புதன், ஏப்ரல் 18, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 4

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த சாதியினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் கிருத்தவ மதம் வேகமாகப் பரவியது. முன்பே சொன்ன கிருத்துவ மதப் பரப்புபவர்களின் சேவைத் திட்டங்களுக்கு வருணாசிரம முறையில் அமைந்த இந்து சமூக அமைப்பு சரியான விளைநிலமாக இருந்தது.

நண்பர் ஒருவரிடம் பேசும் போது 'இந்து சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் கிருத்துவ மதத்துக்கு மாறியது மூலம் தமது வாழ்க்கையில் பல புதிய வழிகளைத் திறந்து விட்டுக் கொள்ள முடிந்தது. மூச்சைத் திணற வைக்கும் இந்து சமூக அமைப்பில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை மதம் மாறக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை' என்று சொன்னேன்.

'காந்தியே மத மாற்றத்தைத் தடை செய்யச் சொன்னார் தெரியுமா' என்று என் மீது குத்திக் கொண்ட காந்தீயவாதி முத்திரைக்கு தோதுவான வாதம் வந்தது.

'அதனால் என்ன? உங்களுக்கு மதம் மாற வேண்டாம் என்றால் மாறாதீர்கள். விரும்புபவர்கள் மாறுவது அவர்களது உரிமை. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்.'

'கிருத்துப் பிரசங்கிகள் எப்படி இந்து தெய்வங்களை இழிவு படுத்துகிறார்கள் தெரியுமா? எங்க ஊர் ராமன் புதூரை கார்மல் நகர் என்று பெயர் மாற்ற முயன்றார்கள். கன்னியாகுமரி மாவட்டம் என்று எழுதும் போது கன்னியாகுமேரி என்று மேரி பெயரைப் புகுத்துகிறார்கள். நாமெல்லாம் சும்மா இருந்து விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் நமது மதம் வாழ இடமே இல்லாமல் போய் விடும்'

எனக்கு மிகவும் பழகிப் போன வாதங்களில் இறங்கினார். மக்களின் பொருளாதார, சமூகப் பிரச்சனைகளுக்கு மாற்றாக இது போன்ற பயமுறுத்தல்களை வெளியிட்டு உணர்வு பூர்வமாக தூண்டி விடுதல் மிகச் சாதாரணம். 1990ல் அத்வானி ஆரம்பித்த ரத யாத்திரை, விபி சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வாய்ப்புகள் வழங்க முனைவதை எதிர் கொள்ளத்தான்.

மக்களின் அவல வாழ்வுக்கு தீர்வுகளை முன் வைக்கும் போது, 'ராமர் கோவில், பங்களாதேசத்தில் இந்துக்கள் படுகொலை, நமது தெய்வங்களுக்கு இழிவு' என்று உணர்வுகளைத் தூண்டும் பிரச்சனைகளைக் கிளறி மக்களை வெறி கொள்ள வைப்பார்கள். அதன் மூலம் அடிப்படை பிரச்சனைகளை அப்படியே வைத்துக் கொண்டு தாம் அனுபவித்து வரும் சமூக உரிமைகளைத் தொடர வழி தேடுகிறார்கள்.

இது எல்லா மதத்திலும் நடக்கலாம். முஸ்லீம் நாடுகளில் இசுலாமிய தீவிரவாதிகள் இப்படிச் செயல்படலாம். அமெரிக்காவில் கிருத்துவ மத அடிப்படைவாதிகள் அரசியல் செய்வதும் இதே அடிப்படையில்தான். ஆனால் நமது நாட்டில் தீவிரமாக இருப்பது இந்து மத வெறிதான்.

இந்து தர்மத்தின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் இருப்பவர்கள் வெளியில் இருந்து வரும் தாக்குதல்களுக்கு சூலாயுதம் ஏந்த அவசியமில்லை. இந்து சமூகத்தின் குறைகளைக் களைவதுதான் மதத்தைப் பாதுகாக்கும் ஒரே வழி. பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுத்து, வாய்ப்புகளை இல்லாமல் செய்து விட்டு அவர்கள் வேற்று அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது அடிப்படைக் காரணங்களை கவனிக்காமல், உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் குளிர் காய்வதுதான் ஆர் எஸ்எஸின வழிமுறை.

'பாப்ரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட அன்றுதான் இந்தியா இரண்டாகப் பிரிந்தததை நியாயப்படுத்தினார்கள் இந்துத்துவாவாதிகள். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அமைப்பில் முஸ்லீம்களுக்கு சம வாழ்வுரிமை கிடைக்காது என்ற வாதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தானுக்கு மாற்றாக செயல்படுவதுதான் காந்தி-நேரு உருவாக்கிய இந்திய மதச்சார்பற்ற அரசமைப்பு. அதை நம்பித்தான் பல கோடி முஸ்லீம்கள் இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டு நாட்டு முன்னேற்றத்துக்காக ஒன்றாக உழைத்து வருகிறார்கள். இந்துத்துவா அமைப்புகள் அதிகாரத்தைப் பிடித்து தமது கொள்கைகள் படி நடக்க ஆரம்பித்தால் இந்தியா இணைந்து இருப்பதற்கான காரணங்களை தகர்த்து விடுவார்கள். இந்தியாவின் ஒற்றுமைக்கு முதல் எதிரிகள் இந்துத்துவா வாதிகள்தாம்', என்ற நான் தொடர்ந்து

'சென்ற முறை பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, தமது விருப்பப்படி செயல்படவில்லை என்றுதான் ஆர்எஸ்எஸ் தலைமைக்குக் கோபம். அடுத்த முறை வாய்ப்புக் கிடைத்தால் அப்படிச் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள் என்பதுதான் எங்களுக்கு கவலை' என்றேன்.

'ஆர்எஸ்எஸ் என்பது தொண்டு நிறுவனம். அவர்களுக்கு பதவியில், அதிகாரத்தில் ஆசை கிடையாது' என்றார் நண்பர்.

'ஆர்எஸ்எஸ், விஸ்வஇந்து பரிஷத், பாரதீய ஜனதா கட்சி, பஜ்ரங்தள், இந்து முன்னணி இவை எல்லாம் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு துறைகளில் இயங்கும் சங்க குடும்பத்தின் வெவ்வேறு அமைப்புகள். ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று 1979ல் ஜனதா அரசை விட்டு வெளியேறிய ஜனசங்க வாஜ்பேயி முதலான அமைச்சர்களிலிருந்து, இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலரும் ஆர்எஸ்எஸ் என்ற பாசறையில் உருவானவர்கள்தாம். நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ்சின் படைப்பு. அத்வானி ஆர்எஸ்எஸ்சின் உறுப்பினர்.'

'காங்கிரசு ஆட்சியில் விலை வாசி ஏறி விட்டது, சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கையினால் விவசாயிகள் துன்புறுத்தப் படுகிறார்கள் என்றும் வாக்கு சேகரிக்க வருவார்கள். தேவைப்படும் இடங்களில் முஸ்லீம்களை இழிவாகப் பயங்கரமாக சித்தரிக்கும் குறுந்தகடுகளைப் பயன்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் கிருத்துவர்கள் இந்து மதத்தை அழிக்க வருவதாகப் பயம் காட்டுவார்கள்.

எப்படி வந்தாலும், எந்த உருவில் வந்தாலும் இந்தியாவை பேரினவாத நாடாக மாற்றும் நோக்கம்தான் இந்துத்துவா குடும்ப இயக்கங்களின் நோக்கம். அந்த இலக்கை அடைய இன்றைய அரசியல் அமைப்பில் தமக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுளளார்கள். காங்கிரசுக்கு மாற்று பாஜக என்று (சோ போன்றவர்களின் கனவு) வருவது இந்தியா என்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டு அமைப்புக்கு பாதகமாகத்தான் முடியும்.

11 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

மாசி,

அருமையான இடுகைகள் 4 பகுதியையும் படித்தேன். மதங்களில் சிறுபான்மை பெரும்பாண்மை என்று பேசுபவர்கள் பலரும் பெரும்பாண்மை மதத்தில் உள்ள சிறுபாண்மையினரின் பெரும்பாண்மை செயலை பார்க்க மறுக்கின்றனர்.

முன்பு எல்லாம் நல்லபடியாக இருந்ததாகவும் இப்பொழுது கெட்டுப் போய்விட்டதாகவும் சொல்கிறார்கள். முடமானவர்கள் முடங்கியே கிடக்கவேண்டும் என்பது அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

வாழ்க சமத்துவம்...!

வாழ்க இந்திய தே'சீ'யம் !
:)

Unknown சொன்னது…

சிவா,
இதுவரை வந்துள்ள உங்களின் "ஆர்எஸ்எஸ் என்ற அபாயம்" 4 பகுதியையும் படித்தேன்.

மதம் என்ற அளவில் மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்வது அனைத்து மதத்திற்கும் பொதுவானது. இதில் பிராமணியமோ,இஸ்லாமோ,கிறித்துவமோ...விலக்கல்ல.

கிறித்துவம் பெரும்பான்மையாக உள்ள நாட்டில்தான் பெண்களின் கருக்கலைப்பு உரிமை,ஸ்டெம்செல் ஆராய்ச்சி தடுப்பு போன்ற பல அறிவியல் தடைகள் உள்ளது.

இதுபோல் நிறைய உதாரணங்களை எல்லா மதத்துக்கும் தரலாம்.

****

இந்தியாவில் மதம் மாறிய அனைவரும் பிராமணியத்தில் இருந்து தப்பிப்பிழைக்க கண்ட வழிமுறைதான் கிறித்துவ,இஸ்லாமிய மதமாற்றம்.

மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் மனம் மாறி மதம் மாறியவர்கள் உள்ளார்கள்.பிராமணீய மரபில் வந்த உயர்சாதி அய்யர்,அய்யங்கார் யாராவது மதம் மாறியது கேள்விப்பட்டு உள்ளீர்களா? (எனக்குத் தெரிந்து சிலர் உள்ளனர்).இவர்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்.

***
ஆர்எஸ்எஸ் அல்லது எந்த ஒரு பிராமணீயக் கோட்பாடு கொண்ட கட்சியை/இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் முதல் நோக்கம் இந்து/இந்தி/இந்தியா என்றுதான் இருக்கும்.இவர்களின் நோக்கம் மிகக்குறுகியது.

நல்லவனாக இருக்க ஆர்எஸ்எஸ் அல்லது அது போன்ற எந்த குப்பை மதவாத இயக்கங்களும் தேவை இல்லை.

***

அடிப்படை ஒழுக்கம் இல்லாத ஜென்மங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் சமூகத்திற்கு பயனில்லை.ரோட்டில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லுபவர்களில் எல்லா மத்தினரும் ,கட்சியினரும் உண்டு.

***

//ஆர்எஸ்எஸின் முதல் அபாயம், அதன் ஊழியர்களின் அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை. //

உங்கள் பார்வையில் எது அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை?

அதன் அளவுகோல் என்ன?

ஏன் கேட்கிறேன் என்றால் சமீபத்தில் மாட்டிய கன்னட பிராசாத்கூட தன்னளவில் ஒழுக்கமாக இருந்ததாகச் சொல்லியுள்ளார்.

அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை வாழ்ந்து ,சமூகத்தைக் கெடுப்பதை தொழிலாக செய்தால் அந்த அப்பழுக்கற்ற தனி வாழ்க்கையின் பயன் என்ன?

இந்தியாவில் பீடி குடித்தல்,பியர் குடித்தல் அல்லது பாலுறவு விசயங்களில் ஒரு வித வறட்டுத்தனத்தை கடைபிடித்தல்(பொதுவில் பாலியல் பற்றிப் பேசாமை,பெண் உதிரப் போக்கு தீட்டு என்று சொல்லுதல்,பொதுவிடத்தில் மனைவியைத் தீண்டாமை...) போன்ற செயல்களைச் செய்தாலே நல்லவனாகிவிடலாம்.

