வெள்ளி, அக்டோபர் 06, 2006

விலைப் போட்டிகள் (economics 27)

ஸ்டீபனுக்கு மனக் கணக்கு இப்படிப் போகும். 'நான் குற்றத்தை ஏற்றுக் கொண்டு கோபாலனைக் காட்டிக் கொடுத்தால், குறைந்தது ஆறு மாதங்கள் அதிக பட்சம் பத்து ஆண்டு ஜெயில் கிடைக்கும். நான் குற்றத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் ரெண்டு வருஷம் ஒரு பக்கம், ஆனால் இன்னொரு பக்கம் நான் இருபது வருஷம் ஜெயிலில் களி தின்ன அந்தப் பயல் ஆறு மாசத்தில் வெளியே போய் விடுவான்.'

இரண்டு பேருக்குமே அடுத்தவர் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள வழி இருந்தால் இரண்டு பேருமே குற்றத்தை மறுத்து, இரண்டு ஆண்டுகளில் இருவரும் வெளியே போய் விடலாம்.

அப்படித் தெரிய வழி இல்லாத நிலையில் ஒவ்வொருவரும் தனக்கு எந்தத் தேர்வில் தீங்கு மிகக் குறைவோ அதில் இருந்து விடுவார்கள். ஒப்புக் கொள்ளா விட்டால், அதிக பட்ச தீங்கு இருபது ஆண்டு சிறை, ஒப்புக் கொண்டால் மிஞ்சிப் போனால் பத்து ஆண்டுகள். அடுத்தவன் என்ன செய்தாலும் நான் குற்றத்தை ஏற்றுக் கொண்டால் பத்து ஆண்டுகள் சிறையோடு போய் விடும்.

பொன்ஸ் பின்னூட்டத்தில் சொன்னது போல:
Quote:
1. ஸ்டிபனுக்கும் அவனது கூட்டாளிக்கும் இடையிலான நட்பு பல நாள் நட்பாக இருந்தால், நம்பகத் தன்மை இருப்பின், ஸ்டீபன் குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டான்.

2. சக நம்பிக்கை இல்லாத போதும், ஸ்டீபனுக்கு அந்தக் கூட்டாளியிடம் பேச்சு வார்த்தை நடப்பது தெரியும். அதே போல் அந்தக் கூட்டாளிக்கும் இவ்விதமான பேச்சுவார்த்தை ஸ்டீபனுடன் நடப்பது தெரியவருமா என்பது ஸ்டிபனுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு அவனுக்கும் தெரிந்திருக்கும் என்று தெரிந்தாலும் ஸ்டீபன் குற்றத்தை ஒப்புக் கொள்ளமாட்டான்.

3. கூட்டாளியின் மீது நம்பிக்கை இல்லாத பட்சத்தில், அத்துடன் கூட்டாளிக்கு ஸ்டீபனுடனான பேச்சுவார்த்தை தெரிய வாய்ப்பில்லை என்று ஸ்டீபன் நம்பும் போதில், குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடுவான்.
UnQuote

இதே போல வணிக நிறுவனங்களும் போட்டியாளருடன் கூட்டுச் சதி செய்ய முடியாத நிலைமையில், விலையை ஏற்றவோ, இறக்கவோ முடியாது. இதே விலையில் விற்போம், எதிராளி ஏதாவது மாற்றினால் நாம் அதற்கு ஏற்ப பார்த்துக் கொள்ளலாம் என்று இரண்டு பேரும் அடுத்தவரின் முதல் நகர்த்தலுக்குக் காத்திருப்பார்கள்.

நாம் விலையைக் குறைத்து விற்பனையைப் பெருக்கப் போய் எதிராளியும் விலை குறைக்க அதற்குப் போட்டியாக நாம் இன்னும் விலை குறைக்க ஒரு விலைப் போர் மூண்டு இரண்டு நிறுவனங்களுமே பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடலாம்.

