திங்கள், செப்டம்பர் 25, 2006

பிச்சை எடுக்கும் லட்சாதிபதிகள்

இன்றைய இந்து பத்திரிகையில் சென்னை பக்கத்தில் ஒருவரின் ஆசிரியருக்கு கடிதம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சமையல் வாயு வாங்குபவர்கள் ரேஷன் அட்டையைக் காட்டினால் ஒரு அட்டைக்கு ஒரு உருளை என்று அளவாகத்தான் கொடுப்பேன் என்று கூறி விட்டார்களாம். பல பணக்காரக் குடும்பங்கள், நியாய விலைக் கடை பொருட்கள் தேவையில்லை என்று அட்டையே வாங்கவில்லையாம். அவர்களை பொது வினியோகத்துறையிடம் இருந்து அதை உறுதிப்படுத்தி கடிதம் வாங்கி வந்தால்தான் தொடர்ந்து வாயு உருளை கொடுப்போம் என்று கூறி விட்டார்களாம்.

அரசாங்கத்தின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறார் கடிதம் எழுதியவர். இந்தத் தொல்லைகளைக் கொடுத்தால் பணக்காரர்கள் தனியார் நிறுவனங்களில் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்ளப் போய் விடட்டும் என்று அரசாங்கம் கை கழுவி விட்டு விட்டதாக வருத்தப்படுகிறார்.

எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அரசு சார் நிறுவனங்களில் சமையல் வாயு இணைப்பு மூலமாக ஒரு உருளைக்கு நூற்றிப் பத்து ரூபாய் வீதம் மீதப் படுத்துவதை எப்படி விட்டுக் கொடுத்து விட முடியும்? தனியார் நிறுவன வாயு இணைப்பு பெற்றுக் கொண்டால் மாதம் இரண்டு உருளைக்கு இருநூற்று இருபது ரூபாய் அதிகம் செலவானால் பணக்காரர்களின் கதி என்ன ஆகும்?

இப்படி எல்லாம் பணத்தை வீணாக்கினால் எப்படி புதிதாக வந்துள்ள உயர் துல்லிய தொலைக்காட்சி பெட்டி வாங்க முடியும்? எப்படி வெளியில் போய் அமெரிக்க துரித உணவு சாப்பிட முடியும்? ஆண்டு இறுதியில் வெளிநாட்டு சுற்றுலா போக முடியாமல் போய் விட்டால்? அட்சய திருதியைக்கு நகை வாங்குவது எப்படி?

10 கருத்துகள்:

ஆவி அம்மணி சொன்னது…

//இப்படி எல்லாம் பணத்தை வீணாக்கினால் எப்படி புதிதாக வந்துள்ள உயர் துல்லிய தொலைக்காட்சி பெட்டி வாங்க முடியும்? எப்படி வெளியில் போய் அமெரிக்க துரித உணவு சாப்பிட முடியும்? ஆண்டு இறுதியில் வெளிநாட்டு சுற்றுலா போக முடியாமல் போய் விட்டால்? அட்சய திருதியைக்கு நகை வாங்குவது எப்படி?//

சரியான கேள்விகள்.

பொருளாதார அடிப்படையில்தான் மானியம் பெறும் சிலிண்டர்கள் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லி விட்டால் கூட வசதி படைத்தவர்கள் அதற்கும் சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

Santhosh சொன்னது…

சரியாக கேட்டு இருக்கிங்க சிவக்குமார்.

ஓகை சொன்னது…

மிகவும் வன்மையாக கண்டிக்கப் படவேண்டிய பதிவு.

ரேஷன் அட்டை வாங்காதவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்ற உங்கள் முடிவுக்கு ஆதாரம் என்ன?

பணக்காரர்கள் என்று நீங்கள் குறிப்படப்பட்டவர்களுக்கான உங்கள் வரைமுறைதான் என்ன?

அட்டைதாரர்களுக்கு மட்டுமே உருளைகள் என்ற விதி புதிதாக வருவதற்கு என்ன அடிப்படை?

அரசினால் மான்யமளிக்கப்பட்டு வருவதால் உருளைகள் ஏழைகளுக்கு மட்டுமே என்பது அடிப்படயானால், குறிப்பிட்ட வருமானத்திற்குமேல் இருப்பவர்களுக்கும் அட்டை இல்லாதவர்களுக்கும் மான்யம் நீக்கப்பட்ட விலையில் உருளைகள் அளிக்கப் படவேண்டுமே தவிர அட்டை இல்லையென்றால் உருளை இல்லை என்பது அடாவடித்தனம்.

