'எதற்காக இவ்வளவு ஓட்டங்கள்'. வெறும் உடலியல் இயற்கையை மட்டும் வைத்துப் பார்த்தால் உலகில் பெண்களுக்கு ஆண் விகிதம் குறைவாகவே போதுமானது. எதிர்மறையாக ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற விகிதாச்சாரத்தை விட பெண்களின் எண்ணிக்கைக் குறைந்தே காணப்படுகிறது.
அடிப்படை உணர்வுகள் என்னென்ன?
ஒரு ஆணுக்குப் பெண்ணைக் கண்டதும் ஏற்படும் இச்சை
பெண்ணுக்கு ஆணைக் கண்டதும் ஏற்படும் ஆசை
வயிற்றுப் பசி
குழந்தைகள் மீது ஏற்படும் பாசம்
சக மனிதன் துன்புறும் போது ஏற்படும் துடிப்பு
பிற உயிர்கள் மீது ஏற்படும் அன்பு
மேலும் மேலும் மேம்பட வேண்டும் என்ற ஓட்டம்
இறவா வரம் வேண்டும் என்ற உள்ளுணர்வு
இவை எல்லாம் மனிதர்களை வரையறுக்கின்றன. தாய் குழந்தையைப் பெறுவதற்கு என்ன உந்துதல். நாய் குட்டி போடுவதற்கு இருக்கும் உந்துதலுக்கும் அதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? வயது அதிகமாகும் போது தோல் சுருங்கி, நினைவு தடுமாறி இறந்து போகும் போது நமது எச்சங்களை பெருமைப்படுத்துவதற்கு என்று சந்ததியினர் இருக்கிறார்கள் என்ற நிறைவுக்கு மட்டும்தானா அது?
உயிர்ப்பொருட்களை உருவாக்கிக் கொள்வதுதான் நமது அடிப்படை உந்துதல். சூரியனின் ஆற்றலைப் பிடித்து சர்க்கரைப் பொருளாக மாற்றி வைத்துக் கொள்கின்றன தாவரங்கள். ஆற்றல் உயிர்ப்பொருளாக மாறியிருக்கிறது. அந்த சர்க்கரைப் பொருளை சாப்பிட்டு தனது உடலை வளர்த்துக் கொள்கின்றன மற்ற விலங்குகள். அதில் சர்க்கரையை விட சிக்கலான மூலக்கூறுகளுடன் எலும்பும், தசையும், நரம்பும் வளர்கின்றன. மிக எளிதான உயிரினங்களிலிருந்து மிகவும் சிக்கலான உயிர்ப்பொருட்கள் உருவாகும் பரிணாம வளர்ச்சிதான் அடிப்படை உந்துதல்.
சிக்கலான உயிரினங்கள் உருவாவதன் தேவை என்ன? ஆற்றலை உயிர்ப்பொருளாக மாற்றிக் கொண்டு விட்டால் அப்படி உருவாக்கப்பட்ட சிக்கலான உயிரினங்கள் செய்ய முடியும் சாதனைகளின் சாத்தியங்கள் அதிகமாகிக் கொண்டே போகும். மேட்ரிக்சு படத்தில் மிகவும் உயர் நிலையில் இருக்கும் உயிரினங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் வெளிப்படும் ஆற்றலை தமது தேவைக்காக எடுத்துக் கொள்கின்றார்கள். அதற்காக மனித உலகை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று காண்பிப்பார்கள். அது போலத்தானே நாமும் தாவரங்களையும் பிற விலங்குகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
உயிர் நிலையை பெருகச் செய்யும் எல்லாவற்றையும் ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நிறைய சாப்பாடு போட்டு கொழுகொழுவென்று வளர்த்தால் மட்டும் போதாது, அந்த வளர்ப்பை இன்னும் சிறப்பாகச் செய்ய புற உலகின் வளங்களை இன்னும் சிறப்பாக எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்தித்து அதை மாற்றிக் கொடுப்பதற்கான பங்களிப்பும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பெண்களிடம் இயல்பாக அமைவது போல புற உலக மேம்பாட்டுகளுக்கான உடல் அமைப்புகள், மூளைத் தூண்டுதல்கள், உள்ளப்போக்குகள் ஆண்களுக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது
'இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை' என்று பாடலில் வரும். ஆணும் பெண்ணும் இணைய வேண்டும், சேர்ந்து வாழ வேண்டும் என்ற உந்துதல் அடிப்படை உண்மை. அதில் இருக்கும் ஆதாயங்கள் ஆணுக்கும் புரிகிறது, பெண்ணுக்கும் புரிகிறது.
பெண்கள் உடலுழைப்பு செய்ய முடியாது என்று ஒரு இடத்தில் எழுதிய போது, 'பெண் பலவீனமாவள், அதனால் உழைக்க முடியாது என்றல்லவா சொல்கிறார்' என்று ஒரு சகோதரி பதில் எழுதியிருந்தார். உடலுழைப்பு என்பது பலம் என்று வைத்துக் கொண்டால் எருமை மாடும் கழுதைகளும்தான் உலகிலேயே பலசாலிகள். அதனால் நாமெல்லாம் பலவீனமானவர்கள் என்று நினைத்து வருந்த வேண்டுமா!
5 கருத்துகள்:
கடைசி வரி.. நச்.
வாழ்கையின் அர்தத்தை தேடினால், தேடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். 'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற முறையில் வாழ முடிந்தால்/முயற்சித்தால் போதும்.
உடலுழைப்பை விடுங்க. மூளை உழைப்பு ரெண்டு பேருக்கும் சரியான அளவில் இருக்குதானே?
ஆம். நானும் சிந்தித்திருக்கிறேன்... நமது எச்சங்களை நாம் ஏதாவது ஒருவகையில் விட்டுச் செல்லவே விரும்புகிறோம். குறைந்தபட்சம் அல்லது அதிகபட்சம் குழந்தைகள் வடிவிலாவது. இந்த உலகத்தை நீங்குவது குறித்த பயம் அது. அதுவே ஒருவகையில் சுயமோகமாகத்தான் இருக்கிறது. அழிவற்ற வாழ்வு.. அது பெருங்கனவு.
நன்றி வடுவூர் குமார்.
அன்புமணி,
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்'
என்று வாழ வேண்டும் என்று நினைக்க வைத்தது எது என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன் :-)
துளசி அக்கா,
உடலுழைப்பும் சரி, மூளை உழைப்பும் சரி ரெண்டு பேருக்குமே ஒரே அளவில்தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அதன் வெளிப்பாடுகள்தான் வேறு வேறு.
'ஒரு மாதிரியான வெளிப்பாடு இன்னொன்றை விட உசத்தி' என்று கருதப்படும்போதுதான் சிக்கல் வருகிறது.
தமிழ்நதி,
எச்சங்களை விட்டுப் போவது என்பது ஒரு ஆறுதலாகத்தானே இருக்கிறது! 'போகவே விருப்பமில்லை' என்பதுதான் அடிப்படை உணர்வு.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக