வெள்ளி, ஜூலை 13, 2007

தலைக்கவசம்

ஐந்து ஆண்டு முன்பு வண்டி வாங்கியதிலிருந்தே தலைக்கவசம் வாங்கும் எண்ணம் அவ்வப்போது வரும். ஓரிரு கடைகளில் போய்ப் பார்த்தாலும் நிறைவாகக் கிடைக்கவில்லை. அப்படி விடாப்பிடியாக வாங்கி விட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

அப்புறம் படிப்படியாக, 'கவசம் போடாமல் ஓட்டுவதுதான் சிறந்தது' என்று கற்பித்துக் கொண்டேன். பணப்புழக்கங்கள் குறைந்த பிறகு வாங்கும் எண்ணமே தொலைந்து போனது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவு, அரசு அறிவிப்பு என்ற வந்ததும் வீம்பு வந்து விட்டது. 'யார் நம்மை கட்டாயப்படுத்துவது' என்ற வாங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே போனேன். இன்னொரு பக்கம் இந்த அறிவிப்பால் கடைகளில் தேவை அதிகரித்த செயற்கையான சூழலில் மாட்டிக் கொள்ளவும் கடுப்பாக இருந்தது.

அலுவலகத்தில் எல்லோரும் சேர்ந்து வாங்கிய போதும் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி சோம்பலாகவே ஓடி நாளும் வந்து விட்டிருந்தது. ஜூன் 1 அன்று ஊரில் இல்லை. அடுத்த நாள் வண்டியை வெளியில் எடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.

ஜூன் 2 அன்று திருவான்மியூருக்குப் போக வண்டி தேவைப்பட்டது. வாங்க முடிவு செய்து பகிர்வூர்தியில் ஏறி பிக் பஜார் அருகில் இறங்கி சாலையைக் கடக்கப் போகும் போது நண்பரிடமிருந்து தொலைபேசி. 'தலைக்கவசம் கட்டாயம் இல்லை' என்று முதல்வர் அறிவித்து விட்டாராம். வாங்காமலேயே திரும்பி வண்டியை எடுத்துக் கொண்டு திருவான்மியூர். பின்னர்தான், 'பிடித்து அபராதம் விதிக்கா விட்டாலும், சட்டம் இருக்கத்தான் செய்கிறது' என்று புரிந்தது.

'தலைக்கவசம் தவறாமல் அணிவதன் மூலம் சட்டத்தை மதிக்கிறேன் என்ற பெருமை எனக்கு உண்டு' என்று ஒரு பெண் டெக்கான் குரோனிக்கிள் ஆசிரியர் கடிதம் பகுதியில் எழுதியிருந்தார்.

எல்லா சட்டங்களையும் கடைப்பிடிப்பது கடமை. ஏற்றுக் கொள்ளா விட்டால் சட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். அது இல்லை என்றால் சட்டத்தை மீறி விட்டு அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். சட்ட மீறலை வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி செய்ய வேண்டும். மாட்டிக் கொள்ளாதது வரை உத்தமன் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுதல்.

'சில சட்டங்களைப் பின்பற்றுவேன், சிலவற்றை பின்பற்ற மாட்டேன்' என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஆனாலும் 15 நாட்களாக தலைக் கவசம் அணியாமலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். மாமா ஒருவர் தொலைபேசி, புதிதாக ஆரம்பித்திருந்த நிறுவனம் குறித்துப் பேசக் கூப்பிட்டார்கள். 'இன்னும் தலைக்கவசம் வாங்கவில்லையா' என்று கண்டிக்கக் கூடியவர். அதனாலேயே உடனேயே வாங்கி விடுவோம் என்று அதே பிக் பஜாருக்குப் போய் விட்டேன்.

காலையில் நாளிதழில் ' இரு சக்கர வண்டியிலேயே காரில் போகும் வசதியை உணர்கிறேன் ' என்ற கடிதம் ஒன்றும் கவர்ந்தது. தூசி, சத்தங்கள் தொல்லை இல்லாமல் வண்டி ஓட்டலாம்.

கட்டாயக் கெடுபிடிகள் இல்லாததால் விற்பனை நெருக்கடியும் குறைந்திருக்கும் என்று தோன்றியது. இந்தக் கடைக்கு முதன் முதலில் வருகிறேன். பெரிய மெகா மார்ட் பாணிதான். முன் பக்கத்திலேயே தலைக்கவசங்களைக் குவித்து வைத்திருந்தார்கள். அங்கு விசாரிக்க அடுத்த பகுதியில் கைக்கடிகாரம் விற்கும் பகுதிக்கு அனுப்பினார்கள். வெளிர் நிறமாக வாங்க வேண்டும் என்று பார்த்து கடும் நிறத்தில்தான் சரியான அளவு கிடைத்தது. வெளிர் நிற வெளிப்புறம் வெப்பத்தை எதிரொளித்து சூடாவதைக் குறைக்கும். கறுப்புப் பிடித்து வைத்துக் கொள்ளும் என்று காரணம்.

தலைக் கவசம் அணிந்திருப்பதால் பல வசதிகள். சில தொந்தரவுகள். தொலைபேசி அடித்தால் எடுத்துப் பேச முடியாது. யாரிடமாவது வழி கேட்க உரக்கப் பேச வேண்டியிருக்கிறது. நம் மூச்சுக் காற்றே நம் முகத்தைச் சுடும்.

வசதிகள், தூசித் தொல்லை பாதிக்காது. அரை மணி நேரம் சுற்றி விட்டு வந்து முகத்தைத் துடைத்தால் அப்பியிருக்கும் அழுக்கு இளிக்கும் காட்சியைத் தவிர்த்து விடலாம். வாகனங்களின் ஓசை பாதியாகக் குறைந்து விடுகிறது. வெகு தூரப் பயணங்களில் காற்று அறைந்து ஏற்படும் சோர்வும் குறைந்து விடுகிறது.

6 கருத்துகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

எண்ணங்களை எழுதுகிறேனில் வந்திருக்க வேண்டுமோ? ;)

பெயரில்லா சொன்னது…

கடேசில இன்னாதாம்பா சொல்றே.. போடுங்குறியா.. போடாதங்குறியா..? ஒண்ணும் புர்யலே..

பொன்ஸ்~~Poorna சொன்னது…

அனானி,
இந்தப் பதிவில், இதற்கு முந்தைய இடுகையின் தலைப்பைப் பார்த்தால் புரிந்துவிடக் கூடும் ;-)

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

//எண்ணங்களை எழுதுகிறேனில் வந்திருக்க வேண்டுமோ? ;)//

அதிலிருந்து வெட்டிப் போட்டதுதான். அவ்வப்போது சில பகுதிகள் அப்படிச் செய்வது உண்டு. இது இங்கு அவ்வளவு ஒட்டவில்லைதான்.

//இந்தப் பதிவில், இதற்கு முந்தைய இடுகையின் தலைப்பைப் பார்த்தால //

பின் நவீனத்துவம் கூட ஆரம்பித்து விட்டேனா...

அனானி,

//போடுங்குறியா.. போடாதங்குறியா..? ஒண்ணும் புர்யலே..//

போடுங்கறேன். விபத்தே நடக்கா விட்டாலும், தினமும் கிடைக்கும் பலன்களே போடுவதை நியாயப்படுத்தி விடும்.
அன்புடன்,

மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

தலைக்கவசம் கட்டாயம் போடணும். வண்டி ஓட்டும்போது வரும் செல்பேசி அழைப்புகளைத்
தவிர்க்கமுடியும் என்பதும் ஒரு முக்கிய காரணம்:-))))

மா சிவகுமார் சொன்னது…

//தலைக்கவசம் கட்டாயம் போடணும். வண்டி ஓட்டும்போது வரும் செல்பேசி அழைப்புகளைத் தவிர்க்கமுடியும் என்பதும் ஒரு முக்கிய காரணம்:-))))//

ஆமாமா, ஆனா நம்ம மக்கள் எப்படியெல்லாம் வண்டி ஓட்டிக் கொண்டே பேசுகிறாங்க என்று பார்க்கும் போது இதற்கும் ஏதாவது வழி கண்டு பிடிச்சுருவாங்கன்னு தோணுது.

அன்புடன்,

மா சிவகுமார்