புதன், செப்டம்பர் 27, 2006

அரைகுறைப் போட்டி (economics 21)

இன்றைக்கு நாம் பேசும் பொருளாதாரச் சுதந்திரம், போட்டிச் சந்தை என்பதெல்லாம் பொருளாதாரம் விவாதிக்கும் முழுமையான போட்டியுள்ள சந்தைகள் கிடையாது. காய்கறிகள், உணவுத் தானியங்கள், பங்குச் சந்தை போன்ற சில இடங்களில், அரசாங்கம் விழிப்பாக இருந்து ஏமாற்றுப் பேர்வழிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும் போது முழுமையான போட்டிச் சந்தை நிலவுகிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திப்பது அரைகுறை போட்டி நிலவும் சூழ்நிலைகள்தான். கடையில் போய் தொலைக் காட்சி வாங்கும் போது வெவ்வேறு நிறுவனங்களிற்கிடையே தமது பொருளை விற்க போட்டி நிலவுவது பொருளாதார வரையறைப்படி முழுமையானது இல்லை.

அதனால் கேடுகளும் கிடையாது. சில விற்பனையாளர்கள் அல்லது சில வாங்குபவர்கள் என்று எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தொழில் நுட்ப முன்னேற்றம், அளவு சேர்ந்த ஆதாயங்கள் இவற்றினால் கிடைக்கும் நன்மைகள் போட்டிச் சந்தையில் கிடைக்காமலே போகலாம்.

சில துறைகளில் ஒரே ஒரு நிறுவனம் செயல்படுவதுதான் இயற்கையாக நன்மை பயக்கும். இது மோனோபோலி எனப்படும் ஏகபோக சந்தை அமைப்பு. ஒற்றை வாங்குபவர் அல்லது விற்பவர் இருந்து மறுபக்கம் பல்லாயிரக் கணக்கான பேர் இருப்பது இந்தச் சந்தையின் இயற்கை.

  • கணினி இயங்கு தளம் என்பது ஒன்றே ஒன்று இருப்பது புதிய பயன்பாடுகளை உருவாக்குவதிலும், புதிதாகக் கணினி கற்றுக் கொள்பவர்களுக்கும், கணினிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்கவும் பெரிது உதவும்.

  • ஒரு ஊரில் ஒரே ஒரு காவல் துறை இருந்தால் போதும். இரண்டு போட்டி போடும் காவல் நிறுவனங்கள் இருந்தால் பல விரும்பத்தகாத விளைவுகள்தான் ஏற்படும்.

  • ஊரெங்கும் குழாய் அமைத்து தண்ணீர், மின்சாரம், இணையச் சேவை கொடுப்பதிலும் ஒரே நிறுவனம் செயல்பட்டால் குறைந்த செலவில் வேலையை முடிக்கலாம்.

இங்கு பெரிய சிக்கல், ஒரே நிறுவனம் செயல்படும் போது விலை, உற்பத்தி அளவு, வாடிக்கையாளர் நலன்கள் போன்றவை எப்படி சரியாக செயல்படுத்தப்படும் என்பதுதான். போட்டி இருக்கும் போது ஒருவருடன் ஒருவர் போட்டிக் கொண்டு இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கிறது. ஏக போக சந்தையில் கதை அவ்வளவு தெளிவாக இருக்காது.

இரண்டாவதாக, இரண்டுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படும் சந்தைகள். பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் இந்த வகையில் அடங்கி விடுகின்றன.
  • கோலா என்றால், பெப்சியும் - கோக்க கோலாவும்.

  • சோப்பு என்றால் லீவரும், பிராக்டர் அன்ட் கேம்பிளூம்

  • கார் என்றால் மாருதி, டாடா, யுண்டாய், ஃபோர்டு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்த வகை சந்தை அமைப்பை ஆலிகோ போலி என்கிறார்கள். சில நபர்கள் என்று பொருள்.

மூன்றாவதாக நூற்றுக்கணக்கான/ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் பொருளிலும், சேவையிலும் ஒரு சிறு வேறுபாடு இருப்பதால் விற்பவருக்கு குறுகிய அளவில் ஏகபோக ஆதிக்கம் கிடைக்கிறது.

  • சென்னையில் நூற்றுக் கணக்கான உணவகங்கள் இருந்தாலும் சரவண பவனில் சாப்பாடு தரம், சேவை பலருக்குப் பிடிப்பதால் அதைத் தேடிப் போகிறார்கள்.

  • ஒரே படம் ஓடினாலும் ஆலந்தூர் ஜோதி திரையரங்கை விட்டு விட்டு சத்தியம் வளகாத்துக்குப் போகிறோம்.

  • ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சிகை திருத்தும் நிலையம் இருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் ஆதிக்கம் இருந்தாலும் அதிகமாக முறைத்துக் கொண்டால் வாடிக்கையாளர்கள் வேறு இடம் பார்க்க மாற்றுகள் நிறைய இருக்கும். இதற்கு பெயர் போட்டியுள்ள ஏகபோகம். (monopolistic competition)

11 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

"காய்கறிகள், உணவுத் தானியங்கள், பங்குச் சந்தை போன்ற சில இடங்களில், அரசாங்கம் விழிப்பாக இருந்து ஏமாற்றுப் பேர்வழிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும் போது முழுமையான போட்டிச் சந்தை நிலவுகிறது."
மிக்க உண்மை. கூறப் போனால் இதுதான் அரசின் முக்கிய வேலை. அதை விடுத்து அரசே வியாபாரத்தை ஆரம்பித்தால் கஷ்டம்தான்.
அதே சமயம் ரயில்வே மாதிரி துறைகள் அரசிடம் இருப்பதே இந்தியாவின் தற்போதைய நிலைக்குச் சரியானது. அதிலும் கேட்டரிங் ஆகியவை அவுட்சோர்சிங் செய்ய ஆரம்பிப்பதும் காலத்தின் கட்டாயமே.

மற்றப்படி Oligopoly போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்திலும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுத்தால் அது பற்றி மேலும் படிக்க ஏதுவாக இருக்கும். தமிழ் எழுத்துக்களில் மட்டும் எழுதினால் இந்த சௌகரியம் கிடைக்காது.

பார்க்க: http://en.wikipedia.org/wiki/Oligopoly

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் சொன்னது…

//இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் ஆதிக்கம் இருந்தாலும் அதிகமாக முறைத்துக் கொண்டால் வாடிக்கையாளர்கள் வேறு இடம் பார்க்க மாற்றுகள் நிறைய இருக்கும். //


இது என்னவோ ரொம்பச்சரி.

இப்பெல்லாம் கோயில்கள்கூட இந்த மாதிரி ஆயிருச்சு.

நம்ம டோண்டு சொல்லியிருக்கறதும் ஒரு நல்ல பாயிண்ட்தான்.

மேற்கொண்டு விவரமாப் படிக்க அவர் சொன்னதுபொல் செய்தால் உதவிதான்.

ரயில்வே ஸ்டேஷனில் காய்கறி விற்பனை:-))))

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

சந்தை தொடர்பாக வகுப்பறையில்
பயன்படுத்தப்படும் சொற்கள்:

perfect competition நிறைவுப்போட்டி

imperfect competition நிறைகுறைப்
போட்டி

monopoly சர்வாதீனம்;முற்றுரிமை

discriminating monopoly விலை
பேதங்காட்டும் சர்வாதீனம்


bilateral monopoly இருமுகச்
சர்வாதீனம்




monopsony வாங்குவோர் சர்வாதீனம்

monopolistic competitin சர்வாதீனப்
போட்டி

selling costs விற்பனைச்செலவுகள்

oligopoly சில்லோர் போட்டி

duopoly இருவர் சர்வாதீனம்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி டோண்டு சார்.

//அதை விடுத்து அரசே வியாபாரத்தை ஆரம்பித்தால் கஷ்டம்தான்.//

முற்றிலும் தனியார் நிறுவனங்களின் கையில் இருப்பதை விட ஒரு அரசு நிறுவனமும் களத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கட்டுப்பாடு இருக்கும். இன்றைக்கு பிஎஸ்என்எல் இருப்பதால்தான் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு ஒரு வரம்பு உள்ளது.

//ரயில்வே மாதிரி துறைகள் அரசிடம் இருப்பதே இந்தியாவின் தற்போதைய நிலைக்குச் சரியானது.//

ரயிவே துறை தனியார் ஈடுபாட்டில் அல்லது போட்டி சூழலில் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்படும் என்பது என் கருத்து. DOT vs இப்போதைய தொலைபேசி துறை, இந்தியன் ஏர்லைன்ஸ் vs இன்றைய உள்நாட்டு விமானப் போக்குவரத்து போல போட்டி நிறுவனங்களையும் அனுமதித்தால் பொதுமக்களுக்கு வசதிகள் பெருகுவது உறுதி.

//மற்றப்படி Oligopoly போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்திலும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுத்தால் அது பற்றி மேலும் படிக்க ஏதுவாக இருக்கும்.//

done :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இப்பெல்லாம் கோயில்கள்கூட இந்த மாதிரி ஆயிருச்சு.//

கோயில்கள் கூட கொடுக்கல் வாங்கலில் ஈடுபட ஆரம்பித்து விட்டால் இந்த கதைதான். உங்கள் ஊரில் கோயில்கள் இருக்கிறதா?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிவஞானம் ஐயா.

எல்லா பதிவுகளிலும் அடிக்குறிப்புகளாக ஆங்கில சொற்களையும், நீங்கள் கொடுத்துள்ள வகுப்பறை சொற்களையும் தொகுத்து விடுகிறேன். டோண்டு சொல்வது போல மேல் விபரம் படிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க விசா,

அரசாங்கமே நடத்தும் போதும் மோனோபோலியாக இருந்தால், செலவுகளைக் குறைக்கவும், வாடிக்கையாளர் சேவை செய்யவும் ஊக்கம் இருக்காது. அதனால் பல நிறுவனங்களை (அரசு + தனியார்) போட்டி போட விட்டு, ஆட்டத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை அரசு செய்வதுதான் சிறப்பான முறையாகப் படுகிறது.

