சனி, அக்டோபர் 14, 2006

ஆண்களுக்கு மட்டும் - 3 (எதிர்வினைகள்)

அப்பா, எவ்வளவு குற்றச்சாட்டுகள். அதுதான் அவசர அவசரமாக பாலாவின் பின்னூட்டத்துக்கு நேற்றே பதில் போட்டேன். ஒவ்வொருவரும் தனதளவில் சோதனை செய்து பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு மறு பக்கத்தை எழுதுவதுதான் என்னுடைய நோக்கம்.

இனிமேல் பின்னூட்டங்களுக்கு பதில்:

1. போஸ்டன் பாலா

//---ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா?---How can we be so sure?//

எனக்கு நிச்சயமாகத் தெரியாது. உங்களுக்கும் தெரியாது.

//---விந்து வெளியேற்றுவது ஒரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக இயற்கை வகுத்த வழி. ---Then, are you against GLBT too (Gays, Lesbians, bi-sexual, transgender)?//

இல்லை பாலா, அது இன்னொரு விவாதத்துக்கான பொருள். Straight எனப்படும் ஆண்களுக்கு சுயஇன்பத்தில் நேரம் செலவளிப்பது அவசியமா என்பதுதான் இங்கு கேள்வி!

//If a management guru (similar to the temple visit) consults for one hour he/she may get 200 dollars. The same rate is not given for a construction worker (movie experience in the above metaphor). Apples & oranges... :D//

அந்த மேலாண்மை வல்லுனர் அந்த ஒரு மணி நேரத்தில் கட்டிட வேலை பார்த்தால் 10 டாலர் கிடைக்கும் என்று வேலை பார்ப்பது என்பதுதான் சரியான ஒப்புமையாக இருக்கும். அதை செய்ய விரும்புவது அவரது தேர்வு, செய்யாமல் இருப்பதும் அவரே முடிவு செய்து கொள்வது.

2. சிறில் அலெக்ஸ்

சரியாக இந்தப் பதிவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. ஒவ்வொருவரும் தன்னளவில் அலசிப் பார்த்து சரியெனப்படும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன வயதிலிருந்தே பல்வேறு ஊடகங்களில் 'சுய இன்பம் காண்பதே இயற்கை, அதை செய்யாமல் இருப்பது செயற்கை' என்று மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கும் நமக்கு மாற்றுக் கருத்தை நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமல்லாவா?

3. தெக்கிட்டான்

//என்ன அவ்ளோ ஆணித்தரமாக ஒரு முடிவாக அந்த "சாதித்தவர்களைப்" பற்றியான கணிப்பில் கூறியிருக்கிறீர்கள்.//

நான் கேள்விதான் எழுப்பியிருக்கிறேன் தெக்கிட்டான். ஆணித்தரமாக எதுவும் சொல்லவில்லை. அவர்களும் மனிதர்கள்தாம் என்றாலும் அவர்கள் சாதித்ததை நாம் எல்லோரும் செய்து விடவில்லையே. ஏன்? நேரத் திட்டமிடலும் பயன்பாடும் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குப் படுகிறது.

//மற்றபடி தாங்களின் எண்ணவோட்டங்களை மற்றவர்களிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.//

கண்டிப்பாக, ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் உள்வாங்கி தமக்கு சரியெனப்படுவதை செய்து விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

4. Babble

வாங்க Babble.

//குற்ற உணர்ச்சியா? இது என்ன புது கதையா இருக்கு?//
//மனுசன் வெறும் முன்னேற்றத்துக்கான செயல்ல மட்டுமே நேரம் செலவழிச்சா இயந்திரம் ஆயிடுவான் ஐயா//

ஏன் அப்படி சொல்கிறீர்கள். ஏழு ஆண்டு உழைத்து நாவல் எழுதிய கிரண் தேசாய் இயந்திரமா ஆகி விட்டார். அதற்காக அவர் முன்னேற்றத்துக்கான செயல் மட்டும் செய்தார் என்று அனுமானிக்க முடியாது என்றாலும் உழைத்தால்தான் உயர்வு என்பது தெளிவுதானே.

