சனி, ஆகஸ்ட் 26, 2006

விவசாயக் கொடுமைகள் (economics 12)

விவசாயம் ஏன் கொடுமைப்படுத்துகிறது?

விவசாயிகளின் பிரச்சனைகள் யாவும் உணர்வு பூர்வமானவை:
  1. விளை நிலங்களை எல்லாம் அழித்து வீடு கட்டி விட்டால் சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் என்று நமக்குக் கேள்விகள் தோன்றினாலும், ஆண்டு தோறும் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு திருப்பப்படுவது நடந்து கொண்டே இருக்கிறது.
  2. விவசாயிகளுக்குக் கடன் வசதி கிடைக்க வேண்டும், விளை பொருளுக்குச் சரியான விலை கிடைக்க வேண்டும். அது இல்லாமல் பல விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலைக்குக் கூடத் தள்ளப்படுகின்றனர்
  3. உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லை என்றால் பல ஏழைகள் பட்டினி கிடக்க நேரிடும். பட்டினிச் சாவுகள் பெருகி விடும்.
இவ்வளவு தூரம் தேவை/வழங்கல் பற்றிப் படித்து அலசும் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ன சொல்கின்றன?
  • விவசாயப் பொருட்களுக்கு மானியமோ, விவசாயிகளுக்குச் சிறப்பு முறையில் வங்கிக் கடன்களோ, விளை பொருட்களுக்கு விலை ஆதரவோ இல்லாமல் இன்னொரு பக்கம் உணவுப் பொருட்களின் சந்தை விலைக்குக் குறைவாக நியாய விலைக்கடைகளும் இல்லை என்றால் என்ன ஆகி விடும்?
  • அரசாங்கமே தேவையில்லை, சந்தைப் பரிமாற்றங்களே எல்லாம் பார்த்துக் கொள்ளும் என்று பொருளாதாரக் கட்டுபாட்டுக் கொள்கைகளை வலுவாக எதிர்க்கும் வலது சாரிகளின் கனவு உலகம் எப்படி இருக்கும்?
விவசாயத்துக்கு மானியங்கள்

இன்றைக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தை நம்பிப் பிழைக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து சம்பாதித்த மாத சம்பளமான நான்காயிரத்துச் சொச்சத்தில் மளிகைப் பொருட்களுக்கான மாதாந்தர செலவு ஆயிரம் ரூபாய்க்கு சற்றே அதிகம். அதாவது வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு சாப்பாட்டுச் செலவு, மீதி வீடு, படிப்பு, மற்றும் பிற செலவுகள்.

இன்றைக்கு நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வீட்டுக்கு சம்பாதித்த நாட்களில் உணவுப் பொருட்களுக்கான செலவு பல மடங்கு அதிகரித்து விட்டிருந்தது. மாதா மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மளிகை மற்றும் பிற உணவு சார்ந்த செலவில் போனது. ஆனால் மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் அது.

ஏன் அப்படி?

தொழில் நுட்பம் வளரும் போது விவசாய விளைச்சல் அதிகரிக்கிறது. ஆனால் உணவுப் பொருட்களின் தேவை நெகிழ்ச்சி மிகக் குறைவு. அரிசி பத்து ரூபாய்க்கு விற்றாலும் குடும்பத்தில் மாதம் இருபது கிலோ அரிசிதான். விலை எட்டு ரூபாய் என்று குறைந்து விட்டால் முப்பது கிலோ வாங்க ஆரம்பிக்கவோ, இருபது கிலோ என்று அதிகமாகி விட்டால் பத்து கிலோ குறைத்துக் கொள்ளவோ மாட்டோம்.

இப்படி பொதுவாக எல்லோரது வருமானமும் அதிகரிக்கும் போது உணவுப் பொருட்களின் தேவை அவ்வளவு அதிகரிப்பதில்லை. இதைச் சரி கட்ட பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்குப் போக வேண்டியிருக்கும். அதே அளவு விவசாயிகள் விவசாயத்தைத் தொடர்ந்தால், எல்லோருக்குமே கிடைக்கும் வருமானம் குறைந்து விடும். அவர்களது வாழ்க்கைத் தரம் பிற தொழில் செய்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை விட வீழ்ந்து விடும்.

மீதி இருக்கும் விவசாயிகள் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு இடு பொருட்களை வாங்கி விவசாயம் செய்தால் அரிசி விலை கிலோ நாற்பதுக்கு விற்று அவர்கள் எல்லோரையும் போல நல்ல வசதியாக வாழ ஆரம்பிக்கலாம்.

ஆனால் யாருக்கும் அது விருப்பமில்லை. விவசாயத்தையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள், கிராமங்கள் தொழில் நுட்பத்துடன் சார்ந்த விளைச்சல் அதிகரிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு விட முடியாது. பசுமைப் புரட்சி என்று மூன்று ஆண்டுகளில் உணவு உற்பத்தி பல மடங்கான போது, விவசாயம் செய்பவர்களில் பெரும்பகுதியினர் விவசாயத்தைக் கைவிட்டு பிற தொழில்களுக்குப் போக வாய்ப்புகளும் விருப்பங்களும் இருந்திருக்க வேண்டும்.

அப்படி இல்லாத நிலைமையில் எல்லோருமே தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட, கணக்குப் பார்க்கும் போது கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. அதனால் ஏழ்மைக்குத் தள்ளப்படும் விவசாயிகளைத் தொடர்ந்து விவசாயம் செய்ய உதவும் வண்ணம் மானிய விலையில் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் என்று கொடுக்க வேண்டியிருக்கும்.

தலைமுறை தலைமுறையாக தாம் வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டு, பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே உழுது வந்திருக்கும் நிலத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு போக வேண்டும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத மக்களுக்கு அதைத் தொடர்ந்து செய்ய உதவுவதை அரசியல் கடமையாக அரசுகள் செய்கின்றன. அதனால் பிரச்சனையை தள்ளிப் போட்டு விட்டாலும், ஒரு முடிவு இல்லாத சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார்கள் விவசாயிகள்.

நீண்ட கால நோக்கில், 'நீங்களாவது நல்ல வேலைக்குப் போங்க', என்று தம் குழந்தைகளை விவசாயத்திலிருந்து திசை திருப்பி விடுவது பெருமளவு நடந்து தேவை உற்பத்தி சமநிலை மாறி பல ஆண்டுகளுக்குப் பிறகு சரி செய்தல் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் வலிகளும், சச்சரவுகளும், அரசு தலையிடுதல்களும் தவிர்க்க முடியாமல் போய் விடுகின்றன.

குறைந்த பட்ச ஆதரவு விலை

எல்லோரும் சேர்ந்து விளைவிக்கும் விளைச்சல் சந்தைக்கு வந்து சேரும் போது விலை அதல பாதாளத்துக்குப் போய் விடுகிறது. அறுவடை முடிந்ததும், உடனேயே காசாக்கி விடுவோம் என்று ஒவ்வொரு விவசாயியும் தனது விளைபொருளை விற்க முயல, வியாபாரிகள் அவர்களது நிலைமையைப் பயன்படுத்தி அடி மாட்டு விலைக்கு வாங்குவதில் வெற்றி பெற்று விடுகிறார்கள். செலவளித்ததை விட குறைவாகக் கிடைத்தாலும், கையில் காசு வருகிறதே என்று விற்றுத் தீர்த்து விடுவார்கள் விவசாயிகள்.

ஒரு இரண்டு மாதம் கழிந்து எல்லாவற்றையும் வாங்கிப் பதுக்கிக் கொண்ட வியாபாரிகள், விலையை உயர்த்தி வெளிச்சந்தையில் விற்க ஆரம்பிப்பார்கள். வாங்குபவர்களுக்கு அந்த விலையில் வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இடையில் வந்து பணம் முடக்கிய வியாபாரிகளுக்குத்தான் நல்ல அறுவடை. விவசாயி காசு போதாமல் கடனாளியாகி விட ஏழை மக்களுக்கும் சரியான விலையில் சாப்பாடு கிடைப்பதில்லை.

இதை சரி செய்ய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை கொடுத்து விளை பொருட்களை வாங்கிக் கொள்கிறது. அறுவடை முடிந்து மூட்டை மூட்டையாக நெல் வந்தாலும், குவின்டாலுக்கு 800 ரூபாய் அல்லது கிலோவுக்கு எட்டு ரூபாய் வீதம் வாங்கி அரசு நிறுவனம் தயாராக இருக்கும் போது, வியாபாரிகள் யாரும் அதை விடக் குறைந்த விலைக்கு விற்கும்படி விவசாயியை நிர்ப்பந்திக்க முடியாது.

அரசு கிடங்குகளில் அப்படி வாங்கிய உணவு தானியங்களை வைத்திருந்து சந்தையில் இயல்பாக வந்து சேரும் அளவு குறைய ஆரம்பிக்கும் போது தமது கையிருப்பை வெளியில் விற்க ஆரம்பிக்க விலை நியாயமான அளவுக்குள்ளேயே இருக்கும்.

இதில் இன்னொரு பக்கம், நியாய விலைக் கடைகள். எட்டு ரூபாய் கொடுத்து வாங்கிய நெல்லை அரிசியாக்கி பதினைந்து ரூபாய்க்கு விற்றால் வாங்கிச் சாப்பிட முடியாத ஏழைகளின் நன்மைக்காக இரண்டு ரூபாய் நியாய விலை விற்பனையும் அரசு செய்கிறது. இரண்டு விலைக்கும் உள்ள வேறுபாடு மானியமாகப் போகிறது.

8 கருத்துகள்:

வீரமணி சொன்னது…

மா.சிவக்குமார் வணக்கம்.. மிக அற்புதமான விஷயம்..விவசாயிகளை பற்றியெல்லாம் நாம் நிறைய எழுத வேண்டும்..அப்பதான் நமக்கு நல்ல சோறு கிடைக்கும் என் படிப்பெல்லாம் எங்கள் விளைநிலத்தில் கிடைத்ததுதான்... அப்படியே போட்டுவிட்டு படம் எடுக்க ஓடி வந்த நானெல்லாம் நிறைய எழுத வேண்டும். உங்கள் கட்டுரை மிக முக்கியமானது....வாழ்த்துக்கள் சொல்வதைவிட நன்றி சொல்ல வேண்டும்..
நன்றி.........

வீரமணி.

மா சிவகுமார் சொன்னது…

வீரமணி வாங்க,

அது மட்டும் போதாது. உங்கள் அனுபவங்களை பதிவாகவோ இங்கு பின்னூட்டமாகவோ போட்டால்தான் உங்களுக்குப் படிப்பு தந்த விவசாயத்துக்குக் கடனைத் திருப்பித் தர முடியும் :-). எழுத முயற்சியுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

கவிதா | Kavitha சொன்னது…

விவசாயம் - நம் தேவைகளுக்கு தகுந்தவற்றை மட்டும் விளைவித்து, மீதமிருப்பதை ஏற்றுமதிக்கு உகந்த விளைச்சளாக மாற்றலாமே?.. அதாவது ஏற்றுமதி செய்ய கூடிய, தேவைப்பட கூடிய பொருட்களை விளைவிக்கலாமே?. மீன் வகைகளை நமக்கு இல்லாமல் கூட ஏற்றுமதி செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், அதுபோல், தரமான தானிய வகைகள் கூட ஏற்றுமதியாகி, மிச்சம் மீதிதான் நமக்கு கிடைக்கிறது. அதில், பழங்கள், காய்கறிகள் கூட அடங்கும். விவசாயிகளில் கூட பிழைக்க தெரிந்தவர்கள் பிழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொழில்நுட்பம் வளரும் போது, உற்பத்தி அதிகமாகிறது என்பது உண்மை, ஆனால் இது இவ்வளவு போதும் என்று, எல்லாவிதமான தானியங்களையும் பயிரிடலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதியமுயற்சிகள் நல்ல பலனை தரும் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் கடைசியாக சொல்லிய அத்தனை விஷயங்களுக்குமே முக்கிய காரணம் போதிய படிப்பின்மை. முன்பே சொல்லிய படி ப்டிப்பறிவு அவசியம் தேவை, அரசாங்கம் கொடுக்கும் சலுகைகள், அல்லது அரசாங்கத்திடம் கேட்டு வாங்க வேண்டிய சலுகைகள் எல்லாவற்றிக்குமே போதிய படிப்பறிவு தேவை படுகிறது. இளையதலை முறையினர் விவசாயத்தில் போதிய கவனம் செலுத்தினால் தொல்லைகள் இல்லாமல் ஓரளவு முன்னுக்கு கொண்டுவர இயலும்.

மா சிவகுமார் சொன்னது…

கவிதா,

விவசாய விளை பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாடுமே தனது பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆர்வமும், பிற நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள சுணக்கமும் காட்டுகின்றன. இந்திய அரிசி அமெரிக்காவுக்குப் போக வேண்டும் என்று இருந்தால் அந்த ஊர் அரிசியும் நம்ம ஊரில் நுழைய ஆரம்பிக்கும். ஏற்கனவே சிக்கல் நிறைந்து கிடக்கும் விவசாய நடைமுறைகள் இன்னும் குழப்பமாகி விடும்.

அறிவு பூர்வமாக அணுகினால் நீங்கள் சொல்வது போல பல வழிகள் திறக்கும். ஆனால் இது பல கோடி மக்களின் வாழ்க்கைப் போராட்டம். அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை, நவீன முறைகள் தெரியவில்லை என்றெல்லாம் சொல்வது எளிதாக இருந்தாலும், தமது வாழ்க்கையையே மாற்றி அமைத்துக் கொள்வது யாருக்கும் அவ்வளவு எளிதில்லை. அப்படி மாற்ற வேண்டுமா என்ற கேள்விகள் கூட உண்டு.

இதற்கு எளிய தீர்வு எதுவும் இல்லை. இன்றைக்குக் கூட செய்தியில் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நாசிக் விவசாயி ஒருவரைப் பற்றி வந்துள்ளது. வெட்டி வேலைகளை விட்டு விட்டு உலகின் மிகச் சிறந்து மூளைகள் சேர்ந்து செயல்பட்டால்தான், ஒரு பக்கம் விளைப்பவர்களுக்கும் மறுபுறம் சாப்பிடுபவர்களுக்கும் இரண்டு பக்கமும் இருக்கும் கொடுமைகளைத் தீர்க்க வழி பிறக்கும்.

ஆப்பிரிக்காவில் பட்டினிச் சாவுகள் ஆயிரக் கணக்கில் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான் இந்தியாவில் விளை பொருளுக்கு விலை கிடைக்காமல் சாகும் விவசாயிகளும் இருக்கின்றனர். தீர்வு எங்கோ இடையில் இருக்கிறது. அதைக் கண்டு பிடிப்பவர் மனித குலத்துக்கு மகத்தான சேவை செய்தவராவார்.

அன்புடன்,

மா சிவகுமார்

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

விவசாயம் தொழில்துறையிலிருந்து வேறுபட்டது
1]விவசாயத்தில் 3 பிரிவினர் சம்பந்தப் படுகின்றனர்:1]நிலஊரிமையாளர் 2]குத்தகையாளர் 3] விவசாயத் தொழிலாளர்

உரிமையாளர்க்கு அதிக உற்பத்தி;அதிக லாபமே நோக்கம்
குத்தகையாளர்க்கு "எவ்வளவு விளவித்தாலும் குத்தகையாக(வாரமாக)ப் பொஇவிடும் எனும் அயர்ச்சி.
தொழிலாளர்க்கு விளைந்தால் என்ன விளையாவிட்டால் என்ன? நமக்கு கூலி இவ்வளவுதான் எனும் சோர்வு நோக்கு. ஆக உணர்வு பூர்வமான ஒத்துழைப்பு இல்லை.இந்நிலை மாற
நிலச்சீர்திர்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டன["உழுபவனுக்கே
நிலம் சொந்தம்". ஏனெனில் the magic of private property can turn sand into gold]துரதிருஷ்டவசமாக
அவை இந்தியாவில் போதிய வெற்றி பெறவில்லை! வாழ்க ஜனநாயகம்,அரசியல்வாதிகள்& அதிகாரிகள்.

2]விவசாயத்தில் இயற்கை பெரும் பங்கு வகிக்கின்றது;மனிதனின் முந்திட்டமிடலுக்கு அடங்காதது

3]விளை பொருட்களின் தேவை நெகிழ்ச்சி அற்றது. விலை குறைந்தால் நிறைய வாங்குவதோ, அதிகரித்தால் வாங்காமல் இருப்பதோ
நிகழாது.
அவ்வையின் பாடல்:
"ஒரு நாளைக்கு இரென்றால்
இராய்;
இரு நாளைக்கு ஏலென்றால்
ஏலாய்......"
நினைவுக்கு வருகின்றதா?

