புதன், ஆகஸ்ட் 23, 2006

என்ன விலை கொடுப்பது? (economics 9)

வாங்குபவர்கள் குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்க என்ன காரணம்?
  1. ஒருவரது வருமானத்தின் அளவு அவர் எந்த விலையில் எவ்வளவு வாங்குவார் என்று தீர்மானிக்கிறது. ஒரு மாதம் சம்பள உயர்வு கிடைத்தாலோ அல்லது எதிர்பாராத ஊக்கத் தொகை வந்தாலோ, வழக்கமாக கிலோ எண்பது ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் இனிப்புப் பண்டத்தை அதே விலையில் ஒன்றரை கிலோ வாங்கிக் கொள்ளலாம். அந்த நாளில் அவரது வாங்கும் திறன் அல்லது இனிப்புக்கான தேவை அதிகமாகி விடுகிறது.

    இப்படி எல்லோருடைய வருமானமும் உயர்ந்தால் சந்தையில் பொருட்களின் விலை உயரும். அதாவது ஒவ்வொரு விலைப் புள்ளியிலும் விலை போகும் அளவு அதிகமாகி விடும். இந்தச் சூழலிலும் அதிக விலையில் குறைவாகவும் குறைந்த விலையில் அதிகமாகவும் தேவை இருக்கும் நடமுறை தொடர்ந்து இருக்கும்.

  2. இரண்டாவதாக மற்ற பொருட்களின் விலையும் சந்தையில் கிடைப்பதும் ஒரு பொருளின் விலையைப் பாதிக்கும். புதிதாக ஒரு குழந்தைகளுக்கான தொலைக்காட்சி ஓடை ஆரம்பிக்கப்பட்டால், உலகக் கோப்பைக் கால் பந்து ஒளிபரப்பு ஆரம்பித்தால் அதை சேர்ந்த தொலைக் காட்சி பெட்டியை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட விலைக்கு அதிகரித்து விடும்.

    பெட்ரோல் விலை அதிகமானால் வண்டிகளின் விற்பனை குறைந்து விடுகிறது.

    போட்டி போடும் பொருட்கள் ஒன்று மற்றதின் விலையைக் கீழே இழுத்து விடுகின்றன. இன்றைக்கு மாம்பழம் சந்தையில் குவிந்து கிலோவுக்கு பத்து ரூபாய் என்று விற்றால், பழம் சாப்பிடுவர்கள் ஆப்பிள் வாங்குவதற்குப் பதிலாக மாம்பழம் வாங்கிச் செல்ல ஆப்பிள் விலையும் குறைய ஆரம்பிக்கிறது.

  3. மூன்றாவதாக, ஆனால் மிக அடிப்படையான தேவையைத் தூண்டும் ஒன்று, ஒருவரின் விருப்பங்கள், சுவைகள்.
    நான் நாற்பது ரூபாய் கிலோ என்ற விலையில் மாம்பழம் வாங்குவது எனக்கு மாம்பழம் மிகப் பிடித்திருப்பதால்.
    இன்னொருவர் பருவமே இல்லாத நேரத்தில் கூட கிலோ இருநூறு ரூபாய் என்று கூட வாங்கிச் சாப்பிடலாம்.
    இன்னொருவர், பத்து ரூபாய்க்குக் கிடைத்தால் ஒழிய மாம்பழம் சாப்பிடவே நினைக்க மாட்டார்.

மேலே சொன்ன காரணிகள் ஒரே நிலையில் இருக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். அந்த நிலையில் விற்கும் விலை அதிகமானால் பொருள் குறைவான அளவு விற்கும். விலை குறைந்தால் அதிக அளவில் விற்கும். ஏதாவது காரணி மாறினால் பல்வேறு விலைகளில் விற்கும் அளவுகள் எல்லாமே மாறி விடும்.

பொருளாதாரத்தில் மற்ற எல்லாமும் மாறாமல் இருக்கும் போது என்று ஒரு அடி அடிப்பார்கள். விற்கும் விலைக்கும் அளவுக்கும் உள்ள உறவு பிற காரணிகள் மாறாமல் இருக்கும் போதுதான் மாறாமல் இருக்கும்.

  • அன்றைக்குக் காலையில் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை, மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு இருதய நோய் குறைவாகவே வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது என்று.
    அதைப் படிப்பவர்களில் பலரின் மாம்பழ விருப்பம் அதிகமாகி விடும்.

    குழந்தைகளுக்கு மட்டும் வாங்கி கொடுத்த அம்மா, இப்போ மாமனாருக்கு சாறு போட்டுக் கொடுக்கவும், அம்மா/அப்பாவுக்கு ஒரு கூடை அனுப்பவும் வாங்கிப் போகிறார்.

    மாம்பழம் என்றாலே பிடிக்காது என்று இருந்த ஒருவர், தன் இருதய நலனுக்காக ஒரு கிலோ வாங்கிக் கொள்கிறார், மூக்கைப் பிடித்துக் கொண்டு மருந்தாகச் சாப்பிட்டுக் கொள்வாராம்.

    இப்போ விலை என்ன ஆகும்? தேவையின் அளவு அதிகரித்து கிடைப்பதின் அளவு மாறாமல் இருப்பதால் விலை ஏற ஆரம்பிக்கும். "இன்னிக்கு வேகமா பழம் போகுதுப்பா, ஒம்பது மணிக்குள்ள தீந்துடும் போலிருக்கு, ஒரு இரண்டு ரூபாய் ஏத்தி விப்போம்" என்று வியாபாரிகள் முடிவு செய்து விலையை ஏற்றி அடுத்த நாள் கொஞ்ச கூடுதல் விலை கொடுத்தே லாரிச் சரக்கை எடுத்துக் கொள்ள தயாராகி விடுவார்கள்.
சரி, எந்த விலைக்கு விற்கிறது என்று முடிவு செய்பவை என்ன? விற்பவர்களுக்குக் கிடைக்கும் விலை எதனால் பாதிக்கப்படுகிறது?

6 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

யார் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்?-இது எனக்குள் இப்போதும் இருந்து கொண்டிருக்கிற கேள்வி..
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
பத்திரிக்கையில் போட்டா வியாபாரம் சூடு பிடித்துடுமா என்ற ?க்கு இப்போது தான் பதில் தெரிய வந்தது.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க குமார்,

விலையும் ஒவ்வொருவரும் அவர்கள் போக்கில் நிர்ணயித்துக் கொள்வதுதானே! அப்படி பல்லாயிரக்கணக்கானவர்கள் தன்னிச்சையாக முடிவு செய்யும் அவர்களுக்குக் கட்டுப்படியாகும் விலை சந்தை விலையாக நிலை பெற்று விடுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

Badri Seshadri சொன்னது…

சந்தை விலை தானாகவே நிர்ணயமாவதில்லை. சந்தைக்கு முதலில் பொருளைக் கொண்டுவருபவர் தன்னிச்சையாக ஒரு விலையைத் தீர்மானிக்கிறார். பின்னர் சந்தையில் நடக்கும் பல்வேறு பரிமாற்றங்களில்போது மேற்குறிப்பிட்ட விலை ஏறவோ இறங்கவோ செய்கிறது. முதலில் தொழிலுக்கு வருபவருக்கு இதனாலேயே சில சங்கடங்கள் உள்ளன. அடுத்து வருபவர் முதலாமவரின் விலையை ஒட்டி - அதிகமாகவோ, குறைவாகவோ - தன் விலையை நிர்ணயித்துவிடுவார்.

விலை நிர்ணயத்தில் எளிமையான முறை 'செலவு + லாபம்'. பொருளைத் தயாரிக்க மொத்தமாக எவ்வளவு செலவாகிறது என்று தீர்மானித்து பின் அத்துடன் கொஞ்சம் கூட்டி விலையாக நிர்ணயிப்பது. சில நிறுவனங்கள் தங்களது தொடக்க காலத்தில் பொருள் தயாரிக்கும் செலவைவிடக் குறைந்த விலையில் பொருளை விற்க முயற்சி செய்யலாம். வரும் நாள்களில் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாகும்போது, தயாரிப்பு செலவுகளும் குறையும்போது நிறைய லாபம் பெறலாம் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்யலாம்.

