புதன், ஏப்ரல் 20, 2011

போர்க்குற்றவாளிகளைத் தண்டியுங்கள்


hm@nic.in

மதிப்புக்குரிய உள்துறை அமைச்சர் திரு ப சிதம்பரம் அவர்களுக்கு,

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழு, தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு பல போர்க்குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டியிருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த 2008-09 ஆண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற கொடுமைகள் நிகழ்கின்றன என்ற தமது அச்சத்தை பல வழிகளில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நேரத்தில் இந்திய அரசு இந்தக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இலங்கை அரசை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளில் ஆதரித்து அதன் செயல்களுக்கு பாதுகாப்பு அளித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழு அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில் இந்தியக் குடிமகன் என்ற முறையில் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன்.

1. போர்க்குற்றங்கள் செய்த இலங்கை அரசை நமது இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது.
2. ஐக்கிய நாடுகள் சார்பாக போர்க்குற்ற விசாரணை ஆணையத்தை உடனடியாக உருவாக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
3. நீண்ட கால நோக்கில் இலங்கையின் வடக்கு கிழக்கை பகுதிகளை பன்னாட்டு படைகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு மூலம் மக்கள் பிரநிதிகளைக் கொண்ட அரசாங்கம் உருவாக்க இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

உங்கள் உண்மையுள்ள,

மா சிவகுமார்,
(முழுமுகவரி)

==================================
http://pmindia.nic.in/feedback.htm

Dear Sir,

Several media outlets have reported that a U.N.-appointed panel has found "credible allegations" that war crimes were committed in the Sri Lanka's war with the LTTE.

People of Tamil Nadu have been voicing their apprehensions about these war crimes even during 2008-09.

As a citizen of India I request you to
1. not to support Sri Lanka government anymore.
2. take an active role in setting up a War Crime Tribunal to go into these atrocities.

Your sincerely,
  
Ma Sivakumar

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்கள்

சானல் 4 தொலைக்காட்சியில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் பேட்டி


'என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியக்கூடாது' என்று முயற்சித்து வெற்றியும் பெற்றது இலங்கை அரசு. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனைவரையும் அருகிலேயே வர விடவில்லை.

1. இலங்கை நடத்தும் விசாரணை எதுவும் உண்மைகளை வெளிக் கொண்டு வராது. போர்க்குற்றங்களை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும்.

2. இலங்கை இடுக்குகளில் மறைந்து கொண்டது. சீனா இலங்கையை பாதுகாப்பு கவுன்சிலில் பாதுகாத்தது. இந்தியா மனித உரிமை அமைப்புகளிடமிருந்து பாதுகாத்தது.

3. எந்த பெரிய நாடும் இலங்கையில் நடந்ததை புறக்கணிக்க முடியாதபடி இந்த அறிக்கை இருக்கிறது. போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன்.

4. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது வெளிவந்த பிறகு, சீனா கூட எதுவும் செய்ய முடியாது. லிபியா, சூடான் போன்ற நாடுகளைப் பொறுத்த வரை சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அதே போல இலங்கைக்கும் நடக்கும்.

5. இலங்கை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவும், கிரிக்கெட் விளையாடவும் அனுமதிக்கப்பட வேண்டுமா? ராஜபக்சே உலகில் சுற்றி வர அனுமதிக்கப்பட வேண்டுமா?

குறிப்பிட்ட தலைமைப் பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள்தான் இந்தக் குற்றங்களுக்கு முழுப்பொறுப்பாளிகள்.

7. இலங்கை அரசு என்ன நடக்கிறது என்பதை வெற்றிகரமாக மூடி மறைத்திருந்தது.

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களுக்கு திமுக தலைவர் கடும் கண்டனம்




சென்ற தடவை தேர்தல் நடந்ததே, இதை எல்லாம் கேள்விப்பட்டீர்களா? உருட்டுப் பேச்சுகளும் மிரட்டு விழிகளும். கரட்டுப் பார்வைகளும், கத்திக் குத்துகளும், காலை இடறி விடுவதும், மோட்டார் ஏறி ஆள் சாவதும், இவைகளை எல்லாம் கேள்விப்பட்டீர்களா? வாதத்துக்கு வாதம், புள்ளி விவரத்துக்கு புள்ளி விவரம், வேண்டுகோளுக்கு வேண்டுகோள், அது நடந்தது.

இந்தத் தடவை என்ன நடக்கிறது?

'ஓட்டுக்குப் பணம் கொடுத்துக் கொண்டு போகிறார்கள். காங்கிரஸ்காரர்கள்' என்று கேள்விப்பட்டு நம்முடைய தோழர்கள் 'பணம் வாங்காதே!' என்று கூச்சலிட்டுக் கொண்டு போனால், உடனே டெலிஃபோன் செய்து, போலீஸ் பாராவைக் கொண்டு வந்து போட்டு நம்முடைய தோழர்களைத் தடுத்து 'ஆகட்டும் உங்கள் வேலை ஆகட்டும்' என்று போலீசே பாதுகாப்புத் தருகிறார்கள்.

நான் போலீஸ் அதிகாரிகளுக்குச் சொல்லுகிறேன். காங்கிரஸ் தொண்டர்களுக்கு 'நீங்கள் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிற வேலையைச் செய்கிறீர்கள்.'

நீங்களே ஆரம்பியுங்கள், என்ன கெட்டு விட்டது? நீங்கள் பாதுகாப்பாக இருந்து, காங்கிரஸ் தொண்டர்கள் பணம் கொடுப்பதை விட நீங்களே, 'நிறைய்ய போலீஸ் வந்திருக்கிறது. இன்னின்ன தெருவுக்கு நாலு போலீஸ் பணம் கொடுக்கும்' என்று தண்டோரா போட்டு விட்டுக் கொடுங்கள்.

என்ன செய்வீர்கள் அதனாலே? என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதானே உங்கள் எண்ணம்? என்னைத் தோற்கடிப்பதாலே உங்களுக்குக் கிடைக்கிற லாபம் என்ன? என்னைத் தோற்கடிப்பதாலே நீங்கள் எதைத் தூய்மைப்படுத்தப் போகிறீர்கள்? என்னைத் தோற்கடித்து விட்டால்  உங்களுடைய எந்தக் கொடி வானத்திலே பறக்கப் போகிறது?

துணிவோடு நீங்கள் இருப்பீர்களானால்!

பணத்தையும் கொடுத்து வெங்கடேச பெருமாள் படத்தை வைத்தார்களாம். ஆக, உங்களுக்கு என்னை எதிர்க்க வக்கில்லை வழியில்லை, ஏழுமலை ஏறி அவரை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள். பரவாயில்லை, அவர்தானே வருகிறார், வரட்டும்.

ஆக, என்னை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறீர்கள்? ஒரு சாதாரண அரசியல் கட்சியிலே உள்ளவன் என்று மதிக்கவில்லை. 'அண்ணாதுரையைத் தடுக்க வேண்டுமானால் 5 ரூபாய் கூட போதாது. தீராத வல்வினை எல்லாம் தீர்த்து வைப்பவனைக் கொண்டு வந்து அவன் படத்தின் கீழ் 5 ரூபாயை வைத்து எடுத்துக் கொள்' என்று சொல்லுகிறீர்கள்.

அதை நீட்டுகிற போது தாய்மார்களைக் கேட்கிறேன் 'உற்று அந்தப் படத்தைப் பாருங்கள்'.

அந்தத் தெய்வம் எதற்காக ஏழுமலைக்கு அப்பாலே இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தீர்களா? நாட்டிலே இருக்கிற அக்கிரமம் தாள மாட்டாமல் தொலைவாகப் போயிருக்கிறது. நல்லவர் கஷ்டப்பட்டாகிலும் அங்கு வரட்டும் என்பதற்காகத்தான் அங்கே போயிருக்கிறதே தவிர,  நாட்டில் அக்கிரமம் இல்லை என்றால் நம்முடைய வரதராஜப் பெருமாள் இப்போது ஊரோடு ஊராக இருந்திருக்க முடியும்.

நீங்கள், உங்கள் தொல்லை தாளமாட்டாமல் ஏழு மலைக்கு அப்பால் இருக்கிறவரை, மறுபடியும் அழைத்துக் கொண்டு வந்து 'அதர்ம காரியத்துக்கு நீ துணை செய்' என்றால் உண்மையிலே துணை செய்வாரா?

வெங்கடேசப் பெருமாள் படத்தின் பேரிலே 5 ரூபாயை வைத்து அதை யாராவது வாங்கினால் வெங்கடேசப் பெருமாளிடத்திலே நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் சொல்கிறேன் அவர்கள் இது வரையிலே கும்பிட்ட கோவிந்தனுக்கு அவர்கள் செய்கின்ற துரோகத்தைப் போல கோவிந்தன் ஏது கோபாலன் ஏது என்று பேசுகின்றவர்கள் கூட அவ்வளவு துரோகம் செய்ததில்லை என்பதை அருள் கூர்ந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பூரத்தைக் கொழுத்தி கோவிலில் அடித்து விட்டு கால் ரூபாய் நான் வாங்கியதில்லை என்று பொய்ச் சத்தியம் செய்பவனைக் கூடச் சாதாரணமாகக் கருதலாம்.  வெங்கடேசப் பெருமாள் படத்தை வைத்து அதன் பிறகு 5 ரூபாய் நோட்டை வைத்து அதை எடுக்கப் போகிற நேரத்தில் தாய்மார்களும் பெரியவர்களும் ஒரு தடவை முகத்தைப் பாருங்கள். வெங்கடேசப் பெருமாள் எதற்காக இருக்கிறார் என்பதை பாருங்கள். ஐந்து ரூபாய் நோட்டு வாங்கிக் கொடுக்கவா இருக்கிறார்.

கை கால் பிடிப்பு வந்தால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள்.
புத்திக் கோளாறு ஏற்பட்டால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள்.
மலடிகள் அந்தக் கோவிலுக்குப் போய் வந்தால் பிள்ளை பிறக்கும் என்கிறார்கள்.
சொத்து இல்லாதவர்கள் அந்தக் கோயிலுக்குப் போய் வந்தால் அற வழியிலே சொத்துச் சம்பாதிக்கலாம் என்கிறார்கள்.

பக்தர்கள் பலமாதிரி அதைப் பற்றிச் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு தேவதையைக் கொண்டு வந்து 5 ரூபாய் நோட்டை அதன் பேரிலே வைத்தால்!

நான் இதைக் கூட எண்ணியிருப்பேன். 5 ரூபாயை எடுத்து விட்டு வெறும் வெங்கடேசப் பெருமாளைக் காட்டியிருந்தாலாவது, 'ஓ,  வெங்கடேசப் பெருமாளுக்கு மதிப்பு இருக்கிறது' என்று எண்ணுவேன். எனக்கு இப்பொழுது எதற்கு மதிப்பு என்றே தெரியவில்லை, 5 ரூபாய் நோட்டுக்கு மதிப்பா, வெங்கடேசப் பெருமாளுக்கு மதிப்பா, இந்த இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றின் மேல் வைக்கிறார்களே அது மதிப்பா என்று தெரியவில்லை. அதை விடக் கூடாநட்பா இது!

வெங்கடேச பெருமாள் படத்தின் பேரில் 5 ரூபாய் நோட்டை வைத்து வோட்டரிடத்திலே நீட்டுகிறீர்களே அதை விடக் கூடா நட்பா இது? இவர் என்ன வெங்கடேச பெருமாள், நான் மேலெடுத்த 5 ரூபாய் நோட்டா? இதைக்காட்டி உங்களுடைய வாக்குகளை நாங்கள் தட்டிப் பறிக்க விரும்புகிறோமா?

இதை எண்ணிப் பாருங்கள். ஆகையினால் அந்தப் பணத்தைத் தொடுவதற்கு கை கூச வேண்டும். அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு கண் கூச வேண்டும். அதைத் தொடுகிற போது இதயத்திலே இது வரையிலே இருந்த வந்த எல்லா நியாய உணர்ச்சியும் பொங்கி வழிய வேண்டும். அது வழியுமானால், அந்தப் பணம் பாவத்தின் சின்னம். அந்தப் பணம் உரிமைச் சீட்டைத் தட்டிப் பறிப்பதற்காக, ஊர்ச்சொத்தை அடித்து உலையிலே போடுகிறவர்கள் நமக்குத் தருகின்ற லஞ்சத் தொகை என்று கருத வேண்டும்.

நண்பர்களே அந்த 5 ரூபாய் நமக்கு எத்தனை காலத்துக்கு வரும்? நீங்கள் அருமையாகப் பெற்றெடுத்த ஒரு குழந்தைக்கு பட்டுச் சட்டைத் தைக்க வேண்டும் என்றால் கூட அந்த 5 ரூபாய் காணாது. ரெண்டு நாளைக்கு நிம்மதியாகச் சாப்பிடலாம். நாலு தடவை அந்த சாப்பிட்ட சந்தோஷத்திலே இருக்கலாம்.

அதற்குப் பிறகு நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்க்க வேண்டாமா? என்னுடைய முகத்தைப் பார்க்கிற நேரத்தில் ஐந்து ரூபாய்க்காகவா நமக்காக பாடுபட்ட ஒருவனுக்குக் கெடுதல் செய்தோம் என்று உங்கள் உள்ளம் உங்களை உறுத்தாதா? எண்ணிப்பாருங்கள்.

இல்லை, இவ்வளவுக்கும் பிறகு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று கருதினால் அதைச் சில பேர் செய்ததைப் போல திருப்பியாவது கொடுங்கள்.  அதிலே இருக்கிற அந்த பாவத்தைப் போக்கி நல்ல காரியத்துக்கு பயன்படுத்துவதற்கு நாங்கள் அதை உபயோகிக்கிறோம்.

இல்லை, இன்னும் கூட ஒன்று சொல்கிறேன். இதை அப்படியே எங்களிடத்திலே கொடுங்கள். அதற்குப் பிறகு யார் உங்களுக்குக் கொடுத்தார்களோ அதே காங்கிரஸ்காரர்களிடத்திலே  திருப்பித் தர நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த பாவ காசு கூட எனக்கு வேண்டாம்.

ஆனால் இதை நம்பி ஜனநாயகத்தைப் பாழாக்காதீர்கள்.

என் பேரிலே கோபம் யாருக்காவது இருந்தால் தனியாக கூப்பிட்டு நாலு வார்த்தை ஏசுங்கள். என் பேரிலே ரொம்ப அருவெறுப்பு இருந்தால் நான் ஒண்டிச் சண்டியாக வரும்போது அடித்துக் கூடப் போடுங்கள். ஆனால், நாட்டைப் பாழாக்காதீர்கள்.

நல்ல தருணம்! ஜனநாயகம் வளர்வதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் சாதாரண காசுக்காக மயங்கி ஜனநாயகம் வளர்வதற்கு நீங்கள் கேடு செய்யாதீர்கள் என்று பணிவன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

'உனக்கு என்ன இந்தக் காங்கிரசு ஆட்சியிடத்திலே இவ்வளவு பெரிய கோபம்' என்று யாராவது கேட்டீர்களானால் நான் சொல்லுவேன். காங்கிரசு என்ற கட்சியின் பேரிலே கூட அல்ல.

இடுப்பிலே நாம் கட்டுகிற வேட்டி வெள்ளையாகத்தான் எடுத்துக் கட்டிக் கொள்கிறோம். நடந்து போகிறபோது அந்த வேட்டி தானாக அவிழ்ந்து போய் குப்பைக் கூளத்தில் விழுவதில்லை. ஊரில் இருக்கிற குப்பை கூளம் எல்லாம் காற்றால் அடிக்கப்பட்டு வேட்டியில் ஒட்டிக் கொள்கிறது. ஒட்டிக் கொண்ட உடனே 'இது என்னுடைய வேட்டி, இந்த அழுக்கு எங்களூர் அழுக்கு, இருக்கட்டும்' என்றா சும்மா இருக்கிறோம்.

