ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களுக்கு திமுக தலைவர் கடும் கண்டனம்




சென்ற தடவை தேர்தல் நடந்ததே, இதை எல்லாம் கேள்விப்பட்டீர்களா? உருட்டுப் பேச்சுகளும் மிரட்டு விழிகளும். கரட்டுப் பார்வைகளும், கத்திக் குத்துகளும், காலை இடறி விடுவதும், மோட்டார் ஏறி ஆள் சாவதும், இவைகளை எல்லாம் கேள்விப்பட்டீர்களா? வாதத்துக்கு வாதம், புள்ளி விவரத்துக்கு புள்ளி விவரம், வேண்டுகோளுக்கு வேண்டுகோள், அது நடந்தது.

இந்தத் தடவை என்ன நடக்கிறது?

'ஓட்டுக்குப் பணம் கொடுத்துக் கொண்டு போகிறார்கள். காங்கிரஸ்காரர்கள்' என்று கேள்விப்பட்டு நம்முடைய தோழர்கள் 'பணம் வாங்காதே!' என்று கூச்சலிட்டுக் கொண்டு போனால், உடனே டெலிஃபோன் செய்து, போலீஸ் பாராவைக் கொண்டு வந்து போட்டு நம்முடைய தோழர்களைத் தடுத்து 'ஆகட்டும் உங்கள் வேலை ஆகட்டும்' என்று போலீசே பாதுகாப்புத் தருகிறார்கள்.

நான் போலீஸ் அதிகாரிகளுக்குச் சொல்லுகிறேன். காங்கிரஸ் தொண்டர்களுக்கு 'நீங்கள் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிற வேலையைச் செய்கிறீர்கள்.'

நீங்களே ஆரம்பியுங்கள், என்ன கெட்டு விட்டது? நீங்கள் பாதுகாப்பாக இருந்து, காங்கிரஸ் தொண்டர்கள் பணம் கொடுப்பதை விட நீங்களே, 'நிறைய்ய போலீஸ் வந்திருக்கிறது. இன்னின்ன தெருவுக்கு நாலு போலீஸ் பணம் கொடுக்கும்' என்று தண்டோரா போட்டு விட்டுக் கொடுங்கள்.

என்ன செய்வீர்கள் அதனாலே? என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதானே உங்கள் எண்ணம்? என்னைத் தோற்கடிப்பதாலே உங்களுக்குக் கிடைக்கிற லாபம் என்ன? என்னைத் தோற்கடிப்பதாலே நீங்கள் எதைத் தூய்மைப்படுத்தப் போகிறீர்கள்? என்னைத் தோற்கடித்து விட்டால்  உங்களுடைய எந்தக் கொடி வானத்திலே பறக்கப் போகிறது?

துணிவோடு நீங்கள் இருப்பீர்களானால்!

பணத்தையும் கொடுத்து வெங்கடேச பெருமாள் படத்தை வைத்தார்களாம். ஆக, உங்களுக்கு என்னை எதிர்க்க வக்கில்லை வழியில்லை, ஏழுமலை ஏறி அவரை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள். பரவாயில்லை, அவர்தானே வருகிறார், வரட்டும்.

ஆக, என்னை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறீர்கள்? ஒரு சாதாரண அரசியல் கட்சியிலே உள்ளவன் என்று மதிக்கவில்லை. 'அண்ணாதுரையைத் தடுக்க வேண்டுமானால் 5 ரூபாய் கூட போதாது. தீராத வல்வினை எல்லாம் தீர்த்து வைப்பவனைக் கொண்டு வந்து அவன் படத்தின் கீழ் 5 ரூபாயை வைத்து எடுத்துக் கொள்' என்று சொல்லுகிறீர்கள்.

அதை நீட்டுகிற போது தாய்மார்களைக் கேட்கிறேன் 'உற்று அந்தப் படத்தைப் பாருங்கள்'.

அந்தத் தெய்வம் எதற்காக ஏழுமலைக்கு அப்பாலே இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தீர்களா? நாட்டிலே இருக்கிற அக்கிரமம் தாள மாட்டாமல் தொலைவாகப் போயிருக்கிறது. நல்லவர் கஷ்டப்பட்டாகிலும் அங்கு வரட்டும் என்பதற்காகத்தான் அங்கே போயிருக்கிறதே தவிர,  நாட்டில் அக்கிரமம் இல்லை என்றால் நம்முடைய வரதராஜப் பெருமாள் இப்போது ஊரோடு ஊராக இருந்திருக்க முடியும்.

நீங்கள், உங்கள் தொல்லை தாளமாட்டாமல் ஏழு மலைக்கு அப்பால் இருக்கிறவரை, மறுபடியும் அழைத்துக் கொண்டு வந்து 'அதர்ம காரியத்துக்கு நீ துணை செய்' என்றால் உண்மையிலே துணை செய்வாரா?

வெங்கடேசப் பெருமாள் படத்தின் பேரிலே 5 ரூபாயை வைத்து அதை யாராவது வாங்கினால் வெங்கடேசப் பெருமாளிடத்திலே நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் சொல்கிறேன் அவர்கள் இது வரையிலே கும்பிட்ட கோவிந்தனுக்கு அவர்கள் செய்கின்ற துரோகத்தைப் போல கோவிந்தன் ஏது கோபாலன் ஏது என்று பேசுகின்றவர்கள் கூட அவ்வளவு துரோகம் செய்ததில்லை என்பதை அருள் கூர்ந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பூரத்தைக் கொழுத்தி கோவிலில் அடித்து விட்டு கால் ரூபாய் நான் வாங்கியதில்லை என்று பொய்ச் சத்தியம் செய்பவனைக் கூடச் சாதாரணமாகக் கருதலாம்.  வெங்கடேசப் பெருமாள் படத்தை வைத்து அதன் பிறகு 5 ரூபாய் நோட்டை வைத்து அதை எடுக்கப் போகிற நேரத்தில் தாய்மார்களும் பெரியவர்களும் ஒரு தடவை முகத்தைப் பாருங்கள். வெங்கடேசப் பெருமாள் எதற்காக இருக்கிறார் என்பதை பாருங்கள். ஐந்து ரூபாய் நோட்டு வாங்கிக் கொடுக்கவா இருக்கிறார்.

கை கால் பிடிப்பு வந்தால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள்.
புத்திக் கோளாறு ஏற்பட்டால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள்.
மலடிகள் அந்தக் கோவிலுக்குப் போய் வந்தால் பிள்ளை பிறக்கும் என்கிறார்கள்.
சொத்து இல்லாதவர்கள் அந்தக் கோயிலுக்குப் போய் வந்தால் அற வழியிலே சொத்துச் சம்பாதிக்கலாம் என்கிறார்கள்.

பக்தர்கள் பலமாதிரி அதைப் பற்றிச் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு தேவதையைக் கொண்டு வந்து 5 ரூபாய் நோட்டை அதன் பேரிலே வைத்தால்!

நான் இதைக் கூட எண்ணியிருப்பேன். 5 ரூபாயை எடுத்து விட்டு வெறும் வெங்கடேசப் பெருமாளைக் காட்டியிருந்தாலாவது, 'ஓ,  வெங்கடேசப் பெருமாளுக்கு மதிப்பு இருக்கிறது' என்று எண்ணுவேன். எனக்கு இப்பொழுது எதற்கு மதிப்பு என்றே தெரியவில்லை, 5 ரூபாய் நோட்டுக்கு மதிப்பா, வெங்கடேசப் பெருமாளுக்கு மதிப்பா, இந்த இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றின் மேல் வைக்கிறார்களே அது மதிப்பா என்று தெரியவில்லை. அதை விடக் கூடாநட்பா இது!

வெங்கடேச பெருமாள் படத்தின் பேரில் 5 ரூபாய் நோட்டை வைத்து வோட்டரிடத்திலே நீட்டுகிறீர்களே அதை விடக் கூடா நட்பா இது? இவர் என்ன வெங்கடேச பெருமாள், நான் மேலெடுத்த 5 ரூபாய் நோட்டா? இதைக்காட்டி உங்களுடைய வாக்குகளை நாங்கள் தட்டிப் பறிக்க விரும்புகிறோமா?

இதை எண்ணிப் பாருங்கள். ஆகையினால் அந்தப் பணத்தைத் தொடுவதற்கு கை கூச வேண்டும். அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு கண் கூச வேண்டும். அதைத் தொடுகிற போது இதயத்திலே இது வரையிலே இருந்த வந்த எல்லா நியாய உணர்ச்சியும் பொங்கி வழிய வேண்டும். அது வழியுமானால், அந்தப் பணம் பாவத்தின் சின்னம். அந்தப் பணம் உரிமைச் சீட்டைத் தட்டிப் பறிப்பதற்காக, ஊர்ச்சொத்தை அடித்து உலையிலே போடுகிறவர்கள் நமக்குத் தருகின்ற லஞ்சத் தொகை என்று கருத வேண்டும்.

நண்பர்களே அந்த 5 ரூபாய் நமக்கு எத்தனை காலத்துக்கு வரும்? நீங்கள் அருமையாகப் பெற்றெடுத்த ஒரு குழந்தைக்கு பட்டுச் சட்டைத் தைக்க வேண்டும் என்றால் கூட அந்த 5 ரூபாய் காணாது. ரெண்டு நாளைக்கு நிம்மதியாகச் சாப்பிடலாம். நாலு தடவை அந்த சாப்பிட்ட சந்தோஷத்திலே இருக்கலாம்.

அதற்குப் பிறகு நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்க்க வேண்டாமா? என்னுடைய முகத்தைப் பார்க்கிற நேரத்தில் ஐந்து ரூபாய்க்காகவா நமக்காக பாடுபட்ட ஒருவனுக்குக் கெடுதல் செய்தோம் என்று உங்கள் உள்ளம் உங்களை உறுத்தாதா? எண்ணிப்பாருங்கள்.

இல்லை, இவ்வளவுக்கும் பிறகு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று கருதினால் அதைச் சில பேர் செய்ததைப் போல திருப்பியாவது கொடுங்கள்.  அதிலே இருக்கிற அந்த பாவத்தைப் போக்கி நல்ல காரியத்துக்கு பயன்படுத்துவதற்கு நாங்கள் அதை உபயோகிக்கிறோம்.

இல்லை, இன்னும் கூட ஒன்று சொல்கிறேன். இதை அப்படியே எங்களிடத்திலே கொடுங்கள். அதற்குப் பிறகு யார் உங்களுக்குக் கொடுத்தார்களோ அதே காங்கிரஸ்காரர்களிடத்திலே  திருப்பித் தர நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த பாவ காசு கூட எனக்கு வேண்டாம்.

ஆனால் இதை நம்பி ஜனநாயகத்தைப் பாழாக்காதீர்கள்.

என் பேரிலே கோபம் யாருக்காவது இருந்தால் தனியாக கூப்பிட்டு நாலு வார்த்தை ஏசுங்கள். என் பேரிலே ரொம்ப அருவெறுப்பு இருந்தால் நான் ஒண்டிச் சண்டியாக வரும்போது அடித்துக் கூடப் போடுங்கள். ஆனால், நாட்டைப் பாழாக்காதீர்கள்.

நல்ல தருணம்! ஜனநாயகம் வளர்வதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் சாதாரண காசுக்காக மயங்கி ஜனநாயகம் வளர்வதற்கு நீங்கள் கேடு செய்யாதீர்கள் என்று பணிவன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

'உனக்கு என்ன இந்தக் காங்கிரசு ஆட்சியிடத்திலே இவ்வளவு பெரிய கோபம்' என்று யாராவது கேட்டீர்களானால் நான் சொல்லுவேன். காங்கிரசு என்ற கட்சியின் பேரிலே கூட அல்ல.

இடுப்பிலே நாம் கட்டுகிற வேட்டி வெள்ளையாகத்தான் எடுத்துக் கட்டிக் கொள்கிறோம். நடந்து போகிறபோது அந்த வேட்டி தானாக அவிழ்ந்து போய் குப்பைக் கூளத்தில் விழுவதில்லை. ஊரில் இருக்கிற குப்பை கூளம் எல்லாம் காற்றால் அடிக்கப்பட்டு வேட்டியில் ஒட்டிக் கொள்கிறது. ஒட்டிக் கொண்ட உடனே 'இது என்னுடைய வேட்டி, இந்த அழுக்கு எங்களூர் அழுக்கு, இருக்கட்டும்' என்றா சும்மா இருக்கிறோம்.

வெளுப்பவனை அழைத்து அதைக் களைந்து போடவில்லையா. வெளுத்துக் கொடுங்கள் என்று கேட்கவில்லையா.  அவன் அதை எடுத்துக் கொண்டு போய் ஆற்றுத் தண்ணீரில் அழுந்தத் தோய்த்து கற்பாறையில் ஓங்கித் துவைக்கிற போது பக்கத்திலே நின்று கொண்டு

'அப்பா அப்படி அடிக்காதே, அது ஆறே முக்கால் ரூபாய் வேட்டி,  நான் அருமையாக வாங்கியது அதை அந்த அடி அடிக்காதே' என்று சொன்னால், சொல்ல மாட்டோம், சொன்னால் வெளுப்பவன் என்ன சொல்லுவான் ,

'அய்யா நீ ஏற்றி வைத்திருக்கிற அழுக்கு இந்த அடிக்குக் கூடப் போகாது, இது இன்னமும் வெள்ளாவி வைத்து எடுத்தால்தான் அழுக்குப் போகும் போல இருக்கிறது. எண்ணைய் சிகண்டு ஏறி விட்டது' என்று அல்லவா சொல்லுவான்

அதே போல ராஜாஜி அவர்கள் காங்கிரசை கடுமையாகத் தாக்குகிறார் என்று நேரு பண்டிதரும் மற்றவர்களும், ''அய்யோ இந்த அடி அடிக்கிறாரே' என்றால், அதிலே இருக்கிற எண்ணைய் சிகண்டு அவருக்குத் தெரிகிறது, அடிக்கிறார். அவருக்கென்ன வேட்டியின் மீதிலா கோபம். எண்ணெய் ஜிகண்டின் பேரிலே கோபம்.

ஆனால் சிலபேர், வேட்டி அழுக்கானாலும் சுலபத்திலே எடுத்துப் போட மாட்டார்கள். மேற்பக்கத்தில் அழுக்கானால் உள்பக்கத்தில மடிப்பு வருமாறு கட்டிக் கொள்வார்கள், இடுப்புப்பக்கம் அழுக்கானால் கால்பக்கத்தைக் கட்டிக் கொள்வார்கள். கால்பக்கத்தில் அழுக்கானால் இடுப்புப் பக்கத்தில் கட்டுப் போடுவார்கள்.

'இது உனக்கு எப்படி இவ்வளவு விபரமாகத் தெரியும்' என்று நீங்கள் கேட்பீர்கள். எனக்கே அது பழக்கம்.
எனக்கு அந்தப் பழக்கம் ஏற்பட்டது என்னுடைய குருநாதர் அருள் பெரியார் ராமசாமிக்கு அந்தப் பழக்கம். ஆகையினால்தான் அந்த விஷயத்தை அவ்வளவு விபரமாக நான் சொல்லுகிறேன்.

அதைப் போல காங்கிரஸ் கட்சியுடைய ஆட்சி பூராவிலும் அழுக்கேறி விட்டிருக்கிறது.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அப்படியே இது இக்கால கழகத்திற்குப் பொருந்துவதுதான் வேடிக்கை..

என்ன 5 க்குப் பதில் 5000 ஆகி விட்டது..

கழக ஆட்சியின் நாடு கண்ட வளர்ச்சி !

suvanappiriyan சொன்னது…

பணம் வாங்கியவர்கள் அனைவரும் நேர்மையாக அதே கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பது என்ன நிச்சயம்? இது ஒன்றே வெற்றிக்கு ஒரு கட்சியை இட்டுச் செல்லும் என்று சொல்ல முடியாது. பார்ப்போம் முடிவுகள் எப்படி இருக்கிறது என்று.

மா சிவகுமார் சொன்னது…

@பெயரில்லா,
உண்மை. காங்கிரசு என்ற இடங்களில் திமுக என்றும், 5 என்ற இடங்களில் 500 என்றும் மாற்றிக் கொண்டால் இன்றைய நிலைமைக்கு அப்படியே பொருந்துகிறது.

@சுவனப்பிரியன்,
பணம் வாங்கியவர்களில் சில ஆயிரம் பேர் (2000 முதல் 3000 பேர்) வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக வாக்களித்தாலே முடிவைப் பாதித்து விட முடியும் என்பதுதான் கணக்கு.

அன்புடன்,
மா சிவகுமார்