புதன், ஆகஸ்ட் 16, 2006

விடை தேடும் முறைகள் (economics-3)

நடைமுறையில் இரண்டும் கலந்த கொள்கைகள்தான் பெரும்பாலான சமூகங்களில் இருக்கின்றன. சில இடங்களில் சந்தைப் பொருளாதார கொள்கைகளின் கை ஓங்கியிருக்கும், சில இடங்களில் அதன் பங்கு குறைந்து அரசின் திட்டங்களுக்கு பெரிய பங்கு கிடைக்கலாம். ஒரே நாட்டிலேயே வலதுசாரிகள் ஆட்சி அமைத்தால் தனியார் மயமாக்கலும், அரசு சுருங்குதலும், இடது சாரிகள் ஆட்சி அமைத்தால் எதிர்மறையும் நடைபெறுவதையும் பார்க்கிறோம்.

திட்டமிடும் பொருளாதரம் எப்படி இயங்குகிறது என்று விளங்கிக் கொள்வது அவ்வளவு சிக்கலில்லை. வல்லுனர்களாகக் கருதப்படும் ஒரு குழுவினர் உட்கார்ந்து எல்லாக் காரணிகளையும் திரட்டி அலசி திட்டக் குழு என்ற பெயரில் எங்கிருந்து பணம் திரட்ட வேண்டும், எதில் பணத்தைச் செலவிட வேண்டும், யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.

ஆனால் சந்தையில் நடக்கும் கொடுக்கல் வாங்கல்கள் இந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்து விடுகின்றன. ஒவ்வொருவரும் தனக்கு மிக அதிக நன்மை கொடுப்பதைச் செய்து வர ஒட்டு மொத்தமாக பொருளாதாரக் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடுகிறது. எதைச் செய்வதில் லாபம் அதிகமோ அது செய்யப்படுகிறது, எந்த வழியில் செய்தால் செலவு குறைவோ அந்த வழியில் செய்யப்படுகிறது, யார் அதிக விலை கொடுக்கிறாரோ அவருக்கு செய்தது போய் சேர்கிறது.

கண் மண் தெரியாத நேர்த்தி சந்தை கொடுக்கல் வாங்கலில் உள்ளது. சந்தைக்கு வந்து சேரும் தக்காளி எப்படி பயிரிடப்பட்டது, என்ன விலைக்கு விற்கிறது, யார் வாங்கிப் போக முடியும் என்பதுடன், தக்காளி இன்றைக்கு வருகிறதா இல்லையா என்பதே இந்த தனிமனித முடிவுகள்தான் தீர்மானிக்கின்றன.

'பொதுவாக தக்காளி கிலோவுக்கு ஐந்திலிருந்து பத்து ரூபாய்க்கு விலை போகிறது. கத்திரிக்காய் மூன்றிலிருந்து ஆறுக்குள்தான் விலை கிடைக்கிறது. அதனால் இந்தத் தடவை தக்காளி பயிரிடலாம்' என்று விவசாயி தானாகவே முடிவு செய்கிறார்்.

அதற்குத் தேவையான விபரங்கள் அவரிடம் இருந்து காய் வாங்கிச் செல்லும் மொத்த வியாபாரி, போன தடவை இருந்த நிலவரம், விவசாய மையத்தில் கிடைக்கும் தகவல்கள் மூலம் அவருக்குக் கிடைக்கலாம். இன்ன நாளில் நட்டு, இன்ன உரம் போட்டால் தண்ணீர் பாய்ச்சுவது குறைக்கலாம், பூச்சி விழுவதைத் தவிர்க்கலாம், பூச்சி மருந்துகள் வாங்கி அடித்தால் சேதம் குறையும், ஒரு ஆள் போட்டு களைகளைப் பிடுங்கினால் தக்காளி எடை அதிகமாகக் கிடைக்கும் என்று எப்படி தக்காளி விளைகிறது என்பதை அவர் முடிவு செய்து கொள்கிறார்.

கடைசியாக விளைச்சல் சந்தைக்கு வந்து சேரும் போது அது காரில் வரும் மகராசனுக்குப் போக வேண்டுமா மூன்று சக்கர வண்டியில் வரும் சில்லறை வியாபாரிக்குப் போக வேண்டுமா என்று அவர்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் விலையைப் பொறுத்து தீர்மானிக்கப் பட்டு விடுகிறது.

பொருளாதாரக் காரணிகள்

தக்காளியோ கணினி மென் பொருளோ, செய்வதற்கு மூன்று வகையான பொருட்கள் தேவை. முதல் வகை இயற்கையில் கிடைப்பவை - நிலம், தண்ணீர், கச்சா எண்ணெய், தாதுக்கள் போன்றவை.

இரண்டாவது மனித வளம்.

மூன்றாவது இவற்றை இணைத்து உற்பத்தியை நடத்த தேவைப்படும் மூலதனம்.

தேர்வுகள், தேர்வுகள், தேர்வுகள்

இந்த மூன்றையும் சேர்த்து தக்காளி பயிரிடுவதா அல்லது கத்திரிக்காய் பயிரிடுவதா என்று ஒரு விவசாயி முடிவு செய்கிறார். அவரது நிலம், உழைப்பு, சேமிப்பைப் போட்டு கடன் வாங்கி முதலீடு செய்யும் மூலதனம் மூன்றுமே அளவுக்குட்பட்டவை. தக்காளியும் பயிரிடுவேன், கத்திரிக்காயும் பயிரிடுவேன் என்று அவர் நிற்க முடியாது.

தன்னுடைய நிலம், உழைப்பு, சேமிப்பு முழுவதையும் தக்காளி சாகுபடியில் போட்டால் நூறு கிலோ தக்காளி கிடைக்கலாம். அதில் ஒரு பகுதியை கத்திரிக்காய்க்குத் திருப்பி விட்டால் எழுபது கிலோ தக்காளியும் நாற்பது கிலோ கத்திரிக்காயும் கிடைக்கலாம். இன்னும் அதிகமாக கத்திரிக்காய்க்கு முயன்றால் தக்காளியின் அளவு குறையத்தான் செய்யும். எல்லாமே கத்திரிக்காய் பயிரிடப் பயன்படுத்தினால் 120 கிலோ கத்திரிக்காய் மட்டும் விளைவிக்கலாம்.

நமது நேரத்தை வேலை செய்ய அல்லது கேளிக்கையில் செலவளிக்கலாம். முழு நேரத்தையும் வேலையில் செலவிட்டால் நமக்கு பத்தாயிரம் ரூபாய்க்கான பலன் கிடைக்கலாம், 10% கேளிக்கைக்கு ஒதுக்கிக் கொண்டால் வேலையின் பலன் ஒன்பதாயிரமாகக் குறையலாம். கேளிக்கை அதிகமாக அதிகமாக அதை வேலையில் இழக்கும் நேரத்தின் மூலமாக ஈடு கட்டுகிறோம்.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பந்தயம் பார்த்தால் மெகா தொடர் பார்க்க முடியாது. கிரிக்கெட் பந்தயத்துக்கான நேரம் மெகா தொடரைக் குறைத்துக் கொண்டால்தான் கிடைக்கும்.

இங்கே இன்னொரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிக் கொண்டால் இரண்டும் செய்யலாமே என்று ஒரு வழி இருக்கிறது. விவசாயியும் இன்னொரு தோட்டத்தை வாங்கிக் கொண்டால் இன்னும் பணம் இருந்தால் தக்காளி, கத்திரிக்காய் இரண்டுமே விளைத்துக் கொள்ளலாம். ஆனால், இப்படி முதலீடு செய்வதற்கு ஒரு அளவு இருக்கிறது. உலகை மொத்தமாக எடுத்துக் கொண்டால் இருக்கும் வளங்கள் அளவோடுதான். அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது நாம் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு அரசு இலவசத் தொலைக் காட்சி கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து திறமையானவர்களை ஈர்க்க முடியாது. பாதுகாப்புக்காக ஆயுதம் வாங்க பத்தாயிரம் கோடி ஒதுக்கினால் அது சாலை அமைப்பதிலிருந்து கொஞ்சம் வளங்களை எடுத்துக் கொள்வதாக அமையலாம். எல்லோருக்கும் செல் தொலைபேசி போய்ச் சேர வேண்டும் என்று திட்டம் போட்டால், பாகிஸ்தானுடன் சண்டை போடுவதற்கு பணம் இல்லாமல் போய் விடலாம்.

ஒவ்வொரு நாடும் சமூகமும் எதில் தனது வளங்களைச் செலவிடலாம் என்று தீர்மானித்துக் கொள்கின்றன. இதுவும் செய்வோம், அதுவும் செய்வோம் என்பது மட்டும் நடப்பதில்லை. ஒன்று வேண்டும் என்றால் மற்றொன்றை விட்டுக் கொடுத்தே தீர வேண்டும்.

கருத்துகள் இல்லை: