வெள்ளி, ஜூலை 20, 2007

தொலைக்காட்சி நிகழ்ச்சி அனுபவங்கள்

பன்னிரண்டு மணி நிகழ்ச்சிக்கு பத்தரைக்கு வரச் சொல்லியிருந்தார்கள். சிறிது நேரமாவது என்ன பேசப் போகிறோம் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நான் ஆரம்பித்த திசையைப் பார்த்து நிகழ்ச்சி இயக்குநருக்கு உதறல் எடுத்து விட்டது. 'இது போலப் பேசினால் சி என் என் ஐபிஎன் பார்க்கிறவனுக்குத்தான் புரியும். நம்ம நிகழ்ச்சியில செங்கல் பட்டுக்கு அப்பால இருப்பவங்கதான் கேள்வி கேட்கப் போறாங்க. என் பையன் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கான், எப்படி வேலை கிடைக்கும், இப்படி நடைமுறைக் கேள்விகளாத்தான் இருக்கும்' என்று தரைக்கு இறக்கினார்.

இயக்குனர் கெட்டிக்காரத்தனமாக பொருளை அலசிக் கேள்விகளை தொகுப்பாளினிக்கு கோடி காட்டினார். தொகுப்பாளினி, ஆங்கிலத்தில் குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, வாக்கியங்களை ஒத்திகை பார்த்த வண்ணம் இருந்தார். நேரடி ஒளிபரப்பானதால் எங்கும் தடுமாறி விடக் கூடாது என்று கவனம்.

பதினொன்றரைக்கெல்லாம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகில் ஒப்பனை அறை. பான் கேக் என்று ஒன்றைத் தடவித் தடவி முகத்தை மினுமினுக்க முயன்றார் அந்த ஒப்பனையாளர். 'எல்லாம் அனுபவம்தான் சார், படிப்பெல்லாம் படிச்சி இந்த வேலை செய்ய முடியாது' என்று விளக்கம் கேட்டுக் கொண்டேன்.

தலையை அங்கும் இங்கும் நகர்த்த முடியாமல் ஒலிக் கருவி ஒரு காதில், சட்டை மேல் பொத்தானுக்கு அருகில் ஒலி வாங்கி. தொகுப்பாளினியைப் பார்த்து ஒரு படப் பெட்டி. நான் பார்க்க இன்னொரு திசையில் பெட்டி. ஒரு ஏழெட்டு பேர், மிகத் துல்லியமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய ஏற்பாடுகள். சலித்துப் போன முகத்தோடு எதிரில் ஒளிப் பதிவாளர். நிலையாக அமைக்கப்பட்ட கருவியை இயக்க வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் அதற்கான தயாரிப்புகள் திறன் தேவைப்படுவதாகத்தான் இருக்க வேண்டும்.

இன்னும் 10 நிமிடங்கள், எட்டு நிமிடங்கள், 40 விநாடிகள், இருபது விநாடிகள் என்று எண்ணிக் கொண்டே, ஆரம்ப வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டே இருந்தார் தொகுப்பாளினி. 'ஹலோ வியூவர்ஸ், வெல்கம் டு மெடுமிக்ஸ் ஹலோ ஜெயா டிவி. இந்த நிகழ்ச்சியில ஒவ்வொரு நாளும் பல்வேறு துறையைச் சேர்ந்தவங்க, அந்தத் துறை தொடர்பான உங்க கேள்விகளுக்கு விடை அளிக்கிறாங்க. அந்த வரிசையில இன்றைக்கு பிஎஸ்ஜி லெதர்லிங்க் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான திரு சிவகுமார் மென்பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் என்பதைக் குறித்து பேச இருக்கிறார், வாங்க சார்'

என்று அவர் கை கூப்ப நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்தது. அதற்கு முன்னரே தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தனவாம். ஒரு மணி நேரத்தில் தொகுப்பாளர் கேள்வி கேட்டு நான் பேச முடிந்தது சில நிமிடங்களே இருக்கும். வரிசையாக அழைப்புகள்.

'பிஎஸ்சி ஜூவாலஜி படிச்சிருக்கேன், எம்சிஏவும் படிச்சேன், அப்புறம் கல்யாணம் ஆகி, பேபியும் ஆனதாலே அஞ்சு வருஷம் கேப் விழுந்திருச்சி, என்ன செய்யலாம்'

'பிஎஸ்சி முடிச்ச பிறகு எம்பிஏ பண்ணலாமா, எம்சிஏ பண்ணலாமா, எதுக்கு வேல்யூ அதிகம்?'

'மெக்கானிக்கல் பிஈ முடிச்சிருக்கேன். ஆட்டோ கேட் கோர்ஸ் பண்ணியிருக்கேன். வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்?'

'எம் மக பிசிஏ படிச்சிட்டிருக்கா, அதுக்கப்புறம் எம்சிஏவும் படிக்கலாமா?'

'நான் பிஈ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன். அடுத்தது சி, சி++ கோர்ஸ் பண்ணலாமா?'

'பிளஸ் 2 முடிச்சிருக்கேன். பிஈ ஐடி நல்லதா, கம்பியூட்டர் சைன்ஸ் நல்லதா'

'கால் சென்டரில வேல பார்க்கிறேன். சாப்ட்வேரில மாறணும் அதுக்கு என்ன கோர்ஸ் படிக்கலாம்?'

'எம்பெடட்டட் கோர்ஸ் பண்ணலாம்னு பார்க்கிறேன். அதுக்கு மதிப்பு இருக்கா?'

என்று அடிப்படையான கேள்விகள். கப்பலில் ஏறி விட வழி என்ன என்று, உயிரியல் படித்தவர்களிலிருந்து. பொறியியல் படித்தவர்களிலிருந்து, ஐந்தாறு ஆண்டுகள் வேலை அனுபவம் இருப்பவர்கள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

தொழில் வாய்ப்பு என்றுதான் பேச ஆசை. இயக்குனர் சொன்னது போல வேலை வாய்ப்புளுக்குத்தான் கேள்விகள் அதிகம். தொழில் வாய்ப்பு என்று தலைப்புக் கொடுத்திருந்தால் தொழில் குறித்துக் கேட்பவர்களுக்கு இணைப்புக் கிடைத்திருக்கும்.

இடையில் இரண்டு வணிக இடைவேளைகள். ஒன்றரை நிமிடங்கள். தண்ணீர் குடித்து தொண்டையை நனைத்துக் கொள்ளத்தான் நேரம் சரியாக இருந்தது.

பேச மறந்தது நிறைய இருந்தது. நிறுவன வளம் திட்டமிடல் மென்பொருட்கள் குறித்து, திறவூற்று மென்பொருட்கள் குறித்து, நமது மென் பொருள் தேவைகளைக் குறித்து, தமிழ்க்கணிமை குறித்து என்று செல்லப் பொருட்களை ஆரம்பித்து வளர்க்க இடமே கிடைக்கவில்லை. காலையில் எழுதிப் பார்த்திருந்த கருத்துக்கள் ஏதோ ஒரு வடிவில் நுழைந்து கொண்டன. கேள்விகள் கேட்டு உடனேயே புரிந்த வரை பதில் சொல்லி விட்டு அது சரியா தவறா என்று மதிப்பெண் தெரியாமலேயே அடுத்த கேள்வி என்று நகர்ந்து கொண்டே இருந்தது.

கூடுமான வரை தமிழிலேயே பேசியது நன்றாக இருந்தது என்று அப்புறம் கருத்து சொன்ன இரண்டு நண்பர்கள் குறிப்பிட்டார்கள். பல இடங்களில் ஆங்கிலத்திலேயே நின்று விட்ட உணர்வு எனக்கு இருந்தது. இன்றைக்கு இருக்கும் நடப்பில் அந்த அளவு தமிழில் பேசுவதே குறிப்பிடும்படியாகப் போய் விட்டது.

அலுவலக நண்பர்களே மேல் வீட்டில் கூடி தொலைக்காட்சித் திரையிலிருந்து படக்கருவியால் பிடித்து வைத்திருந்தார்கள். நான்கைந்து கோப்புகளாக 2ஜிபி அளவுக்கு இருந்தது. படத்தில் திரையில் பட்டை பட்டையாக ஓடுகிறது. ஒலி நன்றாக பதிந்திருக்கிறது. அதைப்பார்த்து பேச்சை உரையாக மாற்றவும் முயற்சிக்கலாம்.

25 கருத்துகள்:

MSATHIA சொன்னது…

வாழ்த்துக்கள் சிவா!!!
நிகழ்ச்சியை பார்க்க வாய்க்கவில்லை. உங்களிடமிருந்து உபயோகமான விவரங்களே நேயர்களுக்கு கிடைத்திருக்கும்.

சிவபாலன் சொன்னது…

மிக அழகாக சொல்லியிருக்கீங்க..

வாழ்த்துக்கள்!

வடுவூர் குமார் சொன்னது…

என்னது யாரும் ரெக்கார்ட் பண்ணவில்லையா?
கேட்கவே சோகமாக இருக்கு.வீடியோ கேமரா மூலம் செய்தால் அவ்வளவு சரியாக வராது.
தொலைக்காட்சி நிறுவனத்திடமே கேட்கமுடியாதா?
மனைவியிடம் சொல்லி ரெக்கார்ட் பண்ணச்சொன்னேன்,என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.அப்படி இருந்தால் சொல்கிறேன்.அவுங்களுக்கு இந்த DVD யில் இருந்து MPEG க்கு மாற்றுவதெல்லாம் அவ்வளவாக தெரியாது.:-))

துளசி கோபால் சொன்னது…

நிகழ்ச்சியை எப்படியாவது வலையில் ஏத்துங்கப்பா யாராவது.
ஆர்வம் அதிகமாகுது.

வெற்றி சொன்னது…

வாழ்த்துக்கள் சிவகுமார்.
நிகழ்ச்சியை ஒளிவடிவில் இணையத்தில் பதிவிடுங்கள். எல்லோரும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

ILA (a) இளா சொன்னது…

வாழ்த்துக்கள் சிவா!!

Sridhar Narayanan சொன்னது…

//கூடுமான வரை தமிழிலேயே பேசியது நன்றாக இருந்தது //

தமிழில் பேசியது மட்டுமல்லாமல், அதை இயல்பாக பேசினீர்கள் என்பதுதான் சிறப்பு.

//தலையை அங்கும் இங்கும் நகர்த்த முடியாமல் //

அதனால்தான் அப்படி இறுக்கமாக உட்கார்ந்திருந்தீர்களோ என்னவோ :-))

இப்படிப்பட்ட உபயோகமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள்.

Voice on Wings சொன்னது…

வாழ்த்துக்கள், சிவக்குமார்.

//கப்பலில் ஏறி விட வழி என்ன என்று, உயிரியல் படித்தவர்களிலிருந்து. பொறியியல் படித்தவர்களிலிருந்து, ஐந்தாறு ஆண்டுகள் வேலை அனுபவம் இருப்பவர்கள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.//

கசப்பான உண்மை.

Jay சொன்னது…

வாழ்துக்கள் சிவகுமார் சார்,
பிரொகராம் நல்லா இருந்துது.்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள். மா.சி.
கணிணி துறை,தமிழ் இணையம், கணிணி சார் சுய தொழில்/ வேலை வாய்ப்பு இவற்றை எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உங்களுடைய லட்சியத்திற்கு(சரிதானே?), இது முதல் படி.
மென்மேலும் உயர்வீர்கள்!

-விபின்

முரளிகண்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்.தொடர்ந்து இது போல் சமுதாயத்துக்கு பயனான காரியங்களில் ஈடுபடுங்கள்

Mugundan | முகுந்தன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி,சிவகுமார்.

உங்களின் இனிய மக்கள் பணி
தொடர விழையும்,

அன்பன்,
கடலூர் முகு

aynthinai சொன்னது…

"வாழ்த்துக்கள். மா.சி.
கணிணி துறை,தமிழ் இணையம், கணிணி சார் சுய தொழில்/ வேலை வாய்ப்பு இவற்றை எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உங்களுடைய லட்சியத்திற்கு(சரிதானே?), இது முதல் படி.
மென்மேலும் உயர்வீர்கள்! "
As I Not yet started the Tamil Typing, i m just seconding Mr.Vipin's commend.
Vivek. Trivandrum

வவ்வால் சொன்னது…

மா.சி,

தொ.கா நிகழ்ச்சி பார்க்கவில்லை ஆனாலும் தங்களின் இந்த நிகழ்ச்சி சுருக்கம் அதை ஈடுகட்டியது ... வாழ்த்துகள், யாராவது பதிவிட்டால் பார்க்கலாம்!

லக்ஷ்மி சொன்னது…

வாழ்த்துக்கள் சிவகுமார் சார்.

இளங்கோ-டிசே சொன்னது…

ஆக்கபூர்வமான முயற்சி. பகிர்ந்தமைக்கு நன்றி சிவகுமார்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சத்தியா,

//உபயோகமான விவரங்களே நேயர்களுக்கு கிடைத்திருக்கும்.//

கேட்பவர்களின் தேவை ஒரு வட்டத்துக்குள்ளேயே இருந்தது.

//வாழ்த்துக்கள்//

நன்றி சிவபாலன்,

நினைவில் பல விஷயங்கள் தங்கவேயில்லை. இன்னும் ஒரு முறை பதிவு செய்ததைப் பார்த்தால் நினைவு வருமோ என்னவோ.

//மனைவியிடம் சொல்லி ரெக்கார்ட் பண்ணச்சொன்னேன்,//
வாங்க குமார்,

தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் ஆரம்பத்திலேயே கேட்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். உங்க மனைவி பதிவு செய்திருந்தால் நான் தொடர்பு கொண்டு கேட்கிறேன்.

//ஆர்வம் அதிகமாகுது.//
துளசி அக்கா,
இங்கு எழுதுவதுதான் பேசியதும் :-)

//நிகழ்ச்சியை ஒளிவடிவில் இணையத்தில் பதிவிடுங்கள். //
முயற்சிக்கிறேன் வெற்றி. என்னிடம் இருக்கும் பதிவு அளவும் பெரிது தரமும் சரியில்லை.

நன்றி இளா, ஸ்ரீதர்!

===
//கப்பலில் ஏறி விட வழி என்ன என்று, உயிரியல் படித்தவர்களிலிருந்து. பொறியியல் படித்தவர்களிலிருந்து, ஐந்தாறு ஆண்டுகள் வேலை அனுபவம் இருப்பவர்கள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.//
கசப்பான உண்மை.
=====
கடலில் தத்தளிக்கும் நிலைமை உண்மையிலேயே கசப்பானதுதான், VOW.

//பிரொகராம் நல்லா இருந்துது.//
நன்றி ஜெய்

//எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உங்களுடைய லட்சியத்திற்கு(சரிதானே?),//
அது மட்டுமில்லை, விபின். எல்லாமே :-). நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொண்டால் குறைந்து விடாது என்பதுதான் அடிப்படை இல்லையா!

முரளி, முகு!
நாம் ஒவ்வொருவரும் நேர்மையாகச் செயல்படுவதுதான் சமூக மேம்பாட்டுக்கு ஒரே வழி என்பது நம்பிக்கை.

//i m just seconding Mr.Vipin's commend.//
வாங்க விவேக்.
உங்கள் தமிழ் ஆக்கங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி வவ்வால், லக்ஷ்மி, டிசே தமிழன்.

அன்புடன்,
மா சிவகுமார்

மருதநாயகம் சொன்னது…

YouTubeல் ஏற்றினால் நாங்களும் பார்த்து பயனடைவோம்

மயிலாடுதுறை சிவா சொன்னது…

பாராட்டுக்கள் மா சி

நல்ல விசயம் மற்றும் நல்ல அனுபவம்.

தொடரட்டும் உங்கள் முயற்சி...

மயிலாடுதுறை சிவா...

ராஜ நடராஜன் சொன்னது…

வாழ்த்துக்கள் சிவா...இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அதிகம் வந்தால் நான் மீண்டும் தொ(ல்)லைக் காட்சிக்கு மாறப் போகிறேன்.

Thangamani சொன்னது…

நல்ல பயனளிக்கும் விதமான நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் அய்யமில்லை. கூடுமானவரை தமிழில் கொடுத்தமைக்கும், பார்வையாளர்களின் தேவையை ஒட்டி சென்றமைக்கும் நன்றி!

சீமாச்சு.. சொன்னது…

மா.சி,
வாழ்த்துகள். இப்பதான் உங்க கம்பெனி வெப் சைட்டைத் தேடி பிடித்து பார்த்தேன்.

நாம் சந்தித்த அந்த சில நிமிடங்களில் உங்கள் தொழில் முயற்சிகள் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம்.. அடுத்த முறை சந்திக்கும் போதாவது நாம் விரிவாகப் பேச வேண்டும்.

முயற்சிகள் வெற்றிபெற நல்லெண்ணங்கள் !!

அன்புடன்,
சீமாச்சு

மா சிவகுமார் சொன்னது…

மருதநாயகம்,
//YouTubeல் ஏற்றினால்//
எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

வாழ்த்துக்களுக்கு நன்றி மயிலாடுதுறை சிவா.

நட்டு,
//இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அதிகம் வந்தால் நான் மீண்டும் தொ(ல்)லைக் காட்சிக்கு மாறப் போகிறேன்.//
அடடா, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போது இந்தக் கோணமும் தோன்றியது :-). தொல்லைக் காட்சி என்று சாடி விட்டு அதிலேயே கலந்து கொள்கிறோமே என்று!

வணக்கம் சீமாச்சு,

httP:://www.leatherlink.net தானே பார்த்தீங்க? அடுத்த முறை இன்னும் விபரமாகப் பேசலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

இனிய திரு.சிவகுமார் அவர்களுக்கு வணக்கம்,
உங்கள் பதிவில் நிகழ்ச்சியைப் பற்றி அறிந்ததும்...அடுத்த நாள் ஒரு மணிநேரம் ஒதுக்கி முழு நிகழ்ச்சியையும் கண்டேன்...நிறைவாக இருந்தது.

பின்குறிப்பு: போட்டோவில் இருப்பதை விட தொலைக்காட்சியில் நன்றதாகத்தான் இருந்தீர்கள்...சினிமாவில் ஏதாச்சும் சான்சு கிடைச்சா சொல்லுங்க....

மா சிவகுமார் சொன்னது…

நன்றி பிரதாப்,

சினிமா வாய்ப்பு உங்களுக்குத்தானே?

அன்புடன்,

மா சிவகுமார்