சனி, ஜனவரி 03, 2009

கட்சிகளும் விடியலும்

திருமங்கலம் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஒரு வாக்காளருக்கு 1000 ரூபாய் என்று கொடுத்து விலைக்கு வாங்கும் அளவுக்கு பணநாயகம் வளர்ந்து விட்டிருக்கிறது. திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு மக்களாட்சியின் குரல்வளையை நெரிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

திருதராஷ்டிரன் இறுதிக் காலத்தில் சரியான வழிப்படி நடக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவரது இளமைக் காலத்தின் குணங்களின் குடியிருப்பாக துரியோதனாதிகள் பாரதப் போர் வரை கொண்டு வந்து விட்டார்கள். கலைஞருக்கு இந்த ஆட்சிக் காலத்தின் போது அவரால் தடுக்க முடியும் செயல்கள் குறைவாகவே இருக்கின்றன. அழகிரி மனது வைத்து விட்டால், அவரை தடுத்து நிறுத்த தமிழகத்தின் எந்த சக்தியாலும் முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

கட்சியிலோ ஆட்சியிலோ எந்த முக்கியப் பொறுப்பும் வகிக்காமலேயே, அரசு நிர்வாகத்தையும், கட்சி அமைப்புகளையும் ஆட்டிப் படைக்கும் குண்டராக திகழ்கிறார் அவர். முதலமைச்சருக்கு அவரிடம் இருக்கும் பயத்தையும் பாசத்தையும் உணர்ந்துள்ள அதிகாரிகளும் கட்சி உறுப்பினர்களும் அவரது மாஃபியாதனமான நடவடிக்கைகளுக்கு பணிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு மறுபக்கத்தில் ஆணவத்தின் மொத்த உருவமாக செயலலிதா. மக்களாட்சியின் நெஞ்சில் மிதித்து கொன்று புதைத்த கல்லறையின் மீதுதான் இவர் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். திமுகவில் நடக்கும் உட்கட்சி தேர்தல்கள், கட்சி அமைப்புகளை மதிக்கும் பண்பு, தமிழர் நலனுக்கு சிந்திப்பது, நிர்வாகத்தில் செயல் திறன் என்ற நல்ல போக்குகளையெல்லாம் கழித்து விட்டுப் பார்த்தால் கிடைப்பது அதிமுக. கலைஞர் குடும்ப அரசியல் நடத்துகிறார் என்றால் இவர் நடத்துவது அரசியலே இல்லை.

திருமங்கலத்தில் இரண்டு கட்சிக் குண்டர்களும் அடித்துக் கொண்டது போல தமிழகமெங்கும் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அப்படி அடிதடியில் இறங்கக் கூடியவர்களை களை எடுத்து விடுவது சமூகத்துக்கு மிகவும் நல்லது.

இவர்களுக்கும் மாற்றாக விசயகாந்து என்று நினைக்கும் போது வயிற்றைக் கலக்குகிறது. எல்லோரையும் கழித்துக் கட்டி விட்டு மூலையில் உட்காரவா முடியும் என்று விசனம் ஏற்படத்தான் செய்தாலும், விசயகாந்தை முதலமைச்சராக நினைத்துப் பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், திருமங்கலம் இடைத்தேர்தலில் தேமுதிமுகவுக்கு வெற்றி கிடைத்தால் மற்ற இரண்டு கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணி அடித்ததாக இருக்கும். அது நடக்க வேண்டும் என்று ஆசை. நடந்தும் விடுமோ! விருத்தாச்சலத்தில் பாமகவின் தகிடுதத்தங்களுக்கு இடையேயே வெற்றி பெற்றுக் காட்டிய விசயகாந்து மீண்டும் ஒரு தொகுதி அற்புதத்தை நடத்தினாலும் நடத்தி விடுவார்.

2011ல் தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவும், பொதுவுடமை கட்சிகளும், பாமகவும், சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்பட்டால் தமிழ் சமூகத்துக்கு திருந்துவதற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்கலாம்.

திமுக 30, அதிமுக 20, தேமுதிக 70, பொதுவுடமை கட்சிகள் 30, பாமக 30 இருந்தால் அந்த சமன்பாடு சாத்தியமாகலாம். ஈழத்தமிழருக்கு ஆதரவு, ஊழலை ஒழிக்க உறுதி, மது விலக்கு கொண்டு வர தீவிரம், தொழிலாளர் நலன், சமத்துவ கொள்கைகளுக்கு ஆதரவு என்று கிட்டத்தட்ட ஒரு கனவு ஆட்சி தமிழகத்துக்குக் கிடைத்து விடும்.

தமிழகமெங்கும் திமுக அதிமுகவைச் சேர்ந்து குண்டர்களின் போட்டி வியாபாரக் களமாகி விட்டிருக்கிறது. அடாவடி நடவடிக்கைகளால் கோடிக்கணக்கான சொத்துக்களைக் குவித்து வைத்துக் கொண்டு அடாவடி அரசியல் செய்த இந்த இரு கூட்டத்தினரின் 20 ஆண்டு கால நச்சு அரசியலின் வீரியத்தை இறக்குவதற்கு உறுதியான, மக்கள் ஆதரவு பெற்ற அரசு ஒன்று வேண்டும்.

இந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுவுடமைக் கட்சியினர், மாயாவதியின் பிஎஃச்பி, சந்திரபாபு நாயுடுவின் தெலுகுதேசம், தமிழ்நாட்டிலிருந்து தேமுதிக, பாமக, பீகாரில் ராம்விலாச் பாசுவான், ஒரிசாவில் நவீன் பட்னாயக், ஜம்மு காசுமீரில் தேசிய மாநாட்டுக் கட்சி என்று அவியலாக ஒரு மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது பாரதீய ஜனதாவின் இந்திய தேசிய நலனுக்கு விரோத அரசியலுக்கும், காங்கிரசு கட்சியின் மனுவாத அரசியலுக்கும் மாற்றாக அமையும். எப்படியாவது இரண்டு கட்சி முறை வந்து விட வேண்டும் என்று சோ போன்றவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அவரது கட்சிக்கு ஒரு காலாவது இருக்கும் என்று ஒரு நப்பாசை.

சில கோடி ரூபாய்கள், கணக்கில் காட்ட முடியாமல் வைத்திருந்தது கட்சி அலுவலகத்திலிருந்து களவு போய் விட்டதாம். அதன் மீது வருமானவரித்துறை ஏன் விசாரணை ஆரம்பிக்கவில்லை? போன நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கத்தை கத்தையாக நோட்டுக்களை நாடாளுமன்றத்தில் விசிறியடித்த உறுப்பினர்களின் மீது என்ன விசாரணை நடத்தப்பட்டது?

பாஜகவின் பிரிவினை அரசியலை மக்கள் நிராகரித்து விடுவார்கள் அல்லது அப்படி நிராகரிப்பதுதான் நமக்கு நல்லது என்று தோன்றுகிறது. இந்தியாவில் இந்த கட்சி வேரழிந்து போக வேண்டும். காங்கிரசு கட்சி சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் பச்சோந்தி. அரசியல் சூழல் மாறினால் அதிகம் ஊறு செய்யாத ஒரு பிராணியாக அதுவும் இருந்து விட்டுப் போகும் நிலை ஏற்படலாம்

கருத்துகள் இல்லை: