#tnfisherman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#tnfisherman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 04, 2011

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!...





இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.

ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.

இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

நன்றி : கும்மி 

வேண்டுகோள் : இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

சனி, ஏப்ரல் 16, 2011

செத்த வீட்டில் புலம்ப மட்டும் தெரிந்த சமூகம்


மாரிமுத்து என்ற மீனவரின் உடலை பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்து விட்டு அடக்க முடியாத சோகத்தில் இருக்கும் தமிழ் உணர்வாளர் ராமநாதன் கோட்டைப்பட்டிணத்திலிருந்து பேசினார்:

'சம்பவம் நடந்து 14 நாட்களுக்குப் பிறகு உடல் கரையில் ஒதுங்கியிருக்கிறது. தலை இல்லை.  மனசே சரியில்லை. எங்கோ பிறந்து எங்கோ உயிரிழந்து எங்கோ அடக்கம் செய்யப்படுவதாக அவரது தலைவிதி ஆகியிருக்கிறது.

என்ன தவறு செய்தார்கள் இந்த மீனவர்கள்! பிழைக்கத் தொழில் செய்யப் போவது ஒரு குற்றமா?

ஏப்ரல் 6ம் தேதியே 'மூன்று உடல்கள் பிண அறையில் வைத்திருப்ப'தாக ஒரு காவலர் யாழ்ப்பாணத்திற்குப் போன ராமேசுவரம் மீனவர்களிடம் வாய் தவறிச் சொன்னதாக நிரபராதி மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம் சொன்னாராம்.

நீங்க என்ன வேண்டும் என்றாலும் சத்தம் போடுங்க, நாங்க அடிக்கிறது அடிப்போம், கொல்வோம் என்ற செய்தியைத்தான் சிங்களப் பேரினவாத ராணுவம் தமிழர்களுக்குச் சொல்லியிருக்கிறது.

இழவு வீட்டில் கூடி இருந்து அழும் சமூகமாக ஆகி விட்டிருக்கிறோம்!.'

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

மீனவர் ராஜா முகமதுவுக்குத் திரட்டிய நிதி ஒப்படைப்பு


பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து தொழிலுக்குப் போக முடியாமல் இருக்கும் மீனவர் ராஜா முகமதுவுக்கு இணைய நண்பர்கள் வழங்கிய நிதியை ஜெகதாபட்டிணத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குப் போய் கொடுத்தோம்.

நிதி விபரங்கள்


ஜெகதாபட்டிணம் விசைப்படகு சங்க நண்பர்கள் ஜாகிர், நஸீர் மற்றும் பிற நண்பர்களும் உடன் இருக்கிறார்கள்.

மார்ச் முதல் வாரத்தில் பார்த்ததை விட உடல்நிலை பெரிதும் தேறி நடமாட ஆரம்பித்திருக்கிறார் திரு ராஜா முகமது. முழுவதும் குணமாகி மீண்டும் தொழிலுக்குப் போக பல மாதங்கள்  ஆகலாம்.  வலது கையில் இருக்கும் காயத்தினால் அந்தக் கை செயல்பட முடியாமல் இருக்கிறது.

இணைய நண்பர்கள் செய்த இந்த உதவிக்கு திரு ராஜா முகமதுவும் அவரது மனைவியும்  உளமார்ந்த நன்றி கூறினார்கள. 'நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போனாங்க. நீங்க எல்லாம் சேர்ந்து உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி' என்று ராஜா முகமதுவின் கண்கள் கலங்கின.

ஞாயிறு, மார்ச் 27, 2011

மீனவர் ராஜா முகமதுவுக்கு உதவி செய்யும் நிதி விபரங்கள்

பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து படுக்கையாக இருக்கும் மீனவர் ராஜா முகமது பற்றி ரோசா வசந்தின் இடுகையைத் தொடர்ந்து இணைய நண்பர்கள் பலர் நன்கொடை அளிக்க முன்வந்தார்கள்.

வரும் வியாழக்கிழமை (மார்ச் 31, 2011) ஜெகதாபட்டிணம் போய் பணத்தை ராஜா முகமது குடும்பத்திடம் சேர்ப்பதாகத் திட்டமிட்டிருக்கிறோம். சேர்ந்து கொள்ள விருப்பமுடையவர்கள் தொலைபேசியில் அழைத்தால் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம். (9884070556)

இன்னும் பங்களிக்க விரும்பும் நண்பர்கள் 30ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இது வரை திரட்டப்பட்ட பண விபரம்.

1. தமிழ்சசி, அமெரிக்கா- 10,000

2. சாந்தாமணி, கத்தார் - 3,000

3. கார்த்திக், ஈரோடு - 1,000

4. மா சிவகுமார், வேலூர் - 1,000

5. பழனி, சென்னை - 500

6. பெயர் வெளியிட விரும்பாத நண்பர், சிங்கப்பூர் - 3,000

7. பெயரும் ஊரும் சொல்ல வேண்டாம் - 1,000

8. ஜெகதீசன், சிங்கப்பூர் - 5,000

9. ராம்குமார், சிங்கப்பூர் - 1,000

10. சுவனப்பிரியன் - 1,000

11. ரோசா வசந்த், சென்னை - 1,000

மொத்தம் 27,500 ரூபாய்கள்

வியாழன், மார்ச் 24, 2011

வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில்

நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் போகும் வழியில் கிளைச் சாலையில் இருக்கிறது வெள்ளப்பள்ளம் கிராமம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் சென்ற ஆண்டு இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்தார்.

அங்கு போய் மீனவர்களுடன் பேச முயற்சித்த போது



இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் அவர்களது தொழில், கடலில் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விளக்கினார்.

செல்லப்பன் கொல்லப்பட்ட அன்று இன்னொரு படகில் இலங்கை கடற்படையில் தாக்குதலுக்கு உள்ளான மீனவர் முருகேசன் தனது அனுபவங்களை விவரிக்கிறார்.


புதன், மார்ச் 23, 2011

அய்யம்பட்டிணம் நாட்டுப் படகு மீனவர்கள்

நாட்டுப் படகு மீனவர்களுக்கும் பாதிப்பு உண்டு

ஜெகதாபட்டிணத்தை அடுத்த அய்யம்பட்டிணத்தில் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர் குடும்பங்கள் வசிக்கிறார்கள்.

முதலில் இரண்டு இளைஞர்கள் இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கிய அனுபவங்களைப் பற்றி பேசினார்கள்.

  • தினமும் நடக்கின்றன
  • பொருட்களை பறித்து போய் விடுவார்கள் 
தொடர்ந்து மீனவர் சங்கத் தலைவர் பேசினார்
  • கடலுக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது, 7 மைலுக்கு மேல் போக முடியவில்லை. 
  • எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் தொழிலே செய்ய முடியாது. 
  • சின்ன குளம் மாதிரிதான் இந்த கடல். 14, 15 மைல் தூரத்திலேயே அவங்க நேவி வருகிறார்கள்.
  • தொழில் பார்க்க ஆர்வம் இல்லாம போய் விட்டது.
  • பரவலை தொழில்தான் முக்கியம், பெரிய மீன் பிடிப்பது - வஞ்சிரம், சாளை பிடிப்பது
  • அந்தத் தொழிலுக்குப் போக முடியாமல் வலைகளை குவித்து வைத்து விட்டோம். 
  • தாக்குதல், உயிரிழப்பு இல்லை. அடிபிடி சண்டை போன மாசம் வரை நடந்தது

பாம்பன் மீனவர் - தினசரி தலைவலியான தாக்குதல்கள்

பாம்பன் மீனவர் - 25 ஆண்டுகள் அனுபவங்கள்
பாம்பன் மீனவர் - தினசரி தலைவலியான தாக்குதல்கள்

பாம்பன் கிராமத்தில் மீனவர் தனது 25 ஆண்டுகள் அனுபவத்தை விவரிக்கிறார்.

  • கச்சத்தீவுக்குப் போவது
  • இரு பக்க மீனவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது
  • இலங்கைத் தமிழர்கள் போராட்டம்
  • இலங்கைப் படை மீன்களைப் பறித்தல்
  • சுட ஆரம்பித்தார்கள் - கையில் காலில் சுட்டு விரட்டி அடித்தல்
  • 'இந்திய வேசை மக்களா ஓடுறா, ஸ்ரீலங்கா தண்ணி ஓடுறா'
  • போராட்டங்கள் அதிகமானதும் கொல்ல ஆரம்பிச்சிட்டான்
  • '25 ஆண்டுகளில் 1500 சம்பவங்களைப் பார்த்திருப்பேன்'

பாம்பன் கிராமத்தில் ஆர்வலர் - பன்னாட்டு நிறுவன நடவடிக்கைகள்

பாம்பன் தலைவருடன் உரையாடல்

பாம்பன் மீன்பிடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் சந்தித்த மதத்தலைவர். ஷெல் நிறுவனம் பாக் நீரிணையில் ஆரம்பிக்க இருக்கும் எண்ணைய் கண்டறியும் திட்டம் பற்றி குறிப்பிட்டார். மின்னஞ்சல் பயன்படுத்துகிறார்.

tnfisherman குழுமத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து மின்னஞ்சல் விபரங்களை கொடுத்தோம். 

செவ்வாய், மார்ச் 22, 2011

குண்டடிபட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவருடன் உரையாடல்

குண்டடிபட்ட ராமேசுவரம் மீனவர்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் சந்தித்த மீனவர்.  மூன்று ஆண்டுகள் முன்பு குண்டடிபட்டு பிழைத்தவர். அன்று முதல் கடலுக்குப் போவதையே நிறுத்தி விட்டார். அவரது தம்பி, மகன் தொழில் செய்கிறார்கள்.

அவரது தோள்பட்டைக்கு அருகில் குண்டு துளைத்த காயத் தழும்பு இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் குண்டை எடுத்திருக்கிறார்கள்.

'இந்திய நேவி நம்ம எல்லையை விட்டு தாண்டாது. அவங்க நம்ம எல்லைக்குள் வருவாங்க.'

'13 வயதில் தொழிலுக்குப் போக ஆரம்பித்தேன். 35 ஆண்டுகளாக தொழிலில் இருக்கிறேன். நிறைய அடி வாங்கியிருப்பேன். ஏன் அடிக்கிறே, எதுக்கு அடிக்கிறே என்றெல்லாம் கேட்க முடியாது. எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்ல முடியாது.'

'நம்ம எல்லையும் அவங்க எல்லையும் அடுத்தடுத்து இருக்கிறது. ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் குறைஞ்சது 100 கிலோமீட்டராவது இருக்கும். இங்க இருப்பதே 20 கிலோமீட்டர்தான் இருக்கும். இதில எல்லை எங்க போடுறது. இடம் இல்லை. இரண்டு நாடும் அடுத்தடுத்து இருக்கின்றன.' 

ஜெகதாபட்டிணம் மீனவர் ஒருவர்

கடலில் சந்திக்கும் தாக்குதல்கள்

'இப்பல்லாம் வந்து போட் நம்பரக் குறிச்சிட்டு போறாங்க. இப்பதான் 2 வாரமா பிரச்சனை இல்லை. ஏன் குறிக்கிறான்னு தெரியலை. நம்ம கரையிலேயே, இங்க வந்துர்ரானுங்க. நம்ம நேவி எப்பவும் வருவது கிடையாது.'

'நாங்க ஒரு 30 வருஷமா தொழில் செய்றோம். அடிச்சு என்னென்னவோ பண்ணியிருக்கானுங்க. நாங்க நம்ம கரையில மீன் பிடிச்சுக்கிட்டிருந்தோம். 10 தடவை மாட்டியிருப்போம். தொழில விட முடியாது. கடல் இல்லைன்னா சாப்பாட்டுக்கு வழியில்லை.'

'50,000 பொருள் எல்லாம் அறுத்து விட்டுருவானுங்க. கண்ணாடி எல்லாம் உடைச்சுவானுங்க.  ஆளுங்களை எல்லாம் அடி. நம்ம கரை அந்த கரை நமக்கு எப்படித் தெரியுது. கடல்ல வந்த அந்தக் கரை, நம்ம கரை என்று தெரியாதுல்ல. இலங்கைக் கடலா, தமிழ்க்கடலா என்று நமக்குத் தெரியாது.'

'தாக்கினதுக்கெல்லாம் பதிவே கிடையாது. அடி வாங்கிட்டு பேசாம இருக்க வேண்டியதுதான்.'

ஜெகதாபட்டிணம் மீனவர் தலைவர் - மீன்பிடி தகவல்கள்

மார்ச் 6ம் தேதி ஜெகதாபட்டிணத்தில் மீனவர் தலைவரை சந்தித்துப் பேசியதின் அடுத்த பகுதி.

மீன்பிடி பிரச்சனைகள்

'இது ஒரு சிறிய கடல். ஆறு கால்வாய் மாதிரி உள்ளது. ராமேசுவரத்திலிருந்து கோடியக்கரை - 3000க்கு மேற்பட்ட விசைப்படகுகளும், 5000க்கு மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் தொழில் செய்றாங்க. எல்லை தாண்டாம போய் மீன் பிடிக்கலாம் என்கிறது ரொம்ப கஷ்டம்'

'இலங்கையில இறால் நெட் கிடையாது. மேல மேய்கிற மீனை மட்டும்தான் பிடிக்கிறாங்க'.

'இரும்பு படகு, நவீன கருவிகள் வந்த பிறகு வெகு தூரம் போய் மீன் பிடிக்கிறாங்க.'

'விவசாயத்த எடுத்துக்கோங்க. மண் மழுங்கி போச்சு'

'கடல் வளம் குறைஞ்சதுக்கு இன்னொரு காரணம் இறால் பண்ணை போட்டது. கடற்கரை ஓரமா விளைநிலங்கள் எல்லாத்தையும் இறால் பண்ணையா மாத்திட்டாங்க. டீசல் 8 ரூபா விற்கும் போது இறால் 600 ரூபாக்கு வித்தது. இப்போ 400 ரூபாய்க்குத்தான் விற்கிறது'.

'எங்களால விசைப்படகு வைச்சு ஒண்ணும் பண்ண முடியலை. படகுக்கு இவ்வளவுன்னு கொடுத்து எடுத்துக்கிட்டா மாற்றுத் தொழிலுக்குப் போகத் தயாரா இருக்கோம். கடலுக்குப் போனா சுடுறான், அடிக்கிறான். கடல்ல போறதுக்கு இடம் இல்லை. சிறிய கடல், பெரிய மீன்பிடிப்பு. '

'கச்சத்தீவை மீட்டுத் தந்தாதான் தீர்வு. கச்சத்தீவிலிருந்து 4 நாட்டிக்கல் மைலுக்கு நமது எல்லை என்று ஆகி விடும். 22 நாட்டிக்கலா இருப்பது 28 நாட்டிக்கலா வரும். அது இருந்தா போதும்.'

'தாரை வார்த்துக் கொடுத்தாச்சு, நூத்துக்கணக்கான பேர் செத்தாச்சு. இதுக்கெல்லாம் காரணம் இலங்கை அரசாங்கம்தான். நம்ம அரசாங்கம் எதுவும் செய்றதில்ல. இப்பப் பேசறது எலக்சன் வரைக்கும்தான்.'

இழுவை படகுகள் பயன்படுத்துவதற்கும் மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மீன்பிடி முறைகள், கடல் வளம் குறைதல் போன்ற பிரச்சனைகள், சமூகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகளுக்கு (கார் ஓட்டினால் பூமி வெப்ப மயமாதல், இரசாயன உரம் போட்டால் விவசாய நிலம் பாழாவது) சமமானவை. அவற்றைப் பற்றி பேசுவது மீனவர்கள் மீதான தாக்குலைப் பற்றிய கவனத்தை திசை திருப்புவதே ஆகும். 

ஜெகதாபட்டிணம் மீனவர் தலைவர் + கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள்

ஒலிக்கோப்பு

மார்ச் 6ம் தேதி ஜெகதாபட்டிணம் மீனவர்கள் தலைவரை அவரது வீட்டில் சந்தித்தோம். வீட்டின் முன்பு பல் துலக்கிக் கொண்டிருந்த அவர் பேசியதன் பதிவுகள்.

ரோசாவசந்த் முதலில் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து மீனவர் தலைவர் பேசுகிறார்.

'கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்தே இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் அவங்களோட கைகோர்த்து நிக்கிறாங்க. பிரபாகரன் இறந்த பிறகு ரொம்ப மோசமாயிருக்கு. அவர் இருக்கும் போது இந்த மாதிரி நடப்பது இல்லை.'