//மனசு/உணர்வுகளுக்கு எத்தனையோ பரிமாணம் இருக்கு, அதை நீங்க சில பரிமாணத்துக்குள்ள அடைக்க நினைக்கிறது வியப்பா இருக்கு.//
மனசின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டு எந்த பரிமாணங்களில் வளரலாம் என்று புரிய முனைவதுதான் நம் வாழ்க்கை இல்லையா? எல்லோருமே ஒரே கருத்துதான் சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாதே.

//இது ஏன் ஆண்களுக்கு மட்டும்? பெண்கள் இதுல ஈடுபடுறது இல்லையா? அப்படியே ஈடுபடலைனாலும் இந்த பதிவ படிக்கக்கூடாதா?//
நான் ஒரு பெண்ணாக இல்லாததால், மருத்துவராக இல்லாததால் பெண்களின் உடற்கூறுகளைப் பற்றி பழக்கங்களைப் பற்றி விவாதிக்க எனக்கு தகுதியில்லை. அதனால்தான் அப்படி தலைப்பு கொடுத்தது.

//போன தலைமுறை ஆள் மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க. அவங்க கூட தெளிவா இருந்திருப்பாங்களோன்னு தோணுது.//

போன தலைமுறையில் சுய இன்பம் காண்பது இல்லை என்றா சொல்கிறீர்கள்? இதில் தலைமுறையோ, இசங்களோ உதவாது, நம் மனமே நமக்கு ஆசான் என்று கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

5. ஓகை
//குற்ற உணர்வு இல்லாதவர்கள் சிலரை குற்ற உணர்வு கொள்ளவைப்பதும், இலேசாக இருப்பவர்களை பலமாக திசை திருப்புவதும், குற்ற உண்ர்வுடன் செய்து கொண்டிருப்பவர்களை பீதி கொள்ளச் செய்வதும் இப்பதிவின் பலன்களாக இருக்கும்.//

//இதை எதிர்த்துச் சொல்பவர் சிலர். தவறில்லை என்று சொல்பவர் மிகப் பலர். இதில் மருத்துவர்களும் மற்றவர்களும் ஏராளமாக உண்டு.//

எனக்குத் தெரிந்து எதைப் படித்தாலும் இது தவறில்லை என்று சொல்லப்படுவதுதான் கிடைக்கிறது. எதிர்க் கருத்தை வெளிப்படுத்தும் முயற்சிதான் இது.

//ஒரு வாதத்துக்காக எல்லா ஆண்களும் இதைச் செய்வதை இன்று நிறுத்திவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச நாளில் உலகம் நாசமாய்ப் போய்விடும்.//

எப்படி?

//மிருகக் காட்சி சாலைகளில் சில மிருகங்களுக்கு இது செய்துவிடப் படுவதுண்டு.//

எப்படி?

6. பிரேமலதா
//Fundamentally wrong you are.//
எப்படி?

//எப்பெல்லாம் விந்து வெளிடறாரோ அப்பெல்லாம் குழந்தையா ஆக்கிட்டுத்தான் விடுவேன்னு அடம்புடிச்சாருன்னு வைங்கோ, பாப்புலேசன் பிரச்சினை என்னத்துக்காகிறது. அப்புறம், ஒருதடவையே மில்லியன் வருதே, அத்தனையும் குழந்தையாக்கிட்டுத்தான் விடுவாரமா? இவரப் படைச்ச கடவுளேல்ல வேண்டாம்னு முடிவெடுத்து ஒரு மில்லியன்ல ஒண்ணுதான் பிழைச்சாலும் பிழைக்கும்னெல்லாம் அவரேல்ல முடிச்சுட்டாரு.//

பிரேமலதா இது விதண்டாவாதம் :-) ஒரு மில்லியன் வருவதற்கு காரணம், ஒன்றாவது சினைமுட்டையுடன் சேர்ந்து கருவுறுவதற்கான நிகழ்தகவை உயர்த்துவதற்குத்தான்.

திரும்பவும், இது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. மாறுபட்டக் கருத்தை வைத்ததுதான் என்னுடைய பொறுப்பு.

7. பாலபாரதி
//நாள் ஒன்றுக்கு ஒன்பது முறை என்ற அளவில் இருப்பவர்களை குறைத்துக்கொள்ளச் சொல்லலாம். நிறுத்தச்சொல்ல முடியாது.//

நம் கருத்தாக சொல்லலாம், ஏற்றுக் கொள்வது தனி விருப்பம்தான் இல்லையா!