செல்லிடத் தொலைபேசிச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு , நான்காவது உரிமம் பெற்ற நிறுவனம் சந்தையில் நுழைந்த போது, இது போல விலைப் போர்கள் நடந்தன. 2002ல் சென்னையில் ஹட்ச் அறிமுகமான பிறகு ஏர்டெல்லும், RPGயும் புதிய நிறுவனத்துடன் போட்டி போட்டு குறைந்த விலைகளை அறிவித்தன.

பிஎஸ்என்எல் சேவை தொடங்கிய பிறகு விலை அடிப்படையில் போட்டி போடுவது கட்டுப்படியாகாமல் போனது. ஒரு நிலையில் இந்த விலைப்போட்டியிலிருந்து விலகிக் கொண்டு தனது சேவை மூலம் சம்பாதிக்க முடிவு செய்தது ஹட்ச் என்பது வெளியிலிருந்து பார்த்த எனக்குப் புரிந்தது.

இப்போது குறைந்த செலவு விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள் விலைப் போட்டியில் இறங்கி பெரும் இழப்பைச் சந்திக்கும் சூழலில் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் 1200 கோடி ரூபாய் ஒட்டு மொத்த இழப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள்.

உற்பத்திச் செலவுகள், மூலப் பொருள் விலைகள் ஏறி விட்ட நிலையில், ஒரு நிறுவனம் விலையை ஏற்றினால் போட்டி நிறுவனம் 'குறுகிய இழப்பைச் சகித்துக் கொள்வோம், விலை உயர்வால் எல்லா வாடிக்கையளர்களும் நம் பக்கம் வந்து விடட்டும், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.' என்று தன்னுடைய விலையை ஏற்றா விட்டால் விலை ஏற்றிய நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும்.

இப்படியே போனால் இரண்டு பக்கமுமே அடுத்தவர் முதல் அடி எடுத்து வைக்கட்டும் என்று காத்திருக்க விலை எப்போதுமே மாறாது. ஆனால் இழப்பில் தொழில் நடத்த முடியாது. இதற்கு என்ன செய்யலாம்?

2 கருத்துகள்:

பத்மா அர்விந்த் சொன்னது…

இது போன்ற நிலைகளில் நிறுவனங்கள் கீழ் உள்ள செயல்களை செய்ய ஆரம்பிக்கின்றன.
1. தங்களது மார்க்கெட் அளவி (market share)உயர்த்த முனைவது: மாற்றான் வாடிக்கையாளரை கவரும் வழிகள் தேடுவது, வாடிக்கையாளர்களுக்கென சிறப்பு போட்டிகள் , பரிசுகள் தருவது
2. சில நுட்பங்களை செலுத்தி தரத்தை உயர்த்துதல் (technology leader). அதிக தரத்தை அல்லது சிறப்பு அம்சங்களை நுழைத்து விலையை மெதுவாக ஏற்றுவது
3. வேறூ உபயோகங்கள் கண்டறிவது (find new uses for same product)
4. இன்னும் வேறு பொருட்களை உருவாக்கி அதையும் சேர்த்து bundle price ரீதியில் இரண்டையும் விற்க பார்ப்பது.
5. எல்லாவற்றுக்கும் மேலாக r&D, marketing இவற்றையும் சில புகழ்பெற்றா தலவர்கள் நடிகர்கள் இவர்களை விட்டு விளம்பரம் செய்வது
கடிசியாக சிறீது காலம் போட்டி இருந்து விலகி மீண்டும் வருவது அதிக பலன்களுடன் புதுமை பொலிவுடன்.

மா சிவகுமார் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் பத்மா. அடுத்தவரிடம் போட்டி போடுவதற்கு தன்னுடைய பொருளிலேயே கவனம் செலுத்தும், ஆராய்ச்சி முறைகள் சரியான அணுகுமுறை என்று தோன்றுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்