ஞாயிறு, ஏப்ரல் 22, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 5

ராமகோபாலன் என்ற முதியவர் செயல்பட்டு வருகிறார். நாகர்கோவிலில் 'இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு' நடந்த போது அவர் நடத்திய உரையின் சில பகுதிகள் இன்னும் நினைவில் இருக்கிறது. எல்லாமே இந்து மதத்தில் இருந்து வந்தவைதான் என்பார் அவர், பிற மதத்தினரின் வழிபாட்டு முறைகளை நம்பிக்கைகளை கிண்டல் செய்வதில் தெருமுனை பிரசங்கிகளைத் தோற்கடித்து விடுவார் இவர். அந்த வாதங்களை திருப்பிச் சொல்வதால் யாருக்கும் பலன் இல்லை. மிக மென்மையான ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

'இந்துக்கள் இந்துக் கடைகளில்தான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அடுத்த தடவை இந்துக்கள் மற்ற மதத்தினர் கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை வராமல் பார்த்துக் கொள்வது மற்ற மதத்தினர் கையில்தான் இருக்கிறது.' இது ஆயிரக் கணக்கான மக்கள் கூடியிருந்த மாநாட்டு மேடையில் பேசிய உரையின் ஒரு பகுதி.

இந்த மாநாடு நடந்து முடிந்த அடுத்த மாதங்களில் மாவட்டம் எங்கும் கலவரங்கள் வெடித்தன. நான் நண்பரிடம் சொன்னது போல, 'என்னுடன் பழகும் நண்பர்கள், எனக்குத் தெரிந்த பிற மதத்தினர், இனிமையானவராக, நேர்மையானவராகவே இருந்தார்கள். ஆனால் காதில் விழும் கதைகள் எங்கோ மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் பிற மதத்தினர் கொம்பு வைத்துக் கொண்டு ரத்தம் குடிக்கும் வெறியர்களாக இருப்பதாகச் சித்தரித்தன. எல்லோருக்கும் ஒரு வித பயம் உருவாக்கும் வதந்தி சார்ந்த பிரச்சாரம் நடந்தது'.

இன்றும் கூட 'பாகிஸ்தானில் இந்துக்களைத் திட்டமிட்டு கொடுமைப்படுத்துகிறார்கள், பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று கேட்கும் போது, நாடுகள் உருவாகி 60 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாடுகளில் இன்னும் இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதே வியப்பாக இருக்கும். நான் கேட்டு வந்த பிரச்சாரத்தின் படி பார்த்தால் இந்துக்கள் அனைவரும் அடித்துத் துரத்தப்பட்டு விட்டார்கள், அல்லது மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஒரு இந்து வரும் அளவுக்கு அங்கு இந்துக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தியாவை விட அங்கு மத உரிமை குறைவு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நான் சந்தித்த பாகிஸ்தானிய நண்பர்களில் யாரும் வெறுப்புடன் அலைவதாகப் படவில்லை. எனக்குத் தெரியாத உலகில் அப்படி நடப்பதாக நம்பி நான் இந்து தர்மத்தைக் காக்க சூலாயுதம் ஏந்தி ஊர்வலமாகப் போக வேண்டும். அதே போல சென்னையைச் சார்ந்த ஒருவர் கன்னியாகுமரியில் இந்துக்கள் ஒடுக்கப்படுவதாகக் கவலைப்பட வேண்டும்.

'நம் சகோதரர்கள் பங்களாதேசத்தில் ஒடுக்கப்படுவதை எதிர்த்துக் கேட்கா விட்டால் நமக்கு அவமானம்' இது நண்பர்.

'நம் சகோதர்கள் பங்களாதேசத்தில் இருக்கலாம். ஆனால் உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பம் உங்களுக்கு இன்னும் நெருங்கியது. அவர்கள் மதத்தாலோ சாதியாலோ வேறுபட்டிருக்கலாம். அவர்களுடன் நட்பு பூண்டு நல்வாழ்வு வாழத் தெரியாத உங்களுக்கு பங்களாதேசம் பற்றிக் கவலைப்பட என்ன அருகதை இருக்கிறது?'