இந்த மூன்றையும் செய்துவிட்டு நீங்கள் ரோட்டில் ஒண்ணுக்குப்போய் குப்பையை ரோட்டில் போட்டால்கூட உங்களுக்கு "அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை" அந்தஸ்து கிடைத்துவிடும்.

அதுபோல் மேற்சொன்ன மூன்றையும் செய்துவிட்டு பிராமணீயம் பேசியோ அல்லது இஸ்லாம்/கிறித்துவம் பேசி நாட்டைக் குட்டிச்சுவராக்கினாலோ கவலை இல்லை உங்களுக்கும் "அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை" அந்தஸ்து கிடைத்துவிடும்.


பி.கு:
பிராமணீயம்:-
வருணாசிரமக் கோட்பாட்டின்படி வந்த பல அடுக்கு சாதிமுறையை நம்பும் கோட்பாடு.

வஜ்ரா சொன்னது…

//
'பாப்ரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட அன்றுதான் இந்தியா இரண்டாகப் பிரிந்தததை நியாயப்படுத்தினார்கள் இந்துத்துவாவாதிகள். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது.
//


http://pseudosecularism.blogspot.com/2006/03/dangerous-illusions-destructive.html

Sridhar V சொன்னது…

கல்வெட்டின் பின்னூட்டம் (வழக்கம் போல்) மிகவும் அருமையாக இருக்கிறது.

அவருடைய கருத்துடன் முழுவதும் ஒத்துப் போகிறேன்.

//ஆர்எஸ்எஸ் அல்லது எந்த ஒரு பிராமணீயக் கோட்பாடு கொண்ட கட்சியை/இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் முதல் நோக்கம் இந்து/இந்தி/இந்தியா என்றுதான் இருக்கும்.இவர்களின் நோக்கம் மிகக்குறுகியது.
//

இதன் மாற்று எது? அதன் நோக்கமும் குறுகியதா, பெரியதா? எந்த வகையில் பெரியது?

மா சிவகுமார் சொன்னது…

கோவி கண்ணன்,

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மதம் அரசியலில் புகுந்தால் எங்கும் கேடுதான் என்பதற்கு இந்தியாவிலிருந்து ஆரம்பித்து அமெரிக்கா வரை நிறைய உதாரணங்கள் உள்ளன.

கல்வெட்டு,

நீளமான பின்னூட்டத்துக்கு நன்றி. நான் ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் தனிவாழ்வைப் பற்றிக் குறிப்பிட்டதற்குக் காரணம். அப்படி இருப்பதால் மக்களிடையே எளிதாக செயல்பட முடிவதைச் சுட்டிக் காட்டத்தான். மேலும் உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

வஜ்ரா,

ஆஸ்திரேலியாவிலிருந்தும் ஐரோப்பியாவிலிருந்தும் நாம் சகிப்பின்மையைக் கற்றுக் கொள்ள வேண்டுமா! நமது ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பண்பாடு எங்கே போயிற்று? இன்றைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவார்டு நமக்கு முன்னுதாரணமா?

நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

ஸ்ரீ சொன்னது…

சிவா , அபாயம் எல்லாவற்றுக்கும் பொதுவானதே.உங்கள் கருத்து மற்றவையெல்லாம் அபாயமற்றவை என்ற நோக்கில் கூறப்பட்டிருக்குமானால் உங்கள் கருத்தோடு வேறுபடுகிறேன்.அபாயங்களை நாம் (அ)சமுதாயம் எப்படி கையாள்கிறது என்பதுதான் மிக முக்கியம்.மின்சாரம் கூட மிக அபாயமான ஒன்றுதான்.அதனை சரியாக பயன்படுத்துவதில்தான் அபாயம் விலக்கப்படுகிறது.ஆர்.எஸ்.எஸ் -யை இந்து ஆதரவு அமைப்பு என்ற ஒரே நோக்கத்திற்க்காக எல்லா இந்துக்களும் கண்ணைமூடிக்கொண்டு அதற்கு ஆதரவு அளிப்பதோ,அதில் சேர ஆர்வம் கொள்வதோ,அதை முழுதும் ஏற்றுக்கொள்வதோ இல்லை என்பதுதான் மிக முக்கிய விஷயம்.இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் இல்லாமலிருக்கலாம் எதையும் சீர்தூக்கி பார்க்கும் திறமை இன்னும் இருக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.இந்த நம்பிக்கை உள்ளவரை எதுவும் அபாயமில்லை.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஸ்ரீ ஐயா,

நன்றாக இருக்கிறீர்களா! மகனுக்கு சேர்க்கை முடிந்து விட்டதா?

நீங்கள் சொல்வதுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். இன்றைக்கு நம்மை எதிர் கொள்ளும் மிகப் பெரிய அபாயம் இந்துத்துவா இயக்கங்களின் பயங்கரவாதமே என்ற கருத்தில் எழுதியதால் மற்ற பயங்கரவாதிகளால் அபாயம் இல்லை என்று சொல்லவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
ஆஸ்திரேலியாவிலிருந்தும் ஐரோப்பியாவிலிருந்தும் நாம் சகிப்பின்மையைக் கற்றுக் கொள்ள வேண்டுமா! நமது ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பண்பாடு எங்கே போயிற்று? இன்றைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவார்டு நமக்கு முன்னுதாரணமா?
//

நல்லது எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்வது தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாரம்பரிய அறிவு.

கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் சகித்துக் கொள்ள எந்தப் பாரம்பரியம் சொல்லிக் கொடுக்கிறது ? இந்தியாவினுடையதா ? நிச்சயம் இல்லை.

ஆனால் அந்த ஆஸ்திரேலிய பிரதமர் சொல்வதை உங்களால் மறுக்க முடியுமா ?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேலிடத்தில் பெரும் தலை ஏ. பி. பர்தன் கூட ப.ஜ.க வை குறிக்கும் போது communal REACTIONARY forces என்று தான் குறிக்கிறார்.! ஏனோ ?

communal action க்கு reaction கொடுக்கும் forces என்பதற்காகத்தானே ?

மா சிவகுமார் சொன்னது…

எது நல்லவை என்பதில்தான் கருத்து வேறுபாடு இல்லையா வஜ்ரா :-)

யார் கொலைகாரன், கொள்ளைக்காரன். நான் எழுதப் போகும் அடுத்தப் பகுதிகளையும் படியுங்கள். நான் சொல்வதன் பின்னணி என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Thamizhan சொன்னது…

இந்து மதம் பொறுமையின் சிகரம் என்கிறார்கள்.உண்மையான் "இந்து" என்பதே இன்னும் கேள்விகுறி தான்.
இன்றைய நிலை இந்து மதம் என்றால் ஆரிய பார்ப்பனீய வேத மதம் என்பது தான்.
தேவை என்னும் போது அனைவரையும் இந்துக்கள் என்கிறார்கள்.ஆனால் தேவையில்லாத போது சாதிதான் முன்னிற்கிறது.
இந்துத்துவாவும்,வர்ணாசிரமும் வேண்டும்,வர்ணாசிரமத்திற்குப் பல்வேறு வியாக்யானங்கள் இதெல்லாம் மற்றவர்களை ஏமாற்றும் வேலை.
இவர்களுடைய மத வெறியிலே மனிதர்கள் அனைவரும் சமம்,ஆண்களும் பெண்களும் சமம் என்று ஒத்துக் கொள்கிறார்களா?
எவ்வள்வு பெரிய பெரிய ஆட்களை வைத்து இரகசிய திட்டங்கள்,ஏமாற்று வேலைகள் என்று செய்யப் படுகின்றன்.
ஆர்.எஸ்.எஸ் என்ற அபாயம் உண்மை,பயங்கரத் திட்டங்கள் இரகசிய ஏமாற்றுக்கள்,பார்ப்பனீய தலைமை இதெல்லாம் எதற்கு?
கோட்சே காந்தியைக் கொன்றதற்கே கீதையைத் தானே வழி காட்டி என்றான்.அதைத்தானே இன்னமும் பரப்பத் துடிக்கிறார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க தமிழன்,

உங்கள் கருத்தைச் சொன்னதற்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்