வெளுப்பவனை அழைத்து அதைக் களைந்து போடவில்லையா. வெளுத்துக் கொடுங்கள் என்று கேட்கவில்லையா.  அவன் அதை எடுத்துக் கொண்டு போய் ஆற்றுத் தண்ணீரில் அழுந்தத் தோய்த்து கற்பாறையில் ஓங்கித் துவைக்கிற போது பக்கத்திலே நின்று கொண்டு

'அப்பா அப்படி அடிக்காதே, அது ஆறே முக்கால் ரூபாய் வேட்டி,  நான் அருமையாக வாங்கியது அதை அந்த அடி அடிக்காதே' என்று சொன்னால், சொல்ல மாட்டோம், சொன்னால் வெளுப்பவன் என்ன சொல்லுவான் ,

'அய்யா நீ ஏற்றி வைத்திருக்கிற அழுக்கு இந்த அடிக்குக் கூடப் போகாது, இது இன்னமும் வெள்ளாவி வைத்து எடுத்தால்தான் அழுக்குப் போகும் போல இருக்கிறது. எண்ணைய் சிகண்டு ஏறி விட்டது' என்று அல்லவா சொல்லுவான்

அதே போல ராஜாஜி அவர்கள் காங்கிரசை கடுமையாகத் தாக்குகிறார் என்று நேரு பண்டிதரும் மற்றவர்களும், ''அய்யோ இந்த அடி அடிக்கிறாரே' என்றால், அதிலே இருக்கிற எண்ணைய் சிகண்டு அவருக்குத் தெரிகிறது, அடிக்கிறார். அவருக்கென்ன வேட்டியின் மீதிலா கோபம். எண்ணெய் ஜிகண்டின் பேரிலே கோபம்.

ஆனால் சிலபேர், வேட்டி அழுக்கானாலும் சுலபத்திலே எடுத்துப் போட மாட்டார்கள். மேற்பக்கத்தில் அழுக்கானால் உள்பக்கத்தில மடிப்பு வருமாறு கட்டிக் கொள்வார்கள், இடுப்புப்பக்கம் அழுக்கானால் கால்பக்கத்தைக் கட்டிக் கொள்வார்கள். கால்பக்கத்தில் அழுக்கானால் இடுப்புப் பக்கத்தில் கட்டுப் போடுவார்கள்.

'இது உனக்கு எப்படி இவ்வளவு விபரமாகத் தெரியும்' என்று நீங்கள் கேட்பீர்கள். எனக்கே அது பழக்கம்.
எனக்கு அந்தப் பழக்கம் ஏற்பட்டது என்னுடைய குருநாதர் அருள் பெரியார் ராமசாமிக்கு அந்தப் பழக்கம். ஆகையினால்தான் அந்த விஷயத்தை அவ்வளவு விபரமாக நான் சொல்லுகிறேன்.

அதைப் போல காங்கிரஸ் கட்சியுடைய ஆட்சி பூராவிலும் அழுக்கேறி விட்டிருக்கிறது.

சனி, ஏப்ரல் 16, 2011

செத்த வீட்டில் புலம்ப மட்டும் தெரிந்த சமூகம்


மாரிமுத்து என்ற மீனவரின் உடலை பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்து விட்டு அடக்க முடியாத சோகத்தில் இருக்கும் தமிழ் உணர்வாளர் ராமநாதன் கோட்டைப்பட்டிணத்திலிருந்து பேசினார்:

'சம்பவம் நடந்து 14 நாட்களுக்குப் பிறகு உடல் கரையில் ஒதுங்கியிருக்கிறது. தலை இல்லை.  மனசே சரியில்லை. எங்கோ பிறந்து எங்கோ உயிரிழந்து எங்கோ அடக்கம் செய்யப்படுவதாக அவரது தலைவிதி ஆகியிருக்கிறது.

என்ன தவறு செய்தார்கள் இந்த மீனவர்கள்! பிழைக்கத் தொழில் செய்யப் போவது ஒரு குற்றமா?

ஏப்ரல் 6ம் தேதியே 'மூன்று உடல்கள் பிண அறையில் வைத்திருப்ப'தாக ஒரு காவலர் யாழ்ப்பாணத்திற்குப் போன ராமேசுவரம் மீனவர்களிடம் வாய் தவறிச் சொன்னதாக நிரபராதி மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம் சொன்னாராம்.

நீங்க என்ன வேண்டும் என்றாலும் சத்தம் போடுங்க, நாங்க அடிக்கிறது அடிப்போம், கொல்வோம் என்ற செய்தியைத்தான் சிங்களப் பேரினவாத ராணுவம் தமிழர்களுக்குச் சொல்லியிருக்கிறது.

இழவு வீட்டில் கூடி இருந்து அழும் சமூகமாக ஆகி விட்டிருக்கிறோம்!.'

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

கற்றதும் பெற்றதும் - வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு முன்னனி

மின்னஞ்சலில் அனுப்பியவர் சென்னையில் வசிக்கும், வேலூர் பரப்புரையில் பொறுப்பேற்று பணியாற்றிய திரு கண்ணன்

காங்கிரசு எதிர்ப்பு முன்னணி

நடந்து முடிந்த 2011 தேர்தலில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 20 வருடமாக சட்டமன்ற காங்கிரசு வேட்பாளராக இருந்த "உலக தமிழனத்தின் எதிரி" ஞானசேகரன் 5 வது முறையாக போட்டியிடும் வேலூர் சட்டமன்ற தொகுதியில் "காங்கிரசு எதிர்ப்பு முன்னனி" என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டதில் "சர்வதேச தமிழர் கழகம்",  "சேவ் தமிழ் இயக்கம்",  "தமிழ் தேசிய மாணவர் இயக்கம்" மற்றும் "தமிழக இளைஞர் எழுச்சி பாசறை" போன்ற அமைப்புகளின் பங்கு முக்கியமானதாகும்.

கடந்த 2ஆம் தேதியில் "உலக தமிழனத்தின் எதிரி" ஞானசேகரனுக்கு எதிராக குறிப்பாக நாங்கள் பரப்புரையை தொடங்கிய காரணத்தை நாங்கள் சொல்லதேவையில்லை. இந்த கடும் பரப்புரை தொடங்க எங்களுக்கு உறுதுணையாகவும் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்த சுயேச்சை வேட்பாளர் மற்றும் தேர்தலை புறக்கணித்த அரசியல் கட்சியின் அமைப்பை சார்ந்தவர்களுக்கும்"கருஞ்சட்டைகாரர்" அமைப்பை சார்ந்தவர்க்கும், தனியார் தொலைகாட்சியில் பணிபுரியும் பத்திரிக்கையாளார்க்கும் நாங்கள் எங்களுடைய வணக்கத்தையும் நன்றியினையும் கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளோம். மேலும் எங்களுக்கு தங்க இடம் கொடுத்த "மெளன புரட்சியாளர்" பேராசிரியர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

முதல் நாள் சத்துவாச்சாரியில் குட்டி யானையில் ஒற்றை ஒலி பெருக்கி மற்றும் துண்டறிக்கையுடன் தொடங்கிய பரப்புரை மெதுவாக சூடுபிடித்ததற்கு காரணம் மக்கள் ஆதரவுதான்.

"விரட்டி அடிப்போம்!, விரட்டி அடிப்போம்!
தமிழின விரோத காங்கிரசு கட்சியை
விரட்டி அடிப்போம்!",

தோற்கடிப்போம்!, தோற்கடிப்போம்!
தமிழின விரோதி ஞானசேகரனை
தோற்கடிப்போம்!",

"கொத்து கொத்தாய் மக்களைய் கொன்ற
இன அழிப்பு நடத்திய
ஆயுதம் கொடுத்து உதவி செய்த
சிங்களவனின் கூட்டாளி!
தமிழர்களின் பகையாளி!
காங்கிரசை தோற்கடிப்போம்!",

"கொள்ளை போகுதே!, கொள்ளை போகுதே!
தமிழ்த்தேசிய வளங்களேல்லாம்!
கொள்ளை போகுதே!, கொள்ளை போகுதே!
ஓட்டு போட்டு கோட்டைக்கு அனுப்பினோம்
20 வருடமாய் கோட்டைக்கு அனுப்பினோம்
ஞானசேகரனை கோட்டைக்கு அனுப்பினோம்
கேட்டதுண்டா! கேட்டதுண்டா!
ஞானசேகரன் கேட்டதுண்டா!
கேட்கவில்லை!, கேட்கவில்லை!
ஞானசேகரன் கேட்கவில்லை!
பாலாற்று தண்ணியை கேட்கவில்லை!
பென்னையாற்று மணற் கொள்ளையை கேட்கவில்லை!
காவிரி நீரை கேட்கவில்லை!
தமிழக மின்சாரத்தை கேட்கவில்லை!
நரிமண எண்ணெய்யை கேட்கவில்லை!
நெய்வேலி நிலக்கரியை கேட்கவில்லை!
அவன் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம்!
தமிழ் மக்களின் உயிர் மட்டுமே!
ஈழத்தமிழர்களின் உயிர் மட்டுமே"!!!

என்ற முழக்கங்களோடு வேலூர் விதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் துண்டறிக்கைகளுடன் பரப்புரையை தொடங்கினோம்.

இரண்டாவது நாள் வாகனத்தின் இருபக்கங்களிலும்(வலது,இடது) பாதகைகள் கட்டப்பட்டன. ஒரு பக்கத்தில் ஞானசேகரனையும் மறுபக்கத்தில் காங்கிரசை எதிர்த்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதேவாகனத்தில் கூடுதலாக இன்னொரு ஒலிவாங்கியும், ஒலி பெருக்கியும் சேர்க்கப்பட்டன.

'நாங்கள் உங்களிடம் ஒட்டு கேட்டு வரவில்லை, இந்த கட்சிக்கு போடுங்கள், இந்த சின்னத்திற்கு போடுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு வாக்களியுங்கள் இங்கே பாலாறும், தேனாறும் ஓடும்எனச்சொல்லவில்லை.'

'1 1/2 ஆண்டுகளுக்கு முன்னால் ஈழத்திலே 2 லட்சம் மக்களை கொன்ற காங்கிரசு கட்சியை துரத்தியடியுங்கள்.'

'20 வருடமாய் ஞானசேகரனை கோட்டைக்குஅனுப்பினீர்கள். அவர் இந்த வேலூர் மக்களுக்கு செய்ததுதான் என்ன?'

'பாலாற்றிலே தண்ணீர் வர போராடினாரா? ஆனால் உண்ணாவிரதம் இருந்து நம்மையெல்லாம் ஏமாற்றினார். ஆந்திராவிலே காங்கிரசுதான் ஆள்கிறது, ஞானசேகரனும் காங்கிரசுதான், ஏன் இவர் அவர்களிடம் பேசி தண்ணீர் வர வைக்க முடியாதா?'