அதிக விலை கொடுத்து உருளை வாங்காமல் மிச்சம் பிடிக்கும் பணத்தில்தான் புதிதாக வந்துள்ள உயர் துல்லிய தொலைக்காட்சி பெட்டி, வெளியில் போய் அமெரிக்க துரித உணவு, ஆண்டு இறுதியில் வெளிநாட்டு சுற்றுலா, அட்சய திருதியைக்கு நகை இவையெல்லாம் வாங்க முடிகிறது என்று நீங்கள் சொல்வது எந்த வகைப் பிரச்சாரம்?

மாதம் நூறு ரூபாய் மிச்சம் பிடித்தாலும் உயர் தொல்லிய தொலைக்காட்ட்சிப் பெட்டி வாங்குவதற்கு ஆயிரம் மாதங்களுக்கு மேல் அதாவது என்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மிச்சம் பிடிக்க வேண்டும்.

எப்போதாவது அமெரிக்க துரித உணவு சாப்பிட அதிகம் செலவு செய்யத் தேவையில்லை.

ஆண்டு இறுதியில் வெளிநாட்டு சுற்றுலா செல்வதில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றவர்கள் என்ற கணக்கை எடுத்து பாருங்களேன்.

சென்னை உஸ்மான் சாலைக்கு அட்சயத் திருதைக்கு வந்து பாருங்கள் யார் யாரெல்லாம் நகை வாங்குகிறார்கள் என்று. ஐம்பது ரூபாய் மெட்டியிலிருந்து அட்சயத் த்ருதைக்கு நகை வாங்கும் மக்கள் இருக்கிறார்கள்.

"புன்னகை மலர்களைத் தூவுங்கள். வெறுப்பு முட்களை எரித்து விடுங்கள்"

மா சிவகுமார் சொன்னது…

உங்கள் நியாயங்களை ஏற்றுக் கொள்கிறேன் ஓகை. ஆனாலும் இந்த உண்மைகளையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, முதியோருக்கு வேட்டிசேலை போன்ற திட்டங்களை கேலி செய்யும் பலர் தமது சொந்த வாழ்க்கையில் அரசு மானியங்களை, தமக்கு மானியத் தேவை இல்லாத போதிலும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. சமையல் வாயு தனியார் நிறுவனத்தில் வாங்கினால் நூறு ரூபாய் அதிகம். அடித்துப் பிடித்து அரசு மானிய விலை உருளை வாங்குவதில்தான் கோடியில் புரளும் பணக்காரர்களும் ஈடுபடுகிறார்கள்.

//ஐம்பது ரூபாய் மெட்டியிலிருந்து அட்சயத் த்ருதைக்கு நகை வாங்கும் மக்கள் இருக்கிறார்கள்.//

இரண்டு ரூபாய் அரிசிக்கு நியாயவிலைக் கடையில் நிற்கும், வீட்டு வேலை செய்யும் அம்மா கூட, அந்தக் காசை மிச்சப்படுத்தி தங்கமும் போரூர் ஏரியில் புறம்போக்கு நிலமும் வாங்குகிறாள்.

//பணக்காரர்கள் என்று நீங்கள் குறிப்படப்பட்டவர்களுக்கான உங்கள் வரைமுறைதான் என்ன?//

ஒவ்வொருவரும் தனதளவில் மானியங்களைத் தவிர்ப்பதில் முயற்சி செய்யலாம். சமையல் வாயுக்கு தனியார் நிறுவன இணைப்பு, மின்சார இணைப்பு வணிக விலையில், ரயிலில் வயதானவர்களுக்கான சலுகை தவிர்ப்பு என்று வசதி உள்ளவர்கள் கொஞ்சம் மனசாட்சியோடு செயல்படலாம்.

வெள்ள நிவாரணமாக வீட்டுக்கு இரண்டாயிரம் கொடுக்கப்பட்ட போது காரில் வந்து அதை வாங்கிப் போனவர்களைப் பற்றி நண்பர் ஒருவர் கூறினார். 'கிடைப்பதை ஏன் விட வேண்டும், நாம் வாங்கா விட்டால் வேறு யாராவது நம் பெயரில் வாங்கிப் போய் விடுவார்கள்' என்று ஏதாவது சாக்கு சொல்லி சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.

//"புன்னகை மலர்களைத் தூவுங்கள். வெறுப்பு முட்களை எரித்து விடுங்கள்"//

சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

இது வெறுப்பை எறிவதாகப் பட்டதா என்ன? கிண்டலாக எழுதலாம் என்றுதான் குத்தலான கேள்விகளை கேட்டிருந்தேன். நான் இது மாதிரி கிண்டல் வேலையில் இறங்கும் போதெல்லாம் அது புண்படுத்துவதாகவே அமைந்து விடுகிறது. மனமார்ந்த வருத்தங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

ஏன் சிவா, அந்த மிச்சம்பிடிக்கும் காசை அவுங்க நீங்க எழுதுனமாதிரிதான் செலவு செய்வாங்களா?
அனாதை இல்லங்களுக்கோ, இல்லை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கோ கூட தருமம் செய்றவங்களும்
இருக்கமாட்டாங்களா?

