புதன், அக்டோபர் 04, 2006

சந்தை மட்டுறுத்தல் (economics 25)

சந்தையில் தனது ஆக்கிரமிப்பு சக்தியால் உயர் விலையில் குறைந்த அளவு பொருட்களை விற்கும் போக்கைத் தடுக்க அரசுகள் பல முறைகளைக் கையாளலாம்.

1. சில நிறுவனங்கள் மட்டுமே செயல்படும் சந்தையில், அவை கூட்டுச் சேர்ந்து விலையைத் தீர்மானிப்பதை சட்டவிரோதமாக்கல், நிறுவனங்கள் இணைந்து ஏகபோகம் உருவாவதைத் தடுப்பது போன்ற ஏகபோக எதிர்ப்புக் கொள்கைகள் மூலம் சந்தையில் போட்டி விலை நிலவச் செய்யலாம்.

இதற்கான Anti Trust சட்டங்கள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவை. அவற்றின் அடிப்படையில் Bell என்று நாடெங்கும் கோலோச்சி வந்த தொலைதொடர்பு நிறுவனத்தை பல நிறுவனங்களாகப் பிரித்த வழக்கு மிகப் பிரபலமானது. AT&T என்ற நிறுவனம் அப்படி உருவான குழந்தை பெல்களின் வழி வந்ததுதான்.

இதே சட்டங்களின் கீழ்தான் மைக்ரோசாஃப்டும், நீதி மன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு பெற்றது. அதன் பிறகு தண்டனையிலிருந்து தப்பி விட்டது வேறு விஷயம்.

இந்தியாவில் Monopolies and Restrictive Trade Practices (MRTP) Act என்று ஒரு சட்டம் இருந்தது. அதன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு கண்காணிப்பு ஆணையம் ஏதாவது துறையில் சந்தை ஆதிக்கம் ஒரே நிறுவனத்திடம் குவிவதற்கான நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். சமீப காலங்களில் இதன் சுவடே காணவில்லை.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தின், சன் டிவியின் ஆதிக்கச் செயல்களுக்கு MRTP சட்டம் சரியான மருந்தாக இருந்திருக்கும்.

2. சிறிய நிறுவனங்கள் சந்தையில் நுழைவதை ஊக்கப்படுத்துதல், வெளிநாட்டுப் பொருட்களை உள்ளே அனுமதித்து போட்டியை கூட்டுதல், இவற்றின் மூலமும் சந்தையில் சில நிறுவனங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தவதைக் குறைக்கலா.

இந்தியாவில் செல் தொலைபேசிச் சேவைகளை அனுமதிக்கும் போது, ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்த பட்சம் இத்தனை நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு பல நிறுவனங்களைப் போட்டியிட அனுமதித்தது இதற்கு ஒரு எடுத்துக் காட்டு.

தனியார் நிறுவனங்களின் போட்டியை ஊக்குவித்தல், அரசு நிறுவனம் ஒன்றையும் போட்டியில் இறக்குதல், தன்னிச்சையான கண்காணிப்பு மூலம் சந்தைய நெறிப்படுத்துதல் இவற்றுக்கான மிகச் சிறந்த, வெற்றிகரமான கொள்கையாக இது அமைந்தது. இதன் பலனாக இன்றைக்கு செல் தொலைபேசி சேவைகள் பரவலாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன.

3. TRAI (Telecom Regulatory Authority of India) தொலை தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது போல ஒவ்வொரு துறையிலும் அரசை முற்றிலும் சாராத தன்னிச்சையான மட்டுறுத்தல் அமைப்பு ஒன்றை உருவாக்கி விலை, தரம் மற்றும் போட்டி நடவடிக்கைகளை கண்காணிப்பது இன்னொரு வழி.

