகுமார் சொன்னது…

உண்மை கோபி,

இன்றைய பொருளாதார உலகில் நிறைய சிக்கல்கள். அவரவர் மனதுக்குப்பட்ட அளவில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டியதுதான். எல்லோருக்கும் பொதுவான வரைமுறைகள் மிகவும் சிரமம்தான்.

ஒருவரைப் பார்த்து மற்றவர் கற்றுக் கொண்டு, கேட்டுத் தெளிந்து பின்பற்றுவதுதான் வழியாக இருக்க முடியும்.

அன்புடன்,
மா சிவகுமார்