'பென்னை ஆற்றிலே மணற்கொள்ளை, என்றாவது அம்மணற்கொள்ளையை தடுக்க முயற்சி செய்திருக்கிறாரா? ஆனால் அந்த மணற்கொள்ளையில் உரிய பங்கை பெற்றுக்கொள்வதில் மட்டும் கவனமாகஇருந்துகொண்டிருக்கிறார்.'

'வேலூர் மக்கள் தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கும் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க முயற்சித்ததுண்டா?'

'அறிவு நூற்பாலையை புதிப்பித்திருந்தால் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்குமே? செய்தாரா இந்த ஞானசேகரன்!!!'

'காகிதப்பட்டறையில் உள்ள டான்சி நிறுவனத்தை நடத்த ஏதாவது முயற்சி செய்ததுண்டா? ஆனால் பஞ்சமி நிலங்களை தகாத முறையில் அடைந்து அதனை அவருடைய உறவினர்களுக்கு விற்றுவிட்டார்.'

'சத்துவாச்சாரி ஆர்.டி.ஒ அலுவலகச்சாலையில் வர இருந்த மேம்பாலத்தை, சுயபயன்பாட்டுக்காக அவர் வீட்டருகே போட்டுக்கொண்டவர்தானே இந்த ஞானசேகரன், அந்த மேம்பாலம் அங்கே இல்லாததால்இதுவரை 144 உயிர்கள் பலியாகியுள்ளனவே. '

'புது பொலிவுடன் அமைய இருந்த வேலூர் பேருந்து நிலையத்தை, அவருடைய சுயலாபத்திற்க்காக சிறிய அளவில் அமைத்து விட்டார்,'

'சுற்றுச்சுழலை கவனத்தில் கொள்ளாமல் பன்னாட்டுநிறுவனங்களிடம் கையுட்டு வாங்கி முறையான அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் அமைந்திட காரணமாக இருந்தார்.'

'சாதாரண குடும்பத்தில் பிறந்த ஞானசேகரனின் சொத்துமதிப்பு இன்று 2000 கோடிக்கு மேல், எப்படி அவரால் இவ்வளவு பணம் சேர்க்க முடிந்தது. அவர் என்ன களை பறித்தாரா, நாத்து நாட்டாரா?நம்முடைய வரிப்பணத்தை கொள்ளையடித்து சம்பாறித்ததுதானே தமிழர்களே!!!'

'வேலூரில் அமைய இருந்த பல்கலைகழகங்களை கூட பணம் பெற்றுக்கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தவர்தானே, இந்த ஞானசேகரன்.'

'இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்கிட ஐ.டி நிறுவனங்கள் அமைக்க முயற்சித்தாரா!!!'

'ஞானசேகரன் பகுதி பிரச்சனைகளையும் தீர்க்கவில்லை, பேசவில்லை. அப்படியென்றால் தமிழ்நாட்டு பிரச்சனையையாவது பேசியிருக்கிறாரா?'

'உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதித்து காவிரியில் தண்ணீர் தர மறுக்கும், கர்நாடக அரசுக்கு எதிராக பேசியிருக்கிறாரா!!!'

'20 வருடமாய் வேலூரின் சட்டமன்ற வேட்பாளராய் இருந்த ஞானசேகரனை கஸ்பா பகுதி வாழ்மக்கள் பள்ளிகூடம் கட்டி தாராததால், அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து ஞானசே கரனை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். பெண்கள் செருப்பு, முறம், விளக்குமாற்களை வைத்துக்கொண்டு எதிர்ப்புகளை பதிவுச்செய்தார்கள்.'

'சாவு விட்டிலே பிணமாகவும், திருமண விட்டிலே மாப்பிள்ளையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஞானசேகரனை தோற்கடிப்போம்.'

'இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? ஆனால் அவன் கூட குஜாராத் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினார்கள் என சுட்டுக்கொன்றதிலையே, இலங்கை இந்தியாவின் நட்பு நாடு, அண்டை நாடு என கூறிக்கொள்கிறோம், அவன் தானே நம்முடைய தமிழக மீனவர்களை தினம் தினம் சுட்டுகொண்டிருக்கிறான் தமிழர்களே, '

'இதைப்பற்றி என்றைக்காவது ஞானசேகரன் கவலைபட்டதுண்டா?'

'ஈழத்து படுகொலையையும் பேசமறுக்கிறார், "மாவீரன்" முத்துக்குமரன் மற்றும் "மாவீரன்" சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்கின்றார். அப்படியென்றால்அவர் சட்டசபையிலே பேசியதெல்லாம் என்ன? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது, பயங்கரவாதம் பெருகிவிட்டது, தீவிரவாதம் வளர்ந்து விட்டது, ஈழதமிழர்களை கொன்றழிக்கவேண்டும் என்றல்லவா பேசினார்.'

"உலக தமிழர்களின் எதிரியான" ஞானசேகரனை தமிழர்களாகிய நாம் வீட்டுக்கு அனுப்பவேண்டும் தமிழர்களே வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

'வெள்ளைக்காரன் போனான், கொள்ளைக்காரன் வந்தான் என்பார்கள். வெள்ளைக்காரனாவது பள்ளி, மருத்துவமனை, தொழிற்நிறுவனங்கள் நிறுவினான். இந்த வெள்ளைக்காரனுக்கு பிறந்த இந்த கள்ளப்பிள்ள காங்கிரசு இந்தியாவையே பட்டாபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறான். முதலில் நேரு, இந்திரா, ராஜிவ் இப்பொழுது சோனியா நாளை ராகுல். இவர்களேன்ன மன்னர் ஆட்சி நடத்துகிறார்களா!!!'

'ஈழத்தில் மட்டும் தமிழர்களை இவர்கள் கொன்றழிக்கவில்லை, காசுமீரத்திலே 70000 மக்களை கொன்றழித்தது மட்டுமல்லாமல், அங்கே 500000 ராணுவத்துருப்புக்களையும் நிறுத்திவைத்துள்ளார்களே!!!' பஞ்சாபிலே சீக்கியர்களை கொன்றழித்தது இந்த காங்கிரசு. வட கிழக்கு பகுதிகளில் அப்பாவி பழங்குடி மக்களை "மாவோஸ்டுகள்" என்ற பெயரிலே பச்சைவேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தகாங்கிரசு.'

'தமிழக மீனவர்படுகொலைக்கு காரணமாக இருந்துக் கொண்டிருப்பது இந்த காங்கிரசு.'

'பாபர் மசூதி இடிப்பு மதவாத சக்திகளுடன் கைக்கோர்த்த காங்கிரசை தடைசெய்வோம். கொலைக்கார காங்கிரசை தடைச்செய்ய வேண்டும், பயங்கரவாத காங்கிரசை தடைச்செய்ய வேண்டும்'

என தோழர்களின் குரல்கள் மண்டி தெரு, பழையபேருந்து நிலையம், அலங்கா, கஸ்பா, திருவள்ளுவர்சிலை, காகிதப்பட்டறை, பெருமுகை, ரங்காபுரம், சி.எம்.சி மருத்துவமனை இன்னும் சில பகுதிகளில் 9ஆம் தேதி இரவு வரை ஒலித்துக்கொண்டே இருந்தது.

6 ஆம் தேதி நாங்கள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும் அளித்தது. திணமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, இந்து, நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழன், ஜெயா, சன் செய்தி நிறுவனங்களுக்கு காங்கிரசு எதிர்ப்பு கருத்துகளை வழங்கினோம்.

இம்மாபெரும் பணிக்கு உண்மையில் மக்களின் ஆதரவு பெருவாரியாக கிடைத்தது, குறிப்பாக துண்டறிக்கையை அனைவரும் படித்தனர், கீழே போட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. பொதுமக்களே எங்களுக்கு குளிர்பானங்கள், தேநீர் மற்றும் திண்பண்டங்களை கொடுத்து மகிழ்ந்தார்கள்.

ஒர் அம்மா, 'நீங்க எத்தனை பேர் இருக்கிறீங்க'னு கேட்டாங்க.
'ஏம்மா கேட்கறீங்க'னு கேட்டோம்.
'அட சும்மா சொல்லுப்பா'னு கேட்டாங்க.
'நாங்க பத்துபேர் இருக்கிறோம்'னு சொன்னோம்.

உடனேஎல்லோருக்கும் குளிபானம் வாங்கி கொடுத்துட்டு,
'என்னல இதத்தான் செய்ய முடியும் தம்பி. நீங்க எல்லாம் செய்யறது பெரிய வேலை தம்பின்'னு சொல்லிட்டு போயிட்டாங்க.

பார்ப்பனர் ஒருவர் எங்கள் அருகே வந்து,
 'நீங்க நல்ல வேலை செய்றேல், ஆனா எங்களத்தான் சேர்த்துக்க மாட்றேல், நேக்கு சீமான் ரொம்ப பிடிக்கும். நீங்கதான் முதலியார், செட்டியார், வன்னியர்சொல்றேல். நாங்க மட்டும் தான் தமிழன்னு சொல்றோம்' என்றார்.

நாங்கள் அவரிடம் கூறினோம், 'அப்படின்னா எங்களோட வந்து துண்டறிக்கை கொடுங்களேன்'னு கேட்டோம்.

அவர் 'நாளை வர்ரேன்'னு சொன்னார். ஆனால் வரவில்லை.

இரண்டு பெரியவர்கள் 'நீங்கள் செய்யும் இந்த பணியினை பராட்டுகின்றோம், மேலும் இது போன்ற இளைஞர்களையெல்லாம் ஒன்று சேருங்கள்' என்றார்.

காக்கிசட்டைக்கூட எங்களுக்கு உதவி செய்தது, சில இடங்களில் எங்களுடன் தோழமையுடன் பழகினார்கள். சில இடங்களில் பொது மக்களே ஒலிவாங்கியை வாங்கி ஞானசேகரனையும் காங்கிரசையும் தாறுமாறாக விமர்சித்தார்கள்.

நாங்கள் பரப்புரை செய்து கொண்டிருக்கும் போது, எங்களுடைய வாகனம் அருகே பரப்புரை செய்துகொண்டு வந்த வேறுகட்சியை சேர்ந்த மற்றொரு வாகனத்தை பொதுமக்களே பேச்சை நிறுத்தும்படி தடுத்து நிறுத்தினார்கள்.

ஒரு சிலர் நன் கொடை கொடுக்க முன்வந்தார்கள். அச்சகம் மற்றும் பாதகை செய்யும் இடங்களிலும் கூட எங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். எங்கள் வாகன ஒட்டிகளான சிறு பொடியன்கள், எந்த வித சலிப்பும் இல்லாமல் உற்சாகத்துடன் எங்களுடன் இணைந்துப் பணியாற்றினார்கள்.

