செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

கொடுத்தலும் வாங்கலும் (economics 8)

ஒருவருக்குத் தேவையும் இன்னொருவரிடம் அதிகப்படியும் இருந்தால் கொடுக்கல் வாங்கல் நடைபெறும்.

  • விவசாயியிடம் தன் குடும்பத்துக்குத் தேவை போக உபரி நெல் இருப்பதால் அதை விற்க முனைகிறார் - இது அதிகப்படி.
  • கணினி நிறுவனத்தில் வேலை செய்பவர் தன் குடும்பத்துக்குத் தேவையான அரிசியை வாங்கிக் கொள்கிறார் - இது தேவை.

இந்த இரண்டும் சந்திக்கும் இடம்தான் சந்தை.

  • ஒரு பொருளின் விலை அதிகமாக இருந்தால் அதன் விற்பனை குறையும். வாங்கக் கூடியவர்கள் குறைந்த அளவில்தான் வாங்குவார்கள். இன்னும் சிலர் வாங்காமலேயே போய் விடுவார்கள்.

    எதிர் மறையாக பொருளின் விலை குறையைக் குறைய விற்பனை அளவும் கூடிக் கொண்டே போகும். இது வரை வாங்காதவர்கள் வாங்க ஆரம்பிக்க வாங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிக அளவில் வாங்க ஆரம்பிக்க விற்பனை அளவு கூடும். இது ஒரு பக்கம், தேவையின் பக்கம்.

  • ஐந்து ரூபாய்க்கு 100 கிலோ விற்றால் இரண்டரை ரூபாய்க்கு இருநூறு கிலோ விற்றுப் போகும் என்று இல்லாமல் போகப் போக அளவு விலைக்கு நேர் விகிதத்தில் கூடாமல் கூடுதல் விகிதம் குறைந்து கொண்டே போகும்.

    அதே போல விலை அதிகமாகும் போதும், வாங்கும் அளவு பாதிக்குப் பாதி குறைந்து விடுவதில்லை.

  • இன்னொரு பக்கம் விற்பனையாளர்கள். விலை அதிகமாக இருந்தால் இன்னும் சில வியாபாரிகள் தமது சரக்கைக் கொண்டு வந்து விற்க ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே விற்றுக் கொண்டிருப்பவர்கள் இன்னும் கூடுதல் பொருளை விற்கக் கொண்டு வருவார்கள். எதிர் மறையாக விலை குறையக் குறைய விற்க சந்தைக்கு வரும் பொருட்களின் அளவும் குறைந்து போகும்.

  • இங்கும், குறிப்பிட்ட விலை மாற்றத்துக்கு அளவு கூடவோ குறையவோ செய்வது நேர் விகிதத்தில் அமைவதில்லை. விலை கூடக் கூட பொருள் உற்பத்தி செய்ய பொருத்தம் குறைந்த வளங்கள் பயன்படுத்தப்பட ஆரம்பிக்க விளைச்சல் குறைவாகவே இருக்கும்.

இப்படி இரண்டு பக்கமும் இழுக்கும் இழுப்புக்கு நடுவில் அமைவதுதான் ஒரு பொருளின் விலை. ஒரு நியாயமான போட்டி நிலவும் சந்தையில் இரண்டு இழுப்புக்கும் நடுவில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் ஆதாயம் கிடைக்கும் வகையிலான விலை அமைந்து விடும். காலையில் எழுந்து நகரத் தலைவர் இன்றைக்கு வெண்டைக்காய் விலை கிலோ ஆறு ரூபாய்க்குதான் விற்க வாங்கப் பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க தேவையே இல்லை.

ஆதம் ஸ்மித் விவரித்த, இந்த தேவை/அதிகப்படி பற்றிய அலசல்கள் கடும் போட்டி இருக்கும் சந்தைகளுக்குத்தான் பொருந்தும். பிற சூழல்களுக்கு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.