மைக்ரோசாஃப்டுக்கு அபராதம் விதிப்பது போன்றவை முதலிலேயே நடவடிக்கை எடுக்காததால் முற்றிய பிரச்சனை. 1998-99லியே மைக்ரோசாப்டை இரண்டு நிறுவனங்களாக பிரித்திருந்தால் கணினித் துறையின் வடிவமே மாறியிருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

சிவகுமார்,

-- discriminating monopoly விலை
பேதங்காட்டும் சர்வாதீனம்
-- bilateral monopoly இருமுகச்
சர்வாதீனம்
இவை இரண்டும் இனிமேல் வருமா? இவை பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.. தெரிந்து கொள்ள ஆசை..

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

நீங்கள் கேட்ட பிறகுதான் இவற்றைப் பற்றிப் படித்துப் பார்த்தேன்.

discriminating monopoly

எந்த ஒரு நிறுவனமும் தம்மால் முடிந்த வரை, கொடுக்க முடிந்தவரிடம் அதிக விலையும், அந்த விலையில் வாங்க முடியாதவர்களுக்கு குறைந்த விலையிலும் விற்றுத் தன்னுடைய ஆதாயத்தை அதிகப்படுத்திக் கொள்ள முயலும்.

பேதங்காட்டும் சர்வாதீனம் என்பது சர்வாதீன வல்லமை உள்ள நிறுவனம் வெவ்வேறு வாடிக்கையாளரை வெவ்வேறு முறையில் நடத்துவது. இது எந்த ஒரு மோனோபோலியின் இயல்பான நடவடிக்கையாக இருக்கும்.

மைக்ரோசாஃப்டு மென்பொருட்களின் விலை Home Edition, Professional Edition, Media Center Edition, Bulk licencing (for corporates), multi user licencing, OEM licencing என்று ஒவ்வொரு வகை வாங்குபவருக்கும் வேறுபடுவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

bilateral monopoly

monopoly என்பது ஒரே விற்பனையாளரும் பல வாடிக்கையாளரும் இருக்கும் சந்தை (இந்தியன் ரயில் சேவை) . monopsony என்பது ஒரே வாங்குபவரும் பல விற்பனையாளர்களும் இருக்கும் நிலைமை (ஒரு பகுதியில் விளையும் கரும்பு முழுவதும் ஒரே ஆலை வாங்கிக் கொள்வது) .

இருமுகச் சர்வாதீனம் என்பது இரண்டு பக்கமும் ஒரே ஆள். விற்பவரை விட்டால் வாங்குபவருக்கு ஆளில்லை, வாங்குபவரை விட்டால் விற்பவருக்கு ஆளில்லை. வணிக உலகில் இது மிக அரிதாகவே இருந்தாலும் அரசியல் பேரங்களில் (இலங்கை அரசு - விடுதலைப் புலிகள், இஸ்ரேல் - PLO) இதைப் பார்க்கலாம். ஒவ்வொரு தரப்பும் எதிராளிக்கு போட்டியை உருவாக்க முயலும் (ஆங்கிலேய அரசு இந்தியாவில் பிரித்தாள முயன்றது போல).

பொருளாதார வாழ்வில் தமிழக அரசு ஆசிரியர்கள் சங்கத்துடன் சம்பள உயர்வு பற்றி பேசுவதைச் சொல்லலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

bilateral monopoly = சிவகுமார், பொதுவில், வாங்குதல், விற்றல் என்பதே சந்தை என்று நான் நினைத்திருந்தேன். குறைந்த பட்சம் வாடிக்கையாளர் என்பது மாதிரி.. விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு மாதிரியான உதாரணங்களில் இது இல்லவே இல்லையே! இவர்கள் போர்க்கள எதிரிகள் அல்லவா?

இந்தியன் ரயில்வேக்கு நமது ICF ஒன்று தான் கோச் தயாரிக்கும் நிறுவனம் என்பது மாதிரி ஏதோ சொல்வார்கள் அல்லவா இதற்கு?

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

பொருளாதாரக் கோட்பாடுகள் சந்தை சார்ந்து அலசப்பட்டாலும், அவை மனித இயல்பைப் படம் பிடிப்பவை. நன்கு புரிந்து கொண்ட பின் பிற துறைகளிலும் அதே கோட்பாடுகளைப் பொருத்திப் பார்ப்பது நமது புரிதலுக்கு உதவும்.

இருமுக சர்வாதீனம் என்பதற்கு எனக்கு பொருத்தமான உதாரணம் தோன்றவில்லை. நீங்கள் சொன்ன ரயில்வே - ICF அருமையான உதாரணம்.

அன்புடன்,

மா சிவகுமார்