'எல்லை தாண்டி அந்த மீனவர்களும் வராங்க, நம்ம மீனவர்களும் போறாங்க, இல்லைன்னு சொல்லலை. ரொம்ப மோசமாக முறையில சித்தரவதை பண்றாங்க.'

'ஆரம்பத்தில போயிருக்கேன். எங்க படகில என்னையே வந்து ஐஸ் எல்லாம் ஆணுறுப்புற வைத்து சித்திரவதை படுத்தினான்'

ஒரு கட்டத்தில் இரு சக்கர வண்டியில் கடலோரக் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பேர் வந்து ஆங்கிலத்தில் 'any problem' என்று கேட்கிறார்கள்.

தொடர்ந்து ஆங்கிலத்தில், நாங்கள் அவர்களிடம் பேசியது பதிவாகியிருக்கிறது.

'அது நமது கடல் எல்லைக்கு அப்பாற்பட்டது. அது நமது தவறு. யாரும் எல்லை தாண்டக் கூடாது என்று ஒரு முடிவு செய்திருக்கிறோம்'.

'இலங்கை நேவி இந்திய எல்லைக்குள் வருவதற்கு எங்களுக்கு ஆதாரம் கிடைப்பதில்லை. 24 மணி நேரமும் கண்காணிப்பது சாத்தியமில்லை. எங்களுக்குத் தகவல் வந்தால் அதை மேலிடத்துக்கு அனுப்புவோம்.'

'தகவல்கள் எங்களுக்குச் சரிவர வந்து சேருவதில்லை. தமிழ் தெரிந்தவர்கள் இந்த பகுதியில் இல்லை. இது ஒரு பிரச்சனைதான். ரோந்து போகும் போது 3 பேர் போகிறோம். எங்களுக்கு தமிழ் தெரியாது என்பது தகவல் பரிமாற்றத்துக்கு ஒரு தடைதான்'

வியாழன், மார்ச் 10, 2011

தமிழக மீனவர்கள் எனது பார்வையில் - 6

தாக்குதலுக்குக் காரணமாக இலங்கை கடற்படை சொல்வது என்ன? எல்லை தாண்டி போவது மட்டும்தான் காரணமா, வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா?

1. எல்லை தாண்டி போவது குறித்து:
'இந்திய வேசை மகன்களா, ஏண்டா எங்க தண்ணிக்கு வரீங்க, ஓடுங்க' என்று சொல்லி விரட்டுகிறார்கள் என்று இரண்டு மூன்று இடங்களில் கேட்கக் கிடைத்தது.

கச்சத்தீவை அடிப்படையாக வைத்து தமது எல்லையை வரையறுத்துக் கொண்டு அந்தக் கோட்டை பாதுகாப்பதாக செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது.

'எங்களுக்கு எல்லை எங்க தெரிகிறது. இது ஒரு கடலே இல்லை, குளம் போலத்தான். படகில் ஏறி கொஞ்ச தூரம் போனா எல்லை என்றால், மீன்பிடித் தொழிலே செய்ய முடியாது.'

'எல்லை தாண்டிப் போனால் தாக்கப்படுவார்கள், அதனால் அதைத் தவிர்க்க வேண்டும்' என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா சொல்வது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்கிறார்கள் மீனவர்கள்.

'அவருக்குக் கடல் தெரியுமா, இங்க வந்து பார்த்திருக்காரா. நாட்டுக்கும் ராணுவத்துக்கு எல்லை இருக்கலாம், எங்களுக்கு  வலை வீசிய பிறகு நீரோட்டத்தோடு நகரும் வலை எல்லை தாண்டினால் நாங்க இழுத்துப் பிடிக்கவா முடியும்?' என்று கேட்கிறார்கள் மீனவர்கள்.

'சிலபேர் நல்லவங்களா இருக்காங்க, மத்தியான வேளையில தண்ணி போட்டு விட்டு வந்தாங்கன்னா கொடுமையா நடக்கிறாங்க' 

2. மீனவர்களுக்கிடையேயான சச்சரவுகள்

தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் இரட்டை மடி வலை, சுருக்கு வலை மூலம் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை எதிர்க்கும் இலங்கை மீனவர்கள் தாக்குகிறார்கள் என்று இன்னொரு வாதம் முன் வைக்கப்படுகிறது.

இழுவை படகுகளில் இரட்டை மடி முறையில் மீன் பிடிப்பவர்கள் கூட தாங்கள் செய்வது தவறு என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு விசைப்படகில் கொக்கி முறையில் மீன் பிடிக்கும் மீனவர்கள், கண்ணாடி இழை படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் என்று தமிழ்நாட்டின் மற்ற தரப்பு மீனவர்களிடையேயும் எதிர்ப்பு இருக்கிறது.

இழுவை படகுகள் வேகமாக போகும் போது சிறிய மீனவர்களின் வலைகள் அறுபடுதல், இரட்டை மடி முறையில் மீன் பிடிப்பதால் அந்த இடத்தின் மீன்வளம் நிரந்தரமாக பாதிக்கப்படுதல் போன்றவை பரவலாக பேசப்படுகின்றன. இந்த முறையை நிறுத்துவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆனால், இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதில் கணிசமான பகுதியினர் கண்ணாடி இழைப்படகில் அல்லது நாட்டுப் படகில் மீன்பிடிக்கப் போகிறவர்கள். மீனவர்களுக்கு இடையே (இரு கரைகளிலும்) இருக்கும் பிரச்சனைகள் அவர்களுக்குள் பேசித் தீர்க்கும் அளவில்தான் இருக்கின்றன.