கடும் போட்டி என்றால்
  • சந்தையில் வாங்குபவர்களும் விற்பவர்களும் பெருவாரியாக இருக்க வேண்டும்.
  • வாங்குபவரோ விற்பவரோ கூட்டணி அமைத்துக் கொண்டால் சரியான போட்டி நிலவரம் மறைந்து விடுகிறது.
  • எல்லோருக்கும் சந்தை நிலவரங்கள் முழுமையாக சரியாகத் தெரிந்திருக்க வேண்டும்.
    ஒருவருக்கு மட்டும், கோயம்பேடுக்கு வரும் லாரிகள் நாளை வேலை நிறுத்தம் செய்யப் போகின்றன என்ற நிலவரம் தெரிந்து பிறருக்குத் தெரியாமல் இருந்தால், அந்த ஒருவருக்கு போட்டியிலிருந்து விலக்குக் கிடைத்து விடுகிறது. அன்று முழுவதும் அவர் நிறைய காய்கறிகளை வாங்கிக் குவித்து அடுத்த நாள் அதிக விலையில் விற்க ஆரம்பித்து விடுவார்.

நடைமுறையில் விலை எப்படி தீர்மானிக்கப் படுகிறது?

இன்றைக்குச் சந்தைக்குப் போனால் மாம்பழங்கள் குவிந்து கிடக்கின்றன. இரண்டு நாட்கள் போனால் அழுகி விடும். விலை கிலோவுக்கு இருபது ரூபாய். சிலர் வாங்கிப் போகிறார்கள். சிலருக்கு விலை கட்டுப்படி ஆகவில்லை.

ஒரு கடைக்காரர் விலையை உயர்த்தி விட்டால் யாரும் அங்கே போக மாட்டார்கள். ஒருவர் விலையை பதினைந்து ரூபாய் என்று குறைத்துக் கொண்டால் அவரது சரக்கு முதலில் தீர்ந்து விடும்.

இருபது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தால் போகிற போக்கில் பாதிப் பழம் வீணாகிப் போய் விடும். கையில் இருக்கும் ஆயிரம் கிலோவுக்கு இருபது ரூபாய் வீதம் விற்றால் ஐநூறு கிலோ விற்று பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். மீதி ஐநூறு கிலோ மண்ணாகிப் போகும்.

அதை விட விலையைக் குறைத்து பதினைந்து ரூபாய்க்கு விற்போமே என்றால் ஆயிரம் கிலோவும் விற்றுப் போய் பதினைந்தாயிரம் கிடைத்து விடும். "வெலைய எறக்குப்பா, போனா வராது, வந்தா வராது" என்று கூவ ஆரம்பித்து விடுகிறார். வாங்கின விலை பத்தாயிரத்துக்கு, செலவுகள் போக ஆயிரம் ரூபாயாவது மிஞ்சி விடும் என்று திருப்தி.

அதே நேரம், 'நாளைக்கு விலை குறைச்சுதான் வாங்கிக் கொள்ளணும். ஆயிரம் கிலோ எட்டாயிரம் ரூபாய்க்குத் தந்தால் வாங்கணும்' என்று மனதில் முடிவு செய்து கொள்கிறார். 'ஆயிரம் ரூபாய்க்காக இப்படி நாளைக்கும் மல்லாட முடியாது, ஒரு மூவாயிரமாவது நிக்கணும்' இது இவரது கணக்கு.

இவருக்கு சரக்குக் கொடுக்கும் மொத்த வியாபாரிக்கும் இது மாதிரி மனம் ஓடி விலையைக் குறைத்துக் கொள்கிறார், அப்படியே அந்தக் குறைப்பு மாம்பழம் விளைக்கும் விவசாயிக்குப் போய்ச் சேர்கிறது.

"சரி கோயம்பேட்டுக்கு விலை போகலை, திருச்சி பக்கமா அனுப்புவோம்" என்று ஒரு சிலர் தீர்மானிக்க, கோயம்பேட்டுக்கு வரும் மாம்பழங்களின் எண்ணிக்கைக் குறைந்து விடுகிறது.

இப்படிச் சந்தைக்கு வந்து சேரும் எல்லாப் பொருளும் விற்றுத் தீர்ந்து விடும் நிலையில் விலை அமைந்து விடுகிறது.

இதில் இரண்டு மூன்று கவனத்துக்குரியவை.
  1. வாங்குபவர்கள் குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்க என்ன காரணம்?
  2. விற்பவர்கள் குறிப்பிட்ட விலைக்கு விற்க என்ன காரணங்கள்?
  3. எல்லோருக்கும் ஒரே விலை என்றால் அதிக விலைக்கு வாங்கியிருக்கக் கூடியவருக்கு லாபம்தானே!
  4. அதே போல, குறைந்த விலைக்கு விற்கத் தயாராக இருந்தவருக்கும் அதிக விலை கிடைத்து விடுகிறதே!