மணி ஒசைவரும் முன்னே, யானை வரும் பின்னே என்பார்கள், அதே போல எங்களுடைய பறை இசை எல்லோரையும் உசுப்பி விட்டது.(எங்களில் யாருக்குமே முறையாக பறை இசைக்க தெரியாதுஎன்பதுதான் முக்கியமான ஒன்று)

ஞானசேகரன் எங்களை முடக்க பல வழிகளிள் தொல்லை கொடுக்க முயன்று கொண்டே இருந்தார். முதலில் எங்கள் வாகனத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றி முடக்க முயற்சித்தது. எங்களிடம் எல்லாஆவணங்களும் சரியாக இருந்ததால் உடனே வாகனத்தை மீட்டு வந்து விட்டோம்.

இரண்டாவது முறையாக பரப்புரை செய்யும் அனைத்து பகுதிகளையும், தெருக்களின் பெயர்களையும் மற்றும் நேரம் முதல் கொண்டு எழுதி கொடுக்க வேண்டும் என்று காவல்துறை எங்களுடைய பரப்புரையதடுக்க முயற்சித்தார்கள். நாங்கள் உடனே அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கு உடனே தகவல் கொடுத்தோம், வேலூர் தேர்தல் அதிகாரியிடமும் முறையிட்டோம். செய்தி அறிந்த உடன்பத்திக்கையாளர்களும் மற்றும் உள்ளூர் தோழமை அமைப்புகளும் உடனே பிரச்சனைக்கூரிய இடத்திற்கு வந்து காவல்துறையிடம் பேசிமுடித்தார்கள். அதன் பின்பு நாங்கள் பரப்புரையை மேற்கொண்டோம்.

நடிகர் விஜய் ரசிகர்களும் எங்களுக்கு பேராதரவு தந்தார்கள், குறிப்பாக நடிகர் விஜய் நாகபட்டினத்தில் மீனவர்களுக்காக நடத்திய பொதுகூட்டம் இவர்களைமட்டுமல்ல பொதுமக்களையும்கவனிக்க வைத்துள்ளது.

இந்த பரப்புரையின் மூலம் நாங்கள் சில விடயங்களை உற்று கவனித்தோம், பல விடயங்களை மக்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். சென்னையில் இருந்து 150 கி.மி தொலைவில் உள்ள வேலூர்மக்களுக்கு ஈழப்பிரச்சனை முழுமையாக சென்றடையவில்லை என்பதே வருத்தமான ஒன்று.

ஒரு சிலர் 'ஈழம் எங்கிருக்கிறது, ஈழம் என்றால் என்ன? எப்போது 2 லட்சம் மக்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.'

வேறு சில இயக்கங்கள் ஈழப்போரின் புகைப்படங்களைப் போட்டு பரப்புரை செய்தார்கள், அந்த துண்டறிக்கைகள் பொதுமக்களை பெரிதும் பாதித்தது. துண்டறிக்கைகளை பார்த்த உடனே கீழே போட்டுவிட்டார்கள், ஒரு சிலர் 'இது என்ன விபத்தா' என்று கேட்டார்கள்.

பெரும்பான்மையான மக்கள் சீமானை அறிந்து வைத்துள்ளார்கள். எங்களைப் பார்த்து பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள், 'சீமான் கட்சிக்காரங்க வந்துட்டாங்க. நிறைய தொலைப்பேசி அழைப்புகள் சீமான் எப்ப வரார், சீமான் எத்தனை மணிக்கு வரார்.'

இதிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டது சீமானை மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள், சீமானும் மக்கள் நேசிக்கும் போராட்டங்களை கையில் எடுத்து விதியில் இறங்கி போராடினால், நிச்சயம் அதுமக்கள் இயக்கமாக மாறும்.

வேலூரில் நடைப்பெற்ற சீமான் பொதுகூட்டத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள், சரியாக 9.15 காங்கிரசை எதிர்த்து இரட்டை இலைக்கு வாக்கு போடுங்கள்என்ற உடனே கூட்டம் மள மளவென களைய ஆரம்பித்துவிட்டது. 9 ஆம் தேதியே (சனிக்கிழமை இரவோடு) நாங்களும் பரப்புரையை முடித்துக்கொண்டோம்.

வேலூர் பயணம் எங்களுக்கு பெரிய பாடம், நிறைய மக்களிடமிருந்தே நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்த பரப்புரையில் வேலூர் பகுதியை சார்ந்த தோழர்களை விட மற்றப்பகுதி தோழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. நாங்கள் வெறும் ஈழப்பிரச்சனையே மட்டும் பேசியிருந்தால் நிச்சயம் எங்களுக்கு மக்களிடம் இந்த வரவேற்பு இருந்திருக்காது. நாங்கள் வேலூர்வாழ்மக்களின் பிரச்சனைகளை பேசியது மக்களுக்கும் எங்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்தது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் நிச்சயம் ஒரு இளைஞராவது மக்களுக்காக உழைக்கவும், மக்களுக்காக வீதியிலே இறங்கி போராடவும் தயாராக பாதைதெரியாமலும், சரியான தலைமையும் இல்லாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இளைய சமுதாயத்தை நாம் கண்டெத்தால், நிச்சயம் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

மக்கள் தலைவர்கள் தானாக உருவாகுவதில்லை, மக்கள்தான் தனக்கான தலைவர்களை உருவாக்குகிறார்கள்.

"மக்களிடம் செல்வோம்,
மக்களிடம் கற்றுக்கொள்வோம்,
மக்களை பயிற்றுவிப்போம்,
மக்களை அரசியல் படுத்துவோம்..."

பல்வேறு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் இந்த பரப்புரையில் கலந்துக்கொண்ட மறைமுக ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!!!!