இப்போது தொலைக்காட்சி ஓடைகளுக்கு அதிக பட்ச விலை மாதத்துக்கு 5 ரூ என்று கட்டுப்படுத்தியது மட்டுமில்லாமல் கடந்த சில ஆண்டுகளில் தொலை பேசிக் கட்டணங்களையும், தொழில்நுட்ப சிக்கல்களையும் ஒழுங்குபடுத்தி நேர்மையான, நியாயமான சந்தையாக செயல்பட வைத்தது TRAIயின் பணி.

4. ஏகபோக அதிகாரத்தைத் தவிர்க்க முடியாத துறைகளில் அரசே அதை ஏற்று நடத்துவது குடிநீர் வினியோகம், காவல் பணிகள் போன்றவற்றில் நடக்கிறது. முடிந்த வரை அரசு ஈடுபாட்டைத் தவிர்த்து ஒழுங்குபடுத்தும் வழியைக் கடைபிடிப்பது கடந்த இருபது ஆண்டுகளில் நடைமுறையாக உள்ளது.

தனியார் மயமாக்கம், அரசு நிறுவனங்ளில் தனியார் ஈடுபாட்டை வரவேற்பது போன்றவை எண்பதுகளில் தாட்சர் தலைமையிலான இங்கிலாந்தில் புது வேகம் பெற்றன. அதே அலை இந்தியாவுக்குள்ளும் வீசி, வலது சாரி பாஜக ஆட்சியின் கீழ் தனியார் மயமாக்கலுக்கு ஒரு அமைச்சகத்தையே அமைத்திருந்தார்கள்.

கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ஒருவர் "முதலீட்டைக் குறைக்கும் குழுமம் நாசமாப் போகட்டும்" என்று 2004 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொலைக் காட்சியில் சொன்னது மிகப் பிரபலமானது.

5. ஏகபோக அதிகாரத்தினால் விளையும் ஆதாயத்தை வரி விதிப்பின் மூலம் அரசே எடுத்துக் கொள்ளும் அணுகு முறையில் அநியாய ஆதாயம் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டாலும், நுகர்வோருக்கு அதிக விலையும், குறைவான அளவும் கிடைப்பதன் விளைவுகளை தவிர்க்க முடியாதுதான்.

இது கிட்டத்தட்ட சமோசா சாப்பிட்டு விட்டு அதன் பிறகு ஜெலூசில் போட்டுக் கொள்வது போல பிரச்சனையைத் தீர்க்காமல் அதன் விளைவுகளை மட்டும் சரி செய்ய முயல்வது போலாகி விடும்.

6. கடைசியாக, ஏகபோக சந்தையில் விற்கும் விலையை அரசே கட்டுப்படுத்துவது இன்னொரு வழி. சந்தை விலையை எந்த அரசும் துல்லியமாகக் கணக்கிட்டு விலைக் கட்டுப்பாடு செய்ய முடியாது. அப்படிச் செய்ய முயலும் போது தேவையற்ற வரிசைகளும், தட்டுப்பாடுகளும், அடிதடிகளும்தான் மிஞ்சும்.

சோவியத் ரஷ்யாவில் நடைமுறையில் இருந்த விலைக் கட்டுப்பாடுகள் சந்தி சிரித்த கதை எல்லோருக்கும் தெரிந்ததே. நம்ம ஊரிலும் நியாய விலைக் கடைகளில் நிற்கும் நீண்ட வரிசைகள், கிடைக்கும் தரக் குறைவான பண்டங்கள், நடக்கும் ஊழல்கள் எல்லாம் தவறாகப் போன விலைக் கட்டுப்பாடுகளின் விளைவுகள்தான்.

1 கருத்து:

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வைசா,

நுகர்வோர் கையில் இருக்கும் மிகப் பெரிய சக்தி பணம்தான். voting with the dollars என்று சொல்வது போல, நம்முடைய எதிர்ப்பு/ஆதரவைக் காண்பிப்பது நம் கையில் இருக்கிறது. ஒரே நிறுவனம் சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது இது முடியாதுதான்.

அன்புடன்,

மா சிவகுமார்