சில நேரங்களில் பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற 'செலவுக்கும் குறைவான விலை' நிர்ணயிக்கும்போது அதற்கு predatory pricing என்று பெயர். 'கட்டுப்படியே ஆகாத விலை' ஒன்று நடைமுறையில் இருக்கும்போது பிற சிறு நிறுவனங்கள் இழுத்து மூடிவிடும்; அதன்பிறகு monopoly நிலையைப் பெற்ற பெரு நிறுவனம், பொருளின் விலையை வேண்டிய அளவு கூட்டி, கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம். இதுபோன்ற நேரங்களில் அரசோ, கட்டுப்பாட்டு வாரியமோ தலையிட்டு இந்த நிலை நிகழாமல் இருக்கச் செய்யும் (அல்லது செய்யவேண்டும்).

சிவகுமார் அடுத்து இதுபற்றி எழுதப்போவதால் இத்துடன் விட்டுவிடுகிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

பத்ரி,

நீங்கள் தொடர்ந்து விளக்கமாக எழுதி விடுங்கள். நான் அடுத்தப் பகுதியில் மாற்றங்கள் செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும் :-)

எல்லோரது பங்களிப்பையும் சேர்த்து ஒரு பயனுள்ள தொகுப்பு உருவானால் நன்றாக இருக்குமல்லவா?

அன்புடன்,

மா சிவகுமார்

டண்டணக்கா சொன்னது…

பொதுவாக, சந்தையில் பொருளின் விலையை நிர்ணயிப்பதில் நுகர்வோர்களின் விருப்ப/எதிர்பார்ப்பு விலையின் தாக்கம் என்பது மிக சொற்பமே. மாறாக கீழ்கண்டவைகளின் தாக்கமே அதிகம்.
1. உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு.
2. விநியோகிப்பாளர் பங்கு எதிர்பார்ப்பு.
3. சந்தை போட்டி நிலவரம்

என்ன விலை? - என்பது கிட்டதட்ட ஒரு போர்கள் கேள்வியே.

பொருளின் விலை என்பது பல காரணிகளை சார்ந்து மாறும். சில விலை நிர்ணய காரணிகள்:
1. அளவு சார்ந்த விலை நிர்ணயம்.
2. தரம் சார்ந்த விலை நிர்ணயம்.
3. தயாரிப்பு + லாபம் விலை நிர்ணயம்.
4. முதலீடு:லாபம் விகிதாசார விலை நிர்ணயம்.
5. போட்டி நிலை சார்ந்த விலை நிர்ணயம்.

காரணிகள் எப்போதும் ஒரே போன்று இருபதில்லை. விலை மதிப்பீடு காரணிகள் பொருளுக்கு பொருள் மாறும்.

அது மட்டுமின்றி ஒரே பொருளுக்கு கூட இந்த காரணிகள் மாறும். எ.கா. கால் சட்டை:
(*) சரவணா துணிக்கடையில் கால் சட்டை விலை - 200 ரூ (காரணி: தயாரிப்பு + லாபம் விலை நிர்ணயம்.).
(*) ர்ரேமண்ட் துணிக்கடையில் கால் சட்டை விலை - 1,000 ரூ (காரணி: சமூக அந்தஸ்த்து சார்ந்த விலை நிர்ணயம்).

மா சிவகுமார் சொன்னது…

கலாநிதி, டண்டணக்கா,

நிங்கள் சொல்வது மிகச் சரி. பொருளாதரப் படிப்பு நடைமுறையில் இருக்க முடியாத எளிதான சூழ்நிலைகளில் என்ன நடக்கும் என்று அலசுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு தினசரி வாழ்க்கையில் நீங்கள் சொல்லும் காரணிகளையும் சேர்த்துப் புரிந்து கொள்வதுதான் சரியான முறை. அதைப் பற்றியும் விரிவாக ஆராய்ச்சி செய்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்