கவிதா அவர்களே,
விவசாயத்தில் திட்டமிட்டு உற்பத்தியை நிர்ணயிக்கமுடியாது. அதை நிர்ணயிப்பதில் பருவநிலைக்குதான் முக்கிய இடம்

4]விவசாயிகளின் படிப்பறிவின்மை, மூட நம்பிக்கைகள் போன்றவை

கவிதா | Kavitha சொன்னது…

//கவிதா அவர்களே,
விவசாயத்தில் திட்டமிட்டு உற்பத்தியை நிர்ணயிக்கமுடியாது. அதை நிர்ணயிப்பதில் பருவநிலைக்குதான் முக்கிய இடம்//

உண்மைதான், ஆனால், இப்போது கூட நாம் பருவநிலைக்கு தகுந்தார் போன்றுதானே பயிர் இடுகிறோம். சீசனுக்கு தகுந்தார் போன்று தான் பொருட்கள் கிடைக்கின்றன். எல்லா பொருட்களும் எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை. குறிப்பாக, காய்கறிகள்-ஆங்கில காய்கரிகள் என்று சொல்ல கூடியவை அனைத்துமே எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை. குளிர்காலங்களில் மட்டுமே கிடைக்கும். அது போன்று இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான பருவநிலை இருப்பதில்லை. எல்லாவற்றையும் மீறி இயற்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக பயந்து நாம் எதையும் நிறுத்திவிட முடியாதே. சுனாமி வந்த பிறகு, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமலா இருக்கிறார்கள். மீனவ குப்பங்களுக்கு சென்று பார்த்தபோது, அவர்களையும் கடலையும் பிரிக்கமுடியாது என உணர்ந்தேன். அப்படி தான் விவசாயமும்.

இங்கு திட்டமிடல் என்பது நம் பருவநிலை, நிலங்களின் தரம் எல்லாவற்றையும் கொண்டுதான் செயற்படுத்தமுடியும். பருவநிலைக்கு தகுந்தார் போன்றும், விவசாயத்தின் தரத்தையும், புதிய வழிமுறைகளையும் கண்டிப்பாக செய்ய முடியும்.

அமெரிக்காவின், ஆரம்பகால வரலாறு இதற்கு ஒரு எடுத்துக்காடு. கரிசலாக கிடந்த பல நிலங்களை குறைந்த காலத்தில் விளைநிலங்களாக மாற்றி விளைச்சலை பார்த்தவர்கள் அவர்கள். கரிசல் நிலங்கள் என்பது அப்போது கொஞ்சம் பகுதிஅல்ல, மிக அதிகமான இடங்கள். அவர்களின் திட்டமிடல் மற்றும் உழைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்கள் காட்டிய அக்கறை மட்டுமே இதற்கு சாத்தியமானது எனலாம்.

செய்ய முற்படுவதற்கு முன்னமே நாம் இது சரிவராது என யோசிக்கிறோம். முயற்சி செய்யலாம், முடியாதது என்ன?

ஸ்ரீ சொன்னது…

விவசாயத்துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்காகும்.மொத்த மக்கள் தொகையில் சுமார் 70% சத மக்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகின்றனர்.கிராமபுற மக்களின் வாழ்வாதாரமே இத்தொழில்தான்.இன்றும் இந்தியாவில் கிராமங்கள் நிலைத்து நிற்க வேளான்மையே மிக முக்கிய ஆதாரமாக உள்ளது.இதுவே இந்தியாவின் பொருளாதாரத்தில் வேளான்மை பெற்றுள்ள முக்கியத்துவத்துக்கு சான்று.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையின் வளர்ச்சி இன்று கீழ்நோக்கிய திசையில் சென்று வீழ்ச்சியை எட்டியுள்ளது.இந்த வீழ்ச்சியின் தாக்கம் எவ்வளவு மக்களை பாதிக்கும் என்பது மேற்சொன்ன கருத்துகளின் மூலம் தெளிவாகும்.
இந்த நிலையில் இப்பதிவில் பல பிரச்சினைகளை ஆராய்ந்து விளக்கங்களை அளித்துள்ளீர்கள். நன்றி .
1.விவசாயம் கொடுமைப்பட மிக முக்கிய காரணம் விலைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது.(விலை நிர்ணயம் விவசாயியிடம் இல்லை.இடுபொருள் செலவும் ,கூலியும் 20%சதம் அதிகரித்தாலும் அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதற்க்கு ஏற்றார்போல் நிர்ணயிக்காதது)