வெளியே சொல்லாம எத்தனை லட்சம்பேர் ச்சின்னச்சின்னதா
பள்ளிக்கூடத்துப் பசங்களுக்கு நோட்டு, பென்சில் வாங்கித்தர்றது இப்படி
தர்மம் செய்றாங்க தெரியுமா?

கவிதா | Kavitha சொன்னது…

முன்பே ஒருமுறை இதை சொல்லியிருந்தேன்.. பொருளாதார அடிப்படையில் பிரித்து, அடையாள அட்டையாக மட்டுமே ரேஷன் கார்டை பணக்காரர்களுக்கு கொடுக்கவேண்டும். அப்படி கொடுத்தால் இப்படி கடிதம் எழுதி கேட்கமாட்டார்கள். பாவம்.. ரொம்பத்தான் கஷ்டபடுகிறார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

//நீங்க எழுதுனமாதிரிதான் செலவு செய்வாங்களா? //

அதுதான் அக்கா, எனக்குக் கிண்டலா எழுதவே வரவில்லை :-(

இனிமேல் கிண்டல் பண்ணனும்னா என்னளவில் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சந்தோஷ், கவிதா, அமானுஷ்ய ஆவி.

அன்புடன்,

மா சிவகுமார்

குழலி / Kuzhali சொன்னது…

மா.சிவக்குமாரா இப்படி? அய்யய்யோ என்ன இப்படி எழுதிட்டிங்க, மிக வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்... ஓ... சிவக்குமார் வேறு வருத்தம் தெரிவித்துவிட்டார், கிண்டல்களை தன்னளவில் மட்டுமே நிறுத்திக்கொள்வதாக சொல்லிவிட்டார்... சமூக அவலங்களை கிண்டல் செய்ய வெளிவந்த ஒரு ஆளின் தலையை தடவி மடக்கிப்போட்டாச்சி..... அந்த விதத்தில் சந்தோசமே....

//அனாதை இல்லங்களுக்கோ, இல்லை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கோ கூட தருமம் செய்றவங்களும்
இருக்கமாட்டாங்களா//
துளசியக்கா நீங்க சொன்னது மாதிரி தான் செலவு செய்வாங்களா? ஏன் சிவக்குமார் சொன்னது மாதிரி செலவு செய்யமாட்டார்கள் என்கிறீர்களா?

ஓகை மற்றும் துளசி அவர்களுக்கு, இலவசமின்சாரத்தையும், இரண்டு கிலோ அரிசியையும் கிண்டல் செய்பவர்கள் ஏன் நூறு ரூபாய்க்காக அரசாங்கத்திடம் மானிய பிச்சை எடுக்க வேண்டும்? அதை சிவக்குமார் கிண்டல் செய்ததில் என்ன தவறு? அப்படி மானியபிச்சை எடுப்பவர்களை தானே கிண்டல் செய்கிறார் அதை செய்யக்கூடாதா? இப்படியெல்லாம், பொதுப்புத்தியில் அடைக்காதீர்கள், பாருங்கள் சிவக்குமாருக்கு குற்ற உணர்ச்சியே வந்துவிடும் போலிருக்கு...

மா சிவகுமார் சொன்னது…

குழலி,

என்னுடைய கருத்தில் மாற்றம் எதுவுமில்லை என்றாலும் சொல்வதை பயனுள்ள சொற்களில் சொல்ல முயல வேண்டும். தேவை இல்லாத, வெறுப்பைத் தூண்டும் பாணியைத் தவிர்க்க வேண்டும்.

இதை அறிவுறுத்தத்தான் அடுத்த பதிவையும் போட்டேன்.

சொல்ல வந்ததை அடுத்தவர் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதுதான் நாம் எழுதுவதன் நோக்கம். தேவையில்லாமல் வெறுப்பைத் தூண்டி ஏன் செயற்கை மனத் தடைகளை உருவாக்க வேண்டும்?

பொதுவாக உங்களது கருத்துக்களும் எனது கருத்துக்களும் பல இடங்களில் ஒன்று படுவதை கவனித்திருக்கிறேன். மாற்றுக் கருத்து உள்ளவர்களை நோகடித்துதான் நமது கருத்தை வெளியிட வேண்டும் என்பதில் நான் மாறுபடுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்