//இன்று பெரிய அளவில் சாதிக்கும் பலரும் பாலியல் வடிகாலுக்கு வழி இருப்பவர்கள் தான் என்பதையும் உணர வேண்டும்.//

இதில் என்ன சந்தேகம்.

8. மதன்

//what do you advocate as an alternative? Repression of feelings? Isn't it more harmful psychologically than your concept of guilt?//

இணையத்தில் பொம்மை பார்க்கச் செலவளிக்கும் நேரத்தை எழுத்திலோ, கவிதையிலோ, ஓவியத்திலோ, உறவுகளுக்கோ செலவளிப்பது எப்படி உணர்வுகளை அடக்குவதாகும்? இயற்கையாக வரும் உணர்வுகள் வேறு, நாமாக வலிந்து போய் தூண்டிக் கொள்வது வேறு, இல்லையா?

//do you advocate free sex, prostitution and rape? After all what are women for? Only to receive our semen, the seed of life?//

இதுவும் விதண்டாவாதம் மதன். நான் மேலே சொன்னது போல புதியது காணும் முயற்சிகளில் நேரத்தைச் செலவளிப்பதுதான் மாற்று வழி.

12 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

சற்று வேடிக்கையாகப் பேசலாமா?

"Everything you wanted to know about sex, but was afraid to ask" என்று ஒரு புத்தகத்தை சமீபத்தில் 1972-ல் படித்தேன். பல ஆண்டுகளுக்கு அது பெஸ்ட் செல்லர் லிஸ்டில் இருந்தது. அதில் ஒரு அத்தியாயம் சுய இன்பத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதில் ஒன்றும் தவறு இல்லை என்றெல்லாம் நூற்றுக்கணக்கில் வார்த்தைகள் உள்ள அத்தியாயத்தில் (அது மட்டும் மொழிபெயர்க்க எனக்கு கொடுக்கப்பட்டிருந்தா ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கலாம், ஹூம்..அடே அடங்குடா டோண்டு) கடைசியில் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார், "ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் முடிந்த அளவுக்கு செய்யலாம். இதனால் எல்லாம் சக்தி வீணாகாது. ஆனால் என்ன, காதுகள் இரண்டும் இற்று கீழே விழுந்து விடும்" என்று. அதைப் பார்த்து யாராவது பயந்து விடப்போகிறார்களே என்று பப்ளிஷர் "சும்மா ஜோக்கடிக்கிறார் அவர்" என்று அடிக்குறிப்பு போட்டிருப்பார்.

இதை செய்யாத ஆணோ பெண்ணோ இருக்க முடியாது. ஐசக் அசிமோவ் ஒரு புத்தகத்தில் எழுதுகிறார், "How many times young girls get their hands slapped off with the remark 'nice girls do not do that'!"

நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்த போது ஒரு முறை எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது நான் விளையாட்டாக "இப்பழக்கம் இருப்பவர்களுக்கு உள்ளங்கையில் முடி முளைக்கும்" என்று கூறி வைக்க என் சக இஞ்சினியர் அவசரம் அவசரமாக தன் உள்ளங்கையை பார்க்கும் போது பிடிப்பட்டு, அவ்வாறு மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டவர்களால் பயங்கரமாகக் கேலி செய்யப்பட்டார்.

"---ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா?---"
கண்டிப்பாக செய்திருப்பார்கள், I am sure.

உடலுறவுக்குப் பிறகு மனது ரிலாக்ஸ் ஆகிறது. செய்யும் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய முடிகிறது. இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு மேல் உழைக்கும் இந்த அறுபது வயது இளைஞனுக்கும் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) சொன்னது…

இப்போது வரப்போகும் எனது மீள்பதிவுக்கு மா.சிவகுமார்தான் பொறுப்பு என்பதையும் இந்த அறுபது வயது இளைஞன் கூறக் கடமைப்பட்டூள்ளான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாகை சிவா சொன்னது…

சிவக்குமார்,
உங்கள் பதிவை நேற்றே படித்தேன். நேரமின்னையால் பின்னூட்டம் இட முடியவில்லை. உங்கள் பதிவில் நீங்கள் கூறி இருந்ததை முழுவதுமாக ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் ஒரு ஆக்கத்திற்கு வழி சொல்கின்றீர்கள் என்ற வகையில் எடுத்துக் கொண்டேன்.

இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தும் அனைவருக்கும் ஏற்படுகின்றது. அந்த அழுத்தை போக்க உடலறவு வைத்துக் கொள்ளவதும் ஒரு மருந்தாக சொல்கின்றார்கள். இந்த சுய இன்பம் அந்த வகையின் கீழ் தான் வகைப்படுத்தி உள்ளார்கள்.

இதனால் குற்ற உணர்ச்சி ஏற்படும் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒருவனுக்கு எந்த அளவுக்கு விழிப்புணர்ச்சி உள்ளது என்பதை பொறுத்து.

நீங்கள் கூறுவதை போலவே இயற்கையான இந்த உணர்வை எல்லா நேரத்திலும் கட்டுப்படுத்துவதும் தவறு தானே. அதிலும் ஏகப்பத்தினி விரதம் இருப்பவன் நிலையை நினைத்து பாருங்கள். அவனுக்கு இதை விட்டால் வேறு வழி ஏது?

மா சிவகுமார் சொன்னது…

//"சும்மா ஜோக்கடிக்கிறார் அவர்" என்று அடிக்குறிப்பு போட்டிருப்பார்.//

உங்களது பதிவு ஒன்றில் இதை எழுதி விட்டீர்களே :-)

//உடலுறவுக்குப் பிறகு மனது ரிலாக்ஸ் ஆகிறது. செய்யும் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய முடிகிறது.//

உடலுறவைப் பற்றி விவாதிக்கவில்லை டோண்டு சார். இயல்பாகத் தூண்டப்படும் உணர்வுகளையும் விட்டு விடுவோம். தேடிப் போய் இணையத் தளங்களிலும் புத்தகங்கள் மூலமாகவும் தூண்டி விட்டுக் கொள்வது தேவையில்லை என்பது என் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சிவா,

//இயற்கையான இந்த உணர்வை எல்லா நேரத்திலும் கட்டுப்படுத்துவதும் தவறு தானே.//

இயற்கையான உணர்வையோ உடலுறவையோ விடுத்து, வலிய வலைத்தளங்களிலும் புத்தகங்களாலும் இழுக்கப்பட்டு நேரம் வீணாவதைப் பற்றி எழுதுவதுதான் நோக்கம். கொஞ்சம் திசை திரும்பி விட்டது.

எழுதி பத்து பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் பதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்ததால் வந்த விளைவு இது. :-)

அன்புடன்,

மா சிவகுமார்

dondu(#11168674346665545885) சொன்னது…

"உடலுறவைப் பற்றி விவாதிக்கவில்லை டோண்டு சார்."
உடலுறவுக்கு என்ன ரிலாக்ஸேஷன் உடலுக்கு வருகிறதோ அதேதான் இப்பழக்கத்திலிருந்து வருகிறது. ஆகவே இரண்டும் ஒன்றே இந்த விஷயத்தில். அது இயற்கைக்கு விரோதம் என்று கூறினால் காண்டம் அணிவது என்னவாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thekkikattan|தெகா சொன்னது…

//அவர்களும் மனிதர்கள்தாம் என்றாலும் அவர்கள் சாதித்ததை நாம் எல்லோரும் செய்து விடவில்லையே. ஏன்?//

நேற்றுதான் இதனைப் பற்றி பேசிக்கொண்டோம். உலகில உள்ள இந்த 7 பில்லியன் மக்களில் உழைத்து முன்னேற துடிக்கும் மக்கட் தொகை ஒரு 1 பில்லியன் மக்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் எல்லோருமே நீங்கள் கூறிய படி நேரம் திட்டமிட்டு, சரியான இலக்கில் செல்வதாக தனது முழு உழைப்பையும் போட்டாலும், ஏன் அனைவருமே ஒரு மைக்ரோ சாஃப்ட், ஒரு டெல், ஃபோர்ட் கார், போன்ற தனிமனித இலக்கை அடைய முடிவதில்லை?

ஏன் அது போன்ற வாய்ப்பு எல்லோருக்குமே கிடைப்பதில்லை, சிவா? சரியான திறமையும், திட்டமிடலும் இருந்தாலும் எத்தனையோ சச்சின்கள் இருப்பதே தெரியாமல் இருந்து போவதில்லையா? தன்னுள் சென்று தன்னைத் தேடும் தாங்களுக்கு இது போன்ற சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்திருக்க வேண்டுமே?

வெற்றி என்பதற்கு எதனை அளவுகோளாக கொண்டு நாம் தீர்மானிக்கின்றோம்? தாங்களுக்கு எது வெற்றி என்று படுகிறதோ, அது எனக்கு ஒன்றும் மற்ற நிலையாக படலாமில்லையா? அது அப்படியிருப்பின், வெற்றி, தோல்வி ஒரு தனிப்பட்ட மனிதனின் மன நிலையைப் பொருத்தது எனக் கொள்ளலாமா?

//எனக்குத் தெரிந்து எதைப் படித்தாலும் இது தவறில்லை என்று சொல்லப்படுவதுதான் கிடைக்கிறது. எதிர்க் கருத்தை வெளிப்படுத்தும் முயற்சிதான் இது.//

சிவா, மூக்கில் சளி அடைத்திருந்தால் என்ன செய்வீர்கள் சிந்தி தூரப்போடுவதில்லையா? அது தேவையில்லாமல் சுவாசிப்பதற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக அத்துனை முயற்சியும் எடுத்து சுவாச வழியை சுத்தம் பண்ணி வைத்துக் கொள்கிறோம். இல்லையா?

அது போலவே இந்த சக்தியும் ஒரு ஆக்கப்பூர்வமான வழியில் நமது எண்ணவோட்டங்களுக்கு இடையூறு ஆகவும் செயலாற்ற முடியும், அதே சமயத்தில் அதே vital energyயை வேறு வழிகளில் செலுத்தி செய்யும் வேலைகளில் மெறுகூட்டி காண்பிக்கவும் முடியும். அது அவர் அவர்களின் தனிப்பட்ட மனப் பக்குவத்தைப் பொறுத்தது. எனவே தன் வழியில் சென்று கரை காண்பதுதான் இதற்கு சரியான வழி. அதற்காக முற்றிலுமாக "குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடும்" என்பது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.

dondu(#11168674346665545885) சொன்னது…

முதலில் கேட்க நினைத்து, ஆனால் மறந்த கேள்வி:

குற்ற உணர்ச்சியா? அப்படீன்னா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

தெக்கிட்டான்,

//எல்லோருமே நீங்கள் கூறிய படி நேரம் திட்டமிட்டு, சரியான இலக்கில் செல்வதாக தனது முழு உழைப்பையும் போட்டாலும்,//

//தன்னுள் சென்று தன்னைத் தேடும் தாங்களுக்கு இது போன்ற சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்திருக்க வேண்டுமே?//

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தன்னுடைய திறமைகளின் முழுப்பலனையும் அடையலாம். வெற்றி என்பது 99% உழைப்பு, 1% வாய்ப்பு என்பது சரியில்லையா?

எனக்குப் புரிந்த வரை நம்முடைய வாழ்க்கைக்கு எல்லைகள் நம்மால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. நம்முடைய நேரத்தையும், திறமைகளையும் இன்றைக்குச் செலவிடும் வழி நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.

//வெற்றி, தோல்வி ஒரு தனிப்பட்ட மனிதனின் மன நிலையைப் பொருத்தது எனக் கொள்ளலாமா?//

கண்டிப்பாக. சச்சின் டெண்டுல்கர் போல ஆனால்தான் வெற்றி என்று கிடையாது. நோபல் பரிசு வாங்கி கோடி கோடியாக சம்பாதித்தால்தான் வெற்றி என்று கிடையாது.

ஒரு அசோக மித்திரன் தன்னுடைய படைப்புகளை எழுதி முடிக்கக் கிடைத்த வாய்ப்பையே வெற்றியாக கருதி நிறைவாக வாழ்கிறார். அவரும் போய் புக்கர் பரிசுக்கு party hop செய்தால்தான் வெற்றி என்று சொல்வதற்கு நாம் யார்?

சூழல்கள் சாதகமாக இருந்திருந்தால் அசோக மித்திரனுக்கும் ஜானகிராமனுக்கும் கூட உலகளாவிய பாராட்டுகள் கிடைத்திருக்கலாம். கடைசியில் பார்க்க வேண்டியது அவர்கள் அளவில் நிறைவாக வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடிவதே. நாமும் நம்மை ஒவ்வொரு நாளின் இறுதியிலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

தனி மனித நிலையில் நமக்கு நிறைவு இருக்க வேண்டும். ஒரு நாளின் இறுதியில், ஒரு மாதத்தின் நிறைவில், ஒரு வாழ்வின் கடைசியில் நாம் வெற்றிகரமாக நிறைவாக வாழ்ந்தோம் என்ற நிறைவு வேண்டும். அதைத் தராத பாதைகளை விட்டு விடுவது நல்ல வாழ்க்கை.

//மூக்கில் சளி அடைத்திருந்தால் என்ன செய்வீர்கள் சிந்தி தூரப்போடுவதில்லையா?//

வலியப் போய் இணையத்தளங்களிலோ புத்தகங்கள் மூலமோ உணர்ச்சிகளைத் தூண்டிக் கொள்ளத் தேவையில்லைதானே! மூக்கடைத்தால் சிந்திப் போடுங்கள், அதற்காக மூக்கடைப்பை வேண்டும் என்று வாங்கிக் கட்டிக் கொள்வோமா?

//அது போலவே இந்த சக்தியும் ஒரு ஆக்கப்பூர்வமான வழியில் நமது எண்ணவோட்டங்களுக்கு இடையூறு ஆகவும் செயலாற்ற முடியும், அதே சமயத்தில் அதே vital energyயை வேறு வழிகளில் செலுத்தி செய்யும் வேலைகளில் மெறுகூட்டி காண்பிக்கவும் முடியும். அது அவர் அவர்களின் தனிப்பட்ட மனப் பக்குவத்தைப் பொறுத்தது. எனவே தன் வழியில் சென்று கரை காண்பதுதான் இதற்கு சரியான வழி. அதற்காக முற்றிலுமாக "குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடும்" என்பது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.//

ஏற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

டோண்டு சார்,

-^-

அன்புடன்,

மா சிவகுமார்

ஓகை சொன்னது…

//ஊடகங்களில் 'சுய இன்பம் காண்பதே இயற்கை, அதை செய்யாமல் இருப்பது செயற்கை' என்று மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கும் நமக்கு மாற்றுக் கருத்தை நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமல்லாவா?//

இதில் சொல்லப்பட்டிருக்கும் "மூளைச் சலவை" வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய வார்த்தை. இது தொடர்பாக செய்திகளை தேடித் தேடி முடிவுக்கு வந்திருப்பவர்களையும், பல மருத்துவர்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் இந்த வாக்கியம் அவமதிக்கிறது.

உங்கள் கூற்றுக்கு ஆதரவான அறிவியல் சார்ந்த விவரங்களை அறிய ஆவலாக உள்ளேன். நேரவிரயம் என்பதைத் தவிர்த்து நீங்கள் வேறெதையும் கூறவில்லை.

இதற்கான அறிவியல் ஆதாரங்களை நீங்கள் கூறவில்லையென்றால் வலிந்து பொய்யைப் பரப்புகிறீர்களோ என்கிற ஐயம் ஏற்படும்.

மா சிவகுமார் சொன்னது…

ஓகை,

//இது தொடர்பாக செய்திகளை தேடித் தேடி முடிவுக்கு வந்திருப்பவர்களையும், பல மருத்துவர்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் இந்த வாக்கியம் அவமதிக்கிறது.//

எப்படி ஓகை? இயற்கையாக ஏற்படும் உணர்வுகளுக்கு தீர்வு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இணையத்திலும், புத்தகங்களிலும் தேடிப் போய் உணர்வைத் தூண்டிக் கொள்ள வேண்டும் எந்த ஆராய்ச்சி, எந்த மருத்துவர் தெரிவிக்கிறார்கள். என்று சொல்லுங்களேன்.

//நேரவிரயம் என்பதைத் தவிர்த்து நீங்கள் வேறெதையும் கூறவில்லை.//

நேர விரயத்தைத்தான் வலியுறுத்த நினைத்தேன். நான் எழுதியது என்னுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில்தான். முந்தையப் பதிவில் சொன்னது போல குற்ற உணர்ச்சி பற்றிக் கருத்து சொல்ல எனக்கு போதுமான தகுதி இல்லை.

//வலிந்து பொய்யைப் பரப்புகிறீர்களோ என்கிற ஐயம் ஏற்படும்.//

பொய் என்று தெரிந்தால் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்