வெள்ளி, அக்டோபர் 13, 2006

ரஜினிக்கு ஏன் கோடிகள்? (economics 31)

  1. அதீத ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் (profix maximizing enterprises)
    'தொழிலாளர்களையும், சிறு வியாபாரிகளையும் சுரண்டி அந்த நிறுவனம் கொழிக்கிறது' என்று எதிர்ப்பவர்க்ள் ஒரு புறமிருக்க, 'அப்படி முழு சுதந்திரத்துடன் நிறுவனம் செயல்பட்டால்தான் சந்தைப் பொருளாதாரம் சரிவர செயல்படும்' என்று நியாயப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

    ஒரு தொழிலாளி வேலைக்கு வரும் போது வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார். அந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவரால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் ஆதாயத்தை அவருக்கு சம்பளமாகக் கொடுக்காமல், குறைந்த தொகையில் வேலை வாங்கிக் கொண்டு அதிகப்படியை தனது ஆதாயமாக பெருக்குவது முதலாளித்துவம்.

    இதைத் தடுக்கத்தான் தொழிற்சங்க அமைப்புகள் தோன்றி கூட்டாக சம்பள பேரம் பேசும் முறை வழக்கில் உள்ளது.

  2. செல்வந்தர்களுக்கு வரி விதித்து ஏழைகளுக்கு சலுகை வழங்கும் அரசுகள் (welfare states)

    'அரசாங்கம் எளியவர்களையும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களையும் பராமாரிக்கும் வண்ணம், உதவித் தொகைகள், மானியங்கள், இலவசத் திட்டங்கள் அளிக்க வேண்டும்' என்று ஒரு புறத்தார் சொல்ல, 'வெற்றிகரமாக உழைப்பவர்களிடமிருந்து எடுத்து சோம்பேறிகளுக்குக் கொடுத்தால் நாடு எப்படி உருப்படும்' என்று அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எதிர் கருத்தினர்.

    சத்துணவு போடுவதை விட தொழிற்சாலைகள் கட்டினால் அப்பாமார்களுக்கு வேலை கிடைத்து குழந்தைகள் வீட்டிலேயே சாப்பிட வசதி ஏற்படுமே என்று சத்துணவு திட்டத்தை எதிர்த்தார்கள்.

    அரசாங்கள் சந்தை என்ற காட்டில் யார் வலிமை உள்ளவரோ அவர் பிழைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டும், நலிந்தவர்கள் உதிர்ந்து போவது இயற்கையின் தேர்வு என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

  3. விலை விளையாட்டில் ஈடுபடும் வியாபாரிகள் (speculators)

    சந்தைப் பொருட்களை வியாபாரி பதுக்கி வைத்து விலையை ஏற்றி அப்புறம் விற்பதை வியாபாரத் திறன் என்று புகழ்பவர்களும், அது சமூகத்துக்குச் செய்யும் கொடுமை என கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று இகழ்பவர்களும் இருக்கிறார்கள்.

    இப்போது பருப்பு முதலான தானியங்களின் விலை தாறுமாறாக ஏறியிருப்பது மூலப்பொருள் வர்த்தகத்தை (commodity trading) அரசு அனுமதித்ததால்தான் என்கிறார்கள். (நன்றி : இந்த வார குமுதம் பத்திரிகை).

    குறைந்த விலைக்குக் கிடைக்கும் பொருட்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கி வைத்துக் கொண்டு விலை ஏறிய பிறகு விற்பது பதுக்கல் வியாபாரம் என்கிறோம்.

    இன்றைக்கு துவரம் பருப்பு விலை கிலோ முப்பது ரூபாயாக இருக்கும் போது இரண்டு மாதத்துக்குப் பிறகு அது கிலோ அறுபது ரூபாயாக ஏறி விடும் என்று அனுமானித்து இரண்டு மாதத்துக்குப் பிறகு ஐம்பத்தைந்து ரூபாய்க்கு நான் ஆயிரம் கிலோ வாங்கிக் கொள்கிறேன் என்று பந்தயம் கட்டலாம். அதற்கு முன்பணமாக 5% மதிப்பைக் கட்டி விட வேண்டும். (2500 ரூபாய்).

    இரண்டு மாதத்தில் விலை அறுபது ரூபாயாக ஏறியிருந்தால் ஆதாயமான 5000 ரூபாயையும் என்னுடைய முன்பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். விலை முப்பத்தைந்திலேயே நின்று விட்டிருந்தால் 20000 ரூபாய் நான் இழப்பேன்.

    'சந்தையை ஒழுங்கு படுத்துவதில் இந்த அனுமான வியாபாரங்கள் பெரிதும் உதவுகின்றன' என்பது இதை ஆதரிப்பவர்களின் வாதம். 'நம்மைப் போன்ற முதிர்ச்சியடையாத, நெறிப்படுத்தப்படாத சந்தைகளில் இதைச் சூதாட்டமாகப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு விலைகளை ஏற்றி விடுவதுதான் மிஞ்சும்' என்பது எதிர்ப்பவர்களின் கட்சி. கடைசியில் விலை உயர்வு சாதாரண மக்களின் தலையில்தானே விடியும்.

    சிபியும், பொன்ஸும் சொன்னது போல பங்கு வர்த்தகத்திலும் இது போல அனுமான விளையாட்டுக்கள் உண்டு. இந்த செயல்பாடுகள் SEBI போன்ற மட்டுறுத்தும் நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதில் விலை ஏறுவதும் இறங்குவதும் இதில் பங்கு பெறாத பொது மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை.

  4. சொத்து வாரிசுகளுக்குப் போதல் (Inheritance taxes)

    'அப்பா உழைத்தார், சொத்து சேர்ந்தது, அது மகனுக்கும் போய்ச் சேருவது என்ன நீதி, ஒருவர் தனது சொத்துக்களுக்கு உயில் எழுதி வைத்துப் போய்ச் சேர்ந்தால் சொத்துக்களின் மதிப்பில் பெரும்பகுதி வரியாகக (inheritance tax) கட்டப்பட வேண்டும்' என்று அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டங்கள் உள்ளன. 'தந்தையும் சொத்து குழந்தைகளுக்குப் போய்ச் சேருவதில் என்ன இடையூறு' என்று இருக்கும் சமூகங்கள் நம்ம ஊர் சமூகங்கள்.

    'உழைக்காமல் வசதிகள் வந்தால் அதை வீணாக்கி தவறான வழியில் போவதுதான் நடக்கும். வாரிசுகளுக்கு சொத்து கொடுப்பதில் கட்டுப்பாடுகள் இருப்பது சமூகத்துக்கு நல்லது' என்று சமூகவியல் வாதிகள் சொல்ல, 'அப்படி நடந்தால் யார்தான் சிரமப்பட்டு உழைப்பார்கள். செத்த பிறகு எவனோ கொண்டு போவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும் என்று இருந்து விட மாட்டார்களா' என்று முதலாளிகளைச சார்ந்தவர்கள் வாதிடுவார்கள்.

  5. சிறப்பு வருமானங்கள்

    "கலைத்துறை, விளம்பரத்துறைமற்றும் விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு தரும் ஊதியத்தை, அவர்களது திறமையை மட்டும் அல்லாமல் அவர்கள் மக்களிடையே கொண்ட செல்வாக்கும் சேர்த்து நிர்ணயிக்கிறது. இங்கே ஊதியமும் அவர்களது திறமையும் மட்டும் அல்லாமல் இன்னபிறவும் அவர்களது வருமானத்தை நிர்ணயிக்கின்றன." == பத்மா அரவிந்த்

    டெண்டூல்கருக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானம் அவரது போன்ற கிடைத்தற்கரிய திறமைக்கும் அந்தத் திறமைக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்புக்கும் உள்ள அங்கீகாரம்தான். அதே போலத்தான் ரஜினியின் நடிப்புத் திறனும் மக்கள் மத்தியில் அவருக்கிருக்கும் செல்வாக்கும்.

    இங்கும் வழங்கலுக்கும், தேவைக்கும் இடையான இழுபறிதான் வருமானத்தைத் தீர்மானிக்கிறது.

    செஸ்ஸில் அரிய திறமை படைத்த ஆனந்துக்கு டெண்டூல்கர் அளவு வருமானம் கிடைகாதது செஸ் விளையாட்டை கண்டு களிக்க மக்களின் தேவை குறைவாக இருப்பதுதான்.

இன்னொரு வருமான வழி நிலத்தின் மதிப்பு கூடுவதால் கிடைக்கும் ஆதாயம். அது தனிநபருக்கு சொந்தமா அல்லது வரி விதிப்பின் மூலம் அரசே எடுத்துக் கொள்ள வேண்டுமா?

6 கருத்துகள்:

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

பத்மா அர்விந்த்:"...திறமை மட்டும் அல்லாமல் அவர்களுடைய செல்வாக்கும் சேர்ந்து.."என்கிறார்.

செல்வாக்கு என்பது ஒருவருடைய
படத்திற்கு ரசிகர் மத்தியில் நிலவும்
வரவேற்புதானே?அதுதான் 'தேவை' எனப்படுகின்றது

வவ்வால் சொன்னது…

வணக்கம் மா.சி.

சிறிது காலம் வன வாசம் சென்று விட்டமையால் வலைபக்கம் வரவில்லை.அதற்குள் உங்கள் உள்மன விசாரணைகளில் வெகு தூரம் சென்று விட்டீர்கள் போல் உள்ளது. ஒரு இரண்டு , மூன்று பதிவுகள் தான் படித்துள்ளேன். படிக்க வேண்டும் எல்லாம்.

