திங்கள், ஆகஸ்ட் 21, 2006

அரசாங்கம் தேவையா? (economics 7)

தனி மனித சுயநலங்களில் அரசாங்கங்க மூலமாக சமூகம் கட்டுப்பாடு செலுத்த வேண்டும் என்பதும் இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கொள்கையாகி விட்டது. எங்கெல்லாம் அரசாங்கத்துக்கு வேலை?

  1. சந்தைப் போட்டியாளர்களை நெறிப்படுத்துதல்

    எல்லோரும் சமமாகப் போட்டியிடும் நிலையில் கொடுக்கல் வாங்கல் சரியான முடிவுகளைக் கொடுக்கும் என்பதுதான் ஆதம் ஸ்மித்தின் அலசல் முடிவு. ஆனால் நடப்பில் ஒரு சிலர், ஒரு சில நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ந்து போட்டியை ஒழித்து விடுகின்றன. அத்தகைய நிலையில், சந்தைப் பொருளாதாரம் சரிவர இயங்க முடியாது.

    ஒரு பெரிய தொழிற்சாலையில் வேலை கேட்டுப் போகும் தொழிலாளி அவர் சுயநலத்தை அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டால் அந்தத் தொழிற்சாலை, தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சு அவரை சக்கையாக வெளித் தள்ளி விடும். குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ளும்.

    சுமங்கலி கேபிள் நிறுவனம் தனிப் பெரும் ஆதிக்கம் செலுத்துவதால் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களை வளர விடாமல் தடுத்து விடும். பொருட்களில் கலப்படம் செய்து விற்பவர்கள் பெருகி விடுவார்கள்.

    இது மாதிரி போட்டியை ஒழித்து விடும் காரணங்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தும் வேலை.

  2. இரண்டாவதாக சந்தைக்குத் தொடர்பில்லாத விளைவுகள்
    தொழிற்சாலை செயல்படுவதால் வரும் மாசுக்களை வெளியிட்டு விடுவதால் பொருளை வாங்குபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, ஆனால் தொழிற்சாலை இருக்கும் இடத்தில் நிலமும் நீரும் காற்றும் கெட்டுப் போய் விடும். யாரும் தட்டிக் கேட்கா விட்டால், தொழிற்சாலை இந்த அழுக்குகளை சுத்தம் செய்து கொள்ள சந்தைப் பரிமாற்றம் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.

    பெரிய ஒரு பல்கலைக் கழகம் கட்டினால், அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்தால் யாருக்கும் உடனடி பலன் கிடைக்கப் போவதில்லை, எதிர்காலப் பலனும் நிச்சயம் இல்லை. இது மாதிரி நல்ல வேலைகளைச் செய்யவும் சந்தைக் கொடுக்கல் வாங்கல் உதவப் போவதில்லை.

    காவல் துறை இயங்கினால் எல்லாருக்கும் பாதுகாப்பு, ஆனால் எல்லோரும் சேர்ந்து காவல் அமைத்துக் கொண்டால் ஒருவர் காசு கொடுக்காமலேயே அந்தப் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம். இது மாதிரி சேவைகளுக்கும் சந்தை முறை சரிப்படாது.

    இதற்கும் அரசாங்கம் காலெடுத்து வைக்க வேண்டும்.

  3. மூன்றாவதாக சமத்துவம்
    • என் தாத்தா நிறைய சொத்து சேர்த்து வைத்திருந்தால் எனக்கு வாய்ப்புகள் அதிகம்,
    • வறிய குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு வாய்ப்புகள் மறுக்கப் படுகின்றன.
    • உடல், மனக் குறைபாடு உடையவர்கள், வயதானவர்கள் இவர்களைக் கவனிப்பது யார்?

    சிவஞானம்ஜி சொன்னது போல இப்படி சமூக வளங்கள் சரிவர பரவாமல் இருக்கும் போது சில முட்டாள்தனமாக வேலைகளை நமது மந்திரக் கோல் செய்யும். ஆயிரக் கணக்கான மக்கள் உணவு இல்லாமல் திண்டாடும் போது, அந்த உணவை எடுத்து வர வேண்டிய சரக்கு வண்டிகள், பணம் குவிந்த சீமான்களின் வீட்டு சீமாட்டிகளுக்கு கறுப்பு ரோஜாவை சுமந்து வர அனுப்பப்பட்டு விடும். ஏனென்றால் சந்தைப் பரிமாற்றத்தில் அதில்தான் லாபம் அதிகம்.

    சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் பெரும் வருமானத்தை சமூகத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் பயன்படுத்த வழி செய்வதும் அரசாங்கத்தின் பணிகளில் ஒன்று.

இப்படி அரசாங்கத்தின் வேலைகளைப் பற்றி பெரிய கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் எது எது அரசாங்கம் செய்ய வேண்டியது என்பதில் கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து காங்கிரசு ஆட்சிக்கும், பாரதீய ஜனதா ஆட்சிக்கும் பெரிய வேறுபாடுகள். இதற்குத்தான் இத்தனை கோடி செலவில் தேர்தல்கள், கட்சிகள், ஆட்சி மாற்றங்கள்.

7 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

நாங்க கட்டிடம் கட்டினோமா,பணத்தை வாங்கினோமா என்று அடுத்த வேலைக்குப் போய்விடுவோம்.
அந்த தொழிற்சாலைக்கு பின்பு இவ்வளவு விஷயம் இருப்பது இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் குமார்,

பொருளாதாரம் படிக்கும் போது விரியும் புரிதல்கள் ஒரு அற்புத உலகம் போல இருக்கும். ஏற்கனவே தினமும் செய்து வரும் செயல்களுக்குப் பின்னால் இவ்வளவு நுணுக்கமா என்று வியப்பு ஏற்படும். நல்ல புத்தகங்களாகப் படித்தும் பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

டண்டணக்கா சொன்னது…

---------
ஒரு நாட்டின் அரசு (உள்) சந்தை பொருளாதாரத்தில், இரண்டு வகையான நுழையீட்டு செயல்பாடுகள் கை கொள்ள வேண்டியிருக்கும், அவை:
(1). சந்தை ஒழுக்கப்பாடு செயல்கள்.
(2). சந்தை (கிரியா)ஊக்க செயல்கள்.

ஒழுக்கம்/ஊக்கம் - இவை இரண்டையும் தானாக செய்து கொள்ள சந்தைக்கு தானாக தெரியாது, சத்தும் கிடையாது.

ஒழுக்கம் பொருத்தவரை, சந்தை பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாட்டின் அரசு, உள் நாட்டு சந்தையில் கீழ்கண்டவைகளை கண்காணிக்க வேண்டும்:
(*) செயற்கையாக சந்தையை கட்டுபடுத்துதல்.
(*) பொருள்களின் விலையை ஆட்டுவித்தல்.
(*) இதர ஏகபோக ஆதிக்க முனைவு.
(*) முறை தவறிய சந்தை பயிற்சிகள்/முயற்சிகள் (உன்fஐர் மர்கெட்/cஒம்பெடிடிஒன் ப்ரcடிcஎச்).

சந்தை பொருளாதாரதரத்தில், சுயநலத்தின் பரிணாம நிலையாக மேற்கண்ட போக்கிரித்தனங்களை பல நிருவனங்க்கள் செயல்படுத்த முயலும். இத்தகைய போக்கிரித்தனமான செயல்பாடுகள் மூலம் சந்தை பொருளாதார சூழியிலை மெதுவாக் துருப்பிடிக்க செய்து, இறுதியாக சந்தை பொருளாதாரத்தை நீர்துப் போக துவங்கும். அத்தகைய சந்தையை சேதப்படுத்தும் செயல்களை தானாக சரிசெய்து கொள்ள சந்தை பொருளாதாரத்திற்க்கு தெரியாது அல்லது சத்து கிடையாது.

எனவே அந்த நாட்டின் அரசு கீழ் கண்டவற்றை செயல்படுத்த வேண்டும்:
(*) சந்தை போக்கிரிதனங்களை களையெடுத்தல்.
(*) ஏகபோக நிறுவனங்களை பலத்தை மட்டுப்படுத்துதல்.
(*) பெரிய நிறுவனங்களை பிரித்து முறைப்படுத்தல்.
(*) புதிய சந்தை விதிகளை விதிகளை நிறுவுதல்.
(*) சந்தையில் சமநிலை போட்டிக்கான காரணிகளை நிலை நிறுத்துதல்/பாதுகாத்தல்.

என்னடா இப்டி தானா செயல்படுற ஓர் சந்தை முறைபாடை ஒரு அரசு நுழையீடு செய்வது சரியா என தோன்றலாம். பலருடைய சுயநலத்தின் தேவைக்கு கூட்டகா செயல்படும் பொருளாதார முறையில், தனது சந்தையின் சுயநலத்தை காக்க ஒரு அரசு முனைவது முறையே.

-------
ஊக்கம் பொருத்தவரை, ஒரு அரசு.... ரொம்ப பெருசா போகுது, அப்புறமா கமெண்ட் போடுறேன்.
-------

மா சிவகுமார் சொன்னது…

நன்றி டண்டணக்கா,

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

கவிதா கெஜானன் மின்னஞ்சலில் அனுப்பியக் கருத்து.

1.சந்தைப் போட்டியாளர்களை நெறிப்படுத்துதல்

ஓரளவிற்க்கு இது சரியாக இருப்பாதாக கருதுகிறேன். ஏனென்றால், ஒவ்வொரு பொருளுக்கும், அதை சார்ந்த வியாபரிகளுக்கும் சங்கங்கள் இருக்கிறது, எடுத்துக்காட்டாக காய்கறி எடுத்துக்கொண்டால், விற்பனை விலை, கொள்முதல் விலை என வியாபாரிகள் சங்கம் ஒன்று சேர்ந்து தான் முடிவுசெய்கின்றன.

அடுத்து அரசாங்க, தனியார் நிறுவனங்களை எடுத்து க்கொண்டால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தொழிலாளிகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, குடிநீர் முதல் சம்பளம்,ஓய்வு அறை, உணவகம் என எல்லா வசதிகளும் செய்து தர நம்மிடம் சட்டங்கள் இருக்கின்றன, மேலும் அதை செயற்படுத்தாத தொழிற்சாலைகள் யூனியன் அமைப்புகளின் மூலம் செயற்படுத்தபடுகின்றன.


இது போன்று நெறிப்படுத்த அவசியம் தேவைபடுவது, அரசாங்க உதவியுடனும், பணப்பலத்தாலும் எதையும் சரியாக கடைப்பிடிக்காமல் சுயநலமாக நடக்கும் சிலரை மட்டுமே கவனித்து தவறுகளை திருத்தினால் எல்லாம் நெறியாக நடக்கும் என்பது என் கருத்து.


2. மூன்றாவதாக சமத்துவம்
//என் தாத்தா நிறைய சொத்து சேர்த்து வைத்திருந்தால் எனக்கு வாய்ப்புகள் அதிகம்,
//வறிய குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு வாய்ப்புகள் மறுக்கப் படுகின்றன.
//உடல், மனக் குறைபாடு உடையவர்கள், வயதானவர்கள் இவர்களைக் கவனிப்பது யார்?

பொதுவாக நாம் செய்யும் தொழிலை கொண்டு சாதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அது மாறி, நம் பொருளாதார அடிப்படையில் நாம் பிரிக்கப்பட்டால், இப்படி வறியவன், எளியவன் நிலை மாற வாய்ப்புகள் வரும். அதாவது பொருளாதார அடைப்படையில் நாம் பிரிக்கப்படும் போது, முதலில் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு முதலிடம் கொடுத்து அவர்களை எளிதாக முன்னுக்கு கொண்டு வரமுடியும்.

உடல், மன குறைப்பாடு உடையவர்களுக்கு முதலில் தேவைப்படுவது, தன்னம்பிக்கை. அதற்கான தனியே அரசாங்கமோ, தன்னார்வ இயக்கங்களோ முன் வந்து உதவ வேண்டும், தன்னம்பிக்கை கிடைத்து விட்டால் நம்மை விடவும் அவர்கள் பல சாலிகளாக இருப்பார்கள் என்பது உண்மை.

முதலில் நிரந்தர அல்லது வளமான பொருதார சீர்த்திருத்தை கொண்டு வர நமக்கு நிரந்தர அரசு வேண்டும். அடிக்கடி சுயநலத்திற்காக கட்சிகளை மாற்றியும், எவ்வளவு ஊழல் நடந்தாலும் கண்மூடித்திறப்பதற்குள் காணாமல் போகி திரும்ப திரும்ப அவர்களையே நாம் தேர்ந்தெடுத்து தலைவராக அமரவைப்பது மாற வேண்டும். இதற்கு நம் அடிப்படை கல்விமுறை மாற வேண்டும், அனைவருக்கும் கல்வி வேண்டும். நல்ல கல்வி அறிவு மட்டுமே நம்மின் பல பிரச்சனைகளை சரிசெய்யமுடியும்.

கவிதா | Kavitha சொன்னது…

சிவகுமார்ஜி,

பெயரில் மாற்றம், கவிதா கெஜானனன். :)

மா சிவகுமார் சொன்னது…

சரி செய்து விட்டேன், கவிதா. தவறுக்கு மன்னிக்கவும் :-)

அன்புடன்,

மா சிவகுமார்