ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

மத்தியில் இப்படி ஒரு அரசு அமையுமா!

உத்தர பிரதேசத்தில் நேற்று நடந்தது இந்தியா முழுவதிலும் இன்றைக்கு நடக்கும் என்று வைத்துக் கொண்டால், இந்த தேர்தலில் பத்திரிகைகளின் ஒருமித்த கணிப்பான காங்கிரசு, பாரதீய ஜனதா கட்சி இரண்டும் தலா ஏறக்குறைய 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது கணிப்பாகவே இருந்து விட வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் நடந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் எல்லா பெரிய கட்சிகளும் (சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசு கட்சி) தனித்து போட்டியிட்டன. பெரும்பாலான தொகுதிகளில் நான்கு முனை போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் 'எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, யார் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள், காங்கிரசு யாரை ஆதரிக்கும், பிஜேபி என்ன நிலை எடுக்கும் என்றெல்லாம் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளும் கருத்துக் கட்டுரைகளும் வெளியிட்டன.

நான்காவது பகுதி தேர்தல் முடிந்த பிறகு என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவின் படி கட்சி நிலவரம் இப்படி இருக்கும் என்றார்கள்.
  • BSP - 131 to 141 (98)
  • BJP - 91 to 101 (107)
  • SP - 109 to 119 ()
  • Congress - 33 to 43 (25)
மற்ற கருத்துக் கணிப்புகளிலும் ஏறக்குறைய இப்படித்தான் கருத்து வெளியானது. அந்தந்த ஊடக நிறுவனத்தின் கட்சி அனுதாபத்தின் அடிப்படையில் பிஜேபியின் வெற்றி வாய்ப்புகள் ஏறி அல்லது இறங்கிக் காணப்பட்டன.

இது இன்னொரு பார்வை.
  • BSP - 150 to 160 (98)
  • BJP - 95 to 105 (107)
  • SP - less than 100 ()
  • Congress - 25 to 30 (25)
ஆனால் கடைசியில் மக்கள் என்ன தீர்ப்பளித்தார்கள்?
  • BSP - 206 (98)
  • BJP - 50 (107)
  • SP - 97 (
  • Congress - 22 (25)
இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படி ஒரு மௌனப் புரட்சி காத்திருக்கிறதா? காத்திருக்க வேண்டும் என்று ஆசை. தமிழ்நாட்டிலும் தென் மாநிலங்களிலும் பெரிய தாக்கம் எதுவும் தெரியா விட்டாலும், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தில்லி, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் போன்ற இந்தி மொழி பேசும் பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் தேர்தல் முடிந்த பிறகுதான் தெரிய வரும்.

மும்பையிலும், தில்லியிலும் தத்தமது பாரம்பரிய சூழல்களில் மூழ்கிப் போயிருக்கும் ஊடகங்கள் இப்படி ஒரு உள் நீரோட்டம் இருந்தாலும் அதை எதிர்நோக்காமல் போய் விடுவது ஆச்சரியத்துக்குரியதில்லைதான்.

எனது ஆசை:
  1. காங்கிரசு - 90
  2. பாரதீய ஜனதா கட்சி - 95
  3. பகுஜன் சமாஜ் கட்சி - 140
  4. கம்யூனிச கட்சிகள் - 40
  5. சோஷியலிச கட்சிகள் (எஸ்பி, ஆர் ஜே டி, பிஜேடி, ஜேடி-யூ முதலானவர்கள்) - 100
  6. மற்றவர்கள் - 70+
என்று முடிவுகள் வந்து பிஎஸ்பி மற்றும் இடது சாரிக் கட்சிகள் காங்கிரசு ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும். சோஷலிச கட்சிகளில் லாலு, முலாயம் தவிர்த்த பிற கட்சிகள் இத்தகைய ஒரு ஆட்சிக்கு ஆதரவு தருவதும் நடந்தால் காங்கிரசை நம்பி காலம் தள்ள வேண்டியதையும் தவிர்க்கலாம்.

வியாழன், ஏப்ரல் 09, 2009

நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய குரல்கள்

நாடாளுமன்றத்துக்கு எந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று என் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். அதே இழையில் இன்னும் சில சிந்தனைகள்:

தவிர்க்க வேண்டிய கட்சிகள் - 3

மனிதகுலத்துக்கே எதிரான குற்றங்கள் என்று வரையறுக்கப்படுபவை பாசிசக் கோட்பாடுகள்.

பெரும்பான்மை மதத்தினர், பெரும்பான்மை மொழி பேசுபவர், பெரும்பான்மை சாதியினர் விரும்புவது எல்லாம் மற்றவர்கள் மீது திணிக்கப்பட வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று பேசும் பாசிசக் கட்சிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

'இவர்கள் வந்தால் தொழில் துறைக்கு நல்லது நடக்கும்.'
'ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள்'
'பரிநிரல் (open source) மென்பொருள்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள்'
'தனிப்பட்ட முறையில் ஊழல் செய்யாதவர்கள்'

என்று பட்டியலிட பல இருந்தாலும், எந்த காரணத்துக்காகவும் வேரூன்றக் விட்டு விடக் கூடாத கட்சி பாரதீய ஜனதா கட்சி. கன்னியாகுமரி, கோயம்புத்தூர் போன்ற தொகுதிகளில் மற்ற கட்சிகள் வாக்குகளை தமக்குள் பகிர்ந்து கொண்டு விட வெற்றி பெறும் சாத்தியங்கள் இருக்கிறது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

'தேள், நட்டுவாக்களி, பாம்பு இவற்றைக் கண்டதும் எப்படி ஒழித்துக் கட்டுவீர்களோ அப்படி ஆழ்வார்க்கடியானைக் கண்டாலும் அழித்து விடுங்கள்' என்று பொன்னியின் செல்வனில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் சொன்னது போல, எந்த காரணத்துக்காகவும் உள்ளே விட்டு விடக் கூடாத கட்சி பாரதீய ஜனதா கட்சி.

இதே குணங்கள் இருக்கும் ஆனால் குறுகிய கால நோக்கில் அதிகாரத்தைப் பிடித்து விடச் சாத்தியமில்லாத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
தேர்தலுக்குப் பிறகு நேராக பாரதீய ஜனதா கட்சிக்கு குடை பிடிக்கத் தயாராக இருக்கும் அஇஅதிமுக கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்சிகள் - 2

1. தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டு, இன்றைக்கும் காவல் நிலையங்களிலும் அதிகார மட்டங்களிலும் நியாயம் கொடுக்கப்படாமல் இருக்கும் மக்களின் பிரதிநிதியாக நிற்கும் விடுதலைச் சிறுத்தைக் கட்சி வேட்பாளர்களின் குரல் இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிப்பது தமிழகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும். அதிகாரத்துக்கு பெண்களும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் வருவது சமூக அமைப்பினால் அடக்கப்பட்டு இருக்கும் பிரிவினருக்கு உண்மையான விடுதலையைக் கொண்டு வரும்.

ஈழத் தமிழரின் துயரங்களை அரசியல் லாபங்களுக்கு என்றில்லாமல் உண்மையான உறவுடன் பார்ப்பவர்கள், தீர்வுக்கு போராடுபவர்கள் என்ற விதத்திலும் விசிகே தகுதி பெறுகிறது.

2. 'பணம் இருப்பவன்தான் அரசியல்வாதி, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்று மாறிவரும் அரசியல் சூழலில் கொள்கைப் பிடிப்போடு உழைக்கும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று இயங்கும் கம்யூனிச கட்சிகளின் பிரதிநிதிகள் அரசமைக்கும் கூட்டணியில் வலிமையான குரல் பெறுவது தேவை.

'அவர்களது பொருளாதாரக் கொள்கைகள் காலாவதி ஆகிவிட்டன. ரஷ்யாவைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள்' என்று குற்றம் சாட்டுபவர்கள் அமெரிக்காவின், ஐரோப்பாவின் பொருளாதார நிலைமையை அலசிப் பார்த்து விடுவது நல்லது.

உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்ற கம்யூனிசப் புரட்சிக்கு சாத்தியமில்லாத நாடாளுமன்ற ஆட்சி முறையில் இந்தக் கட்சியினரின் பங்களிப்பு நலிந்த பிரிவினர்களின் குரலாக ஒலிக்கும்.

ஒதுக்கப்பட வேண்டிய கட்சிகள் - 2

'கொலை கூடச் செய்து விட்டு வெள்ளை வேட்டியுடன், கழுத்தில் தடித்த தங்கச் சங்கிலியுடன் உலா வரலாம்.'
'ஒரு நாளிதழின் அலுவலகத்தை எரித்துப் போட்டு இரண்டு பேரைக் கொல்லக் காரணமாக இருந்தவர் அடுத்த தேர்தலில் வேட்பாளர் ஆகலாம்'

திராவிட இயக்கத்தின் இறுதிச் சடங்குகளை இனிதே செய்து வரும் கருணாநிதி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குண்டர்கள், பணமுதலைகள் எல்லோரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.

ஏழைகள், கிராமங்கள், சிறுபான்மையினர் என்று பேசிக் கொண்டு அவ்வப்போது ரொட்டித் துண்டுகளை வீசி விட்டு பரம்பரை ஆளும் வர்க்கத்தினரின் நலன்களை பேணும் காங்கிரசு கட்சி. கூப்பிடு தூரத்தில் நடக்கும் இனப்படுகொலைக்காக சுண்டுவிரலைக் கூட அசைக்காத கொலைகார பாதகர்கள் மறக்க முடியாத பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வேறு வழியில்லா விட்டால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்சி - 1

தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

செவ்வாய், ஏப்ரல் 07, 2009

வணக்கம்

போன ஆண்டு மார்ச்சு 15ம் தேதி வாக்கில் வலைப்பதிவுகளுக்கு ஒரு இடைவெளி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஒரு இடுகையாக வெளியிட்டேன். பின்னூட்டப் பெட்டிகள், தமிழ்மண இணைப்பு, ஸ்டாட்ஸ்கவுண்டர் இணைப்பு எல்லாவற்றையும் நீக்கி விட்டேன். முழுமையாக ஒரு கத்தரிப்பு.

'ஒரு ஆண்டுக்கு வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. எந்த நல்ல செயலுக்கும் ஒரு இடைவெளி கொடுத்தால்தான் அதன் உண்மையான நிறைகுறைகள் தெரியும். ஒரு ஆண்டுக்குப் பிறகு இன்னும் எழுத வேண்டும், பதிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் சந்திப்போம்'.

ஓராண்டு தாண்டியே விட்டது. ஒதுங்கியிருத்தல் முழுமையாக இருந்திருக்கவில்லை. முதல் 6 மாதங்களுக்கு பதிவதையும், பின்னூட்டங்கள் இடுவதையும், பிற பதிவுகளைப் படிப்பதையும் அறவே ஒதுக்கியிருந்தாலும் அதன் பிறகு இங்கொன்றும் அங்கொன்றுமாக படிப்பதும், பதிவதும் ஆரம்பித்தது. முன்பு இருந்த வேகமும் பிடிப்பும் விட்டுப் போயிருந்தன.

'திரும்பவும் வலைப்பதிவுகளில் ஈடுபட ஆரம்பிக்க வேண்டுமா? தமிழ்மணம் போன்ற வலைப்பதிவர் சமூகங்களில் பங்கேற்க வேண்டுமா? அதை விட்டு இருந்த நாட்களில் வலைப் பதிவதால் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?' என்று யோசித்துப் பார்த்தால், சாதகங்கள்தான் அதிகம்.

ஏன் வலைப்பதிவில் பதிய வேண்டும்?
  1. எழுதுவதற்கான ஊக்கம் பதிவுகளாகப் போட்டு நான்கு பேர் படித்து பின்னூட்டம் பார்த்து அதற்கு எதிர்வினை கொடுக்கும் போது நிறையவே கிடைக்கிறது. 'ஒரு மணி நேரம் உட்கார்ந்து நமக்கே நமக்காக எழுதுவோம்' என்று நினைத்தாலும் கூடவே பிறருக்குப் போய்ச் சேரும் என்ற எண்ணம் பெரிதும் துணை புரிகிறது.

  2. அப்படி தவறாமல் எழுதிக் கொண்டிருப்பது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க, மனதுக்கு பயிற்சி அளிக்க உதவியாக இருக்கிறது.

  3. நமது பதிவுகளை படிப்பவர்களுடன் ஏற்படும் நட்பு. பின்னூட்டங்கள் மூலம் பெயர் தெரிந்து மனதளவில் நெருக்கமாகும் நண்பர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள், நேரில் சந்திக்க முடியும் நண்பர்கள், முழுமையான நட்பாக பரிணமிக்கும் நண்பர்கள் என்று நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் நட்புகள் ஏராளம்.

    அப்படி எந்த வகையிலும் நேரடி தொடர்பு இல்லாமல் இருந்தாலும் என்றோ சந்திக்க நேரும் போது நெடுநாள் பழகியவர் போல உணர முடிவதும் கிடைத்தற்கரியது.

  4. நமது கருத்துகளை பதிந்து வைத்து வெளிப்படுத்துவது கிட்டத்தட்ட ஒரு சமூகக் கடமை என்று கூடச் சொல்லலாம்.
ஆகையினால், இனிமேல் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், பொருள் செய்ய விரும்பு, புரட்டிப் போட்ட புத்தகங்கள் மூன்றுக்குமே தொடர்ந்து எழுதி பதிய உத்தேசம். இப்படிப்பட்ட தீர்மானங்களுக்கு வழக்கமாக ஏற்படும் கதி நேர்ந்து விடாமல் நல்லபடியாக தொடரும் என்று உறுதியுடன்.

ஞாயிறு, மார்ச் 29, 2009

தேர்தல் - தமிழகத் தேர்வுகள்

தமிழகத்தில் அரசியல் வணிகர்களும், சந்தர்ப்பவாதிகளும், குட்டையைக் குழப்புபவர்களுமாக கட்சிகள் அணி பிரித்துக் கொண்டு விட்டன.

யாருக்கு வாக்களிக்கலாம்?

எந்தக் கட்சி வேட்பாளர் நாடாளுமன்றத்துக்குப் போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் போது கூட்டணிகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்க வேண்டாம் என்று படுகிறது. கூட்டணி சேர்ந்து கொண்டவர்களே 'இது தொகுதிப் பங்கீடுதான், எந்த விதக் கொள்கை சார்ந்த பொருளையும் பார்க்க வேண்டாம்' என்று சொல்லி விட்ட பிறகு, வாக்காளர்களும் கூட்டணி சாராமல் கட்சி சார்ந்து வாக்களிப்பதுதான் சரியாக இருக்கும்.

எனது தேர்வுகள்:

1. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திமுக கூட்டணியில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபடும் கட்சி. திருமாவளவன் கட்சியின் முகமாக இருந்தாலும், கட்சியால்தான் திருமாவளவன் அடையாளம் பெற்றார். இந்தக் கட்சி தொகுதியில் போட்டியிட்டால் அவர்களுக்குத்தான் வாக்கு.

2. வலது / இடது பொதுவுடமை கட்சியினர்

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் வியாபார/தொழில்துறையை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் காங்கிரசு/பாஜக அதிகார அமைப்புகளுக்கு ஒரு கடிவாளமாக இருக்கக் கூடிய இந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிட்டால் அவருக்கு வாக்கு.

3. தேசிய முற்போக்கு திராவிட கழகம்

திரைப்படத் துறையில் ஈட்டிய தனது புகழை மூலதனமாக வைத்து அரசியல் செய்ய முயல்கிறார் விஜயகாந்த். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் பணிகளிலும் தனது முத்திரையை பதிக்க முயல்கிறார். இன்று வரை இது விஜயகாந்த் கட்சியாகத்தான் இருக்கிறது. கூடவே பழைய பெருச்சாளிகளும் குடியேறி இருக்கின்றன.

தொகுதியில் முதல் இரண்டு தேர்வுகள் கிடைக்கவில்லை என்றால் தேமுதிக வேட்பாளர்களுக்கு வாக்கு.

4. மதிமுக

ஈழத் தமிழர் நலன் என்று ஒரே நிலைப்பாட்டுக்காக வைகோவை அறிகிறேன். மேலே சொன்ன மூன்று தேர்வுகளுமே இல்லாத நிலையில் (அப்படி இருக்காது என்று நம்புகிறேன்), மதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

5. வாக்களிக்கக் கூடாத கட்சிகள்
  • அதிமுக - தமிழர் விரோத தனிநபர் அரசியல்)
  • திமுக - ஒரு குடும்பம் வளர்க்கும் தமிழர் துரோக அரசியல்
  • காங்கிரசு - பதவி வெறி பிடித்த முதலாளித்துவ அரசியல்
  • பாஜக - மதவாத பிரிவினை அரசியல்
  • பாமக - சந்ததர்ப்பவாத பச்சோந்தி அரசியல்

திங்கள், மார்ச் 23, 2009

சனி விட்டது

பல வார பரபரப்புக்குப் பிறகு இந்தியன் பிரிமீயர் லீக் - இரண்டாவது பதிப்பு இந்தியாவில் நடைபெறாது என்று தீர்மானித்து விட்டார்கள். தேர்தல்கள், பாதுகாப்பு கொடுக்க முடியாதது என்று பல காரணங்கள் இருந்தாலும், இந்தச் சனியன் நம்ம ஊரை விட்டு சீக்கிரம் ஒழிந்து போவது எல்லோருக்கும் நல்லது.

வெளிநாட்டில் நடந்தாலும் தொலைக்காட்சி மூலமாக நம்ம வீடுகளின் வரவேற்பறைகளையும் இளைஞர்களையும் மனங்களையும் ஆக்கிரமிக்கப் போவது என்னவோ கசப்பான உண்மை.

மொத்தமாக திரை மூடப் போகும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.