நுகர்பொருட்கள் விளையேற்றத்திற்கு இணையவழி வர்த்தகம் காரணமாக இருக்க முடியாது என்பது எனது கருத்து. ஏனெனில் இணையவழி வர்த்தர்கள் யாரும் ஒரு கிராம் பொருளை கோட வாங்கி வைக்க மாட்டர்கள் , விளையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நடைப்பெறும் ஒரு யூக
வணிகம் அது.

மேலும் ஒருவர் ஒரு யூனிட் தனது பெயரில் பதிவு செய்தால் அவரது ஒப்பந்தம் முடியும் காலத்திற்கு இடையில் எத்தனை நாட்கள் விளை ஏறி இருந்தது , எத்தனை நாட்கள் இறங்கியது என்பதின் அடிப்படையில் லாபம் ,நஷ்டம் வரும் .

உதாரணமாக 90 நாள் ஒப்பந்ததில் 60 நாட்கள் ஆரம்ப விலையை விட குறைவாகவும், 30 நாட்கள் விலை உயர்ந்தும் இருந்தால் , வாங்கியருக்கு நஷ்டம் தான் வரும் எனவே இணையவியாபாரிகள் சந்தை விலையை குறைக்க வேண்டுமானால் முயற்சிப்பார்கள்.

தற்போதைய விலையேற்றத்திற்கு காரணங்கள் ,

தீபாவளி காலம் அனைவரும் பலகாரங்கள் செய்ய அதிக அளவில் வாங்குவார்கள். மேலும் இனிப்புகடைகாரர்கள் தனியாக
மொத்த ஆர்டர்கள் எடுத்து அதிக அளவில் செய்வார்கள் எனவே எல்லா காலத்திலும் தீபாவளிக்கு முந்தைய மாதங்களில் விலை ஏற்றம் ஏற்படுவது சகஜமே.

இது மட்டுமில்லாமல், ரிலையன்ஸ் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட உத்தேசித்து அதிக அளவில் நுகர்ப்பொருட்களை குவித்து வைத்துள்ளது.

ரிலையன்ஸ் மட்டும் இல்லாமல் நிறைய சங்கிலி தொடர் சில்லறை வியாபார நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளதும் ஒரு காரணம்.

இதுவே நம்ம ஊரு அண்ணாச்சிகள் அதிகம் வாங்கி வைத்தால் உணவுப்பொருள் பதுக்கல் என சட்டம் தன் கடமையை செய்ய கிளம்பி விடும்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிஜி ஐயா,

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

உங்களைக் காணாமல் தேடித்தான் போய் விட்டது. நல்வரவாகுக!

உள்மன விசாரணைகளில் தோண்டத் தோண்ட புதையல்கள் வெளிப்படுகின்றன. மனதில் தெளிவும் உடலில் லகுவும் கிடைத்து ஒவ்வொரு நாளும் புதிதாக விடிகிறது.

//தீபாவளி காலம் அனைவரும் பலகாரங்கள் செய்ய அதிக அளவில் வாங்குவார்கள். //

இந்த விலையேற்றம் கடந்த நான்கைந்து மாதங்களாகவே நடந்து வருகிறது வவ்வால். Commodity Trading விதி முறைகள் நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கின்றதா, அல்லது டெலிவரி கொடுக்க வேண்டிய நாளின் விலையைப் பொறுத்துதான் கணக்கா?

வியாபாரிகள் முனைந்து விலை ஏற்றுவதோ, இறக்குவதோ செய்வது, அவர்கள் எந்த திசையில் பணம் கட்டினார்கள் என்பதைப் பொறுத்துதானே! ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையை ஏற்றி விட்டது போல விதி முறைகளும் நடுவரும் இல்லாத களத்தில் விபரமானவர்கள் இறங்கி விளையாடுவது நடக்கிறது என்று தோன்றுகிறது.

குமுதம் கட்டுரையைப் படித்ததைத் தவிர விரிவாக ஆங்கிலத் தளங்களைப் படித்துப் பார்க்கவில்லை. ஆனால் ஒரு சில மாதங்களில் இப்படி விலை ஏறிப் போவதற்கு இது போல வெளிக்காரணி இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

பத்மா அர்விந்த் சொன்னது…

Sivakumar,
In USA, if a land appreciates we pay income tax on that under capitol gain. It again depend son demand. There are times when people can not afford mortgages more houses to come to market. This is determined by high interest rate etc. Then the price goes down. On the other had when the interest rate goes down, many people can buy houses and teh price goes up. actually these values are not permanent.
The worst thing is when a bank forcoses a house they can sell at a very low rate just to get back the reminder of loan. So buyer makes a profit. Similarly if a person does not pay property tax for a while, the govt can sell the house to anyone who just pay teh tax. These are very inetersting factors that determine a real estate market.
To come to your question, unless a person reinvest the monetary gain within a year on a house, he pays income tax on that.

மா சிவகுமார் சொன்னது…

Thanks Padma,

Other than income tax and capital gains tax which applies to all other types of income/capital gains also, land income is treated differently.

In the next post I have written about the land tax movement.

anbudan,

Ma Sivakumar