2.எந்த விலைபொருள் கூடுதலாய் விளைவிக்கபடுகிறதோ அதன் பலன் விவசாயிக்கு கிடைக்காத எதிர் மறை விளைவுகள்.(விவசாயி விளைபொருளை விற்க வியாபாரியையே நாடி இருப்பது,விற்பனைக்கு சிறந்த வாய்ப்புகள் இல்லாதது)

3.தேவையற்ற அரசின் விளைபொருள் இறக்குமதிகள்(அரசின் கொள்கை- விவசாயி இறந்தாலும் பரவாயில்லை உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வழிசெய்து அதன் பலன் விவசாயிக்கு கிடைக்கசெய்யாமல் பற்றாக்குறை என காரணம் காட்டி கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்வது.(உதாரணம் கூடுதல் விலையில் கோதுமை இறக்குமதி).

4.இடர்பாடு நேரும் காலங்களில் கைகொடுக்கும் காப்புறுதி திட்டங்கள் சிறப்பான முறையில் இல்லாதது.(விவசாயிக்கு பலன் கிட்டகூடிய வேளான்காப்புறுதி திட்டங்கள் இன்னும் கனவாகவே உள்ளன).

5.முக்கியமாக சரியான நேரத்தில் கடன் வசதி கிடைக்காதது.(வங்கிகள் சேவை மனப்பான்மையை புறக்கணிப்பது.விவசாயத்துறைக்கு வழங்க நிர்னயிக்கப்பட்ட கடன் தொகையை வழங்காமலிருப்பது சிறந்த உதாரணம்.

இப்படி எண்ணற்ற பிரச்சினைகள்-அரசாங்கமே இவற்றிலிருந்து நழுவிவிட முயலும் போது யார்தான் தீர்வு காண்பது?

மா சிவகுமார் சொன்னது…

//விவசாயத்துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்காகும்.மொத்த மக்கள் தொகையில் சுமார் 70% சத மக்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகின்றனர்.

பாருங்கள்! எழுபத்தைந்து கோடிக்கும் அதிகமான மக்கள் உழைத்து இருபத்தைந்து சதவீத உற்பத்தி. இதனால் விவசாயத்தில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வருமானம் மற்ற முப்பதி சதவீத மக்களை விடக் குறைவாகவே இருக்கிறது. இது விவசாயிகளின் துயரத்துக்கு அடிப்படைக் காரணம்.

கிராமப் புறப் பொருளாதாரத்தின் பிற கிளைகளை எல்லாம் வெட்டி விட்டு விவசாயம் மட்டுமே மிஞ்சியிருக்க எல்லோருமே நிலத்தின் மடியில் தஞ்சம் புகுகிறார்கள். அதில் வரும் காசைக் கொண்டு வாங்க சாஷேக்களில் அடைபட்டு வரும் ஊறுகாய் கூட நகரங்களில் இருந்து, பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வந்து விடுகிறது. உள்ளூரில் வேறு வேலைக்கு வாய்ப்பே இல்லை.

இப்படி கிராமப் பொருளாதரத்தின் அடிப்படையை இழந்து விட்டடு போன நூற்றாண்டின் பெருந்துயரம் என்று நினைக்கிறேன்.


கோதுமை கொள்முதல் விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்வது அரசு நிறுவனங்களின் குறுகிய நோக்கையே காட்டுகிறது. பருவத்தின் ஆரம்பத்திலேயே சரியாகக் கணக்குப் போட்டு திட்டமிட்டிருந்தால் கொள்முதல் விலை ஏற்றி இன்றைய நிலையைத் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி கிராமப் பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகையில் பொருளாதாரக் கொள்கைகள் அமைவதுதான் சரியான நீண்ட காலத் தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன். குழந்தைக்கு மூத்திரத் துணி கூட எங்கோ நகரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு கிராம மக்கள் தலையில் கட்டப்பட்டு அவர்களது வருமானத்தை உறிந்து கொள்ளும் நிலை இருக்கும் வரை இந்திய விவசாயத்தின் நிலை எப்படி முன்னேற முடியும்!

மா சிவகுமார்