7 கருத்துகள்:

அருள் குமார் சொன்னது…

//விவசாயியிடம் தன் குடும்பத்துக்குத் தேவை போக உபரி நெல் இருப்பதால் அதை விற்க முனைகிறார் - இது அதிகப்படி.
//

இதை அதிகப்படி ஏன்றா எடுத்துக்கொள்வது?! விற்பதற்காகத்தானே தன் தேவைக்கும் அதிகமாக பயிரிடுகிறார்கள்?!

என்னைக்கேட்டால், எல்லோராலும் தனக்குத்தேவையான எல்லாமும் செய்துகொள்ள முடியாது என்பதால், தனக்கு உற்பத்தி செய்யத்தெரிந்ததை தன் தேவைக்கு போக(தனக்குத் தேவைபடாமலேயுமிருக்கலாம்) அதிகப்படியாக செய்து, அதன்மூலம் தனக்குத் தேவையானதை பெற்றுக்கொள்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களைச் சொல்லும் பின்னூட்டங்களுக்கும் பரிசு உண்டுதானே ;)

மா சிவகுமார் சொன்னது…

ஆமா அருள். அவர்களுக்குத் தெரிந்த தொழிலை முழு நேரமும் செய்தால் விளைச்சல் விற்கும் அளவுக்குக் கிடைத்து தேவைப்படும் மற்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அந்த அதிகப்படியை விற்று பிற பொருட்களை வாங்கிக் கொள்ள சந்தை இருக்கிறது என்ற நம்பிக்கை இருப்பதால்தான் அவர் விவசாயம் மட்டும் செய்கிறார்.

இதையும் பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

சீமாச்சு.. சொன்னது…

அன்பு சிவகுமார்,
நல்லா எழுதறீங்க.. தொடர்ந்து எழுதுங்கள்.. தொடர்ந்து படிக்கிறேன்.

economics படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. என் குடும்பத்திலேயே என் தங்கை BA (Econ), MA (hist), B.Ed தான். வீட்டில் எகனாமிக்ஸ் புத்தகங்கள் எங்கும் இறைந்து கிடக்கும் காலமெல்லாம் இருந்தது.. எனக்குத்தான் புரிந்ததில்லை..

உங்கள் புண்ணியத்தில் இப்பொழுது மறுபடியும் முயல்கிறேன்.

நான் அடுத்த முறை இந்தியா வரும் பொழுது உங்களை சந்திக்க விருப்பம்.

அன்புடன்,
சீமாச்சு...

Badri Seshadri சொன்னது…

சிவா: Information symmetry - "எல்லோருக்கும் சந்தை நிலவரங்கள் முழுமையாக சரியாகத் தெரிந்திருக்க வேண்டும்" - இதில் மற்றொரு விஷயமும் உண்டு.

முழு விவரம் என்பது மேலோட்டமாகத் தெரியக்கூடியது. ஆனால் அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதிலிருந்து எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்கத் தெரியாததால் பலர் ஏமாந்து போகிறார்கள். இது கல்விக்குறைவால் வருவது.

தகவல் தெரிந்த ஒருவர், அல்லது 'தனக்குத்தான் தகவல் தெரியும்' என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் கத்திரிக்காயையோ அல்லது பங்குச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளையோ வேண்டிய அளவுக்கு வாங்கித்தள்ளி, மறுநாள் அதன் பலனை (நல்லதோ, கெட்டதோ) அனுபவிப்பார். அது பெரும்பாலும் speculation வகையைச் சார்ந்தது.

ஆனால் தீர ஆராய்ந்து இப்படித்தான் அடுத்த சில வருடங்களில் சந்தை பயனிக்கப்போகிறது, இன்ன மாதிரியான சேவைகளும் பொருள்களும்தான் சந்தைக்குத் தேவை என்று கணித்து அவற்றை உற்பத்தி செய்து, அல்லது வாங்கி வைத்து, risk எடுத்துச் செயலாற்றக்கூடியவர்கள் அதிக லாபம் பெறுகிறார்கள். (நஷ்டமும் அடைவதுண்டு!)