'ஆதிக்க சாதியினர் தமது உரிமைகளை, ஆதிக்கத்தைத் தொடர வகை செய்யும் பழைய வருணாசிரம தர்மத்தை விட்டுக் கொடுத்து விடக் கூடாது, அந்த தர்மத்தைத் தாங்கிப் பிடிக்க பிற சாதியினர் தமது முதுகைக் கொடுக்க வேண்டும். பாவம் பார்த்து தரிசனம் கொடுத்து தொண்டு செய்வதை ஏற்றுக் கொண்டு அடுத்த பிறவியில் விமோசனம் கிடைக்கும் என்று காத்திருக்க வேண்டும். எப்படி வேறு மதத்துக்கு மாறலாம்? அதற்கு என்ன உரிமை இருக்கிறது?' - இதுதான் இந்துத்துவாவின் அடிப்படை.

7 கருத்துகள்:

thiru சொன்னது…

மா.சி,

இதுவரை சுமார் 25 நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். எந்த நாட்டிலும் இந்துக்களது வழிபடும் உரிமையை மறுத்ததாக பார்க்கவில்லை. ஒற்றை நாடு அதுவும் இந்து நாடு என்னும் இந்துத்துவவாதிகளுக்கு இன்றும் சேவை என்ற பெயரில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பணம் திரட்டப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மற்றும் மதம்சாராதவர்கள் அதிகமாக வாழும் இந்த நாடுகளிலிருந்து திரட்டும் பணம் பக்கத்து வீட்டு கிறிஸ்தவனையும், இஸ்லாமியனையும், பொதுவுடமையாளனையும், மதம் சாராதவனையும்...வெறுக்க பயன்படுகிறது என்ற உண்மையை உணர மறுப்பவர்கள் தான் இந்துத்துவவாதிகள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மதவெறித்தனத்துக்கு பலியாகும் இந்துத்துவ அடியாள் படையினர் ஒருவித மூளைச்சலவையால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களால் இந்து, இந்துத்துவம் என மட்டுமே சிந்திக்க இயலும். மனிதன் என்ற நேசமும், பரந்த பார்வையும் இல்லாது மனிதனின் அடிப்படை உரிமையான மத/வழிமுறைகள் விசயத்தில் தலையிடும் குற்றத்தை செய்கிறார்கள்.

மனிதனாக பிறந்த எவரும் தான் விரும்பும்/நம்பும் மதத்தை/வழியை பின்பற்ற அரசியல் சட்டமும், ஐ.நா பிரகடனமும் வழிவகை செய்கிறது. உள்ளூரில் மதவெறி தூண்டும் இவர்கள் வெளியுலகில் சமுதாயம் செயல்படும் முறையை புரிந்துகொள்ளும் வரை அறியாமை தான் இவர்களுக்கு ஞானம்.

உங்களது கட்டுரையின் ஐந்து பகுதிகளையும் படித்தேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்து நமது மண்ணின் பண்பாட்டு அசைவுகளை பார்த்தவன் என்ற அடிப்படையில் உங்களது கட்டுரைகளை பாராட்டுகிறேன். பண்பாட்டுத் தளத்தில் பதிவு செய்ய கன்னியாகுமரியில் நிறைய ஆதாரங்கள் உள்ளன.

சில விசயங்களை இன்னும் விரிவாக சொல்லுவது நலம். தொடர்ந்து எழுதுங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க திரு,

என்னுடைய பார்வையில் நான் உணர்ந்த அனைத்தையும் எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன். நிறைய நினைவுகள் இப்போது திரும்பிப் பார்க்கும் போது ஆச்சரியத்தைத் தருகின்றன.

மண்டைக்காடு பின்னணி குறித்த உங்கள் இடுகையையும் படித்தேன். அப்போது நடந்தவற்றை விளங்கிக் கொள்வதற்கு பயனுள்ளதாக இருந்தது.


அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_21.html

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

இந்த சில்லறை சில்லுண்டித்தனமான குற்றச்சாட்டுகளை விட்டு வெளியே வாருங்கள். இந்துக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பிரச்சாரமே செய்யவில்லையா? இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் நாடகங்களை 1976-77 இல் நான் பார்த்திருக்கிறேன். அப்போது ராமன்புதூர் கலுங்கு ஜங்க்ஷனில் இருந்தோம். எங்கள் வீட்டிலும் கிறிஸ்துமஸுக்கு ஸ்டார் போடுவோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரர்கள் புன்னைக்காட்டுவிளை மாதாகோவிலில் கிடா வெட்டி பிரியாணி போட்டபோது நாங்கள் குடும்பத்துடன் சென்றோம். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் கல்லை கும்பிடுகிற பிசாசை கும்பிடுகிற அஞ்ஞானிகளை குறித்து பிரஸ்தாபிப்பார்கள். இதையெல்லாம் ஏதோ பெரிய மனசுடன் அவர்கள் தெரியாமல் சொல்லுகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டோ ம். எங்களுக்கு அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸூம் தெரியாது ஒன்றும் தெரியாது. ஆனால் மதமாற்ற முயற்சிகளில் நாங்கள் வழிபடுகிற தெய்வங்களை இழிவாக பொதுத்தலங்களில் கொடுக்கப்பட்ட பிரசுரங்கள் எத்தனை எத்தனை...'விக்கிரக வழிபாடு செய்கிறவர்கள் விபச்சாரம் செய்கிறவர்கள்' என பாவங்களை பட்டியல் போட்டு பிரசுரங்களை வீதிகளில் நின்று கொடுப்பார்கள். ...என்ன சொன்னீர்கள் மதம் என்பது வீட்டோ டு நிற்க வேண்டும் அப்படித்தானே...அப்போது இந்த மாதிரி பிரசுரங்கள் கொடுப்பவர்களை கைது செய்யவேண்டும் என ஒரு பதிவு போடுவீர்களா சிவகுமார்...இது எந்த அளவு பெரிய பப்ளிக் நியூஸென்ஸாக உணரப்படுகிறது என்றால் கிறிஸ்தவரான ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் போர்டே வைத்திருக்கிறார்கள் "மத துண்டு நோட்டீஸ்களை நோயாளிகளுக்கு விநியோகிக்க வேண்டாம்." என்று. திரு பெரிதாக ஒரு கதையை விடுகிறார் பெந்தகோஸ்தே காரர்களும் ரோமன்கத்தோலிக்க காரர்களும் அடித்துக்கொள்வதை காண் கண் பல்லாயிரம் கோடி வேண்டும். எங்கள் சொந்தக்காரரான ஒரு பாதிரியார் கூறினார்: "யெகோவா விட்னஸ் பெந்த கோஸ்தே காரனையெல்லாம் ஏன் வீட்டுக்குள்ள விடுறீய.. நாயை விட்டு விரட்டிற வேண்டியதுதானே." பல ரோமன் கத்தோலிக்க மீனவ கிராமங்களில் இந்த மதமாற்றிகள் அடிபட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியிருக்கிறார்கள். இன்றைக்கும் அல்லேலுயா கும்பல்களை ஊருக்குள் விடாதீர்கள் என ஊர்கட்டுப்பாடு பல ரோமன் கத்தோலிக்க மீனவ கிராமங்களில் உள்ளது. விசயம் இப்படியிருக்க இந்துக்கள் மட்டும் இந்த மதமாற்ற மோசடிக் கும்பலுக்கு இரையாக வேண்டும் என எதிர்ப்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் அந்த காலகட்டத்தில் பல கிராமங்களில் இந்துக்கள் மனம் வெறுத்த நிலையில் இருந்தார்கள். எப்போதும் மதபிரச்சாரம். கல்வி சாலைகளில் அட்மிசன் முதல் வேலைவாய்ப்பு வரை பிசப் ரெக்கமெண்டேசன் என்பது வேதவாக்காக இருந்தது. அதே சமயம் இந்துக்கள் ஒரு பள்ளி நடத்த வேண்டும் என்றாலும் கூட முடியாத நிலை. ஈழவ சமுதாய சகோதரர்கள் சிலரும் வெள்ளாள சமுதாய சகோதரர்கள் சிலருமாக பிச்சை எடுக்காத குறையாக ஊர் ஊராக இந்து அறநிலையத்துறையுடன் இணைக்கப்படாத கிராம சமுதாய கோவில்கள் சென்று அங்கே பேசி ஒரு கல்லூரியை உருவாக்கினார்கள். 1950களில் அப்படி ஓலை ஷெடாக உருவானதுதான் இந்துக்கல்லூரி. அய்யாவழி சமுதாயத்தினரில் முக்கியமான சில பிரமுகர்கள் விவேகானந்தர் பாறை நினைவு சின்னம் உருவாக்குவதில் உறுதியாக நின்று தோள் கொடுத்தனர். அவர்களே பிற்காலத்தில் கடுமையான முயற்சிகளுக்கு பிறகு விவேகானந்தா கல்லூரியை உருவாக்கினார்கள். ஒவ்வொரு கல்விநிலையத்தையும் உருவாக்க இந்துக்கள் பட்டபாடு கண்ணீரும் இரத்தமும் சிந்திய கதை அது. அதற்கு எப்படியெல்லாம் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன என்பது ஒரு தனிகதை. மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் முதல் உள்ளூர் ரவுடி வரை எத்தனையோ விதங்களில் அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்துவாக வாழ்வதென்பதே கேலிக்குரிய விசயமாக்கப்பட்டது. அய்யா வைகுண்டர் போன்ற அவதார புருசர்கள் குறித்து பரப்பப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் உப்பு போட்டு சாப்பிடுகிற எந்த மனிதனுக்கு ஆத்திரத்தை வரவழைக்கக்கூடியவை. ஒரு உதாரணம் இதோ:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_18.html
இங்கு கொடுக்கப்பட்டுள்ளவை கிறிஸ்தவ டயோஸிஸனால் 10000க்கும் மேற்பட்ட பிரசுரங்கள் வெளியிடப்பட்ட நூலாகும். இப்படிப்பட்ட அவதூறு பிரச்சாரத்தை ஏசுவை குறித்துஅதே காலகட்டத்தில் இந்துக்கள் நிகழ்த்தியுள்ளார்களா? அல்லது அய்யா வைகுண்டர் என்ன சாதியத்துக்காக போராடியவரா அதை எதிர்த்து போராடியவரா? ஏன் இந்த அவதூறு பிரச்சாரம்? இப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கான இயற்கையான எதிர்வினைதான் இந்து ஒற்றுமை எழுச்சி. அந்த ஜனநாயக ரீதியிலான எழுச்சியை தாங்கமுடியாத கிறிஸ்தவவெறியின் வெளிப்பாடுதான் மண்டைக்காட்டில் எம் சகோதரிகளிடமும் தாய்மாரிடமும் கீழ்த்தரமாக நடந்துகொண்ட விதம். அதற்கு ஏற்பட்ட எதிர்வினைதான் போலிஸ் துப்பாக்கி சூடு. அதற்கு ஏற்பட்ட இழிவான கோழைத்தனமான எதிர்வினை இரவு நேரங்களில் க்டற்கரையிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் இந்து வீடுகளை தாக்கிய கிறிஸ்தவ வெறி. அதற்குதான் சில இடங்களில் இந்துக்களால் (குறிப்பாக நாடார் மற்றும் கிருஷ்ணவகை சமுதாயங்களால்) தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. அவர்கள் கிறிஸ்தவ வெறியர்களைப் போன்று கோழைத்தனமாக இரவில் தாக்கவில்லை. பட்டபகலில் தாக்கினார்கள். முடிந்தவரை மானுட கொலைகளை தவிர்த்து பதிலடி கொடுத்தார்கள். மேலும் மீனவர்கள் தங்கள் வர்த்தகத்தையே நடத்தமுடியாத நிலையும் ஏற்பட்டது. எனவே அவர்கள் பணிந்து வர வேண்டிய சூழலும் உருவானது. அதற்கு பிறகு தற்போதைய சோனியா அரசு வந்தபிறகு கிறிஸ்தவ வெறி மீண்டும் தன் தலையை மாவட்டத்தில் தூக்க தொடங்கியுள்ளது.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் அரவிந்தன்,