மீனவர்களை தாக்குவது, துன்புறுத்துவது, மீன்களை பறி முதல் செய்வது, வலைகளை அறுத்து விடுவது, மீன்பிடிக் கருவிகளை கவர்ந்து செல்வது போன்ற இலங்கைப் படையின் நடவடிக்கைகளுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் தொடர்பில்லை என்றே நம்புகிறார்கள்.

3. 'தமிழர்கள் மீதான வெறுப்பை இந்திய மீனவர்கள் மீது காட்டுகிறார்கள்' என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் செயல்பாட்டில் இருந்தவரை இது போன்ற நிகழ்வுகள் குறைவாக இருந்தன. 'நெருங்கி வரும் இலங்கைக் கடற்படை படகு ஒன்று தூரத்தில் விடுதலைப் புலிகளின் படகு வந்தால் ஓடிப் போய் விடுவார்கள்' என்றார் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர்.

தமிழக மீனவர்கள் - எனது பார்வையில் - 5

நான்கு நாட்கள் பயணத்தில்
  • நாகப்பட்டினம், கீச்சாங்குப்பம், அக்கரைப் பேட்டை, நாகூர்
  • வெள்ளப்பள்ளம், புஷ்பவனம்
  • ஜெகதாபட்டிணம், ஐயம்பட்டிணம், கோட்டை பட்டிணம்
  • பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி 
பகுதி மீனவர்களிடம் பேசியதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. 

1. சமீபத்தில் ஊடகங்களில் பேசப்பட்ட 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைத் தவிர குறைந்த அளவு தீவிரத்துடன் தாக்குதல்கள் நடந்தனவா? நடக்கின்றனவா?

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி  மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தினசரி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது என்று தெரிய வந்தது. ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, போராட்டங்களை நடத்தினாலும். போகப்போக இலங்கை கடற்படையுடனான நிகழ்வுகளை அன்றாட மீன்பிடி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைத்து தொழிலை செய்து வருகிறார்கள்.  

25 ஆண்டு தொழில் அனுபவத்தில் ஒவ்வொரு மீனவரும் சில நூறு முறைகள் தாக்கதல்களை சந்தித்திருக்கிறார்கள். 


இந்த வரைபடத்தைப் பார்த்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியிலிருந்து இலங்கையுடனான கடற்பகுதி எவ்வளவு குறுகியதாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். 

வேதாரண்யத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான வளைகுடா கடற்கரையும் இலங்கையின் வடக்குப் பகுதிகளுடன் இணையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதி மீனவர்கள் கணிசமான அளவு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். 


நாகப்பட்டினத்தை ஒட்டிய பகுதி மீனவர்களில், வெகு தூரம் பயணிக்கும் விசைப்படகினர் அவ்வப்போது தாக்குதல்களை சந்திக்கிறார்கள். 

கடலில் நடந்த நிகழ்வுகளை காவல் துறையிடமோ, மீன்வளத் துறையிடமோ முறையிட்டால் 'நீங்க அந்தப் பக்கம் போயிருப்பீங்க, அதுதான் அடிச்சிருப்பாங்க' என்று பதிவு கூடச் செய்யாமல் நிராகரித்து விடுவதாகச் சொன்னார்கள். 

கொலை வழக்குகளுக்குக் கூட முறையான முதல் தகவல் அறிக்கை பதியவில்லையாம். காயமடைந்தவர்கள்,  வன்முறைக்கு உள்ளானவர்கள், மீன்களை அள்ளிச் சென்றது, வலைகளை அறுத்து நாசம் செய்தது,  மீன்பிடி கருவிகளை கவர்ந்து சென்றது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மீனவரின் செவி வழிச் செய்தியாகவே இருந்து வருகிறது. பக்கத்து கிராமங்களில் வசிப்பவர்களுக்குக் கூட எல்லா விபரங்களும் தெரியாமல் இருக்கின்றன.  

தமிழக மீனவர்கள் எனது பார்வையில் - 4

'ஜெகதா பட்டிணம், கோட்டை பட்டிணம் பகுதிக்கு நீங்கள் தவறாமல் போக வேண்டும். அந்தப் பகுதி மீனவர்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று கும்மி தொலைபேசி சொன்னார். ஊரில் இருக்கும் தனது நண்பர்களுடன் பேசி ஒருங்கிணைப்புக்கும் ஏற்பாடு செய்தார்.

'ராமேசுவரத்தில்தான் பிரச்சனையே, நாகப்பட்டினம் போய் என்ன செய்யப் போறீங்க' என்று ஒரு அதட்டல் போட்ட பாலபாரதி ராமேசுவரத்தில் அவரது நண்பர்களிடம் பேசி பயண ஒருங்கிணைப்புக்கு ஆவன செய்தார்.

பிப்ரவரி 19ம் தேதி சென்னையில் save-tamils.org குழுவினர் ஏற்பாடு செய்திருந்த தகவல் தொழில் நுட்பத் துறையினரின் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். மீனவ பிரதிநிதிகள், தமிழ் இயக்க பேச்சாளர்கள் என்று பலர் பேசினார்கள். அதன் மூலம் பல தகவல்கள் தெரியக் கிடைத்தன.

30 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனையை தொடர்ந்து கவனத்தில் வைத்திருப்பது அவசியம். உயிரிழப்பு ஏற்பட்டதும் செய்தி வெளியிட்டு விட்டு அதன் பிறகு அடுத்த சூடான செய்திக்கு நகர்ந்து விடும் வெகுஜன ஊடகங்களும், சுயநல அரசியல் மட்டும் செய்யும் அரசியல் கட்சிகளும் இதைச் செய்யப் போவதில்லை. இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நாம் நினைத்தால் இந்தப் பிரச்சனை குறித்து தொடர்ந்த கவன ஈர்ப்பை செய்ய முடியும்.

மீனவ கிராமங்களில் பயணம் செய்வதன் மூலம்
  • நிகழ்வுகளை நேரடியாகக் கேட்டு புரிந்து கொள்ளலாம். 
  • பதிவுகளை ஆவணமாக்கலாம். 
  • இணையத்தில் தமிழர்கள் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதை  மீனவர்களுக்கு தெரிவிக்கலாம். 
பல ஆண்டுகளாக மீனவர் பிரச்சனை குறித்து எழுதிக் கொண்டிருக்கும் ரோசாவசந்த் உடனடியாக கலந்து கொள்வதாகச் சொல்லி விட்டார். வலைப்பதிவுகளில் புகழ் பெற்றிருக்கும் உண்மைத்தமிழனிடம் பேசி அவரும் கலந்து கொள்ள தயாரானார்.

இன்னும் பலர் கலந்து கொள்ள விரும்பினாலும் பணி நெருக்கடி, நேரமின்மை காரணமாக வர முடியாமல் போனது.

பயணத்தில் நேரடியாக கலந்து கொள்ள  முடியாவிட்டாலும், பயணச் செலவுகளுக்கு உதவி தேவைப்பட்டால் அதை தான் அளிப்பதாகச் சொல்லியிருந்தார் பலூன் மாமா. பயணத்தில் செலவு பகிர்ந்து கொள்வதாக ஏதாவது ஏற்பாடு செய்தால், ஒரு பங்கை தனது கணக்கில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். 

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 3

2011 ஜனவரியில் மீனவர்கள் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் டுவிட்டரில் எதிர்ப்புக் குரல்கள் வலுவடைந்த போது மற்றவர்களுடன் நானும் எனது கருத்துக்களை எழுத முற்பட்டேன். இணையத்தில் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து வெளியான செய்திகள், பதிவுகள்,  கட்டுரைகள் என்று நிறைய படிக்க ஆரம்பித்தேன்.

'30 ஆண்டுகளில், 539 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்' என்பது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும் நிறைய கேள்விகளும் எழுந்தன.

1. திட்டமிட்ட தாக்குதல்கள் என்றால் இத்தனை ஆண்டுகளில் 500 சொச்சம் முறை மட்டும்தான் தாக்கினார்களா? உயிரிழப்புகள் இல்லாமல் மற்ற வகையில் தாக்குதல்கள் எவ்வளவு நடந்தன, அவற்றைப் பற்றிய விபரங்கள் என்னென்ன?

2. தாக்குதலுக்குக் காரணமாக இலங்கை கடற்படை சொல்வது என்ன? எல்லை தாண்டி போவது மட்டும்தான் காரணமா, வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா?

3. தமிழக மீனவர்கள் ஏதாவது சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? அதற்கு பதிலடியாக தாக்குதல்கள் நடக்கின்றனவா?

4. மீனவர்களுக்கிடையே இருக்கும் பகையால் தாக்குதல்கள் நடக்கின்றனவா?

5. இத்தனை தீவிரமாக பிரச்சனை இருந்திருக்கும் போது இவ்வளவு காலம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

டுவிட்டரிலும் வலைப்பதிவுகளிலும் எழுதியதைத் தொடர்ந்து சென்னைக் கடற்கரையில் இணையப் பயனர்கள் கூடி அடுத்த நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்கள். கூட்டத்துக்குப் போக முடியாவிட்டாலும், பேசப்பட்ட விபரங்களையும் அடுத்த நடவடிக்கைகளையும் பற்றி தெரிந்தது.

இணையத்தில் எழுதுவதோடு நின்று விடாமல், இணையத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து களத்திலும் உணர்வுகளைக் காட்ட வேண்டும் என்று பலூன் மாமா வலியுறுத்தினார். குறுஞ்செய்திகள் மூலமாக, மனிதச் சங்கிலி மூலமாக மீனவர் பிரச்சனையைப் பற்றிய விழிப்புணர்வை பரவலாகக் கொண்டு சேர்க்கலாம் என்று ஆலோசனை சொன்னார்.

இவற்றை செய்வதற்கான தயாரிப்புகளும், தொடர்புகளும் இல்லை என்று தோன்றியது. அவை பற்றிய சிந்தனையிலேயே நாட்கள் நகர்ந்தன.

'சரி, டுவிட்டரில் எழுதி விட்டோம், சில நாட்கள் #tnfisherman டிரெண்டிங்கிலும் வந்து விட்டது. உயிர்க்கொலை நடக்கும் போது சத்தம் எழுப்பி விட்டு அத்தோடு மறந்து போய் விடும் பத்திரிகைகள், கட்சிகள் போலத்தானே நாமும் இருக்கிறோம். இதற்கு மேலும் ஏதாவது செய்ய வேண்டும். பதிவர்கள் எல்லோரும் சேர்ந்த நாகப்பட்டினத்திற்குப் போய் ஆர்ப்பாட்டம் நடத்தவது போல திட்டமிடலாமா' என்று ஒரு நண்பர் தொலைபேசி சொன்னார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாகை சிவா ஒருங்கிணைப்பில் உதவுவார் என்றும் ஆலோசனை சொன்னார். நாகை சிவாவுக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டதும் அவர் தன்னால் ஆன உதவிகளை செய்வதாகச் சொன்னார். வெளி நாட்டில் இருக்கும் அவர் பிப்ரவரி கடைசி வாரத்தில் ஊருக்கு வருவதாகவும் சொன்னார். நாகப்பட்டினத்திலேயே வசிக்கும் அறுசுவை பாபுவிற்கு மடல் அனுப்பி அவரது உதவியை கேட்டார்.

'ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு கட்டமைப்போ, பெருமளவில் திரளும் பதிவர்களோ இருப்பார்களா? பத்தோடு பதினொன்றாக நாமும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திக் கலைவதால் என்ன பலன் இருக்கும்?  மீனவர்கள் பிரதிநிதிகள் இன்னும் ஒரு ஆர்ப்பாட்டம் என்றால் என்ன ஆர்வம் காட்டுவார்கள்' என்ற குழப்பங்கள்.

இணையப் புலிகள், எழுத்து வித்தை கையில் இருக்கும் நாம் கடற்கரை கிராமங்களில் பயணித்து மீனவர்களை சந்தித்து நமது பதிவுகளை இணையத்தில் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று பட்டது. ஒளிப்படங்கள், காணொளிகள், வலைப்பதிவுகள் மூலம் நாம் திரட்டும் தகவல்களை ஆவணப்படுத்தலாம் என்று திட்டமிட்டோம்.

சிவா ஊரில் இருக்கும் நாட்களில் போனால் நல்லது என்று மார்ச் முதல் வார இறுதியில் 4 நாட்கள் பயணம் என்று திட்டமிட்டோம். நாகப்பட்டினத்தில் தொடங்கி கடற்கரையோரமாக ராமேசுவரம் வரை போய் வருவது என்று திட்டம்.

மீனவர் ராஜா முகமது

பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து படுக்கையாக இருக்கும் மீனவர் ராஜா முகமது பற்றி ரோசா வசந்தின் இடுகையிலிருந்து

"ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜா முகமது என்பவர், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் சிக்கி, பாதிக்கப்பட்டு, தீவிர தீக்காயங்களுடன் படுக்கையில் இன்னமும் போராடி வருவது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது போன்ற மற்ற செய்திகளில் இவர் மறக்கப்பட்டு விட்டார்.

அரசு தரப்பில் அவருக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக செலவு செய்து, மேலும் செலவு செய்து, அவரை கவனிக்கும் வசதியில்லாமல் வேறு ஒரு இடத்தில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மீனவர்கள் கொல்லப்பட்டால் கிடைக்கும் நஷ்ட ஈடும், கவனமும் காயம் பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நடைமுறையில் பாதிக்கப்பட்ட ராஜாமுகமதை அவரது வீட்டில், அண்மையில் மீனவர் நிலை குறித்து அறியும் நோக்கத்துடன் பயணம் சென்ற நாங்கள், தோழர் ராமநாதன் உதவியுடன் சந்தித்தோம். அவரது நிலை மனதை உருக்கக் கூடியதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக (கேசட் காலியானதால்) வீடியோ எடுக்க இயலவில்லை. புகைப்படம் எடுத்ததுடன், அவரது பேச்சை அலைபேசியில் பதிவு செய்தோம்."

வீட்டின் உள்ளறையில் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறார் ராஜா முகமது.  உள்ளே வரவேற்று அறைக்குள் அனுப்பும் போது 'ராத்திரி முழுக்க வலியில் தூங்கவேயில்லை' என்று சொல்கிறார் அவரது மனைவி.

அறைக்குள் கட்டிலுக்கு அருகில் நின்று பேசிய உரையாடலின் பதிவு

புதன், மார்ச் 09, 2011

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 2

2004ம் ஆண்டு கோடை விடுமுறையில் மே 15 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு கடற்கரையோரமாக நாகர்கோவில் வரை இரு சக்கர வண்டியில் ஒரு நண்பருடன் பயணித்தேன்.
  • சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலையில் போய், மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் என்று முதல் நாள்.

  • அடுத்த நாள் காலையில் சீர்காழி, திருக்கடையூர், தரங்கம்பாடி, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் போய்ச் சேர்ந்தோம். அன்று மாலையில் கோடிக்கரை காடு அதன் அருகிலுள்ள கடற்கரைக்குப் போய் வந்தோம்.

  • மூன்றாவது நாள் அதிராமபட்டிணம், சேதுபவசத்திரம், அம்மா பட்டிணம், கோட்டை பட்டிணம், ஜெகதாபட்டிணம், மீமிசல், தொண்டி, தேவிப் பட்டிணம் வழியாக ராமநாதபுரம் வந்து சேர்ந்தோம். இந்த சாலைகள் குண்டும் குழியாக உடலைக் குலுக்கி எடுத்தன.

  • நான்காவது நாள் மண்டபம், பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி வரை (சாலையில் மட்டும்) போய் விட்டு ராமநாதபுரம் வந்து தெற்கு நோக்கி பயணித்தோம். இருட்டிய பிறகும் பயணித்து தூத்துக்குடி போய் தங்கினோம்.

  • ஐந்தாவது நாள் திருச்செந்தூர், உவரி, கூடங்குளம், கன்னியாகுமரி போய் நாகர்கோவில் போய்ச் சேர்ந்தோம். 

இந்தப் பயணத்தில் வழியில்  மக்களுடன் உறவாடும் வாய்ப்புகள் எதுவும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கடற்கரையோர கிராமங்கள்/நகரங்கள், சாலைகள், குளங்கள், தொழில்கள் என்று கண்ணால் கண்ட காட்சிகளும், சுவாசித்த கடல் மணமும் தமிழகக் கடற்கரை வாழ்க்கையின் ஒரு அறிமுகமாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பயணத்துக்கு அது ஒரு தயாரிப்பாகக் கூட இருந்திருக்கிறது. 

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியின் போது நான் சென்னையிலிருந்து வேலூருக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நான் போன பேருந்தில் பாத்திரங்களுடனும், மூட்டைகளுடனும் ஒரு அம்மா ஏறியிருந்தார். 'கடற்கரை எல்லாம் தண்ணி, சென்னை இன்னும் சாயங்காலத்துக்குள் மூழ்கி விடுமாம்' என்று அழுகையும் குழப்பமும் நிரம்பிய குரலில் சொன்னார். வேலூர் பேருந்து நிலையத்தில் தினமலர் நாளிதழின் சிறப்பு வெளியீட்டில் கடற்கரை எங்கும் நிகழ்ந்திருந்த இயற்கை சீற்றம் பற்றி எழுதியிருந்தார்கள். 

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 1

நான் பிறந்தது, 12ம் வகுப்பு வரை படித்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோவிலில். எங்கள் மாவட்டத்தில் கடற்கரையும், மீனவர் சமுதாயமும் குறிப்பிடத்தக்க அளவில் நிறைந்திருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை

இருந்தாலும், எங்கள் வீட்டில் மீன் சமைப்பது இல்லாததால் மீன் வாங்குவது குறித்த செயல்பாடுகள் கூட இல்லாமலேயே வளர்ந்தேன். ஊருக்கு உறவினர்கள் வீட்டுக்குப் போகும் போது அவர்கள் சமைக்கும் மீன்கள் சாப்பிட்டிருக்கிறேன். நான் மீன் சாப்பிடுவேன் என்று தெரிந்ததும் பக்கத்து வீட்டு அம்மா 'சாப்பிடுற பையனுக்கும் கொடுக்காம கெடுக்குறாங்க' என்று செல்லமாகத் திட்டி அனுப்பும் மீன் சாப்பிடுவது மட்டும் கொஞ்ச காலம் நடந்தது. கூனிப் பொடி என்ற மீனை அவர்கள் சமைத்து அனுப்பியதைச் சாப்பிட்டதில் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் போக மீன் சாப்பிடுவது ஒரு முடிவுக்கு வந்தது.

கடற்கரை கிராமங்களிலிருந்து விலகியிருக்கும் நாகர்கோவில் நகரில் வசித்ததால், மீனவ நண்பர்கள் அதிகம் இருக்கவில்லை. 'கடற்கரை பசங்க முரடங்க' என்று எச்சரிக்கப்பட்டு பழக வாய்ப்பிருக்கக் கூடிய மற்ற இடங்களிலும் பயம் கலந்த மரியாதையுடன் ஒதுங்கி இருந்ததே நடந்தது.

கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்த பிறகு கடற்கரை என்பது மெரீனா, பெசன்ட் நகர் மனமகிழ்வு தளங்களாக போயிருக்கிறேன். நாட்டுநலப்பணித் திட்டத்தின் கீழ் பட்டினப் பாக்கம் போனது மீனவர் கிராமம் ஒன்றை முதன் முதலில் முறையாகப் பார்த்தது.

வேலையில் சேர்ந்து பிற இடங்களைப் பார்த்து விட்டு 2001ம் ஆண்டில் சென்னைக்குத் திரும்பிய பிறகு, கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் மீனவர் கிராமங்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல் போய்ப் பார்த்திருக்கிறேன். 

செவ்வாய், மார்ச் 08, 2011

மீனவர்கள் தாக்குதல்கள் விபரப்பதிவு தளம்

நாகப்பட்டினம், ஜெகதாபட்டிணம், ராமேசுவரம் பகுதி மீனவர்கள் சிலருடன் பேசிய போது, இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை காவல் துறையோ மீன்வளத் துறையோ முறையாகப் பதிவு செய்வதில்லை என்று பலர் சொன்னார்கள். 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு முறையான முதல் தகவல் அறிக்கை இல்லை என்பதும் தெரிய வந்தது.

(உயிர்க் கொலைகளைத் தவிர்த்து) நாள் தோறும்,
  • வலைகளை அறுத்தல்
  • மீன்களைத் தூக்கிக் கடலில் போடுதல்
  • அடித்தல்
  • உடல் ரீதியாக சித்தரவதை செய்தல்
  • மீன்பிடி கருவிகளை கவர்ந்த செல்லுதல்
போன்ற நிகழ்வுகள் ஆயிரக்கணக்கில் நடக்கின்றன. இவை பதிவு செய்யப்படாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடோ நியாயமோ கிடைக்காமல் போகிறது.

இதை நிவர்த்தி செய்ய, செல் பேசி மூலம் தகவல் சொல்லி விட்டால், அதை உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்வதாக திட்டமிட்டு, அதற்கான ஒரு தொலைபேசி எண்ணையும் ஏற்படுத்தினோம். இந்த எண்ணை சந்தித்த மீனவர்கள், பிரதிநிதிகளிடம் கொடுத்து பரவலாக்கும்படி கேட்டுக் கொண்டோம்.

8489681589 என்ற இந்த எண்ணுக்கு வரும் தகவல்களை http://tnmeenavar.blogspot.com/ என்ற வலைப்பதிவில் இடுகைகளாக வெளியிடுவதாக திட்டம்.

இந்த எண்ணில் வரும் தகவல்களைக் கேட்டு பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சலில் (masivakumar@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள். நாம் முறை வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் அழைப்பவர்களிடம் பேசி தகவல் திரட்டுவதாக ஏற்பாடு செய்து கொள்ளலாம்.