புதன், செப்டம்பர் 06, 2006

யாருக்காக? (economics 17)

ஆரம்பத்தில் எதற்கு வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன? அவற்றின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?

நாகரீக சமூகம் ஒன்று சேர்ந்து, சந்தைகள் உருவானபோது ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்தவற்றை விளைத்து சந்தையில் அதை விற்று தனக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டிருப்பான். பொருளின் உற்பத்திக்கு மூன்று விதமான மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன என்று பார்த்தோம். இயற்கையாக கிடைப்பவை, மனித உழைப்பு, உற்பத்திக்கு ஆகும் கால தாமதத்தின் போது முடக்க வேண்டிய மூலதனம் ஆகியவை.

குறிப்பிட்ட அளவு மூலப் பொருட்களைப் பயன்படுத்தினால் எவ்வளவு விளையும் என்பது அப்போது நிலவும் தொழில் நுட்ப அறிவைப் பொறுத்தது.
  • பள்ளம் தோண்ட ஐம்பது ஆட்கள் மண்வெட்டி பிடித்து ஒரு நாள் முழுவதும் வேலை பார்த்தால் ஐந்து அடி ஆழமும் ஐம்பது அடி நீளமும் தோண்டி விடலாம்.

  • இரண்டு பேர் இயந்திர டிராக்டர் மூலம் தோண்டினால் அதே வேலை இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும்.
இப்படி மூலப் பொருட்களை அதிகரித்துக் கொண்டே போனால் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும்.
  • இரண்டு சமையற்காரர்கள் ஆறு மணி நேரத்தில் நூறு பேருக்கான உணவை சமைத்து விடுகிறார்கள்.
  • ஆட்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்தினால் எவ்வளவு சீக்கிரம் முடிக்கலாம்? எட்டு பேர் சேர்ந்து வேலை செய்தால்? நேரம் குறைந்து கொண்டே வரும்.
  • நான்கு பேர் வேலை பார்க்கும் போது ஐந்து மணி நேரத்தில் முடிந்து விடலாம். எட்டு பேர் வேலை செய்தால் நான்கரை மணி நேரத்தில் முடிந்து விடும்.
  • எனக்கு மிக அவசரமாக சாப்பாடு வேண்டும், ஐம்பது சமையல்காரர்களை சமையலறைக்குள் அனுப்பினால்? சாப்பாடு தயாராக ஆறு மணி நேரம் இல்லை, பத்து மணி நேரம் கூட ஆகி விடலாம்.
இப்படி ஒரு வகையான மூலப் பொருளை அதிகரிக்கும் போது உற்பத்தி அதிகரித்துக் கொண்டே போகும். ஒவ்வொரு கூடுதல் உள்ளீடுக்கும் முந்தைய உள்ளீடை விடக் குறைவாகவே அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் உற்பத்தி குறையவும் ஆரம்பித்து விடலாம்.

குறிப்பிட்ட உள்ளீடுகளுக்கு எவ்வளவு மொத்த உற்பத்தி, சராசரியாக ஒரு அலகுக்கு எவ்வளவு உற்பத்தி, கடைசியாக சேர்த்த உள்ளீட்டுக்கு என்ன உற்பத்தி என்பவை மூன்று அளவீடுகள். குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட கருவிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நெல்லை பயிரிடுகிறோம். உழைப்பாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் விளைச்சல் எப்படி மாறும் என்று பார்க்கலாம்.

  • யாருமே உழைக்கவில்லை என்றால் விளைச்சல் எதுவுமே இருக்காது.
  • ஒருவர் வயலில் இறங்கி வேலை செய்தால் நான்கு மூட்டை நெல் விளைகிறது. இப்போது மொத்த விளைச்சல் நான்கு மூட்டை, சராசரி விளைச்சல் நான்கு மூட்டை, கடைசியாக சேர்த்த அந்த ஒருவரின் கூடுதல் பங்களிப்பு நான்கு மூட்டை.
  • இரண்டு பேர் வேலை பார்த்த வயலில் ஆறு மூட்டை விளைகிறது. மொத்தம் ஆறு மூட்டை, சராசரி மூன்று மூட்டை, கூடுதல் விளைச்சல் இரண்டு மூட்டை.
  • மூன்று பேர் வேலை பார்த்தால் ஏழு மூட்டை கிடைக்கிறது. மொத்தம் ஏழு மூட்டை, சராசரி இரண்டுக்கு கூடுதல், கூடுதல் விளைச்சல் ஒரு மூட்டை.

இதே போல ஒரே அளவு உழைப்பாளிகள் உழைக்கும் போது நிலத்தின் அளவை அதிகரித்தாலும் ஒவ்வொரு அலகுக்கும் கிடைக்கும் கூடுதல் விளைச்சல் முதலில் மிக அதிகமாகவும் போகப் போகக் குறைந்து போவதாகவும் இருக்கும். கூடுதல் விளைச்சல் குறைந்து கொண்டே போவதை குறைந்து போகும் கடைசி விளைச்சல் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் குறிப்பிட்ட அளவு நிலத்தில் பல கோடி விவசாயிகள் உழைப்பதால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பலன் குறைவாக இருக்கிறது. விவசாயத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய எஞ்சி இருப்பவர்களின் சராசரி பலன் அதிகரித்து விடும்.

3 கருத்துகள்:

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

Law of Diminishing Marginal Returns
குறைந்துசெல் இறுதிநிலை விளைவு
விதி எனப்படும் இவ்விதி,இயற்கை
பிரதான பங்கேற்கும் உற்பத்தி நடவடிக்கைகளில்[உ-ம்:
விவசாயம்,மீன்பிடித்தல்,சுரங்கம்]
ஆதிக்கம் செலுத்துகின்றது

வடுவூர் குமார் சொன்னது…

ஆமாம் அப்படியென்றால்,என்னதான் வழி?
யார் கட்டுப்பாடும் இல்லாமல் தானாகவே அட்சஸ்ட் செய்துகொள்ளுமா?
காவிரியில் அணைக்கட்டி விளைநிலங்களை உயர்திய போது விவசாயிகள் எப்படி அதிகமானார்கள்?

மா சிவகுமார் சொன்னது…

விளை நிலங்கள் அதிகமாகும் போது விவசாயத்தில் ஆதாயம் போதாது என்று ஓடி விட இருந்தவர்கள், ஓடி விட்டிருந்தவர்கள் திரும்ப வந்திருப்பார்கள். நமது நாட்டில் எங்கு போய் வசித்தாலும் நிலத்துக்குத் திரும்பிப் போய் பத்துப் பன்னிரண்டு தென்னை மரம், காணி நிலம் என்று வாழ வேண்டும் என்று கனவு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்தானே !

அன்புடன்,

மா சிவகுமார்