உங்கள் நிலைப்பாடும் என்னுடைய நிலைப்பாடும் எதிரெதிர் துருவங்களில் இருக்கின்றன. ஒரே சம்பவத்தை கிட்டத்தட்ட ஒரே சூழலில் பார்த்த நாம் வெவ்வேறு கோணங்களில் இப்போது அதை அணுகுகிறோம்.

நீங்கள் எழுதும் குற்றச் சாட்டுகள் அனைத்தும் நான் ஏற்கனவே அறிந்தவைதான். அவற்றில் பல அநியாயம் என்பதில் சந்தேகமில்லை. ஒன்றைப் பத்தாக்கி, பத்தை நீராக்கி, வதந்தித் தீயைப் பரவ விட்டு மனிதரைக் கொன்று குவிக்கும் வெறிச் செயலைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நீங்கள் எழுதியவற்றில் இயல்பான பக்கத்து வீட்டார் மன வேறுபாடுகள் நடந்திருக்கலாம். அவற்றை மிகைப்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டி விடும் வேலையைச் செய்வது இந்துத்துவா இயக்கங்கள் என்பது எனது கருத்து.

தொடர்ந்து என்னுடைய அனுபவங்களை எழுதுகிறேன். எப்படி பக்கத்து வீட்டுக் காரர்கள் கூட ஒருவரை ஒருவர் பயத்துடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை நம் மாவட்டத்தில் உருவாகியிருக்கிறது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். இதை விடக் கொடுமையான பயங்கரவாதச் செயல் எதுவும் இருக்க முடியாது.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//'இந்துக்கள் இந்துக் கடைகளில்தான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அடுத்த தடவை இந்துக்கள் மற்ற மதத்தினர் கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை வராமல் பார்த்துக் கொள்வது மற்ற மதத்தினர் கையில்தான் இருக்கிறது.'//
சிவகுமார், இந்த வரிகள் எனக்குப் புரியவில்லை.. இந்துக் கடையில் மட்டும் தான் பொருள் வாங்க வேண்டும் என்று முதலடியிலேயே சொல்லிவிட்டாரே.. அப்புறம் பிறமதக் கடையில் வாங்கக் கூடாது என்பது எப்படிப் புதிய தீர்மானமாகும்? ஏதும் எழுத்துப் பிழை/கருத்துப் பிழை?

மா சிவகுமார் சொன்னது…

பேச்சை எழுத்தில் வடிக்கும் போது ஏற்படும் புரிதல் பிழைதான் பொன்ஸ்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பொருள், 'இந்துக் கடைகளில் வாங்குங்கள், (ஒரு வேளை பொருத்தமான கடை இல்லாவிட்டால் மற்ற மதத்தினர் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்)'

மிரட்டல். 'எந்தச் சூழலிலும் பிற மதத்தினரின் கடைகளைப் புறக்கணியுங்கள்' என்று தீர்மானம் இயற்றுவோம் என்பது.

இதை சரியான சொற்களில் அழுத்தம் கொடுத்து சொல்லும் போது பொருள் தெளிவாக வெளிப்பட்டது.

அன்புடன்,

மா சிவகுமார்