அந்த வகையில், ஒருவிதத்தில், information asymmetry இல்லாமல் போனாலும் analysis asymmetry எப்பொழுதும் இருந்துகொண்டுதான் உள்ளது. அதுதான் தொழில் முனைவோருக்கு வரப்பிரசாதமாகவும் உள்ளது.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சீமாச்சு,

பொருளாதரப் படிப்பு எல்லோருமே படிக்க வேண்டிய ஒன்று. அதை முறையாக நமக்கெல்லாம் கற்றுக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய் விட்டாலும், இது போலப் படித்ததைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், பிறர் அனுபவப் பாடங்கள் மூலமாகவும் கற்றுத் தேர்ந்து கொள்ளலாம்.

இந்தியா எப்போது வருகிறீர்கள்?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

சரியான குறிப்பு பத்ரி.

பொருளாதர ஏடுகள் விவரிக்கும் சந்தைகள் மிக எளிமையானவை. ஆனால் நடைமுறையில் நீங்கள் சொல்வது போல தகவலைச் சரிவரப் புரிந்து கொண்டு அலசிச் செயல்படுபவர்களுக்கு ஆதாயம் கிடைத்து விடுகிறது. பொருளாதாரப் பரவலாக்கமும், உலக மயமாக்கமும் விரிய விரிய இந்தச் சிக்கல்கள் கூடிக் கொண்டே போகும். இதைச் சரிக்கட்ட இணையம், மென்பொருள் மூலமாக ஒவ்வொருவருக்கும் தேவையான தகவல்கள் போய்ச் சேர்ந்து அலசலும் கிடைக்க வழி இருக்க வேண்டும். அப்போதுதான் சந்தைப் பரிமாற்றங்களின் முழுப்பயனையும் நாம் பெற முடியும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

கவிதா கெஜானன் மின்னஞ்சலில் அனுப்பியக் கருத்து.

விலையை தீர்மானிப்பது,

ஒன்று பொருளின் தேவை
பொருளின் தரம்
பொருள் செய்ய தேவையான முதலீடு
பொருள் தயாரிக்க தேவைபடும் உழைப்பு
பொருள் தயாரிக்கும் நேரம்
லாபம்

ஒரு பொருளின் தேவை அதிகபடியாக இருக்கும் போது அது எத்தனை விலையாக இருந்தாலும் வாங்க மக்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பொருளின் தேவைப்பாடு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதன் விலையும் அதன் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் அரசாங்கம் தலையிட்டு விலையை தீர்மானிக்கலாம்

பொருளின் தரம் என்று வரும் போது, மூன்று பிரிவுகளாகத்தான் எல்லா பொருட்களின் தரமும் உள்ளது. வறுமையில் இருப்பவர்கள் வாங்க அவர்களின் பணம் கொடுத்து வாங்கும் படியாக தரத்துடன், விலை குறைவாக பொருட்கள் கிடைக்கின்றன். சோப்பு, துணிதுவைக்கும் சோப்பு பவடர் போன்றவை எடுத்து காட்டுகள். அதில் மேலும் நடுத்தர மக்களுக்கு, வசதியானவர்களுக்கு என்று தரமும், விலையும் இருக்கும் படியாக தான் தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள். இதற்கு வியாபார உத்திகாரணம். ஒரு மட்ட மக்களை மட்டுமே நம்பி, அவர்கள் வியாபாரம் செய்ய முடியாது, செய்தால் அவர்கள் சம்பாதிக்கவும் முடியாது. எல்லோராலும் ஒரே தரமுடைய பொருட்களையோ அல்லது ஒரே விலையுடைய பொருளையோ வாங்க முடியாது. அதற்கு நம் பொருளாதாரமும் இடம் கொடுக்காது.

எங்களை தனிப்பட்ட முறையில் எடுத்து கொண்டால், எல்லா பொருட்களுமே விலையை விட தரத்தை பார்த்து வாங்குகிறோம். அதற்காக அதிக விலையாக இருந்தாலும் வாங்கிவிட முடியாது. தரம் நல்லதாக இருந்தால் நாள் பட்டு வரும் என்பது நம்பிக்கை. ஒரு சமய முதலீடாக இருந்தால், (TV, fridge, forniture) போன்றவை விலை அதிகமாக இருந்தாலும் வாங்கிவிடுவது. மற்ற அன்றாட பொருட்கள் ஓரளவு நல்ல தரத்துடன் பார்த்து வாங்குவது.

தரமான, விளம்பரங்களுக்கு மயங்காமல், அதிக ஆர்வத்துடனும், ஆசையுடனும் தேவைக்கு அதிகமாக வாங்காமல் இருந்தால் நம் பொருளாதாரம் நம் கையில் இருக்கும் நம் கையை கடிக்காது.