புதன், ஏப்ரல் 25, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 7

எங்கள் வீடு இருப்பது சைமன் குடியிருப்பு என்ற பகுதி. முந்திரித் தோப்புகள் (கொல்லா தோப்பு என்பது எங்க ஊர் பெயர்) இருந்த மேலராமன் புதூர் பகுதியில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மூலமாக நிலம் வாங்கி, மனை பிரித்து விற்றார்கள். பல்வேறு ஊர்களிலிருந்து வெள்ளை சட்டை வேலை பார்க்கும் குடும்பங்கள் வீடு கட்டிக் குடியேறின.

இத்தகைய வீடுகளைத் தவிர, தமது நிலங்களைத் தக்க வைத்திருந்த பல குடும்பங்களும் வசித்தன. பாதிக்குப் பாதி இரண்டு மதத்தினரும் இருந்தார்கள். மேல ராமன் புதூரிலும் பெருமளவில் இரண்டு மதத்தினரும் சேர்ந்து வசித்தார்கள்.

மேலே சொன்ன இரண்டாவது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு தடையை மீறி நடக்க முயற்சிக்க துப்பாக்கிச் சூடு நடைபெற்று நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அன்று முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்ததாம். அம்மா யாரையும் வெளியே விடவில்லை. மாலை வாக்கில் அப்பா கோவிலுக்குப் போவதாகக் கிளம்பி விட்டார்கள்.

'என்ன கலவரம் நடந்தால் எனக்கென்ன, நான் நாகராஜா கோவிலில் போய் உட்கார்ந்து விட்டு வரப் போகிறேன்.' என்ன நடக்கிறது என்று நிலவரம் அறியும் ஆர்வமும் இருந்திருக்கலாம். நகரில் தடையுத்தரவும் காவல் துறை ஆட்சியும் நடைமுறையில் இருந்ததாகப் பின்னர் தெரிய வந்தது.

மதியமே போன அப்பாவை இருட்டிய பிறகும் காணவில்லை. அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார்கள். ஏதேதோ மோசமான சாத்தியங்கள் மனதில் ஓடின. அப்பாவைப் பார்த்துப் பேச வந்த சின்ன வயது நண்பர்கள் இருவரும் சேர்ந்து கொள்ள எல்லோரும் வெளியே தெருவில் நின்று கொண்டு வழி பார்த்துக் கொண்டிருந்தோம்.

'சும்மா நாகராஜா கோவில் வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். எங்கிருந்தோ ஓடி வந்த சில குரங்கன்கள், மதில் மேல் ஏறி நின்று கொண்டு வெளியே இருந்து காவல் துறையினருக்கு பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பவே சொன்னோம், சும்மா இருங்கடேன்னு. கேட்கலை. கொஞ்ச நேரத்தில போலிசும் உள்ளே வந்து விட்டது'

அப்பா போயிருந்த மிதிவண்டி அடிபட்டுக் தெப்பக் குளத்துள் மூழ்கடிக்கபட்டிருக்கிறது. அங்கு இருந்த எல்லோருக்கும் லத்தியால் அடி விழுந்திருக்கிறது. அப்பாவுக்கும் முதுகிலும், கால்களிலும் அடி. எல்லா களேபரமும் ஓய்ந்த பிறகு ஆள் வைத்து குளத்தின் உள் கிடந்து மிதிவண்டியை எடுக்கச் செய்து கடை ஒன்றில் விட்டு விட்டு நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் பின்னால் தெரிய வந்தது. இப்போது அந்த மங்கிய இருட்டில் அப்பா நடந்து வருவது தெரிந்தது. சைக்கிள் என்ன ஆச்சு என்று கேள்வியுடன், ஆளைப் பார்த்த நிம்மதி. எதிர் வீட்டுக்கு அருகில் இருந்த தெரு விளக்கில் வந்ததும், நாங்கள் எல்லோரும் வெளியில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் கிருத்துவ மதத் தலைவரை இழிக்கும் இந்துத்துவா முழக்கம் ஒன்றை உரக்கக் கத்தி விட்டார்கள் அப்பா.

எதிர் வீட்டுக் காரரும் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. யாரும் கவனித்திருக்கவில்லை. அவர் வெளியே வந்து அப்பாவிடம் வாக்குவாதமும் கைகலப்பும் ஆரம்பித்தார். அப்பாவின் நண்பர்கள் இரண்டு பேரும் வேகமாகப் போய் விலக்கி அப்பாவை வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள்.

எதிர் வீட்டுக் காரர் தன் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு உரக்கத் திட்ட ஆரம்பித்தார். 'நீங்க எல்லாம் எப்படி இங்க இருந்து விடுவீர்கள் என்று பார்க்கிறேன். நாளைக்கு மேலராமன் புதூரில் சொல்லி, எல்லாத்தையும் அடித்துப் போட ஏற்பாடு செய்கிறேன். நாளைக்குக் காலையில் நானே கம்போடு அங்கு உட்கார்ந்திருப்பேன்.'

இப்படி அரை மணி நேரத்துக்கும் மேல் கத்தி விட்டு அவர் வீட்டுக்குள் போய்க் கதவை மூடிக் கொண்டார். அதன் பிறகு பக்கத்து வீட்டுக் காரர் என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தார். "அந்த ஆள் கத்தி ஓய்ந்த பிறகு அவர் பார்வையில் படாமல் வர வேண்டும்' என்று சொன்னார்.

'ஒனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம். டவுன்ல கலவரம் நடக்கும்னு தெரியும், ஏன் போகணும்' என்று மாமாவும்,

'சொன்னா கேக்கவா செய்கிறார்கள், ஏற்கனவே எல்லோரும் கருவிக் கொண்டிருப்பதாக சொல்லியிருக்காங்க,, இப்ப என்ன செய்வது' என்று அம்மாவும் புலம்பிக் கொண்டிருந்தார்கள். நாளைக்குக் காலையில் எப்படி பள்ளிக்கு வேலைக்குப் போவது, பெரிய அடிதடி நடக்கப் போகிறது என்று கலக்கம்.

எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்து, அப்பாவின் நண்பர் மாமாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு கிருத்துவ நண்பரை காலையில் வந்து அவரை அணுகச் சொல்லலாம் என்று முடிவு செய்தார்கள்.

பயங்கரமாகத் தெரிந்த இரவு விடியலில் அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை. மாமாவும், அவரது பக்கத்து வீட்டுக் காரரும் வந்து விட்டார்கள். அவர் போய் எதிர் வீட்டுக் காரரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார். முகமெல்லாம் சிரிப்பு, நிம்மதி.

'நாம இங்க தனி வீடா இருக்கோம். எதிரில் இருக்கும் இந்துக்கள் எல்லாம் நம்மைத் தாக்க வந்து விட்டால் என்ன செய்வது என்றுதான் அப்படி சத்தம் போட்டு மிரட்டி வைத்தேன் என்கிறார். எதுவும் தொந்தரவு வராது' என்று சொன்னாராம். சமாதானம் சொல்லி விட்டுப் போனார்.

அப்புறம் பல காலம் இரண்டு வீடுகளுக்குமிடையே பேச்சு கிடையாது. ஆனால் எந்த விரோதமும் இருந்ததில்லை.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

காந்தியம் பேசிக்கொண்டு பெட்டி வாங்குகிறீர்களே இது தகுமா?, முறையா?, தருமம் தானா?....

எவ்வளவு தருகிறார்கள் ஒரு பதிவிற்கு?....இப்படி மாஞ்சு, மாஞ்சு எழுதுகிறீர்கள்?

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

:-)

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

மா.சி

கண்டுக்காதீங்க...தொடர்ந்து எழுதுங்க...!!!!!

மா சிவகுமார் சொன்னது…

ரவி,

இதற்கெல்லாம் அசந்து விடுவோமா? :-) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனதில் பட்டதை சொல்லத்தான் போகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்